28. நமிநந்தியடிகள் நாயனார்

இவர் சோழநாட்டில் ஏமப்பேறூரில் அந்தணர் குலத்தில் தோன்றினார். இவர்க்குப் பெற்றோர் இட்ட பெயர் நம்பிநந்தி என்பதாகும். அதுவே நமிநந்தி எனத் திரிந்து வழங்கியது. நமிநந்தியடிகள் இரவும் பகலும் சிவ பெருமானைப் பூசித்து மகிழும் சீலமுடையவர். இவர் ஒருநாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். அக்கோயிலின் ஒரு பக்கத்தே அரனெறி என்னும் கோயிலை மாலைக் காலத்தில் அடைந்தபொழுது அங்கு விளக்கில்லை. விளக்கேற்றி வழிபட எண்ணிய இவர், கோயிலின் அண்மையிலுள்ள ஒரு வீட்டிற்சென்று விளக்கிற்கு எண்ணெய் கேட்டார். அவ்வீட்டார் சமணர்கள். அவர்கள் நமிநந்தியாரை நோக்கி தீயினைக் கையிலேந்தியுள்ள உங்கள் இறைவனுக்கு விளக்கு தேவையற்றது. நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பதாகில் ‘நீரை முகந்து எரிப்பீராக’ என்றனர். அந்நிலையில் நமி நந்தியே, அயலேயுள்ள குளத்தின் நீரை முகந்து ‘விளக்கு ஏற்றுக’ என்றதோர் அசரீரி வாக்கெழுந்தது. அதனைக் கேட்ட நமிநந்தியடிகள் திருவைந்தெழுத்தோதி கமலாலயத் திருக்குளத்து நீரை முகந்து விளக்கேற்றினார், விளக்கு சுடர்விட்டெரிவு தாயிற்று. நாளும் இவ்வாறு நீரால் திருவிளக்கும் பணியினை மேற்கொண்டு செய்து வந்தார். அப்பொழுது தண்டியடிகள் நாயனாரால் சமணர்கள் கலக்கமடைந்து ஆரூரைவிட்டு அகன்றனர். சோழமன்னர் நிபந்தமளித்துத் திருவாரூரிற் பங்குனி யுத்திரப் பெருவிழாவைச் சிறப்புற நிகழ்த்துதற்கு நமிநந்தியடிகள் உறுதுணையாயிருந்தார்.

திருவிழா நாட்களில் ஒருநாள் திருவாரூரிறைவர் அருகேயுள்ள ‘மணலி’ என்ற ஊருக்கு எழுந்தருள்வது வழக்கம். இறைவர் மீண்டு திருவாரூர் புக மாலைப் பொழுதாயிற்று. விழாவினைக் கண்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள் இரவில் தம்மூர்க்கு வீட்டினுள்ளே புகாமல் புறங் கடையிற் படுத்துறங்கினார். மனைவியார் அவரை எழுப்பி, வீட்டினுள்ளே வந்து சிவ வழிபாடு செய்து பள்ளிகொள்ளலாம் என் அழைத்தார். அது கேட்ட நமிநந்தியடிகள் ‘இன்றைய தினம் திருவாரூர்ப் பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன் சேவித்துச் சென்றேன். அக்கூட்டத்தில் எல்லாச் சாதியாரும் கலந்திருந்ததால் தீட்டுண்டாயிற்று. “நீராடியே வீட்டிற்குள் வருதல்” வேண்டும். ‘குளித்தற்குத் தண்ணீர் கொண்டுவா’ என்று கூற அவரும் உள்ளே விரைந்து சென்றார். இதற் கிடையில் நமிநந்தியடிகளுக்குச் சிறிது உறக்கம் வந்தது. அப்பொழுது வீதிவிடங்கப் பெருமான் அடிகள் கனவில் தோன்றி, ‘அன்பனே, திருவாரூர்ப் பிறந்தார் எல்லாரும் நம் சிவகணங்களே. அதை நீ காண்பாய்’ என்று சொல்லி மறைந்தருளினார். விழித்தெழுந்த நமிநந்தியடிகள் அடியார்களிடையே சாதிவேறுபாடு நினைந்தது தவறென்றுணர்ந்து எழுந்தபடியே வீட்டினுள்ளே சென்று சிவபூசையை முடித்து விடிந்தபின் திருவாரூர்க்குச் சென்றார். திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாரும் சிவசொ ரூபம் பெற்றவர்களாகத் தோன்றக் கண்டார். அடியார் களிடையே சாதி வேறுபாடிருப்பதாக எண்ணிய தமது பிழையைப் பொறுத்தருளும்படி இறைவனை வேண்டினார் திருவாரூரையே தங்குமிடமாகக் கொண்டு திருத் தொண்டுகளைச் செய்து திருநாவுக்கரசரால் ‘தொண்டர்க்கு ஆணி’ எனச் சிறப்பிக்கப்பெறும் பேறு பெற்று இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.