44. அதிபத்த நாயனார்

சோழநாட்டில் நாகப்பட்டினத்தில் பரதவர் குலத்தில் தோன்றியவர் அதிபத்தர். பரவகுலத் தலைவராகிய இவர் கடலில் வலை வீசி மீன் பிடிக்கும்போது முதலில் கிடைக்கும் மீனை அன்பினாற் சிவபெருமானுக்கு என விட்டுவிடுவதனை வழக்கமாகக் கொண்டிருந்தார். இறைவன் ஆணையால் வலைவளந்தப்பி வறுமை எய்தித் தம் சுற்றத்தார் உணவின்றி வருந்தவும் பலநாள்களிலும் ஒவ்வொரு மீனே இவருக்குக் கிடைத்தது. கிடைத்த அவ்வொரு மீனையும் சிவபெருமானுக்கென்றே கடலின்கண் விட்டுவந்தார். ஒருநாள் இவருடைய ஏவலர்கள் கடலில் வலை வீசியபோது விலைமதிக்கவொண்ணாத நவமணிகளின் ஒளி வாய்ந்த பொன்மீன் ஒன்று வலையிற் சிக்கியது. அது கண்ட அதிபத்த நாயனார் “இது என்னை ஆட்கொண்டருளிய சிவனுக்கேயுரியது” என்று சொல்லிக் கடலிலே விட்டுவிட்டார். அப்பொழுது சிவபெருமான் விடைமீது அதிபத்தர்க்குமுன் விசும்பில் தோன்றி அடியார்களுடன் சிவலோகத்தே அமர்ந்திருக்க அருள்புரிந்து மறைந்தருளினார்.