35. சாக்கிய நாயனார்

சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் மரபிற் பிறந்த இவர், எவ்வுயிர்க்கும் அருளுடையராய்ப் பிறவா நிலை பெற விரும்பிக் காஞ்சி நகரத்தையடைந்து புத்த சமயத்தை மேற்கொண்டார். அதுபற்றிச் சாக்கியர் எனப் பெயர் பெற்றார். புத்த சமயத்தை மேற்கொண்ட இவர் பல சமய நூல்களையும் பயின்று சிவநெறியே பொருளாவது எனத் தெளிந்தார். உலகிற் செய்யப்படும் வினை; அவ்வினையைச் செய்யும் ஆன்மா வினைப் பயனை ஆன்மா நுகரும்படி ஊட்டுவிக்கும் இறைவன் என்னும் மெய்ப்பொருள் நான்கையும் வற்புறுத்துவது சைவசமயம் ஒன்றேயாகும். எந்நிலையில் நின்றாலும் கோலம் கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப்பொருளாகும் என்று ஆராய்ந்து துணிந்த சாக்கியர் தாம் கொண்ட புத்த வேடத்துடனேயே சிவ பெருமானை மறவாது போற்றுவாராயினார். சிவலிங்கப் பெருமானைக் கண்டு கும்பிட்ட பின்னரே உண்பது என் உறுதி பூண்டார். சிவலிங்கத்தினைக் கண்டார். அம் மகிழ்ச்சியின் பயனாக இன்னது செய்வதென்றறியாது அருகிற் கிடந்த செங்கற்சல்லியை எடுத்து அதன் மேல் எறிந்தார். அதுவே சிவபெருமானுக்கு உவப்பாயிற்று

ஒரு நாள் உணவுண்ண வந்த சாச்கியர் ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிதற்கு மறந்துவிட்டேனே’ என்று எழுந்து விரைந்தோடிச் சிவலிங்கத்தின்மேல் சிறு கல்லினை எறிந்தார். இறைவனை மறவாத பேரன்பினையுடைய அவர்க்குச் சிவபெருமான் உமையம்மை யாருடன் விடைமேல் தோன்றிக் காட்சி கொடுத்துச் சிவலோகத்தில் தம் பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை வழங்கியருளினார்.