37. சிறுத்தொண்ட நாயனார்

சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் மருத்துவத்துறையிலும் படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையராய்ப் பல்லவ மன்னனுக்குச் சேனாபதியாய்ப் போர்முனையிற் பகையரசரைப் பொருது வென்று அரசனால் நன்கு மதிக்கப்பெற்றார்; மன்னன் பொருட்டு வடபுலத்திற் படையுடன் சென்று வாதாவி நகரத்தை அழித்து அங்கிருந்து பல்வகை நன்மணிகளையும் யானை குதிரை முதலியவற்றையும் கைப்பற்றித் தம் வேந்தன்பாற் கொணர்ந்தார். இவரது களிற்றுரிமை ஆண்மையினை மன்னன் வியந்து பாராட்டக் கேட்ட அமைச்சர்கள். ‘அரசே, இவர் சிவபெருமான்பால் பேரன்புடைய தொண்டராதலால் இவரைப் ‘போரில் எதிர்க்க வல்லார் யாரும் இல்லை’ என்றனர். அதனைக் கேட்ட மன்னன் எம்பெருமான் ‘அடியாரைப் போர்முனை யில் விட்டிருந்தேனே’ என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி ‘இனி நீவிர் உமது விருப்பம் போல மெய்ம்மை புரி திருத்தொண்டு செய்வீராக’ என நிதிக்குவையினையும் நீடு விருத்திகளையும் அளித்து விடை கொடுத்தனுப்பினான்.

மன்னவன்பால் விடை பெற்ற பரஞ்சோதியார் தமது ஊராகிய திருச்செங்காட்டங்குடியினை யடைந்து கணபதீச் சரத்திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவரை வழிபட்டுச் சிவநெறித் தொண்டுகளைச் செய்திருந்தார். திருவெண் காட்டு நங்கையாருடன் மனைவாழ்க்கையினை நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துப் பின்பு தாம் உண்ணுதலை வழக்கமாகக் கொண்டார். அடியார்களுக்கு முன் மிகச்சிறியராய்ப் பணிந்து ஒழுகினமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப் பெற்றார். சிறுத்தொண்டர்க்கு வெண்காட்டு நங்கைபால் சீராளதேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். ஐந்து வயதில் அவரைப் பள்ளியிற் கல்வி பயில வைத்தனர். அந்நாளில் திருஞானசம்பந்தர் செங்காட்டங்குடிக்கு எழுந்தருளச் சிறுத்தொண்டர் அவரை எதிர்கொண்டு போற்றினார். ஞானசம்பந்தர் கணபதீச்சரப் பெருமானைப் பாடிய திருப் பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாராட்டினார்.

சிறுத்தொண்டரது அடியார் பத்தியினை உலகமறியச் செய்யத் திருவுளங்கொண்ட கயிலைப் பெருமான் பயிரவ அடியார் வேடந்தாங்கிச் செங்காட்டங்குடியினை அடைந்து சிறுத்தொண்டர் மனையை வினவியடைந்து தாம் கணபதீச்சரத்தில் திருவாத்தியின் கீழ் இருப்பதாகச் சொல்லிச் சென்றார். சிவனடியாரைத் தேடிக் காணாது திரும்பிய சிறுத்தொண்டர், வீட்டிலுள்ளார் சொல்ல ஆத்திமரத்தின் கீழமர்ந்திருந்த அடியாரைக் கண்டு வணங்கினார். தமது இல்லத்தில் திருவமுது செய்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டார். அன்புக்குரிய சிறுத் தொண்டரே யாம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை பசுவைக் கொன்று உண்போம். அதற்கு உரிய நாளும் இன்றே.

