தம்பிரான் தோழர்

சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனுக்குத் தோழராக இருப்பவர். தம்பிரான் தோழர் என்பது அவருடைய பெயர்களில் ஒன்று. இறைவனை மிக எளியவனாக எண்ணிச் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். இறைவனிடம் மிக நெருங்கிக் கூறும் முறையில் அவை அமைந்திருக்கும். தமக்கு வேண்டிய பொருள்கள் இன்னவையென்றும், அவற்றை உடனே தந்தருள வேண்டுமென்றும் பாடுவார். இன்னும் சில பாடல்கள் இறைவனைப் பரிகாசம் செய்வது போலவும் அமைந்திருக்கும்.

இவையாவும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனிடத்தில் கொண்ட தோழமைக்கு அறிகுறிகள். வேடிக்கையாக அமைந்த பாட்டு ஒன்றை இப்போது பார்க்கலாம்.

ஒரு குடும்பத்தில் வேலை செய்வதற்காக ஒருவன் போகிறான். போய்ச் சில காலம் வேலை செய்கிறான். பிறகு அந்த வீட்டில் வேலை செய்யத் தன்னால் முடியாது என்று கருதி விட்டுவிட்டு வந்துவிடுகிறான். அவனை அவனுடைய நண்பன் கண்டு, “ஏன் அப்பா, அந்த வீட்டை விட்டு வந்து விட்டாய்?” என்று கேட்கிறான். “நமக்கும் அந்த வீட்டுக்கும் சரிப்பட்டு வராது; நம்மால் அங்கே வேலை செய்ய முடியாது” என்று அவன் சொல்லுகிறான். ‘அதற்கு என்ன காரணம்?” என்று அடுத்தபடி கேள்வி வருகிறது. அதற்கு அவன் விரிவாகத் தான் பட்ட அநுபவங்களைச் சொல்லுகிறான்.

“அந்த வீட்டிலே எஜமானருக்கு இரண்டு பெண்டாட்டிகள். இரண்டு பிள்ளைகள் வேறு. ‘வேலைக்காரனுக்கு வயிறு இருக்கிறது; உணர்ச்சி இருக்கிறது; அவனுக்கும் வாழ்க்கையில் அநுபவிக்க வேண்டிய சுகங்கள் இருக்கின்றன’ என்பதைக் கொஞ்சங்கூட நினைக்காமல் அங்கே இருக்கிறவர்களெல்லாம் வேலை வாங்கினார்கள். ஆனால் எனக்கு என்ன வேண்டுமோ அதைக் கவனிக்கவே இல்லை.

ஒரு மனைவி வாயே பேசுவதில்லை; ஆனால் பெரிய ஆரவாரம் செய்வாள். ஒரு பையன் தனக்கு வேண்டியதை வேண்டிமட்டும் வாங்கி வாங்கிச் சாப்பிடுவான்; வேலைக்காரனுக்குக் கொஞ்சம் கொடுக்க வேண்டுமே என்கிற நினைவே இராது. மற்றொரு பிள்ளையோ பார்த்தாலே பயப்படும்படி கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டிருப்பான். அவருடைய முதல் பெண்டாட்டி, செய்த வேலைக்குத் தக்கபடி கூலி கொடுக்கமாட்டாள். மாத மாதம் சம்பளங் கொடுக்க வேண்டுமே, அதற்கே தகராறு.

“அந்த வீட்டில் இருக்கிற அத்தனை பேரும் என்னுடைய நன்மையைக் கவனிக்காமல் தங்கள் தங்களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். நான் அங்கே எப்படி வேலை செய்வது? எனக்கு வேண்டிய பொருள்களை எப்படிப் பெறுவது? சம்பளமும் கிடையாது; சாப்பாடுங் கிடையாது; வேறு நன்மைகளும் இல்லை. ஆகையினாலேதான் நான் விட்டு வந்துவிட்டேன்” என்று அவன் சொன்னான்.

