40. கூற்றுவ நாயனார்

களந்தை என்னும் ஊரிலே குறுநில மன்னர் குடியிலே தோன்றியவர் கூற்றுவ நாயனார்; திருவைந்தெழுத்தை நாளும் ஓதிச் சிவனடியார்களை வழிபடும் இயல்புடைய இவர் வேந்தர் பலரோடும் போர் புரிந்து வாகை மாலை புனைந்தவர் அரசர்க்குரிய முடி புனைதல் ஒன்றும் நீங்கலாக அரசியல் அங்கங்கள் அனைத்தும் பெற்ற கூற்றுவ நாயனார் தில்லைவாழந்தணரை யடைந்து தமக்கு முடிசூட்டும்படி வேண்டினார். தில்லைவாழந்தணர்கள் சோழ மன்னர்க்கு அன்றி வேறு எவர்க்கும் முடி சூட்ட மாட்டோம் என்று கூறி முடியைக் காத்துக்கொள்ளும்படி ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டுச் சேரநாட்டை அடைந்தார்கள். கூற்றுவனார் தில்லையம்பலவரை மனங் கொண்டு ‘அடியேன் நின் திருவடிப் போதினை முடியாகப் பெறுதல்வேண்டும்’ எனக் கூத்தப்பெருமானை வேண்டித் துயில் கொண்டார். அந்நிலையில் கூத்தப்பெருமான் கூற்றுவ நாயனார் கனவில் தோன்றித் தம்முடைய திருவடியை முடியாகச் சூட்டியருளினார், அம்பலதிருவடியை முடியாகத் தாங்கிய கூற்றுவ நாயனார் திருத்தலங்கள் தோறும் சிவபெருமானை வழிபட்டு நாட்டினை நீதிமுறையில் ஆட்சி புரிந்து உமையொருபாகர் திருவடியை அடைந்தார்.