உண்ணப்படுக்கும் பசு நரபசு. உண்பது அஞ்சு பிராயத்துள்: உறுப்பில் மறுவில்லாதிருக்க வேண்டும். ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத் தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுது தம்மில் மனமுவந்து குற்றமின்றி அமைத்த கறியினை யாம் இட்டு உண்பது. இது செய்தற்கரிய காரியம். உம்மாற் செய்யவொண்ணாது என்று கூறினார். அது கேட்ட சிறுத்தொண்டர் அடியார் அமுது செய்வதாயின் எனக்கு ‘யாதும் அரியதில்லை’ எனக் கூறி மனையை அடைந்து அடியார் கூறியவற்றை மனைவியாரிடம் கூறி ‘யாம் உய்ய நீ பெற்ற மகனை இங்கு அழைப்போம்’ என்றார். அது கேட்ட மனைவியார் ‘மைந்தனைப் பள்ளியிற் சென்று அழைத்து வாரும்’ என்றார். சிறுத்தொண்டரும் மைந்தனை அழைத்து வந்தார். இருவரும் ஒன்றுபட்ட உள்ளத்தினராய் உலகத்தார் அறியாதபடி காதல் மைந்தனைச் சிவனடியார்க்குக் கறி சமைத்து வேறு கறிகளும் சோறும் சமைத்துப் பயிரவக் கோலத்து அடியாரைத் திருவமுதுண்ண அழைத்து வந்து “திருவமுது படைக்கும் வகை எவ்வாறு? என்று வினவினர். பயிரவ அடியாரும் ‘இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒருசேரப் படைக்க’ எனப் பணித்தார். அவர் கூறியவண்ணம் வெண்காட்டு நங்கையார் பரி கலந்திருத்திப் பாவாடையில் ஏற்றிச் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். வந்த பயிரவர் சொன்னபடி பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கறியாக்கி வைத்தீரோ என்றார். தலையிறைச்சி அமுதுக்காகாது எனக் கழித்து வீட்டோம் என்றார். வெண்காட்டு நங்கையார். அதனைக் கேட்ட பயிரவர் ‘அதுவுங்கூட நாம் உண்பது’ என்றார். சிறுத்தொண்டாரும் மனைவியாரும் அதுகேட்டுத் திகைத்தனர். அப்போது “சந்தனத்தாதியார்” ‘அந்தத் தலையிறைச்சி வந்த தொண்டர் அமுதுசெய்யும்பொழுது நினைக்கவரும் என்று அதனை வைத்துள்ளேன்’ என்று அதனை முன்னமே கறியாக்கி எடுத்துக் கொடுத்தார்.

அந்நிலையிற் பயிரவ அடியார் சிறுத்தொண்டரைப் பார்த்து ‘நமக்குத் தனியே உண்ண ஒண்ணாது அருகில் அடியார் இருந்தால் அழையும்’ என்றார். ‘வேறு அடியார் யாரையும் கண்டிலேன் யானும் திருநீறு இடுவாரைக் கண்டு பூசிய அடியவன்’ என்றார் சிறுத்தொண்டர். உம்மைப் போல ‘நீறிட்டார் உளரோ? நீரும் என்னுடன் இருந்து உண்பீர்’ எனக் கூறிய பயிரவர் வெண்காட்டு நங்கையாரை நோக்கி வேறொரு இலைபோடச் செய்து, அதன்கண் வெம்மையிறைச்சிச் சோற்றை எடுத்துப் படைக்க அவ்வாறே செய்தார். அருகே உண்ண அமர்ந்த சிறுத் தொண்டர் அடியாரை உண்பித்தல் வேண்டித் தாம் உண்ணத் தொடங்கியதும், பயிரவ அடியார் அவரைத் தடுத்து ‘நம்முடன் உண்ண மகவினைப் பெற்றீராயின் மைந்தனை அழையும்’ என்றார். அதுகேட்ட சிறுத் தாண்டர் இப்பொழுது அவன் உதவான் என்றார். ‘நாம் இங்கு உண்பது அவன் வந்தால்தான். அவனை நாடி அழைப்பீர் எனப் பணித்தார் பயிரவர். சிறுத் தொண்டரும் மனைவியாரும் புறத்தே போய் அழைக்கும் போது சிறுத்தொண்டர் மைந்தா மைந்தா வருக என அழைத்தார். ‘சிவனாரடியார் உடல் உண்ண அழைக்கின்றார் சீராளா வாராய்’ என அழைத்தார் வெண்காட்டு நங்கையார் அப்போது இறைவர் திருவருளால் பள்ளிக் கூடத்திலிருந்து ஓடிவருவனைப் போன்று வந்த புதல்வனைத் தழுவியெடுத்துக் கொண்டு அடியாரை அமுது செய்வித்தல் வேண்டி வெண்காட்டுநங்கையும் சிறுத்தொண்டரும் வீட்டினுள்ளே புகுந்தனர். அந்நிலையில் பயிரவராய் வந்த அடியார் மறைந்தார். அவர்க்குப் படைத்த இறைச்சியுணவும் காணப்படவில்லை. அப்பொழுது மறைந்த சிவபெருமான் உமாதேவியாருடனும் முருகப் பெருமானுடனும் விடைமீதமர்ந்து இனிய கறியும் திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் திருவருள் நோக்கம் செய்தருளினார். சிவபெருமானும் உமையம்மையும் முருகப்பெருமானும் தம்மை வணங்கி நின்ற சிறுத்தொண்டர், வெண்காட்டு நங்கையார், சீராள தேவர் சந்தனத்தாதியார் ஆகிய நால்வரையும் தம்மை என்றும் பிரியாது வணங்கி மகிழ்ந்திருக்கும் வண்ணம் உடன் அழைத்துக்கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினர்.