
கருணையுருவாகிய ருத்திராட்சம்
யாருக்கும் இல்லாத அடையாளங்கள் சிவபெருமானிடத்தில் இருக்கின்றன. மற்றவர்களெல்லாம் அழகும் உயர்வும் உடைய பொருள்களைத் தமக்கு ஆடையாகவும் அணியாகவும் இருப்பிடமாகவும் கொண்டிருப்பார்கள். சிவபெருமானோ இதற்கு மாறாக, அழகற்றனவும், அச்சத்தைத் தருவனவும், உலகத்தாரின் இகழ்ச்சிக்குரியனவுமாகியவற்றைக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு இயல்பாகவே அழகும் உயர்வும் இருப்பதனால் அணியாலும் ஆடையாலும் புதிய அழகும் மதிப்பும் வரவேண்டும் என்பது இல்லை. அவன் ஏற்றுக்கொண்ட இழிந்த பொருள்கள் யாவும் அவனுடைய தொடர்பினால் உயர்ந்த பொருள்கள் ஆகிவிடுகின்றன.
இறைவன் தன் திருக்கழுத்தில் ருத்திராட்சமாலை தரித்திருக்கிறான். அவன் திருவிழியில் கருணையினால் தோன்றிய நீர்த்துளிகள் ருத்திராட்சங்கள் ஆயின. ருத்திரனுடைய கண்ணிலே தோன்றியவை என்ற பொருளுடையது ருத்திராட்சம் என்ற தொடர். கண்ணுக்கு அழகு தருவது கருணைப் பார்வை.
அக் கருணையைக் சாட்டுவது அதில் தோன்றிய துளிகள். அவற்றின் உருவமாகிய ருத்திராட்ச மணிகளை இறைவன் அணிந்திருப்பது அவன் கருணையையே அணியாக உடையவன் என்பதைக் காட்டுகிறது. அந்தக் கருணையுருவாகிய ருத்திராட்சத்தைச் சிவனடியார்கள் அணிந்து இன்புறுகிறார்கள். இறைவனுடைய கருணையையே தாரகமாக உடையவர்கள் அல்லவா?
ருத்திராட்சத்துக்குக் கண்டி என்றும் ஒரு பெயர் உண்டு. கண்டம் என்பது கழுத்துக்குப் பெயர். அதில் அணிவதாதலின் கண்டி என்ற பெயர் வந்தது. மகர கண்டி, பொற்கண்டிகை என்று வழங்குவதைக் காண்க. கழுத்தில் அணியும் மாலைகள் பலவற்றிலும் சிறந்தது ருத்திராட்சம். சிறந்த ஒன்றை அடையின்றிச் சொல்வது உலக வழக்கு. பூ என்று சொன்னால் எல்லாப் பூக்களிலும் சிறந்த தாமரைப் பூவையே குறிக்கும்.
எவ்வித அடையும் இன்றிக் கண்டி என்றால் எல்லாவற்றினும் சிறந்த ருத்திராட்சத்தைக் குறிக்கும்.
இறைவனுடைய திருக் கழுத்தில் கண்டி அழகு செய்கிறது. இறைவன் தனக்கு ஓர் அணி அணியும் அவசியம் இல்லாதவன்; உருவமே இல்லாதவன். ஆயினும் அவன் உருவத்துக்குள் அமைந்து அன்பர்களுக்குக் காட்சி தருகிறான். அந்தத் திருமேனி பல ஆடைகளுக்குள்ளும் அணிகளுக்குள்ளும் அமைந்து விளங்கு கின்றது. அவன் திருக்கழுத்துக் கண்டிக்குள்ளே பொருந்தி இலங்குகிறது.
கண்டியுட் பட்ட கழுத்துடையீர்!
(ருத்திராட்ச மாலையைப் புறத்தே அணிந்து அதற்குள் அமைந்து திகழும் திருக்கழுத்தை உடையவரே!
கண்டி – ருத்திராட்சமாலை. உட்பட்ட – அதனைப் புறத்தே அணிந்து அதற்குள் தான் பொருந்தித் தோன்றிய.)
