மருள் நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன வரலாறு

நள்ளிருள். திருப்பாதிரிப்புலியூரில் ஒரு சைனமடத்தில் இருந்த தருமசேனர் துடியாய்த் துடிக்கிறார். வயிற்றிலே தோன்றிய சூலை நோய் அவரால் பொறுக்க முடியவில்லை. குடலையே புரட்டி முடங்கச் செய்தது அந்த நோய். எவ்வளவோ மருத்துவம் செய்து பார்த்து விட்டார்கள். மந்திரமும் பார்த்தார்கள். தண்ணீரை மந்திரித்துக் குடிக்கச் செய்தார்கள்; தீரவில்லை. மயிற் பீலியினால் உடம்பெல்லாம் தடவி மந்திரித்தார்கள்: அப்போதும் தணியவில்லை. “இனி என்ன செய்வோம்!” என்று ஒன்றும் தெரியாமல் சைனர்கள் ஏங்கினார்கள்.

அப்போது தருமசேனருக்குத் தம்முடைய தமக்கையின் நினைவு வந்தது. திருவதிகைத் திருக்கோயிலில் சிவத்தொண்டு புரிவதையே தம் வாழ்க்கைப் பெரும்பணியாக வரையறுத்துக் கொண்டு அந்த அம்மையார் ஒரு திருமடத்தில் வாழ்ந்து வந்தார். தருமசேனர் தம்முடைய சமையற்காரனைத் தம் தமக்கையிடம் வரச் சொல்லி தம் நிலையை எடுத்துரைத்து அனுப்பினார். அவன் அப் பெருமாட்டியிடம் சென்று சொல்லவே, “நான் அங்கே வரமாட்டேன்” என்று அவர் சொல்லியனுப்பி விட்டார். அது கேட்ட தருமசேனர் தாமே தம் தமக்கையாரிடம் செல்லத் துணிந்தார்.

எல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள். தருமசேனர் மாத்திரம் தூங்கவில்லை. சூலை நோய் அவரைத் தூங்கவிடவில்லை. உடல் புழுவாய்த் துடித்துக்கொண்டிருந்தார். இன்னது செய்வதென்று தெரியாமல் அவர் மனம் சுழன்றது.

பிறப்பினால் சைவர் அவர். மருள்நீக்கியார் என்ற பெயர் உடையவர். சிறந்த சைவவேளாளர் குலத்தில் உதித்தவர். இப்போது சைனர்களிடையே பெரிய ஆசிரியராக எழுந்தருளியிருக்கிறார். ஆயினும் அவருக்கு உடம்போடு வந்த சைவ உணர்ச்சி முற்றும் நீங்கவில்லை. வழி வழியே சிவ பூசையும் சிவ வழிபாடும் செய்யும் குடியிற் பிறந்தமையால் அவர் உள்ளத்துக்குள்ளே சிவபெருமானுடைய நினைவு இருந்து கொண்டே இருந்தது. தம்முடைய புதிய சூழ்நிலையில் சைன சமய முறைப்படியே செய்ய வேண்டியவற்றை அவர் செய்து கொண்டிருப்பார்; அவர் மனமோ பழமையிலே பதிந்து சிவபெருமானுடைய நினைவாகவே இருக்கும். உள்ளத்துக்குள்ளே தோற்றும் அந்த நினைவை மாற்ற முயல்வார்; முடியாது. ‘நம்முடைய தந்தையார் இந்த நேரத்துக்குச் சிவபூசை செய்வார். நீரால் இறைவனை ஆட்டிப் பூவால் அருச்சனை செய்து தூபதீபம் காட்டுவார். இப்போது அந்த வழக்கத்தை நான் கைவிட்டேன்’ என்ற நினைவு அவர் மனத்தை உறுத்தும். அவர் சிவ பூசை செய்யாவிட்டாலும் சலமும் பூவும் தூபமும் அவர் நினைவிலிருந்து போகவில்லை.

இத்தகைய போராட்டத்திலிருந்து அவரை மீட்கத் திருவருள் பாலித்தான் சிவபெருமான். அவருடைய தமக்கையாகிய திலகவதியாரும் தினந்தோறும் இறைவனிடம், “அடியேன்பின் வந்தவனை ஆட்கொண்டருள வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டு வந்தார். எல்லாச் சமயத்திலும் இருப்பவன் ஒரே இறைவன்தான். சைனசமயத்தார் தம் மரபுப்படியே ஒழுகிப் பிறருக்குத் தீங்கு இயற்றாமல் வாழ்ந்தால் அவர்களுடைய வழிபாட்டையும் ஏற்றுக் கொள்வான் இறைவன்.

தருமசேனர் சைனசமய நூலறிவிலே சிறந்தவராக நின்றாலும், அந்தச் சமயத்தார் அவரை ஆசிரியராகக் கொண்டு வழிபட்டுப் போற்றினாலும் பழைய வாசனையும் குடிப் பிறப்பின் ஆற்றலும் அவருடைய உள்ளத்திலே சிவபிரானுடைய நினைவை மறவாமல் இருக்கச் செய்தன. அந்த நினைவை மறக்க முயன்றும் அவரால் முடியவில்லை.

இந்த நள்ளிருளில் மந்திரமும் மருந்தும் சைனரும் தம்மைக் கைவிட்டு நிற்கத் தம் மனத்தில் என்ன முயன்றும் சிவபெருமானுடைய நினைவு நீங்காதிருத்தலை எண்ணிப் பார்த்தார். தம்முடன் பிறந்த திலகவதியாரிடம் போனால் தம் நோய் நீங்கும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.

ஆகவே யாரும் அறியாமல் எழுந்தார். வெள்ளை ஆடையால் உடம்பெல்லாம் போர்த்துக்கொண்டார். திருப்பாதிரிப் புலியூரிலிருந்து புறப்பட்டுத் திருவதிகையை நோக்கி நடக்கலானார்.

சைனசமயப் பற்று அப்போதே அவரிடமிருந்து அகன்றது. உயிருக்கு மோசம் வரும் என்ற அச்சம் அவருக்கு உண்டாகி விட்டது. வழி வழி வந்த பெரும் பற்றாகிய சிவபெருமானைப் பற்றினால் உய்யலாம் என்ற எண்ணம் வலிமை பெற்றது.

மெல்ல மெல்ல நடந்து திருவதிகை வந்தார். திலகவதியார் இருந்த மடத்தை விசாரித்துக் கொண்டு சென்று உள்ளே புகுந்தார். திலகவதியார் காலில் வீழ்ந்து, “ஐயோ! என்னால் இந்தச் சூலை நோயைப் பொறுக்க முடியவில்லையே! நான் கரையேறும் நெறியைக் காட்டவேண்டும்” என்று சொல்லி அழுதார். திலகவதியார் அவரை எழுப்பி, “இறைவன் திருவருளால்தான் இது நீங்க வேண்டும். அவனுக்குத் தொண்டு செய்வாயாக” என்று கூறித் திருவதிகை வீரட்டப் பெருமான் சந்நிதிக்கு அவரை அழைத்துச் செல்ல எண்ணினார். இறைவனுடைய திருவைந்தெழுத்தை ஓதித் திருநீற்றைத் தம் தம்பியாருக்குக் கொடுக்க, அவர் அதனைப் பணிந்து ஏற்று அணிந்துகொண்டார்.

அப்போது தான் விடிந்து கொண்டிருந்தது. திருப்பள்ளி எழுச்சிக்குரிய காலம் அது. அகத்தே உள்ள இருளும் புறத்தே உள்ள இருளும் ஒருங்கே கரைய, இறைவன் திருமுன் திலகவதியார் செல்ல, மருள்நீக்கியாரும் சென்றார். திருவாளன் திருநீறு தரித்தபோதே அவர் தருமசேனராக இருந்தது மாறி மருள்நீக்கியார் ஆகிவிட்டார் அல்லவா?

தம் தமக்கையாரைக் கண்ட அளவிலே அவருக்கு ஓரளவு ஊக்கம் உண்டாயிற்று. திருநீறு அணிந்தவுடன் ஏதோ புத்துணர்ச்சி உடம்பில் மூண்டது. திருக்கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தபோது அவர் பழைய உடம்பு மாறி வருவது போன்ற அநுபவம் உண்டாயிற்று. தம்மைப் படாத பாடு படுத்திய சூலை நோய்க்கு மருந்து அங்கே உறுதியாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது.

திலகவதியாரைத் தொடர்ந்து சென்றார். திருக்கோயிலை வலம் வந்தார். அப்போது வீசிய காற்று அவர் உயிருக்கே தண்மையைத் தந்தது. உள்ளே புகுந்தார். சந்நிதியை அடைந்தார். பல காலமாக மறந்து பிரிந்திருந்த தாயை மீட்டும் வந்தடைந்த குழந்தை போல் ஆனார். செய்யத் தகாத காரியம் செய்து தம் சொந்த வீட்டைப் பிரிந்து பலகாலம் வேறிடத்தில் வாழ்ந்து மறுபடியும் தம் வீட்டை அடைந்தால் எப்படி உணர்ச்சி பொங்கி எழுமோ அப்படி எழுந்தது அவருக்கு. தம்முடைய உணர்ச்சியை யெல்லாம் கொட்டி ஓவென்று கதற வேண்டும் போல இருந்தது.

இறைவன் திருமுன் விழுந்தார். அவருடைய உள்ளத்தில் பழைய நினைவுகள் கொந்தளித்தன. தம்முடைய உயிருக்கு இறுதியாக வந்த நோய்க்கு ஏற்ற மருந்து கிடைக்கும் இடத்தை அணுகிவிட்டோம் என்று துணிவு உண்டாயிற்று. உணர்ச்சிக்குக் கரைபோட அவரால் முடியவில்லை. இறைவன் அருளும் அவருடைய இயற்கைச் செப்பமும் சேர்ந்து அவரைக் கத்திக் கூவிக் கதறுவதினின்றும் தடுத்தன. அவர் உள்ளம் இப்போது கனிந்திருந்தது. இறைவனுடைய அருள் நீரால் நனைந்திருந்தது. உணர்ச்சி வசப்பட்டு மலர்ந்திருந்தது. அங்கிருந்து நல்ல உருவத்தோடு கவிதை பிறந்தது.

கூற்றாயின வாறு விலக்ககலீர்!
கொடுமைபல செய்தன நான் அறியேன்;
ஏற்றாய், அடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்;
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட,
ஆற்றேன் அடி யேன்;அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே!

இப்படிப் பத்துப் பாடல்களை அவர் பாடி விட்டார். உணர்ச்சி விஞ்சும்போது தமிழ் அறிந்த அவருக்கு அவ்வுணர்ச்சி பாட்டாக வந்தது. அந்தப் பாட்டு அவருடைய வேதனையைக் காட்டியது. அவர் உள்ளத்தே சிவபெருமான் இருந்து, “வா, வா” என்று அழைத்ததைக் காட்டியது. “நான் சைனனாக உடலளவில் வாழ்ந்தாலும் நெஞ்சத்தை உமக்கே இட வைத்தேன். ஆண்டவனே! உம்மை ஒருபோதும் நினையாது இருந்தறியேனே!” என்று பாடினார். ‘சலமும் பூவும் தூபமும் நான் எடுத்துப் பூசை செய்யவில்லையே யன்றி, அவற்றை நான் மறந்தறியேன். தமிழோடு இசை பாடுதலையும், உன் நாமத்தை நாவிலே உரைத்தலையும் நான் மறக்க வில்லை. அவை என் நினைவிலே என்றும் இருந்துகொண்டே இருந்தன’ என்று பாடினார்.

சூலை நோய் தம்மைப் படுத்தும் பாட்டையெல்லாம் பாடினார். “என் குடலையே சுருட்டிப் பிடிக்கிறதே! நஞ்சாகி வந்து நலிகின்றதே! சுடுகின்றதே! என் வயிற்றைக் கலக்கிப் பறித்துப் புரட்டி அறுத்துக் கவர்ந்து தின்னுகிறதே!” என்று தம்முடைய வேதனையை எடுத்துச் சொன்னார்.

இறைவன் திருவருளால் அவர் வயிற்று வலி நின்றது. அவருக்குப் புதிய உயிர் வந்தது போல இருந்தது. ஒரு கணமேனும் தம்மை விடாமல் நலிந்து கொண்டிருந்த அந்த நோய் எவ்வாறு போயிற்று? அவர் வியந்தார்; மயங்கினார்: இறைவன் திருவருளென்று எணணித் தெளிந்தார். அங்க முழுவதும் புளகம் போர்த்தது, கண்ணில் நீர் தாரை தாரையாக வழிந்தது. ஆனந்தம் தாங்காமல் மீட்டும் மண்மேல் புரண்டு அயாந்தார். “அடியேன் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்து ஆட்கொண்ட கருணை வெள்ளத்துக்கு நான் தகுதியானவனா?” என்று உருகினார். சிவபிரானைத் தாம் விட்டாலும் அப்பெருமான் தம்மை விடவில்லை என்ற உண்மையை அவர் உணர்ந்தார்.

அப்போது அசரீரியாக, “திருப்பதிகம் பாடிய பான்மை யினால் திருநாவுக்கரசு என்ற நாமம் உனக்கு அமைவதாகுக!” என்று ஒரொலி எழுந்தது. அதுமுதல் மருள் நீக்கியார் திருநாவுக்கரசர் ஆனார்.

ஓம் நமசிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *