15. ஆனாய நாயனார்

மேல்மழ நாட்டில் மங்கலம் என்னும் மூதூரிலே ஆயர் குலத்திலே தோன்றியவர் ஆனாயர். பசுநிரைகளை மேய்க்குந் தொழிலினராய் வேய்ங்குழலூதும். இசைப்பயிற்சியில் வல்ல இவர், சிவனடியில் அன்பு மீதூர்ந்த சிந்தையுடன் இறைவனது திருவைந்தெழுத் தினை வேய்ங்குழலில் வைத்து வாசித்து எவ்வுயிரும் உளமுருக இசையமுதளித்தலைத் தமது பொழுது போக்காகக் கொண்டிருந்தார். கார்காலத்தில் ஒரு நாள் நிரை மேய்க்கச் சென்றவர் பொன்னிற மலர்களைப் பூத்துக் குலுங்கிய கொன்றை மரத்தினைக் கண்டு அதனருகே சென்று வேய்ங்குழலில் திருவைந் தெழுத்தை ஆரோசையம ரோசைகளில் அமைத்து வாசித்தார். ஆனாயர் வாசித்த இனிய குழலோசை கேட்டு நிற்பன நடப்பனவாகிய எவ்வுயிர்களும் தம்மை மறந்து அவ்விசைமயமாயின.

அத்திருக்குழலிசையினைச் செவிமடுத்த சிவபெருமான் உமையம்மையாருடன் விடை மீதமர்ந்து விசும்பிலே தோன்றி அருட்காட்சியளித்து என்றும் நம் சிவலோகத்தில் இருந்து வேய்ங்குழலூத நம் பாலணைவாய் என்று அருளிச்செய்ய ஆனாய நாயனாரும் சிவபெருமான் மருங்கு அணைந்து இன்புற்றிருந்தார்.