46. கலிய நாயனார்
தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே எண்ணெய் வணிகர் மரபில் தோன்றியவர் கலிய நாயனார். பெருஞ் செவ்வராகிய இவர் ஒற்றியூர்த் திருக்கோயிலில் இரவும் பகலும் திருவிளக்கிடும் திருத்தொண்டினை ஆர்வமுடன் செய்துவந்தார். இவரது அன்பின் திறத்தை உலகத்தார் அறியச் செய்தல் வேண்டும் என்னும் இறைவனது அருட் குறிப்பினால் இவரது செல்வம் குறைய வறுமை நிலை யுண்டாயிற்று. வறுமையிலும் கூலிக்குச் செக்காடி அக்கூலி கொண்டும் தம்முடைமைப் பொருள்களை விற்றும் திரு விளக்கெரிக்கும் பணியினைத் தடையின்றிச் செய்து வந்தார். முடிவில் தம் மனைவியாரை விற்றேனும் இத் தொண்டினைச் செய்தல் வேண்டும் என எண்ணி அவரை விற்க முற்பட்ட நிலையில் வாங்குவார் இல்லாமையால் மனந்தளர்ந்த கலியனார் ஒற்றியூர்க் கோயிலுள் திரியிட்ட அகல்களைப் பரப்பி எண்ணெய்க்கு ஈடாக உதிரத்தையே நிறைக்க எண்ணித் தமது கழுத்தை அறிந்தார். அந்நிலையில் அருட்கடலாகிய சிவபெருமான் விடைமீது தோன்றி அருட் காட்சி வழங்க உடம்பின் ஊறு நீங்கித் தலைமேற் கைகுவித்து வணங்கி நின்றார். சிவபெருமான் கலிய நாயனாரைப் பொற்புடைய சிவபுரியிற் பொலிந்திருக்க அருள் புரிந்தார்.