31. திருமூல நாயனார்
திருக்கயிலாயத்தில் இறைவன் திருவருள் பெற்ற சிவயோகியாராகிய சித்தர்களில் ஒருவர் அகத்திய முனிவரைக் காணப் பொதியமலைக்குச் செல்ல விரும்பினார். செல்லும் வழியில் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவி முத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக் காளத்தி முதலிய தலங்களைப் பணிந்து திருவேகம்பப் பெருமானை இறைஞ்சித் தில்லையம்பலத்தில் திருக் கூத்துத் தரிசனங்கண்டு காவிரியில் நீராடி அதன் தென்கரையில் திருவாவடுதுறையினை யணுகி இறைவனை வழிபட்டார். அங்கிருந்து புறப்பட்டுக் காவிரிக்கரையை அடைந்தபோது பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்த மூலன் என்னும் ஆயன் திடீரென இறந்தானாக. அவனால் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனைச் சுற்றிக் கதறின.
இவன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் தீராது என எண்ணிய சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாவலான இடத்தில் மறைத்து வைத்துவிட்டுக் கூடு விட்டுக் கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் சித்தித்திறத்தால் தமது உயிரை ஆயனுடம்பிற்புகு மாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார். பசுக்கள் மகிழ்ந்தன. மாலைப்பொழுது வந்ததும் தத்தம் உறையுளுக்குத் திரும்பிச் சென்றன. திருமூலர் அவற்றின் பின்னே சென்றார். மறுநாள் தமது பழையவுடம்பினைப் பாதுகாத்துவைத்திருந்த இடத்திற்கு வந்து பார்த்தார். இறைவனருளால் அவ்வுடம்பு மறைக்கப்பட்டது. அதனால் மூலன் உடம்பிலேயேயிருந்து திருமூலராகித் திருவாவடுதுறையிலுள்ள திருக்கோயிலில் அரச மரத்தடியில் சிவயோகத்து அமர்ந்திருந்தார். என்னைத் திருமூலனுடம்பிற் புகுத்திய இறைவனது அருள் நோக்கம் தமிழாகத்தால் தன்னியல்பினை நன்றாக உணர்த்துதற் பொருட்டே எனத் தெளிந்து ஆண்டொன்றுக்கு ஒரு பாடலாகத் தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திர மாலையை அருளிச்செய்து திருக்கயிலையை அடைந்தார்.