12. குங்குலியக் கலய நாயனார்
திருக்கடவூரில் மறையவர் குலத்தில் தோன்றிய இவர், திருக்கடவூர் வீரட்டத்தில் நாள்தோறும் குங்குலியத்தூபம் இடும் பணியினைத் தவறாது செய்து வந்தார். வறுமை நிலை வரவே மனைவிமக்கள் பசியினால் வருத்தமுற்றனர். மனைவியார் நெல் வாங்குதற் கெனத் தம்பால் கழற்றித்தந்த திருமங்கலியத்தைக் கொண்டு செல்லும் கலயனார் அத்திருமங்கலியத்தை விற்று எதிரே வந்த குங்குலியத்தை வாங்கித் திருக்கோயிலுக்குச் சென்று குங்குலியத் தொண்டு புரிவாராயினர். அந்நிலையில் கடவூரிறைவன் திருவருளால் இவரில்லத்தில் வேண்டும் பொருள்கள் வந்து நிரம்பின. வறுமை நீங்கப்பெற்ற குங்குலியக்கலயனார் திருப்பனந்தாளில் தாடகை என்னும் பெயருடைய அம்மையின் வழிபாட்டிற்கெனச் சாய்ந்திருந்த சிவலிங்கத்தைத் தம் கழுத்திற் கயிற்றாற் பிணித்திழுத்து நிமிரச் செய்தார். திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அடியார் திருக்கூட்டத்துடன் திருக் கடவூர் இறைவரை வழிபட வந்தபொழுது அவ்விரு பெருமக்களுக்கும் தம்மில்லத்தில் திருவமுது செய்வித்து மகிழும் பேறு பெற்றார்.