41. பொய்யடிமையில்லாத புலவர்

மதுரைத் திருவாலவாயில் நிலைபெற்ற தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து பொய்ப்பொருட்டு அடிமைப் படாது மெய்ப்பொருளாகிய சிவபெருமான் திருவடிக்கே உள்ளத்தைச் செலுத்தி அகப்பொருட்செய்யுள்களைப் பாடிய கபிலர் பரணர் நக்கீரர் முதலிய நாற்பத் தொன்பதின்மராகிய புலவர்களும் அவர்களைப் போன்று மெய்ப்பொருளாகிய இறைவனுக்கே புலமைப்பணி புரியும் தமிழ்ப்புலவர்கள் அனைவரும் ஆகிய திருக் கூட்டத்தினர் திருத்தொண்டத் தொகையில் நம்பியாரூர ராற் போற்றப்பெற்ற பொய்யடிமையில்லாத புலவர்கள் ஆவர்.