25. காரைக்காலம்மையார்

சோழநாட்டில் கடற்றுறைப் பட்டினங்களுள் ஒன்றாகிய காரைக்காலில் தனதத்தனார் என்ற வணிகர் குலத் தலைவர்க்குப் பெண்மகவு பிறந்தது. புனிதவதி என்னும் பெயருடைய அப்பெண் விளையாடும் பருவத்திலேயே சிவ பத்தியுடன் வளர்ந்தது. தனதத்தனார் தன் மகள் புனித வதியாரை நாகையில் வாழ்ந்த நிதிபதிமைந்தன் பரமதத்தனுக்குத் திருமணஞ்செய்து கொடுத்து அவர்கள் இருவரும் காரைக்காலில் தனி மனையில் வாழவும். பரமதத்தன் தனக்குரிய வணிகம் புரிந்து வளம் பெறவும் வசதி செய்திருந்தார். ஒரு நாள் பரமதத்தனைக் காண வந்தோர் அவனிடம் மாங்கனிகள் இரண்டனைக் கொடுத்தார்கள். அவன் அவ்விரண்டனையும் வீட்டிற்கு அனுப்பிவைத்தான். அந்நிலையில் சிவனடியார் ஒருவர் பசியால் வர அவரை யுண்பிக்க வேண்டிப் புனிதவதியார் ஒரு மாங்கனியைப் படைத்தார். அதன்பின் கணவனார்க்கு அமுது படைக்கும் போது மற்றொரு கனியைப் படைத்தார். அக்கனியின் இன்சுவையில் ஈடுபட்ட பரமதத்தன் இன்னும் ஒன்றுளது அதனைக் கொண்டுவந்திடுக என்றான். கணவனார்க்கு மாங்கனியில் ஏற்பட்ட ஆர்வத்தைத் தடுக்க எண்ணாத புனிதவதியார் உள்ளே சென்று இறைவனை வேண்டி அவனருளால் மற்றொரு மாங்கனியைக் கொணர்ந்து கணவனுக்குப் படைத்தாள். அதன் அதிமதுரச் சுவையைப் பருகிய பரமதத்தன் இது முன்தந்த மாங்கனியன்று; “இதனை வேறு எங்குப் பெற்றது?” என வினவினான். அது கேட்ட புனிதவதியார் நடந்தபடி. சொல்லுவதே முறையென்று நிகழ்ந்ததைக் கூறினார். இக்கனி இறையருளாற் பெற்றதானால் இது போல் இன்னுமொரு ‘கனி பெற்றுத் தருக’ என்றான் பரம தத்தன். புனிதவதியாரும் இறைவனை வேண்டி இன்னும் ஒரு கனி அளித்திலீராயின் என்னுரை பொய்யாய் விடுமே வருந்தினார். இறையருளால் மற்றுமொரு மாங்கனி பெற்றுக் கணவன் கையிற் கொடுக்க அது உண்ணப் புகுமுன் மறைந்துவிட்டது. அது கண்டு அதிசயித்த பரமதத்தன் புனிதவதியாரைத் தெய்வமென அஞ்சி கடல் கடந்து வெளிநாடு சென்று பொருளீட்டி வருதாகக் கூறிப் பிரிந்து சென்றான். பொருளீட்டி மற்றொரு பெண்ணை மணந்து பாண்டி நாட்டுக் கடற்றுறைப் பட்டினமொன்றில் வாழ்ந்திருந்தான். இச்செய்தியைக் கேள்வியுற்ற தனதத்தனார் தம் மகளார் புனிதவதியாரைப் பரமதத்தன் இருக்கும் ஊர்க்குப் பெரியவர் துணையுடன் அனுப்பிவைத்தார். புனிதவதியார் வருகையை யறிந்த பரமதத்தன் தானும் இரண்டாந்தாரமாக மணந்துகொண்ட பெண் மனையோடும் அவள் பெற்ற குழந்தையோடும் வந்து எதிர்கொண்டு வணங்கினான். அது கண்ட புனிதவதியார் இறைவனருளால் அற்புதத் திருவந்தாதி பாடித் தம் உடலின் தசையினை யுதறி எலும்புடம்பு தாங்கிப் பேயுருவமுடையராய், தலையாலே நடந்து திருக்கயிலையை அடைந்தார். கயிலைப்பெருமான் இவரைக் கண்டு ‘அம்மையே’ என அழைத்தார். அம்மையாரும் ‘அப்பா’ என்று அன்பினாற் பணிந்து வேண்டினார். இறைவன் அருளிய வண்ணம் தொண்டை நாட்டுத் திருவலங்காட்டினை யடைந்து அங்கு ஆண்ட முற நீமிர்ந்தாடும் கூத்தப்பெருமானை மூத்த திருப் பதிகங்களாற் பாடிப் போற்றி அம்முதல்வன் எடுத்தருளுஞ் சேவடிக்கீழ் என்றுமிருக்கும் பேரின்ப நிலை வினைப் பெற்றார்.