பேசாத நாள் – கி.வா. ஜகந்நாதன்
திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந் திருமுறையிலிருந்து எடுத்த பதின்மூன்று பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரைகளை இந்தப் புத்தகத்திற் காணலாம். ஆறாந் திருமுறையில் 99 பதிகங்களும் 981 பாடல்களும் இருக்கின்றன. இந்தப் பதிகங்கள் யாவும் திருத்தாண்டகங்கள்.
திருத்தாண்டகம் என்பது யாப்பினாற் பெற்ற பெயர். தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுளுக்குரிய பெயர். அது குறுந்தாண்டகம் என்றும்,நெடுந்தாண்டகம் என்றும் இருவகைப் படும். அறுசீர் அடிகள் நான்கு அளவொத்து முடிவது குறுந் தாண்டகம் என்றும், எண் சீரடிகள் நான்கு அளவொத்து அமைவது நெடுந்தாண்டகம் என்றும் பெயர் பெறும்.
“மூவிரண் டேனும் இருநான் கேனும் சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர் கடவுளர்ப் புகழ்வன தாண்டகம்; அவற்றுள் அறுசீர் குறியது; நெடியதுஎண் சீராம்“
அறுசீர் எண்சீர் அடிதான் கொத்தங்கு
இறுவது தாண்டகம்; இருமுச் சீரடி
குறியது; நெடியது இருநாற் சீரே“
என்று இதன் இலக்கணத்தைப் பன்னிரு பாட்டியல் என்னும் இலக் கண நூல் கூறுகிறது.
‘இருபத்தேழ் எழுத்து முதலாக உயர்ந்த எருத்தடியினவாய் எழுத்தும் குரு லகுவும் ஒத்து வருவன அளவியற்றாண்டகம் எழுத்து ஒவ்வாதும், எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம்’ என்று யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர் இலக்கணம் எழுதுவார் (சூ. 95, உரை.)
முன்னுள்ள இலக்கணத்தின்படி இத் திருமுறையில் உள்ள பாடல்கள் நெடுந்தாண்டகத்தின்பாற் படும். பின்னுள்ள இலக்கணத்தின்படி அவை அளவியற்றாண்டக மாகும்.
யாப்பருங்கலக்காரிகைப்படி இவை எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தத்துள் அடங்கும். அரையடிக்குக் காய்ச்சீர் இரண்டும் மாச்சீர் இரண்டும் வந்த விருத்தங்கள் இவை. சில பாடல்கள் இந்த வரையறையினின் று மாறுபட்டும் இருக்கும். எண்சீர் விருத்தம் என்ற சட்டத்துக்குள் அடைக்க வேண்டு மென்று கருதித் திருத்தாண்டகப் பாடல்களைத் திருத்துவது முறையன்று. ஆன்றோர்கள் வாக்கை அப்படி அப்படியே வைத்துப் பாதுகாத்து, இலக்கணத்தில் அதற்கு அமைதி உண்டா என்று தேடிப் பார்த்துப் பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லை யெனின் அதற்கு அதுவே இலக்கணமாகக் கொள்ள வேண்டும்
“இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்” என்பது எவ்வகை இலக்கணங்களுக்கு ஏற்புடைய விதி. பண்டை இலக்கணங்களில் ஆன்றோர் இலக்கியங்களைக் கண்டு விதிகளை வகுத்தார்கள் புலவர்கள். அந்த விதிகளில் அடங்காதவற்றுக்குப் புற நடை வகுத்தார்கள். அவை போதா என்று ஆரிடம், ஆரிடப் போலி என்பன போலச் சில போக்குகளைக் காட்டியிருக்கிறார்கள். இவ்வளவுக்கும் காரணம் முந்தையோர் இலக்கியங்களை நாம் இயற்றும் இலக்கணத்துக்குப் புறம்பானவை யென்று தள்ளிவிடக் கூடாது என்பதுதான்.
தாண்டகம் பாடுவதில் அப்பர் சுவாமிகள் மிகச் சிறந்தவர். அதனால் அவருக்குத் தாண்டக வேந்தர், தாண்டகச் சதுரர் என்ற திருகாமங்கள் வழங்கலாயின. திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கை மன்னன் பாடியுள்ள நெடுந்தாண்டகப் பாக்களைத் திரு நெடுந் தாண்டகத்தில் காணலாம். திருநாவுக்கரசருடைய தாண்டகப் பாக்கள் மனத்தை உருக்குவன. அவர் பாடிய பலவகைப் பாடல்களில் தாண்டகம் இறைவனுடைய பெருமையை விரி வாகச் சொல்ல இடந்தருவது. அதனால் மனமுருக்கும் வகையில் அடுக்கடுக்காகத் தொடுத்துச் சொல்லுகிறார் வாகீசர்.
ஆறாந் திருமுறையில் 64 தலங்களைப் பற்றிய பாடல்கள் வரு கின்றன. திருவாரூருக்குப் பதினொரு பதிகங்கள் இருக்கின்றன. திருவதிகைக்கு ஐந்தும், திருவீழிமிழலைக்கு நான்கும், திருக்கயிலாயத்துக்கு மூன்றும் உள்ளன. இரண்டு பதிகங்களைப் பெற்ற தலங்கள் எட்டு. க்ஷேத்திரக்கோவை, அடைவுதிருத்தாண் டகம் என்ற இரண்டும் பல தலங்களைச் சொல்லுகின்றன. எந்தத் தலத்தைப்பற்றியும் இன்றிப் பொது வகையில் அமைந்த தாண்டகங்கள் ஆறு இத் திருமுறையில் அமைந்துள்ளன.
இந்தப் புத்தகத்தில் விளக்கம் பெறும் பதின்மூன்று பாடல்களில் பதினொரு தலங்கள் வருகின்றன. ஆரூரைப்பற்றிய மூன்று பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
பாடல்களின் பொருளை வெவ்வேறு வகையில் வெளிப் படுத்த எண்ணி, வினாவிடையாகவும் காட்சி வருணனையாகயும் வேறு வகையாகவும் இந்தக் கட்டுரைகளை எழுதினேன். அன்பர்கள் இந்த வரிசையை ஆதரித்து எழுதும் கடிதங்களும், ஊக்க மளித்துக் கூறும் வார்த்தைகளும் இறைவன் திருவருளை நினைக்கச் செய்கின்றன.
கி. வா. ஜகந்நாதன்