இப்படிச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனைப் பார்த்துப் பேசுகிறார்; “சுவாமி, உங்களுக்கு நானும் என்னைச் சார்ந்த அடியார்களும் ஆட்செய்ய மாட்டோம்” என்று சொல்லுகிறார். ஓணகாந்தன் தளி என்ற திருக்கோயிலுக்குச் சென்றபோது இறைவனைத் தரிசித்துத் தேவாரம் பாட ஆரம்பித்தார். அப்பொழுது அவருடைய உள்ளத்திலே பரிகாசமாகப் பாட வேண்டும் என்று தோன்றியது போலும்! பழிப்பது போலப் புகழும் துறையிலே பாட ஆரம்பிக்கிறார்.

‘ஓணகாந்தன் தளிஉளீரே!
உங்களுக்கு ஆட் செய்யமாட்டோம்.

காஞ்சீபுரத்தில் இருப்பது ஓணகாந்தன் தளி. செய்ய மாட்டோம் என்று தம்மையும் தம்மைச் சார்ந்த அடியார்களையும் சேர்த்துச் சொல்லுகிறார். என்ன காரணம்?

உம்முடைய தலையின்மேல் ஒருத்தி இருக்கிறாள். அந்தப் பெருமாட்டி வாயே திறப்பதில்லை. ஆனால் அவள் வரும்போதே ஆரவாரம் பெரிதாக இருக்கும். அழகான உம்முடைய சடா பாரத்திலே ஒளி வீசுகின்ற திங்களை வைத்திருக்கின்றீர். அதற்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அந்தப் பெருமாட்டி அலைக் கரங்களை வீசி ஆரவாரஞ் செய்கிறாள். என்னைக் கண்டால், உனக்கு என்ன வேண்டும், சாப்பிட்டாயா என்று கேட்பதே கிடையாது. வாயை மூடிக் கொண்டிருக்கிறாள். அவளாலே எனக்கு ஒரு பயனும் இல்லை.

திங்கள் தங்கு சடையின் மேல்ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய் திறவாள்.

அடுத்தபடியாக உம்முடைய பிள்ளை ஒருவர் வாசலிலே உட்கார்ந்திருக்கிறார். எப்பொழுது போனாலும் அவர் தம்முடைய வயிற்றைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். எந்தப் பண்டம் வந்தாலும் சரி, தம்முடைய வயிற்றுக்குள்ளே போட்டு கொள்வதற்கு அவர் சித்தராக இருக்கிறார். அவருக்கு எத்தனை கொடுத்தாலும் போதாது. அவரிடமிருந்து நான் எதையாவது வாங்கிக்கொள்வது என்பது சாத்தியமா? அவர் வயிறு மிகப் பெரிது. தம் வயிற்றுக்குப் போடும் திறத்தில் அவர் மகா உதாரியாக இருக்கிறார். மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கு மனம் வராதே ஒழியத் தம்முடைய வயிற்றிலே தள்ளுவதற்கு அவர் கை தாராளமாக வரும். ஒரு கைக்கு ஐந்து கை படைத்திருக்கிறார். அதில் ஒரு கை மிக நீண்ட கை. அந்தக் கணபதி யினிடத்திலே நான் என்ன நன்மையைப் பெற முடியும்?

கணபதியேல் வயிறு உதாரி.

அடுத்தபடி ஒரு பிள்ளை; அவனுக்குக் குமரன் என்று பெயர். அவன் பக்கத்திலே போக முடியாது. எப்போதும் கையில் வேலை வைத்துக் கொண்டிருக்கிறான். பக்கத்திலே போனால் அந்த வேலைப் பதம் பார்த்து விட்டால் என்ன செய்வது? அருகிலே போய் எனக்கு இது வேண்டும் என்று கேட்ட பிற்பாடல்லவா நன்மை கிடைக்கும்? கண்டவர் களெல்லாம் அஞ்சும்படியான கோலத்தில் அவன் இருக்கிறானே. ஆகவே அவனாலும் நன்மை கிடையாது.

அங்கை வேலோன் குமரன் பிள்ளை.

இவ்வளவு இருக்கட்டும்; வீட்டிலே உள்ள பிள்ளைகள் பராமுகமாக இருந்தாலும் மற்றவர்கள் எப்படி இருந்தாலும் இருக்கட்டும். முக்கியமான தலைவி, அந்த வீட்டுக்குச் சொந்தக்காரி, கவனிப்பதாக இருந்தால் அவர்கள் எப்படி இருந்தாலும் இந்த அம்மாளுடைய தயவினாலே உய்யலாம் என்று நினைக்கலாம். ஆனால் இங்கே, அந்தத் தேவி என்ன செய்கிறாள் தெரியுமா? வேலை வாங்கிக் கொள்வதிலே கெட்டிக்காரி. ஆனால் சம்பளம் கேட்டால் கொடுப்பதில்லை.

வேலைக்குத் தக்க கூலி கொடுக்க வேண்டாமோ? கூலிக்குக் கொற்று என்று பழங்காலத்திலே பெயர். கொற்றன் என்ற பெயரே அன்றன்று கூலிவாங்குகிறவனுக்குப் பெயர். கொற்று என்ற சொல்லிலிருந்து அந்தப் பெயர் வந்தது. அந்தக் கொற்றுக் கொடுத்தால் வேலை நடக்கும். இந்தத் தேவியோ வேலை வாங்கிக் கொள்கிறாள்; கொற்றுத் தருவதில்லை.

கொற்றளந்த நாயகி என்று ஒரு தலத்திலே அம்மைக்குப் பெயர் உண்டு. அன்றன்றைக் கூலியை எம்பெருமாட்டி அளிக்கிறாள் என்ற நினைவோடு பெரியவர்கள் அந்த நாமத்தை வைத்திருக்கிறார்கள், அவனவன் செய்கிற நல்ல தொண்டுக்கு ஏற்றபடி எம் பெருமாட்டியாகிய அருட்சக்தி வேண்டிய போகங்களைப் படியளக்கிறாள் என்பதையே கொற்றளந்த நாயகி என்ற திருநாமம் புலப்படுத்துகிறது.

ஓணகாந்தன் தளியிலே இருக்கிற எம்பெருமாட்டி, கொற்று அட்டி ஆள்வதில்லை. வேலை கொடுப்பாளே தவிரக் கூலி கொடுத்து நம்மை ஆட்கொள்ள மாட்டாள். வேலையை வாங்கிக்கொண்டு கூலிகொடுக்காமல் இருந்தால் வேலைக்காரன் வயிறு காய்வதா?

தேவியார் கொற்று அட்டி ஆளார்.

இப்படி, வாய் திறக்காத பெண்டாட்டி ஒருத்தி, வருகிற பொருளையெல்லாம் தன்னுடைய வயிற்றுக்குள்ளே அள்ளிப் போடுகிற பிள்ளை ஒருவன், எப்பொழுதும் கையிலே வேலை வைத்துக்கொண்டு பயமுறுத்தும் பிள்ளை ஒருவன், இவர்களுக்கு மேலாக எவ்வளவு வேலை வாங்கினாலும் கூலி கொடுக்காமல் ஏமாற்றுகிற பெருமாட்டி-இவர்களெல்லாம் இருக்கிற குடும்பத்திலே வேலைக்காரன் ஒருவன் அகப்பட்டுக் கொண்டால் அவன் என்ன ஆவான்? அவன் உடம்பு என்ன கல்லா? அவன் மனசு இரும்பா? அங்கே வேலை செய்யத் தோன்றுமா? “உமக்கு வேலை செய்ய நம்மாலே முடியாது” என்று வேலைக்காரன் சொல்வதுபோல் சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகிறார்.

திங்கள் தங்கு சடையின் மேல்ஓர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு உதாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கொற்று அட்டி ஆளார்
நம்மால் முடியாது
உங்க ளுக்கு ஆட் செய்ய மாட்டோம்
ஓண காந்தன் தளிஉ ளீரே!

ஓம் நமசிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *