23. குலச்சிறை நாயனார்
பாண்டிநாட்டு மணமேற்குடியில் தோன்றியவர் குலச் சிறையார். இவர் பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுக்கு அமைச்சர்; கூன்பாண்டினாய்ச் சமணத்திற் சேர்ந்திருந்த பாண்டியன் திருஞானசம்பந்தப் பிள்ளையாரால் சைவனாகி உய்திபெறுதற்கு உதவியாய் மங்கையர்க்கரசியாரது சைவத்தொண்டுக்குப் பாதுகாவலாக இருந்தவர் அமைச்சர் குலச்சிறையாராவர். குலவேறுபாடு கருதாது சிவனடியார் யாவராயினும் அவர்க்கு அடித்தொன்டு புரியும் ஆராத பேரன்புடைய இவர், திருஞானசம்பந்தர் பால் வாதில் தோல்வியுற்ற சமணர்கள் தாம் செய்து கொண்ட சபதத்தின்படி கழுவேறக் கண்டார். இதன் பாண்டி நாடு முழுவதும் சிவநெறி பரவத் தொண்டு புரிந்த குலச்சிறையார் ஆலவாயரன் திருவடியினை இடை விடாது போற்றிச் சிவப்பேறு அடைந்தார்.