உ
சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும்
திருத்தொண்டர் வரலாறு
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு
லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன்
அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி
வாழ்த்தி வணங்குவாம்.
1. சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு
திருக்கயிலாயத்தில் சிவபெருமானுக்கு அணுக்கத், தொண்டராய் விளங்கியவர் ஆலாலசுந்தரர். ஒரு நாள் இறைவனுக்குப் பூக்கொய்யச் சென்றார். அப்போது உமையம்மையார்க்குத் தொண்டுபுரியும் கமலினி, அநிந்திதை என்னும் மகளிர் இருவரும் பூக்கொய்தல் வேண்டி நந்தவனத்தை அடைந்தனர். இறைவன் அருளால் ஆலால சுந்தரர் அம்மகளிர் இருவரையும் கண்டு காதல் கொண்டார். “நீ மாதர்மேல் மனம் வைத்தனையாதலால் அம் மகளிருடன் தென்னாட்டிற் பிறந்து திருமணம் புரிந்து வாழ்ந்து பின்னர் வருக” என இறைவன் பணித்தருளினார்.
இறைவன் பணித்தவண்ணம் ஆலாலசுந்தரர் திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரில் ஆதிசைவ அந்தணராகிய சடையனார்க்கும் அவர் மனைவியார் இசைஞானியார்க்கும் மகனாகத் தோன்றினார். நரசிங்க முனையரையரால் வளர்க்கப்பெற்றார். கலைகள் பல பயின்று
திருமணப் பருவம் எய்திய நிலையில் புத்தூர்ச் சடங்கவி சிவாசாரியார் திருமகளை நம்பியா ரூரர்க்கு மணம் பேசி முடித்தனர். திருமணம் நிகழும் நிலையில் வெண்ணெய் நல்லூர் இறைவர் கிழவேதியராகத் தோன்றி நம்பியாரூரன் எனக்கு அடியவன் என்று அடிமைச் சீட்டினைக் காட்டித் திருமணத்தைத் தடுத்தார். வெண்ணெய்நல்லூர்ச் சபையில் ஆவண ஓலை ஒன்றைக் காட்டி வழக்கில் வென்றருளினார். கிழவேதியர் திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறைக் கோயிலுள் புகுந்து மறைந்த நிலையில் அவருடன் சென்ற நம்பியா ரூரர் அவரைக் காணாது திகைத்து நின்றார். அந்நிலையில் ‘நமக்கு அர்ச்சனை பாட்டேயாகும். ஆதலால் நம்மைச் சொற்றமிழ் பாடுக’ என இறைவன் பணித்தருளிய வண்ணம் ‘பித்தா பிறை’ என்னும் திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றினார். திருத்துறையூர் இறைவனையிறைஞ்சித் தவநெறிவேண்டி திருவதிகையில் இறைவன் திருவடி சூட்டப் பெற்றார். தில்லைப்பதியை யடைந்து இறைவனது திருக் கூத்தினை ஐம்புலன்களும் ஒன்றிய நிலையிற் கண்டு மகிழ்ந்து திருப்பதிகம் பாடிப் பரவினார். அந்நிலையில் ‘ஆரூரில் நம்பால் வருக’ என அருள்வாக்கு எழுந்தது. அடியார்கள் எதிர்கொள்ளத் திருவாரூரை அடைந்து இறைவனைப் போற்றினார். ‘தோழமையாக உமக்கு நம்மைத் தந்தனம்’ என ஆரூரண்ணல் அருள்செயத் தம்பிரான் தோழரானார்.
முன்பு கயிலையிற்கண்ட கமலினியார் திருவாரூரில் பதியிலார்குலத்துப் பரவையார் என்னும் பெயருடன் தோன்றி ஆடல் பாடல் அழகு என்பவற்றாற் சிறந்து விளங்கினார். பண்டை நல்லூழினாற் பரவையாரைக் கண்ட நம்பியாரூரர் இறைவன் அருளால் அவரைத் திருமணம் புரிந்துகொண்டார்.
பரவையார் கணவராகிய சுந்தரர் திருவாரூர்க் கோயிலிற் புற்றிடங்கொண்ட பெருமானை வழிபடச் செல்லும்போது தேவாசிரிய மண்டபத்திற் கூடியிருந்த அடியார் திருக்கூட்டத்தினைக் கண்டு இவர்கட்கு அடியவனாகும்பேறு கிடைத்தல் வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கோயிலினுள்ளே சென்றார். “அப்போது புற்றிடங்கொண்ட பெருமான்” எதிரே வந்து காட்சி கொடுத்தருளி அடியார் பெருமையினையுணர்த்தி, தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்'” என அடி யெடுத்துக் கொடுத்தருள அதனை முதலாகக்கொண்டு நம்பியாரூரர் திருத்தொண்டத் திருப்பதிகத்தினைப் பாடி அடியார் திருக்கூட்டத்தை வணங்கிப் போற்றினார்.
