பேசாத நாள் – கி.வா. ஜகந்நாதன்
புண்ணியனைக் கண்டேன்
திருவையாற்றுக்கு அருகில் திருப்பூந்துருத்தி என்ற தலம் இருக்கிறது. திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான உற்சவத்தில் கலந்து கொள்ளும் ஏழு மூர்த்திகளில் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமானும் ஒருவர், அத்தலத்தில் திருநாவுக்கரசருக்கு ஈடுபாடு மிகுதியாக உண்டு. அங்கே அவர் ஒரு திருமடம் அமைத்துக்கொண்டு பலகாலம் தங்கி இறைவனைப்
பல பதிகங்களால் துதித்து வழிபட்டார்.
திருப்பூந்துருத்திக்கு முதலில் வந்து திருக்கோயிலுக்குள் சென்றார். அவருடைய உள்ளத்தே அன்பு பொங்கியது. உணர்ச்சி விஞ்சியது. நேர்ந்தபரி வொடுந்தாழ்ந்து நிறைந்தொழியா அன்பு பொங்க, வார்ந்த கண்ணீர் மழை தூங்க அயர்வுறுந் தன்மையர் ஆனார்.’
உணர்ச்சி பொங்கும் பொழுது மனமுருகிக் கவிபாடும் வாகீசர் இறைவனைக் கண்ட பேரானந்தத்தை ஒரு திருத் தாண்டகத்தால் வெளியிடத் தொடங்கினார். “திருப்பூந் துருத்தியில் நான் கண்டேன்” என்று பெருமிதத்தோடு பாடினார்.என்னை ஆட்கொண்டு, என்னுடைய மனத்தைப் பக்குவப்படுத்தி மெய்யான அருளின்ப அநுபவத்தை வழங்கிய பெருமானைக் கண்டேன்’ என்று ஆராமை மீதூரப் பத்துப் பாடல்களைப் பாடினார். முதற் பாசுரத்தை இங்கே பார்க்கலாம்.
நாவுக்கரசர் பேசுகிறார்:
என் மனம் காற்றாய்ச் சுழன்று பேயாய் அலைந்தது. அது பற்றாத பொருள் இல்லை; பற்றி ஒரு கணம் நின்ற இடமும் இல்லை. ஒரு கணம் பற்றியதை மறுகணம் பற்றாமல், ஓரிடத்தில் நில்லாமல் அலைந்து திரிவதையே தன் இயல்பாகக் கொண்ட இந்த மனத்தை நிறுத்துவதென்பது என் ஆற்றலுக்குள் அடங்கியதாக இல்லை.
அது போன வழி யெல்லாம் நான் போய்க் கொண்டிருந்தேன். அதனால் நான் கண்டது துன்பந்தான். இத்தகைய பேய்மனம் நின்றது. ஒன்றையே பற்றி நின்றது. இறைவனுடைய தியானத்திலே ஒன்றி நின்றது, அவனை நினைக்கும் நிலை என் நெஞ்சுக்கு உண்டாயிற்று. அந்த நிலையை அது தன் முயற்சியாற் பெறவில்லை. அது முன்பு என்றும் நினையாத நெஞ்சு ஆயிற்றே. நானும் முயன்றிலேன். இறைவனே தன் கருணைமிகுதியால் என் நெஞ்சை வழிப் படுத்தித் தன்னை நினைக்கச் செய்தான். நினையா என் நெஞ்சை நினைவித்தான்.
இந்த நிலையை நான் பெற்றபோது எனக்கே வியப்பாக இருந்தது. இதை எப்படி இறைவன் நிறுத்தினான் என்று ஆராய்ந்தேன். அவனுக்கு இதைப்போன்ற செயல்களே விளையாட்டாக இருக்கின்றன என்று உணர்ந்தேன். ஓரிடத்தில் நில்லாமல் ஓடி அலைகொந்தளிக்கப் பாய்ந்து வந்த கங்கையைத் தன் சடையிலே நிற்கச் செய்தான். “என்னைத் தாங்குவார் யார்?” என்று அது கொந்தளித்து வந்தது. அப்போது அதனைத் தன் சடையின்மேல் அடங்கி நிற்கும் படி செய்தான்.நில்லாத நீரைச் சடையின்மேல் நிற்பித்த பெருமானாதலினால் நினையா என் நெஞ்சை நினைவித்தான்.
எப்போதும் திரிந்து உழன்ற மனத்தைத் தன் அருளால் நிறுத்தித் தன்னை நினைக்கச்செய்த அந்தப் பெருமானை நான் பூந்துருத்தியில் கண்டேன்.
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாஎன் நெஞ்சை நினைவித் தானை
பூந்துருத்திக் கண்டேன் நானே.
அவனை நினைக்கப் பண்ணியதனால் என்ன பயன்? எங்கும் சென்ற மனம் ஓரிடத்தில் நின்று இறைவனை நினைப்பது வியப்பான செயல்தான். அந்த வியப்பு ஒன்று தான் கண்ட பயனா? அப்பர் சுவாமிகள் மேலே சொல் வதைக் கேட்போம்:
நான் எத்தனையோ கற்றேன். சமய நூல்களைக் கற் றேன். சமண நூல்களைக் கற்றுப் பலரும் வியக்கும் புலமை யுடையவனாக விளங்கினேன். இலக்கிய இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தேன். என் அலைந்திருந்த காலத்தில் அந்த அலைச்சலை அடக்கி அமைதிபெற வழிதெரியாமல் ஏதேதோ கற்றேன். ஆனால் நானாகக் கற்ற அப்போது உண்மையில் நான் ஒன்றும் கற்கவில்லை. என் மனத்தை நிறுத்தித் தன்னை நினைக்கச் செய்தானே, அப்போது நான் புதிதாக ஏதும் கற்க முயலவில்லை. ஆனால் அப்போதுதான் முன்பு கல்லாத கல்வியை யெல்லாம் கற்றுக் கொண்டேன். என் முயற்சியின்றியே தன் கருணை மிகுதியால் எனக்கு அநுபவத்தின் மூலமாகக் கற்பித்தான். அதுகாறும் நான் கற்ற கல்வி பயனில்லாத கல்வியாக ஒழியக் கல்லாத கல்வி யைக் கற்பித்து இன்புறுத்தினான் இறைவன். அவனை அல்லவா நான் பூந்துருத்தியில் கண்டு உருகிப் போனேன்!
கல்லா தனஎல்லாம் கற்பித் தாக
பூந்துருத்திக் கண்டேன் நானே.
மனம் நின்றது, அவனை நினைந்தது; கல்லாத கல்வி யைக் கற்றேன் என்ற அளவில் நின்றால் சருகு அரித்தபடி
தானே ஆகிறது? இவைகளெல்லாம் சாத்தியநிலை அல்லவே! சாதனந்தானே? என்ன லாபம் கைமேல் கிடைத்தது?
இப்படிக் கேட்டுப் பார்க்கலாம். அப்பர் கூறும் விடையை இப்போது கேட்கலாம்;
ஆம், அவன் அருளே கற்பிக்க நான் கல்லாதன வெல் லாம் தெரிந்து கொண்டேன். அதற்குமேல் இதற்குமுன் அறியாத இன்பத்தை யெல்லாம் கண்டு கொண்டேன். அமைதி பெறாத மனத்தை வைத்துக் கொண்டு கல்வி யென் னும் காட்டில் உழன்று திரிந்து மேலும் மேலும் கவலைக்கு ஆளாகி அநுபவத்தில் ஒன்றையும்
நின்ற எனக்குக் கல்லாக் கல்வி ரேண்மல் நூலறிவோடு
வரும் வாலறிவைத் தந்தான்; அதன்பயனாகிய இன்ப அநுபவத்தைத் காட்டி ன். காணாத இன்பங்களைக் காட்டி யருளினான்.பூந்துருத் தியில் அத்தகைய அருட்கடலையே கண்டேன்.
காணா தனவெல்லாம் காட்டினானை …
பூந்துருத்திக் கண்டேன் நானே.
