14. அரிவாட்டாய நாயனார்
சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் வேளாளர் குலத்துள் தோன்றியவர் தாயனார். இவர் செந்நெல் அரிசி, செங்கீரை, மாவடு ஆகிய இவற்றைச் சிவபெருமானுக்குத் திருவமுது செய்வித்தலைக் கடமையாகக் கொண்டிருந்தார். தாயனார் வறுமைக் காலத்தும் கூலிக்கு நெல்லறுத்துக் கிடைத்த செந்நெல் எல்லாம் சிவனுக்குரியதென்று திருவமுது செய்வித்தார். தாயனார் செந்நெலரிசி செங்கீரை மாவடு இவற்றைக் கூடையிற் சுமந்தவராய்த் தம் மனைவியார் இறைவனது திருமஞ் சனத்துக்கேற்ற பால் தயிர் முதலியன கொண்டு பின்னே வர முன் செல்பவர் கால் இடறிக் கீழே விழுந்தார். சிவனுக்கு அமுதாகிய செந்நெல்லரிசி முதலியன வயல் வெடிப்பிற் சிதறி வீழ்ந்தன. ‘இவற்றை இறைவன் அமுது செய்தருளும் பேறு பெற்றிலேனே’ என வருந்திய தாயனார் தமது கையிலுள்ள அரிவாளால் தமது கழுத்தினை அரிய முற்பட்டார். அந்நிலையில் அம்பலத் தாடும் அண்ணலாரது திருக்கையானது தாயனாரது கையினைப் பற்றிக்கொள்ள இறைவன் மாவடுவினை செய்யும் நிலையில் விடேல் விடேல் என்னும் தோன்றியது. இறைவனது அருட்பெருங்கருணையினை அஞ்சலி கூப்பி நின்று தாயனார் இறைவனைப் பரவிப் போற்றினார். சிவபெருமானும் விடைமீது தோன்றித் தாயனார்க்கு அருள் புரிந்தார். ‘இறைவர் அமுது செய்யப் பெற்றிலேன்’ என்ற ஏக்கத்தால் தம் கழுத்தினை அரிவாள் பூட்டி அரிய முற்பட்டமையால் இவர் ‘அரிவாள்தாயர்’ என அழைக்கப்பெற்றார்.