24. பெருமிழலைக் குறும்ப நாயனார்
சோழ நாட்டின் உள்நாடாகிய மிழலை நாட்டில் பெருமிழலையின் தலைவராய் விளங்கிய பெருமிழலைக் குறும்பர். இவர், சிவனடியார்களுக்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்திகளின் திருவடிகளைக் கையால் தொழுது வாயால் வாழ்த்தி மனத்தால் நினைத்து போற்றுதலைக் கடமையாகத் கொண்டவர்; நம்பியாரூரர் திருப்பெயரினை நாளும் நவின்ற நலத்தாலே அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் கைவரப்பெற்றார். ‘சுந்தரர் நாளைய தினம் திருக்கயிலாயத்தை அடைவார்” என்பதனை யோக சித்தியாலே முதல்நாளே யுணர்ந்துகொண்ட பெரு மிழலைக்குறும்பர் ‘நாளை அவர் கயிலையினையடையக் கண்ணின் கரிய மணியினை இழந்தார் போல் இவ்வுலகில் வாழமாட்டேன் என்று எண்ணி ‘இன்றே யோகநெறியால் சிவன் தாள் சென்றடைவேன்’ சொல்லி நாற்கரணங்களும் ஒரு நெறிப்பட்டு நல்லறிவு மேற்கொண்டு பிரமநாடியின் வழியே கருத்தைச் செலுத்தி யோக முயற்சியினாலே பிரமரந்திரம் திறப்ப உடலினின்றும் பிரிந்து கயிலைப் பெருமான் திருவடியினை அடைந்தார்.