இறைவன் வீடுதோறும் பிச்சை வாங்கி உண்கிறானாம். தன்னை நாடி வந்து அன்பு செய்ய வேண்டிய உயிர்களுக்கு, அந்தச் சிரமத்தைக் கொடுக்காமல் அவர்களை நாடிச் சென்று அன்பாகிய பிச்சை கேட்கிறான். அந்தப் பிச்சையை ஏற்கும் பாத்திரம் பிரமகபாலம்; பிரமனுடைய மண்டையோடு. உயிர்களின் பிறப்புக்கும் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் மூலக் கருவாக நிற்பது வினை; அதை விதியென்றும் சொல்வதுண்டு.
அந்த விதியின் அடையாளமாகிய எழுத்து, தலையில் இருப்பதாகச் சொல்வது ஒரு மரபு; தலையெழுத்து என்று சொல்வார்கள். கபாலத்தைக் கண்டவர்கள் தலையெழுத்தை நினைத்துக் கொள்வார்கள். உடம்புகள் எரிந்து கரிந்து எலும்பாகும் கரிகாட்டில் எலும்புகள் உடம்பு நிலையாது என்ற உண்மையைக் காட்ட, கபாலம் எல்லாவற்றிற்கும் காரணமான விதியை நினைப்பூட்டுகிறது.
விதிப்பவன் பிரமன். உயிர்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை நுகரும்படி அமைக்கும் வரையறையே விதி. அந்தக் கணக்கைப் பார்த்து எழுதும் கணக்கப்பிள்ளை பிரமன். அதனால் அவனுக்கு விதி என்றே ஒரு பெயர் உண்டு. அவன் எல்லார் தலையிலும் எழுதுகிறான்; அவன் தலையில் எழுதுகிறவன் இறைவன். விதிக்கும் விதியாக நிற்பவன் இறைவன்.
பிரமனைப் பிறவியைத் தரும் கடவுள் என்று சொல்கிறோம். “அப்பா, உன் தலையெழுத்தை எழுதும் பிரமாவின் தலையெழுத்து என் கையில் அமைந்திருக்கிறது. அவனையே அழித்துத் தலையோட்டைத் திருப்பிவிட்டேன். அவனால் வரும் பிறவி நோயையும் தீர்ப்பேன். நீ உன் அன்பைத் தா” என்று கேட்கிறான் இறைவன்.
உடம்பு ஒரு வண்டியைப் போன்றது. உயிர் வாழ்க்கையை ஜீவயாத்திரை என்று சொல்வதுண்டு. யாத்திரைக்கு வண்டி வேண்டாமா? ஆகவே இதை அப்பர் சுவாமிகள் வண்டி என்றே சொல்கிறார். பழுதுபட்ட வண்டியை மூலையிற் போட்டு விடுவார்கள்; இந்த வண்டியைச் சுடுகாட்டில் எரித்துவிடுவார்கள். அப்போது எரியாமல் எஞ்சி நிற்பது மண்டையோடு; கபாலம். அதை இறைவன் தன் பிச்சைப் பாத்திரமாக, பரிகலமாகத் திருக்கரத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறான்.
…..கரி காட்டில்இட்ட
பண்டியிற் பட்ட பரிகலத்தீர்!
(சுடு காட்டிலே கொண்டுபோய் இட்டுக் கொளுத்தின உடம்பாகிய வண்டியில் அமைந்திருந்த கபாலமாகிய பாத்திரத்தை உடையவரே!
கரிகாடு – கரியும் காடு; சுடுகாடு, பண்டி – வண்டி. பட்ட – அமைந்த; தோன்றிய எனலும் ஆம். பரிகலம் பாத்திரம்; இறைவன் திருக்கரத்தில் உள்ள பிரமகபாலத்தைச் சுட்டியபடி.)
இறைவன் கருணைக்கு அடையாளமாக இருப்பது ருத்திராட்சம். அவனுடைய அழியாமைக்கும், பிறப்பை அறுக்கும் ஆற்றலுக்கும், எளிமைக்கும் அடையாளமாக இருப்பது கபாலம். கருணையும் பிறப்பறுக்கும் வன்மையும் ஆருயிர்களின்பால் எளியனாக வந்து வலிய அருள் செய்யும் பெருமையும் உடைய இறைவனிடத்திலே ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளுகிறார் அப்பர். ”இறைவரே! நான் உம்மை மறந்தாலும் தேவரீர் என்னை மறவாமல் ஆட்கொள்ள வேண்டும்” என்று வேண்டிக் கொள்கிறார்.
மனிதன் சுகத்தை நுகரும்போது அதைத் தனக்கு வழங்கியவனை மறந்துவிடுகிறான். நன்றாக வயிறாரச் சாப்பிட்டால் அந்த நிறைவிலே ஒரு விதமான மயக்கத்தை அடைந்து நினைக்க வேண்டிய கடவுளை மறந்து போகிறான். உணவு கிடைக்காத பட்டினியில் அவன் வாடும்போதும் இறைவன் நினைப்பு வருவதில்லை.
பசியினால் அல்லற்படும் போது, ”சோறு, சோறு” என்று பறக்கிறான். அவனுக்குச் சோற்றைத் தவிர வேறு ஒன்றுமே நினைவில் இருப்பது இல்லை. ஆகவே பட்டினி கிடக்கும்போதும் இறைவனை மறந்து விடுகிறான். அப்படியே நோயால் தவிக்கும்போதும் அந்த நோயால் வரும் துன்பத்திலே வாடி, இது தீருமா என்ற நினைப்பையன்றி வேறு எண்ணாமல் இருக்கிறான். அப்போதும் இறைவனை நினைப்பதில்லை.
தூங்கும்போது எல்லாவற்றையும் மறந்து போகிறான் மனிதன். ‘யமனுடைய தலை வாசலில் நிற்கிறோமே’ என்ற கவலை இருந்தால் அவன் தூங்குவானா? ‘யமனால் வரும் துன்பத்தைப் போக்கும் இறைவன் அருளை இன்னும் பெறவில்லையே!’ என்ற ஏக்கம் இருந்தால் அவன் தூங்க முடியுமா? அவற்றையெல்லாம் நினைக்காமலே அவன் தூங்குகிறான். இவ்வளவுக்கும் காரணம் என்ன?
மனிதன் ஐந்து பேர்களுக்கு அடிமையாக இருக்கிறான். அந்த ஐந்து பேர்களும் அவனைக் கொள்ளையடிக்கிறார்கள். அவனிடத்தில் சிறிதளவு பக்தி தோன்றினாலும் அதை உடனே கைப்பற்றி மறைத்துவிடுகிறார்கள். எந்தக் காலத்திலும் மனிதனுக்கு விரோதிகளாக, அவன் துன்புற்றாலும் இன்புற்றாலும் அவனுடன் இருந்து அவனை அலைத்து அவன் வாழ்வை நரகமாக்கி விடுகிறார்கள்.
அவர்கள் அடிக்கிற கொள்ளையில் இறைவனை நினைக்கவே முடியாது. அந்த ஐவர் மெய் வாய் கண் மூக்குச் செவியாகிய ஐந்து பொறிகள். இந்திரியங்களாகிய இவர்களை அடக்காமல் மனிதன் உய்வது என்பது இயலாத காரியம்.
இவற்றையெல்லாம் எண்ணி அப்பர் இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார். “கருணையும் எளிமையும் உடைய பெருமானே! உம்மை நான் மறவாமல் நினைக்க முடிவதில்லை. உண்டாலும் மறக்கிறேன். பட்டினி கிடந்தாலும் மறக்கிறேன். நோய்வாய்ப்பட்டாலும் மறக்கிறேன். உறங்கினாலும் மறந்து போகிறேன்.
ஐவர்கள் அடிக்கும் கொள்ளையிலே பட்டு மறக்கிறேன். இப்படி உம்மை நினைக்காமல் மறந்தாலும் தேவரீர் அடியேனை மறவாமல் திருவுள்ளத்திற் கொண்டருள வேண்டும்” என்று சொல்கிறார்; திருவீழி மிழலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் கூறுகிறார்.
கண்டியிற் பட்ட கழுத்துடையீர்!
கரி காட்டில்இட்ட பண்டியிற் பட்ட
பரிகலத் தீர்!பதி வீழிகொண்டீர்!
உண்டியில், பட்டினி, நோயில்,
உறக்கத்தில், உம்மைஐவர் கொண்டியிற்
பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே!
ஓம் நமசிவாய ஓம்


