20. திருக்குறிப்புத்தொண்ட நாயனார்
தொண்டை நாட்டில் காஞ்சி மாநகரத்தில் வண்ணார் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்புத் தொண்டர். இவர். சிவனடியார்களின் குறிப்பறிந்து திருத்தொண்டு செய்யும் இயல்பினராதலால் திருக் குறிப்புத்தொண்டர் எனப் போற்றப்பெற்றார். சிவனடியார்களின் ஆடையின் அழுக்ககற்றித் தூய்மை செய்து கொடுத்தலைத் தமது பணியாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் சிவபெருமான் அடியார் திருவுருக்கொண்டு அழுக் கடைந்த கந்தையுடன் திருக்குறிப்புத் தொண்டரை அடைந்தார். ‘யான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி உடுத்தற்குத் தகுதியில்லாத நிலையிலிருந்தாலும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து இதனை விட முடியாத நிலையில் உள்ளேன். இதனைத் துவைத்து உலர்த்தி மாவைப் பொழுதாவதற்கு முன் தருவீராயின் எடுத்துச் செல்லும்’ என்றார். அவ்வாறே தருவதாகத் திருக்குறிப்புத்தொண்டர் அக்கந்தையாடையை வாங்கிச் சென்றார். எதிர்பாராத நிலையில் மழை தொடங்கி விடாது பெய்தது. கந்தை உலராத நிலையில் அடியார் உடம்புக்கு ஊறு நேருமே என்று திருக்குறிப்புத்தொண்டர் கலக்கமுற்றார். மாலைப்பொழுது வரவரச் செய்வதறி யாது துணி துவைக்கும் கற்பாறையில் தலையை மோதினார். அந்நிலையில் திருவேகம் தம் திருக்கையால் தடுத்துப் பிடித்தருளி உமையொருபாகராய்க் காட்சி நல்கிச் சிவபதத்தை அளித்தருளினார்.