10. ஏனாதிநாத நாயனார்
சோழ நாட்டில் எயினனூரில் சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சியளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமையுடையராய் அதனால் வரும் ஊதியத்தால் சிவனடியார்களை உபசரித்துப் போற்றிவந்தார். இவரது தாயமுறையினனாகிய அதி சூரன் என்பவன் இவர்மேற் பொறாமையுடையனாய் ‘வாள் கொண்ட தாயம் வன்மையுடையாரே கொள்வது எனக் கூறி இவரை வலியப் போருக்கு அழைத்தான்.. ”நாம் இருவரும் சேனைகளை அணி வகுத்துப் போர் செய்யுமிடத்து வெற்றியடைந்தார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கொள்ளவேண்டும்” என்றான். ஏனாதி நாதரும் இசைந்தார். இருதிறத்தார்க்கும் இடையே நிகழ்ந்த போரில் அதிசூரன் தோற்றோடினான். தோல்வியுற்ற அவன் ஏனாதி நாதரை வஞ்சனையாற் கொல்ல எண்ணினான். ‘நம் இருவர்க்கும் துணை வருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டுமே நாளை விடியற்காலை குறித்த வேறோரிடத்திற் போர் செய்வோம்” என ஏனாதி நாதர்க்குச் சொல்லியனுப்பினான். அதற்கிசைந்த ஏனாதி நாதர் மறுநாள் விடியற்காலை தனியராய் வாளுடன் சென்று அவன் குறித்த இடத்தில் அவனது வரவை எதிர் பார்த்து நின்றார். திருநீறணிந்த நெற்றியினாரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதி நாதர் என்பதனை அறிந்த அதிசூரன் இதற்குமுன் என்றுமே திருநீறிடாதவன் அன்று வெண்ணீறு நெற்றியில் விளங்கப் பூசி நெஞ்சத்தே வஞ்சனையாகிய கறுப் பினையுட்கொண்டு தன் முகத்தைக் கேடகத்தால் மறைத்துக்கொண்டு ஏனாதி நாதரெதிர் விரைந்து சென்றான். ஏனாதி நாதர் போர் செய்ய முற்பட்ட அளவில் கேடகத்தைச் சிறிது விலக்கிய நிலையில் நீறணிந்த அவன் முகத்தைக் கண்ட ஏனாதி நாதர். ‘இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார். இவர் குறிப்பின் வழியே நிற்பேன்’ என வாளையும் பலகையையும் கையிற்பிடித்தபடி போர் செய்வார் போல் வறிதே நின்றார். அந்நிலையில் அதி சூரனும் அவரைக் கொலைசெய்ய எண்ணியதன் கருத்தினை எளிதில் நிறைவேற்றிக்கொண்டான். சிவபெருமான் பகைவனது கைவாளால் பாசம் அறுத்தருளிய ஏனாதி நாதர்க்கு எதிர் தோன்றி என்றும் பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.