26. அப்பூதியடிகள் நாயனார்
சோழநாட்டில் திங்களூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் அப்பூதியடிகள். சிவபெருமான்பால் பேரன்புடையவர். திருநாவுக்கரசரைக் காணுதற்கு முன்னமே அவர்பால் அளவிறந்த அன்புடையவர்; அவர் திருப்பெயரையே தம் பிள்ளைகள் முதலியோர்க்கு இட் டழைத்தார். திருநாவுக்கரசர் திருப்பெயரால் தண்ணீர்ப் பந்தர், திருமடம் முதலிய நல்லறங்களைச் செய்துவந்தார். திருநாவுக்கரசர் திருப்பழனம் என்னும் தலத்தை வணங்கும் பொருட்டுத் திங்களூரையடைந்தார். தம் பெயரால் தண்ணீர்ப்பந்தர் இருப்பதைக் கண்டு அதனை அமைத்தார் யாரென வினவி அப்பூதியடிகள் இல்லத்தையடைந்தார். சிவனடியார் பொருட்டு நீர்வைத்த தண்ணீர்ப் பந்தரில் ‘நும் பேர் எழுதாதே வேறொரு பேர் எழுதவேண்டிய காரணம் யாது?’ என வினவினார். அது கேட்ட அப்பூதியடிகள் ‘கல்லே மிதப்பாகக் கொண்டு கடல் கடந்த நாவுக்கரசின் பெருமையை அறியாதார் யார்? சிவ வேடத்துடன் நின்று இவ்வாறு பேசும் நீர் யார்’ என வெகுண்டு வினவினார். அப்பூதியடிகள் அன்பின் திறத்தை யறிந்த திருநாவுக்கரசர் ‘புறச்சமயச் சூழலிற்புக்குச் சூலை நோயினால் இறைவன் ஆட்கொள்ள அடைந் துய்ந்த தெருளும் உணர்வில்லாதேன் யான்’ என்றார். அது கேட்ட அப்பூதியார் உரை தடுமாறி நிலமிசை வீழ்து திருநாவுக்கரசரை வணங்கினார். தம் மனையில் அமுது செய்தருள வேண்டிக்கொண்டார்.
மூத்த திருநாவக்கரசு என்ற அப்பூதியார் மைந்தன் அடியார்க்கு அமுது படைக்க வாழையிலை அரியச் சென்றவன் தன்னைப் பாம்பு தீண்டிய நிலையிலும் அதனை உதறி விரைந்து ஓடி வந்து வாழையிலையைத் தாயிடம் தந்து விட வேகத்தால் கீழே வீழ்ந்து உயிர் நீத்தான். அடியார் அமுது செய்தருள வேண்டுமே என்ற ஆர்வத்தால் இறந்த மைந்தனைப் பாயில் சுருட்டி. ஒரு பக்கம் மறைத்து
வைத்துவிட்டுத் திருநாவுக்கரகரைப் பணிந்து திருவமுது செய்ய அழைத்தனர். தம்மை வணங்கிய எல்லோர்க் கும் திருநீறு அளித்த திருநாவுக்கரசர் உள்ளத்தே தடு மாற்றம் தோன்ற மூத்த மைந்தல் எங்கே என வினவினார். அது கேட்ட அப்பூதியார் அவன் இங்கு இப்போது உதவான் என்றார். அவன் எங்கே, உண்மையைச் சொல்லும் என நாவுக்கரசர் கேட்க, அப்பூதியார் நடுக்க முற்று நடந்ததைக் கூறினார். உடனே திருநாவுக்கரசர் மூத்த திருநாவுக்கரசின் உடம்பினைக் கொணரச் செய்து ‘ஒன்றுகொலாம்’ என்னும் திருப்பதிகம் பாடி விடந்தீர்த்தருளினார். உயிர் பெற்றெழுந்த மூத்த திருநாவுக்கரசு திருநாவுக்கரசு நாயனார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். பின்பு அப்பூதியாரொடும் அவர்தம் மக்களோடும் திருநாவுக்கரசர் உடனமர்ந்து திருவமுது செய்தருளினார். திருப்பழனப்பெருமானைப் பரவிப் போற்றிய திருப்பதிகத்தில் ‘அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி- குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய்’ எனத் திருநாவுக்கரசர் அப்பூதியடிகளின் சிவபத்தியினைச் சிறப்பித்துள்ளார். இவ்வாறு திருநாவுக்கரசர் திருவடிகளையே தமக்குரிய சார்பாகக் கொண்டு வாழ்ந்த அப்பூதியடிகளார் தில்லைமன்றுள் ஆடும் திருவடிகளை யடைந்து இன்புற்றார்