தானே தந்தையாகவும் தானே குழந்தையாகவும் இறைவன்

காமனை எரித்தான் சிவபெருமான் என்பதும், அவன் ஒரு குழந்தையைப் பெற்றான் என்ற செய்தியும் ஒன்றுக்கொன்று முரண்பாடுபோலத் தோன்றுகின்றன. முருகன் சிவபெருமானுக்குக் குழந்தை. உலகில் ஆணும் பெண்ணும் கலந்து இல்வாழ்க்கை நடத்தும்பொழுது அவர்களுக்குக் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறப்பதற்கு முன்னாலே ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உண்டாகிறது; காம நுகர்சியை அடைகிறார்கள். அதன் பயனாகக் குழந்தை பிறக்கிறது. ஆனால் இறைவனோ காமத்தைக் கடந்தவன். காம நுகர்ச்சியினாலே அவனுக்குப் பிள்ளை பிறந்தது என்று சொல்வது பொருந்தாது. அதைத்தான் புராணம் நுட்பமாகத் தெரிவிக்கிறது.

மற்றவர்கள் மாரனுடைய ஏவலினாலே காம நுகர்ச்சி பெற்றுக் குமாரர்களை அடைவார்கள். சிவபெருமானோ மாரனுடைய ஏவல் பலிக்காமல் அவனை அழித்தான்; அதற்கு அப்பால் குமாரன் பிறந்தான். குமாரனுடைய ஜனனம் மாரனுடைய முயற்சியினாலே வந்த ஜனனம் அன்று; ஞானத்தின் விளைவாக வந்த ஜனனம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு திருப்பதிகத்தில் இந்த இரண்டு செய்திகளையும் ஒரு சேர வைக்கிறார்.

சோழ நாட்டில் உள்ள கலயநல்லூர் என்ற ஊருக்கு அவர் போனார். வழக்கம்போல அங்கே இருக்கின்ற இறைவனைத் தரிசித்தார்; தரிசித்துப் பதிகம் பாடினார். அதில் ஒரு பாட்டில் இந்த இரண்டு செய்திகளையும் ஒருங்கே வைத்திருக்கிறார். முருகனை இறைவன் அவதரிக்கச் செய்தான். அப்பெருமான் அவதாரம் செய்வதற்குக் காரணம் என்ன? தேவர்களுக்குரிய பொருள்களையெல்லாம் அசுரர்கள் வவ்விக் கொண்டு அவர்களை அடிமைப்படுத்தி விட்டார்கள். இந்திரன் கற்பகத்தோடும் காமதேனுவோடும் வாழ்ந்திருந்த வளவாழ்வை இழந்தான். அவன் எங்கோ போய் மறைந்து கொண்டான். அவனுடைய பிள்ளையாகிய சயந்தனை அசுரர்கள் சிறை வைத்துவிட்டார்கள். இந்திராணியும் எங்கோ ஒடுங்கிக் கிடந்தாள். தேவர்களின் வாழ்வு குலைந்து போயிற்று.

இந்த நிலையில் தேவர்கள் யாவரும் சென்று இறைவனிடம் முறையிட்டுக் கொண்டார்கள். இறைவன் பார்த்தான். ‘நாம் எத்தனையோ திருவிளையாடல்களைச் செய்திருக்கிறோம். இப்பொழுது நாமே முருகனாக அவதாரம் செய்வோம்’ என்று நினைத்தான். தன்னுடைய ஐந்து முகத்தோடு அதோ முகமாகிய ஒன்றையும் சேர்த்து ஆறுமுக நாதனாக எழுந்தருளினான்.

தானே தந்தையாகவும் தானே பிள்ளையாகவும் இருக்கும் நிலை இறைவனுக்கு உண்டு. நம் இயல்புக்கும் இறைவனுடைய இயல்புக்கும் வேறுபாடு உண்டு. தந்தை, பிள்ளை, மனைவி என்று இறைவனோடு சார்த்திச் சொல்லுகின்ற உறவு முறை உலகிலுள்ள மக்களின் உறவு முறையைப் போன்றது அல்ல. அது தத்துவத்தோடு சார்ந்த கருத்தையுடையது.

தானே தந்தையாகவும் தானே குழந்தையாகவும் இறைவன் தோன்றினான். குழந்தையாகத் தோன்றின போது முருகன் ஆனான். எதற்காக அவ்வாறு தோன்றினான்? தேவர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துகொள்ள, அவர்களுடைய இடுக்கண்களைத் தீர்த்து அசுரர்களைக் கொன்று மீண்டும் அவர்களுக்குரிய பதவியைத் தருவதற்காகத்தான் முருகன் திரு அவதாரம் செய்தான். அந்த அசுரர்களில் தாருகன் என்பவன் ஒருவன். அவன் ஆனைமுகம் உடையவன். அவனை முருகன் திரு அவதாரஞ்செய்து கொன்ற செய்தியைச் சுந்தரமூர்த்தி நாயனார் முதலிலே நினைக்கிறார். பல வகையான பலத்தை உடைய அசுரன் அவன். அவனைப் பொருது கொன்று உலகத்துக்கு இன்பத்தைத் தந்த பெருமான் முருகன். அந்த முருகனைத் திரு அவதாரஞ் செய்யும்படி செய்தவன் சிவபெருமான்.

பொரும்பலம துடை அசுரன் தாருகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்
கம்புவிலின் மலர்வாளிக் காமன் உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன்.

[போரிடுகின்ற வலிமையை உடைய அசுரனாகிய தாருகனை எதிர்த்து அவனை அழியச் செய்த மகனாகிய முருகனை முன்பு தோற்றுவித்து மகிழ்ந்த தூய பெருமான், கரும்பு வில்லையும் மலரம்புகளையும் உடைய காமனது உடம்பு வேகும்படியாகத் தீயாக விழித்த நெற்றிக் கண்ணை உடையவன். ]

ஓம் நம்சிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *