
“தனிமயில் ஏறும் இராவுத்தனே”
ராவுத்தன் என்ற சொல் முஸ்லிம்களை நினைப்பூட்டுகிறது. அருணகிரியார் காலத்திற்கு முன்பே இந்த நாட்டுக்கு முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில், மாணிக்கவாசகருக்காகக் குதிரை ராவுத்தராக வந்த ஆண்டவனது திருக்கோலத்தை முஸ்லிம்கள் போலவே வருணித்திருக்கிறார் அதைப் பாடிய புலவர்.
பழங்காலத்தில் அரபு நாட்டிலிருந்து இந்த நாட்டுக்குக் குதிரைகள் வருவது வழக்கம். அந்தக் குதிரைகளோடு முஸ்லிம்களும் வந்தார்கள். ராவுத்தன் என்ற சொல்லுக்குக் குதிரை வீரன் என்று பொருள். மாவுத்தன் என்பது யானை வீரனையும், ராவுத்தன் என்பது குதிரை வீரனையும் குறிக்கும் சொற்கள். மேற்கு நாட்டிலிருந்து வந்த முஸ்லிம்கள் பெரும்பாலோர் குதிரைகளைக் கொண்டு வந்தவர்கள். ஆகையால் முஸ்லிம்கள் என்றால் குதிரைக்காரர்கள் என்கிற நினைப்பு இந்த நாட்டவருக்கு உண்டாயிற்று. அதனால் முஸ்லிம்களை ராவுத்தர்கள் என்று அழைக்கலானார்கள். இந்தச் சொல் தமிழ் நாட்டில் அதிகமாக வழங்குகிறது.
எம்பெருமான் மயிலாகிய குதிரைகளை நடத்துகின்றவன். அதனால் அவன் ஒருவகையான குதிரை வீரன். அது கருதியே இப்பாட்டில் ராவுத்தனே என்று விளிக்கிறார். பின்னாலே வருகிற ஒரு பாட்டிலும்,
“தனிமயில் ஏறும் இராவுத்தனே”
என்று பாடுவார்.
முஸ்லிம்கள் முருகனைத் தொழுகின்ற தலங்கள் சில இருக்கின்றன. பழனியில் முருகப்பெருமானைப் பின் பகுதி வழியாக வந்து முஸ்லிம்கள் வணங்குகிறார்கள். திருப்பரங் குன்றத்தின் அடிவாரத்தில் நாம் தொழும் கந்தப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார். மலை மேலே முஸ்லிம்கள் தொழும் சிக்கந்தர் எழுந்தருளியிருக்கிறார். சில நண்பர்கள் சிக்கந்தர் என்ற சொல் ஸ்ரீஸ்கந்தர் என்ற சொல்லின் திரிபு என்று சொல்வது உண்டு. கதிர்காமத்தில் இன்றும் முருகப்பெருமான் கோயிலுக்குப் பின்னால் இஸ்லாமியர்கள் வந்து தொழுகிறார்கள்.
இப்படி இஸ்லாமியருக்கும் முருகப்பெருமானுக்கும் தமிழ் வழங்கும் நிலத்தில் ஒரு வகையான தொடர்பு இருப்பதை நாம் உணர்கிறோம்.
ராவுத்தன் என்று முருகப் பெருமானை அருணகிரியார் இங்கே விளித்த வகை இந்த நினைப்புக்களை உண்டாக்கியது. குதிரை வீரர்களாக இருப்பவர்களை ரவுத், ராவுத்தர் என்று கூறுவது மரபு. ராணுவத்தில் குதிரை வீரர்களாக இருந்து ஊழியம் செய்தவர்களுக்கு ரவுத், ராவுத் என்ற பட்டங்களை அரசன் வழங்கியது உண்டு. சில தலங்களில் சிவபெருமானுக்கு ராவுத் தேசுவரர் என்ற திருநாமம் இருப்பதைச் சிலாசாஸனங்கள் மூலமாக உணரலாம்.
முருகப் பெருமான் மயிலாகிய குதிரையின் மேல் ஏறி வந்து போரில் சூரனை அழித்தமையினால் ராவுத்தன் என்ற பட்டப் பெயரைப் பெற்றான்.
“இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும்”
என்ற திருவகுப்பிலும் இந்தச் சொல்லை அருணகிரியார் வழங்குகிறார்.
அருணகிரிநாதப் பெருமான் இந்தப் பாட்டில், நம்மைப் போன்று உலக இன்பங்களுள் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு மிகவும் எளிதான சாதனம் ஒன்றைச் சொல்கிறார். இறைவனைத் தியானம் செய்வதற்கு நமக்கு ஆற்றல் இல்லாவிட்டாலும் அவன் திருக் கரத்திலுள்ள வேலை மெல்ல மெல்லக் கண்டு நெஞ்சில் கொண்டு பலமுறை தியானித்துப் பழக வேண்டும். அந்தத் தியானம் கோயிலுக்குப் போகும்போது மாத்திரம் செய்வது என்பது அல்ல; வீட்டில் இருக்கும் அமைதியான நேரத்தில் செய்வது என்பதும் அல்ல; எல்லாக் காலத்திலும் செய்வதற்கு உரியது.
ஆத்மநாத சுவாமி எழுந்தருளியிருக்கிற தலம் திருப்பெருந் துறை. அங்கேதான் மாணிக்கவாசகர் உபதேசம் பெற்றார். அந்த ஊர்த் திருக்கோயிலில் ஒரு மண்டபம் இருக்கிறது. அந்த மண்டபத்தில் ஒரு தூணில் குதிரைச் சேவகராக எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தில் இறைவனுடைய உருவம் இருக்கிறது. அந்த உருவத்திற்கு இப்பொழுதும் பூசை செய்து வருகிறார்கள். அவரைக் குதிரை ராவுத்தர் என்றும், அந்த மண்டபத்தைக் குதிரை ராவுத்தர் மண்டபம் என்றும் வழங்குகிறார்கள். அங்கே மற்றோர் ஆச்சரியச் செயல் நிகழ்கிறது. குதிரை ராவுத்தர் எழுந்தருளியிருக்கும் இடம் மட்டும் வந்து முஸ்லிம்கள் தொழுகிறார்கள்.
ஓம் சரவணபவ


