8. அமர்நீதி நாயனார்
சோழநாட்டில் பழையாறை என்னும் நகரத்திலே வணிகர் குலத்திலே தோன்றியவர் அமர்நீதியார். இவர் வணிகத் தொழிலாற் பெருஞ்செல்வம் ஈட்டியவர். சிவனடியார்களைத் திருவமுது செய்வித்து அவர் கட்குப் போர்வையும் கோவணமும் அளிக்கும் தொண்டினை மேற்கொண்டிருந்தார். ஒருநாள் சிவபெருமான் அமர்நீதி நாயனாரின் அடியார் பத்தியினை உலகம் அறிந்து உய்தற்பொருட்டு அந்தணர் குலத்துப் பிரமசாரியாராக அவரையடைந்து தம்மிடமிருந்த கோவணம் ஒன்றனை அவரிடம் தந்து நீராடி வருவதாகச் சொல்லிச் சென்றார்? அமர்நீதியாரும் அவர் தந்த கோவணத்தை வாங்கி வைத்துக்கொண்டார்.
நீராடச் சென்ற மறையவர் மழையில் நனைந்து வந்து தாம் கொடுத்த கோவணத்தைக் கொண்டுவரும்படி நாயனாரைக் கேட்டார். அமர்நீதி நாயனாரும் அக்கோவணத்தைப் பாதுகாப்பாக வைத்த விடத்திற்காணாது எங்கும் தேடியுங் கிடைக்காமையால் திகைப்புற்றார். அதனினும் நல்லதாய்ப் புதிய கோவணம் தருவதாகக் கூறினார். அது கேட்ட அந்தணர் சினமுற்று நான் முன்கொடுத்த கோவணத்திற்கு ஒத்த மற்றொரு கோவணம் என்பாலுளது; அதற்கு ஒத்த நிறையுள்ள கோவணம் உம்மிடமுள்ளதாயிற் கொடுத்தாற் போதும் என்றார். அவர் கூறியபடி நிறைகோல் கொணர்ந்து நிறுத்தி ஒரு தட்டில் அந்தணர்பாலுள்ள கோவணத்தை வைத்து அதற்கு ஈடாகத் தம்பாலுள்ள கோவணம் ஆடை பொன் முதலியவற்றை இட்டும் நிறை ஒவ்வாமையால் தாமும் தம் மனைவியாரும் குழந்தையும் ஆக அத்தட்டில் ஏறி வானுலகம் தொழுது போற்றச் சிவலோகத்தையடைந்து பேரின்ப வாழ்வில் திளைத்து மகிழ்ந்தார்.