இன்னும் என்ன அநுபவம் கிடைத்தது? – இந்தக் கேள்விக்கு நாவுக்கரசர் விடை கூறுகிறார்:
அவன் என்னோடு பேசினான்.நானும் நீங்களும் பேசுவது போன்ற பேச்சா அது? சொல்லின் அளவைக் கடந்த இன்பச் சுழலிலே என் தனி நாயகனாகிய ஐயனுடைய பேச்சு, பேசாத பேச்சு அல்லவா? அங்கே மற்ற யாரும் சொல்ல முடியாதவற்றைச் சொன்னான்; என்னை உணர வைத்தான். வாய் படைத்தார் சொல்லும் சொற்கூட்டத் துக்குள் அடங்காத சொல்லை அவன் சொன்னான்; சொல்லாமற் சொன்னான்.
அப்படிச் சொன்னதை நான் முதலில் கவனிக்கவில்லை. காதுகேட்க, வாயாலே சொன்னதைக் கேட்டுக் கேட்டுப் பழகிய எனக்கு அவன் பாஷை புரியவில்லை. ஆனாலும் அவன் என்னைவிட வில்லை. என்னைத் தொடர்ந்து வந்தான் சொல்லாதன வெல்லாம் சொன்னான். அடியேனை ஆட் கொண்டான்.
அவனுக்கு ஆளாகிய அப்பொழுதே என் நோய் கழன்றது. மணிமந்திர ஒளஷதங்களால் தீராத பொல்லாத நோய் அது. அதைத் தீர்த்தான் புனிதனாகிய எம்பெருமான். அவன் மாசற்றவன்; தூயவன்; புனிதன். என் மாசை அறுத்து நோய் நீக்கிய பெருமான். பாவத்தால் துன்புற்று அலையும் என்போலியரை ஆட்கொண்டு இன்பூட்டும் புண்ணியன் அவன். அந்தப் புண்ணிய மூர்த்தியைத்தான் நான் திருப்பூந்துருத்தியிற் கண்டேன்.
சொல்லா தனஎல்லாம் சொல்லி என்னைத்
தொடர்ந்திங்கு அடியேனை ஆளாக் கொண்டு
பொல்லாளன் நோய் தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
இறைவன்பால் மனம் ஒன்றி அவனை எப்போதும் நினைக்கும் திருவுடையாருக்கு உயிருக்குள் இன்பம் ஊட்டுகின்ற கல்வியும் காட்சியும் கிடைக்கும். எங்கும் பரந்து நிறைந்துள்ள இறைவன் அவர்தம் உள்ளத்துள்ளே இருந்து யாவற்றையும் குறிப்பாற் புலப்படுத்துவான். தன்னை உண்மையன்போடு பற்றினவரை அவன் என்றும் பிரியாமல் அருள்புரிந்து அவர்களுடைய இடர்களைப் போக்கியருள்வான்’ என்ற கருத்துக்களை நாவுக்கரசர் இப் பாடலால் புலப்பட வைக்கிறார்.
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாஎன் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனஎல்லாம் கற்பித் தானைக்
காணா தனஎல்லாம் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாம் சொல்லி என்னைத்
தொடர்ந்திங் கடியேனை ஆளாக் கொண்டு
பொல்லாளன் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே.
[நில்லாத நீர்-கங்கை, நினைவித்தானை – நினைக்கும்படி செய்தவனை. புனிதனை – தூயவனை]
இந்த அருமைப் பாசுரத்தோடு மாணிக்கவாசகப் பெருமான் அருளிய பின்வரும் திருப்பாட்டும் ஒப்பு நோக்கு தற்கு உரியது.
கேட்டு ஆரும் அறியாதான், கேடொன் றில்லான்,
கிளை இலான், கேளாதே யாவும் கேட்டான்.
நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே
காட்டார்கள் விழித்திருக்க ஞாலத் துள்ளே
காட்டா தனஎல்லாம் காட்டிப் பின்னர்க்
கேளா தனஎல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்;
எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே!
(திருச்சதகம்)
முன் உள்ள நாவுக்கரசர் பாசுரம் ஆறாந்திருமுறையில் 43-ஆம் பதிகத்தில் முதற்பாட்டாக அமைந்திருக்கிறது.