தேசம் உய்யத் திருத்தொண்டத்தொகை அருளிச் செய்த சுந்தரர் குண்டையூர்க் கிழவர் தமக்கு அளித்த நெல்லைக் கொண்டு வர ஆளிடும்படி கோளிலிப் பெருமானைப் பாடிப் பெற்றார். புகலூர்ப்பெருமானை வழிபட்டுச் செங்கல்லே செழும்பொன்னாகப் பெற்று வந்தார்.
திரு முதுகுன்றப்பெருமான் அளித்த பன்னீராயிரம் பொன்னை மணிமுத்தா நதியிலிட்டுத் திருவாரூர்க் கமலாலயக் குளத்தில் எடுத்துப் பரவையாரிடம் கொடுத்தார். குருகாவூரிறைவர் அந்தணராக வந்து பொதி ச றளிக்கப் பெற்றுப் பசி தீர்ந்தார். திருக்கச்சூர் ஆலயக் கோயிலுக்கு நண்பகலிற் சென்றபோது இறைவனே வேதியராய் வீடுதோறும் பிச்சையேற்று வந்து சுந்தரரது பசியைத் தீர்த்தருளினார்.
திருக்கயிலாயத்தில் சுந்தரராற் காதலிக்கப்பெற்ற அநிந்திதை, சங்கிலியார் என்னும் பெயருடன் தொண்டை நாட்டில் ஞாயிறு கிழவர் என்பார்க்கு மகளாகத் தோன்றி வளர்ந்தார். மணப்பருவம் எய்திய நிலையில் பெற்றோர் இசைவுடன் திருவொற்றியூரிற் கன்னிமாடத்தில் தங்கி ஒற்றியூர் இறைவர்க்கு மலர்மாலை தொடுக்கும் பணி புரிந்தார். திருவொற்றியூர் இறைவரை வழிபட்ட சுந்தரர் சங்கிலியாரைக் கண்டு காதல் கொண்டு இறைவனருளாற் பிரியேன் என மகிழமரத்தடியிற் சபதஞ் செய்து மணம்புரிந்து அவருடன் ஒற்றியூரில் வாழ்ந்தார். சில நாட்கள் சென்றபின் திருவாரூர்ப் பெருமானை வழிபட வேண்டும் என்னும் ஆர்வம் தூண்டச் சபதத்தை மீறி ஒற்றியூரைவிட்டுப் புறப்பட்டார். எல்லை தாண்டியதும் இருகண்களும் பார்வையிழந்தன. வெண்பாக்கத்தை வழிபடச் சென்றபோது இறைவர் ஊன்றுகோல் கொடுத்தருளினார். காஞ்சியில் திருவேகம்பரைப் பாடி இடக்கண் பெற்றார். திருத்துருத்தியில் குளத்தில் மூழ்கி உடல்நோய் நீங்கினார். திருவா ரூரை மாலைப்பொழுதில் அடைந்து புற்றிடங்கொண்டாரை இறைஞ்சி “மீளா வடிமை யுமக்கே யாளாய்’ என்னும் பதிகம் பாடி வலக்கண் பெற்றார். பரவையாரது ஊடலைத் தணித்தற்பொருட்டுத் திருவாரூர்த் தியாகேசப்பெருமானை இருமுறை தூதனுப்பினார். இச்செய்தி கேட்டுச் சினமுற்ற ஏயர்கோன் கலிக்காமனார்க்கு ஏற்பட்ட சூலை நோயைத் தணிக்க இறைவரால் அனுப்பப்பட்டு அவருடன் நண்பு பெற்று இருவருமாகத் திருப்புன்கூர்ப் பெருமானை வழிபட்டு மகிழ்ந்தார்.
திருவாரூரில் தம்மைக் காணவந்த சேரமான் பெருமாள் நாயனாரை வரவேற்று உபசரித்துச் சேரமான் தோழரானார். அவருடன் பாண்டிநாட்டுத் தலங்களை வழிபடச் சென்றபோது மதுரையிற் பாண்டியனும் பாண்டியன் மகளை மணந்து அங்கு விருந்தாய் வந்திருந்த சோழமன்னனும் உபசரிக்கத் தமிழ்வேந்தர் மூவருடன் கூடித் திருப்பரங்குன்றப் பெருமானைப் பாடிப் போற்றினார். திருவாரூர் அடைந்த சுந்தரர் பரவையார் இசைவு பெற்றுச் சேரமான் பெருமாளுடன் மலைநாட்டுக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் காவிரியாறு வெள்ளம். பெருக்கெடுத்தோடிய நிலையில் இறைவரருளால் வெள்ளத்திடையே வழியுண்டாக ஐயாற்றிறைவரை இறைஞ்சிப் போற்றினார். மலைநாட்டவர் எதிர் கொண்டு போற்றச் சேரமான் பெருமாளுடன் கொடுங் கோளூரையடைந்து அவரால் வழிபட்டு உபசரிக்கப் பெற்று அவருடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.
ஆரூர் இறைவரைக் கண்டு வழிபடவேண்டும் என்னும் ஆர்வம் மேலிட்ட நிலையில் சேரமான் பெருமாள்பால் அரிதின் விடை பெற்று அவர் கொடுத்த நிதிக்குவையுடன் திருமுருகன் பூண்டியிற் செல்லும் வேடர்கள் வழிப்பறி செய்தனர். அதனையறிந்த சுந்தரர் முருகன் பூண்டி இறைவரைப் பதிகம் பாடிப் போற்றிய நிலையில் வேடர்கள் பறித்த பொருள்களைத் திரும்பக் கொடுத்து வணங்கினர். பின்பு திருவாரூரையடைந்து புற்றிடங்கொண்ட பெருமானை யிறைஞ்சிப் பரவையார் மாளிகையடைந்து அவருடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.
நம்பியாரூரர் சிலநாட் சென்றபின் சேரமான் பெருமாளைக் காணும் விருப்புடன் திருவாரூரை விட்டுப் புறப்பட்டார். கொங்கு நாட்டில் புக்கொளியூரினை அடைந்தார். அவ்வூர் மடுவில் முதலையால் விழுங்கப்பட்ட அந்தணச் சிறுவனை மீட்டுத் தரும்படி அவிநாசியிறைவரை வேண்டித் திருப்பதிகம் பாடினார். இறைவரருளால் முதலையால் உமிழப்பட்டு உயிர் பெற்றெழுந்த சிறுவனுக்குப் பெற்றோர் மகிழ உபநயனஞ் செய்வித்தார். சேரமான் எதிர்கொள்ளக் கொடுங்கோளூரை அடைந்த சுந்தரர் அருகேயுள்ள சிவத்தலங்களை வணங்கிச் சேரமானுடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார். ஒருநாள் சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து இறைவரைப் பாடியபோது ‘வெறுத்தேன் மனைவாழ்க்கையை விட் டொழிந்தேன்’ என உளமுருகிப் போற்றினார். ஆரூரரது பாசப்பிணிப்பை அகற்றத் திருவுளங்கொண்ட கயிலைப் பெருமான் ஆரூரரைக் கயிலைக்கு அழைத்து வரும்படி தேவர்களுடன் வெள்ளானையை அனுப்பியருளினார் தேவர்கள் யானையுடன் திருவஞ்சைக்களத் திருக்கோயில் வாயிலில் நின்று ‘இதன்மீதமர்ந்து கயிலைக்கு வருதல் வேண்டும்’ என்பது இறைவனது கட்டளை என்றனர். அந்நிலையிற் சேரமான் பெருமாளை நினைத்துக் கொண்டு சுந்தரர் யானைமீதமர்ந்தார். திருமஞ்சன சாலையில் நீராடிக்கொண்டிருந்த சேரமான் அக் குறிப்பினையுணர்ந்து தம் குதிரையின் செவியிலே திருவைந் தெழுத்தோதி ஏறினார். அக்குதிரை விண்ணிற் போந்து சுந்தரர் அமர்ந்து செல்லும் வெள்ளானையை வலம் வந்து அதன்முன் சென்றது. களையாவுடலோடு கயிலையை அடைந்த சுந்தரர் பண்டுபோல் இறைவனுக்கு அணுக்கத் தொண்டு புரியும் ஆலாலசுந்தரராயினர். சேரமான் சிவகணத் தலைவரானார், நம்பியாரூரரை மணந்து வாழ்ந்த பரவையாரும் சங்கிலியாரும் திருக்கயிலையை அடைந்து உமையம்மையார்க்கு அணுக்கராகக் கமலினி யும் அநிந்திதையும் ஆகித் தொண்டு புரிந்து மகிழும் பேறு பெற்றனர்.
சுந்தரர் தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் திருநீலகண்டக்குயவர் முதல் திருநீல கண்டப்பாணர் ஈறாக அறுபது பேர் தனியடியார்களைக் குறித்து அடியேன் எனப் போற்றியுள்ளார். அவர்களுடன் திருத்தொண்டத்தொகை அருளிய சுந்தரர். அவர் தந்தையார் சடையனார், தாயார் இசைஞானியார் ஆகிய மூவரையும் சேர்த்தெண்ணத் தனியடியார்கள் அறுபத்து மூவர் ஆவர். தில்லைவாழந்தணர், பொய்யடிமை யில்லாத புலவர், பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார்கள், முப்போதுந் திருமேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர் அப்பாலும் அடிச் சார்ந்தார் ஆகிய ஒன்பது திருக்கூட்டத்தாரும் தொகையடியார் எனப் போற்றப்பெறுவர். இவர்கள் சுந்தரர் காலத்திலும் அவர் காலத்திற்கு முன்னும் பின்னும் ஆக மூன்று காலத்திலும் உள்ளவர்கள் ஆவர்.
திருத்தொகையிற் குறிப்பிடப்பெறாதவரும் சைவ சமயகுரவர் நால்வருள் ஒருவரும் ஆகிய மாணிக்கவாசகர் வரலாறு இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது.