38. சேரமான்பெருமாள் நாயனார்

மலைநாட்டிலே கொடுங்கோளுரில் சேரர்குடியிலே பெருமாக்கோதையார் பிறந்தருளினார். முடிவேந்தர் குடியிற் பிறந்த இவர் தமக்கு உரிய அரசுத் தொழிலை விரும்பாமல் திருவஞ்சைக்களத்து எழுந்தருளிய சிவ பெருமான் திருவடிகளையே பரவும் கருத்துடையராய்த் திருப்பணிகள் பல புரிந்து ஒரு நெறிய மனத்தினால் அருச்சித்து வழிபாடு புரிந்தனர். அங்ஙனம் நிகழும் நாளில் மலை நாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறையன் அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்யச் சென்றனன்… அவனையடுத்து நாடாளுரிமைமுறையினர் பெருமாக் கோதையார் என உணர்ந்த அமைச்சர்கள் திருவஞ்சைக் களத் திருக்கோயிலில் உள்ள பெருமாக்கோதையாரைப் பணிந்து சேர நாட்டு ஆட்சியுரிமையினை ஏற்றருளும்படி வேண்டினர். ‘இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறாக இவர் மொழிந்தார்’ என எண்ணிய பெருமாக் கோதையார் அஞ்சைக்களத்து இறைவனைப் பணிந்து உலகில் யாரும் யாவும் கூறியன எல்லாவற்றையும் கூறுவனவற்றை உய்த்துணரும் நுண்ணுணர்வும் கெடாத தறு கண்மையும் தளராத கொடை வண்மையும் வேண்டிப் பெற்றார். கழறிற்றறிவாராகிய இவர் சேரநாட்டின் அரசராக முடிசூடிப் பட்டத்து யானைமீதமர்ந்து திருவுலாப் போந்தார். அப்போது உவர்மண் பொதியைத் தோளில் சுமந்து வரும் வண்ணானைக் கண்டு திருநீறு பூசிய அடியார் எனக் கருதி யானை மீதிருந்தும் வணங்கினார்.

அரசர் தன்னை வணங்கக் கண்டு அஞ்சிய வண்ணான் ‘யாரென்று அடியேனைக் கருதியது? அடியேன் அடித் தொழில் புரியும் வண்ணான்’ என்றான். அதுகேட்ட சேரமான் ‘அடியேன் அடிச்சேரன். திருநீற்றின் அன்பர் திரு வேடத்தை நினைப்பித்தீர். வருந்தாது செல்வீராக என அவ்வண்ணானுக்குத் தேறுதலுரை பகர்ந்து அனுப்பினார்.

கூத்தப்பெருமானது எடுத்த திருப்பாதத்தினை நாள்தோறும் வழிபடுதலைத் தமக்குரிய கடமையாகக் கொண்டிருந்த சேரமான் பெருமாள் பூசை முடிவில் இறைவனது திருவடிச் சிலம்பொலியினைச் செவி குளிரக் கேட்டு மகிழ்ந்தார். சிவனடியார்களுக்கு வரையாது வழங்கியும் சிவவேள்விகள் செய்தும் எவ்வுயிர்க்கும் நலஞ்செய்து வந்தார். தன்னை யாழிசையாற் பரவும் பாணபத்திரரது வறுமையைப் போக்கத் திருவுளங் கொண்ட மதுரைத் திருவாலவாய் இறைவர் மதிமலி புரிசை எனத் தொடங்கும் திருமுகப்பாசுரம் எழுதிய ஓலைப் பாயிரத்தைப் பாணர் கையிற் கொடுத்தனுப்பினார். பாணர் தந்த திருமுகத்தைப் பெற்ற சேரமான் அவர் வேண்டும் பொருள்களை எடுத்துக்கொள்ளும்படி வேண்டி வேண்டும் பொருளைக் கொடுத்தனுப்பினார்.

கழறிற்றறிவாராகிய சேரமான் பெருமாள் என்றும் போல் ஒருநாள் சிவபூசை செய்துகொண்டிருந்த போது பூசை முடிவில் கேட்டு இன்புறுவதாகிய சிலம்பொலியைக் கேட்கப்பெறாது தம் உயிரைப் போக்கிக் கொள்ளத் தம் உடை வாளையுருவினர். கூத்தப்பெருமான் விரைந்து பொலியை ஒலிப்பித்தருளினார். ‘சேரனே, தில்லையிலே நாம் புரியும் திருக்கூத்தினைக் கண்டு ஐம்புலன்களும் ஒன்றியவுணர்வுடன் திருப்பதிகம் பாடி நம்மைப் பரவினான். அவன் பாடிய தீஞ்சுவைப்பாடலில் நாம் திளைத்திருந் தமையால் இங்கு நீ புரியும் வழிபாட்டிற்கு உரிய நேரத்தில் வரத்தாழ்த்தோம்’ எனத்தோன்றிய இறைவனது அருள்வாக்கினைச் செவிமடுத்த சேரமான் பெருமாள் நாயனார் தில்லையம்பலத்தில் அருட்கூத்தினை வணங்கி வன்றொண்டரையும் கண்டு வழிபட விரும்பினார். சேர நாட்டிலிருந்து புறப்பட்டுக் கொங்குநாடு கடந்து சோழ நாட்டை யடைந்தார்.

காவிரியில் நீராடினார். தில்லை மூதூரில் அடைந்து திருக்கூத்துத் தரிசனங்கண்டு பொன்வண்ணத்தந்தாதி பாடிப் போற்றினார். திருவாரூரையடைந்து வன்றொண்டரைக் கண்டு புற்றிடங் கொண்ட பெருமானைப் பணிந்து திருமும்மணிக்கோவை பாடினார். நம்பியா ரூராருடன் திருமறைக்காடு முதலிய தலங்களை வழிபட்டுப் பாண்டி நாடடைந்து மதுரைத் திருவாலவாய்ப் பெருமானைப் போற்றினார். பாண்டிவேந்தனும் பாண்டிய மன்னன் மகளை மணந்து மதுரைக்கு வந்திருந்த சோழமன்னனும் தாமுமாக முடிவேந்தர் மூவருடன் சுந்தரர் திருப்பரங்குன்றப் பெருமானைப் பாடிப் போற்றி மகிழும் நிலையில் அன்பினால் அளவளாவி மகிழ்ந்தார். வன்றொண்டருடன் சோழ நாடடைந்தார். பரவையார் இசைவு பெற்று வன்றொண்டரை மலை நாட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்துப் போற்றினார். திருவஞ்சைக்களத்தில் இறைவரை வழிபட்ட சுந்தரர் இறைவன் அனுப்பிய வெள்ளையானை மீதமர்ந்து செல்லும் போது தம் அன்புடைத் தோழராகிய சேரமானைத் தம் நெஞ்சத்தில் நினைத்துச் சென்றார். திருமஞ்சன சாலையில் இருந்த சேரமான் அதனையுணர்ந்து தமது குதிரையின் செவியிலே திருவைந்தெழுத்தினை உபதேசித்தார். சேரமான் ஊர்ந்த குதிரை விசும்பிற் சென்று வன்றொண்டர் ஏறிச் செல்லும் வெள்ளையானையை வலம் வந்து அதற்கு முன்னே சென்றது. சேர வேந்தரைத் தொடர்ந்த வீரர்கள் தம் உடைவாளினால் தம் உடம்பை வெட்டி வீழ்த்தி வீரயாக்கை பெற்று முன் சென்றனர். திருக்கயிலை வாயிலில் சேரமான் பெருமாள் தடைப்பட்டு நின்ற நிலையில் அவர்தம் உயிர்த்தோழர் நம்பியாரூரர் இறைவனை இறைஞ்சிச் சேரர் பெருமானை உள்ளேயழைத்து வரும்படி இசைவு பெற்றனர். சேரமான் பெருமாள் நாயனார் தாம் பாடிய திருக்கயிலாய ஞானவுலாவைக் கயிலைப்பெருமான் திருமுன்னர் அரங்கேற்றினார். பின்பு சேரமான் பெருமாள் சிவகணத்தலைவராகத் திருக்கயிலாயத்தில் திருத்தொண்டு புரிந்திருந்தார்.