மால்வரை உடைத்தவன்

வேலின் பெருமையை நினைத்த புலவர் அதன் வெற்றியைப் பின்னும் சொல்கிறார். வேல் சூர சங்காரம் செய்தது மாத்திரந்தானா? திடீரென்று சூர சங்காரம் நடந்துவிடவில்லை. தேவாசுர யுத்தம் என்று பெயர்பெற்ற மகாயுத்தத்தின் இறுதியிலே சூரனை முருகவேள் சங்காரம் செய்தருளினான். காவியங்களால் பாராட்டப் பெறுவன முப்பெரும் போர்கள். பாரத யுத்தம், ராம ராவண யுத்தம், தேவாசுர யுத்தம் என்ற அந்த மூன்றையும் முறையே பாரதமும், ராமாயணமும், கந்தபுராணமும் விரித்துரைக்கின்றன. பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடை பெற்றது; ராமாயண யுத்தம் பதினெட்டு மாதங்கள் நடந்தது; சூர சங்காரப்போர் பதினெட்டு ஆண்டுகள் நிகழ்ந்ததென்பர்.

நெடும்போராகிய தேவாசுர யுத்தத்தில் எத்தனையோ அரிய வீரச்செயல்களை முருகன் செய்தான். அவனுடைய செங்கதிர் வேல் பல விம்மிதச் செயல்களை நிகழ்த்தியது. அவற்றுள் இறுதியானது சூர்மாமுதல் தடிந்தது. ஆனால் அதற்கு முன் பல பல வீரச்செயல்கள் விளைந்திருக்கின்றன. சூர சங்காரம் செய்த வேல் என்று ஆரம்பித்த புலவருக்கு அதற்கு முன் நிகழ்ந்த செய்திகள் நினைவுக்கு வருகின்றன. கதையாய்ச் சொல்வதாக இருந்தால் முதலிலிருந்து வரிசையாகச் சொல்லவேண்டும். இது துதிதானே? ஆதலால் ஒன்றைச் சொன்ன வுடன் அதற்கு முன்னாலே நிகழ்ந்தது நினைவுக்கு வருகிறது. அதனால் அதையும் சொல்லித் துதிக்கத் தோன்றுகிறது.

மனிதன் சில நிகழ்ச்சிகளை நினைக்கும்போது ஒன்றனோடு ஒன்று தொடர்ச்சியாக நினைவுக்கு வரும். இன எண்ணங்கள் (association of ideas) ஏன்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த நினைவுத் தொடர் ஒன்றன்பின் ஒன்றாகக் கால அடைவுப் படியே ஏற்படலாம்; அல்லது பின்நோக்கித் தலை கீழாகத் தொடரலாம்; ஒரு வரிசையில்லாமலும் நினைவு அமையலாம். இங்கே புலவருடைய நினைவு பின்னோக்கிச் செல்கிறது. கந்தபுராணக் கதையின் கடைசி அத்தியாயத்தை முதலில் நினைத்தார். அதற்கு முந்திய கதைப்பகுதிகள் அப்பால் நினைவுக்கு வருகின்றன. அவுணர் மருங்கறத் தபுத்த வேல் செய்த பெருஞ் செயல் ஒன்று அவர் உள்ளத்தில் தோன்றுகிறது. அது கிரௌஞ்ச சங்காரம்.

கிரௌஞ்சம் என்பது அன்றிற் பறவையின் வடமொழிப் பெயர். கிரௌஞ்சாசுரன் என்ற அவுணன் ஒரு மலையாக நின்றானென்றும் அம்மலையில் தோன்றிய குகையூடே தேவர்கள் புகுந்தனரென் றும் அவர்களைப் பாதுகாக்க முருகன் மலைமேல் வேல் விட்டுப் பொடியாக்கினா னென்றும் தமிழ்க் கந்த புராணம் கூறும்.

பழங்கதை ஒன்று உண்டு. சூரன் கிரௌஞ்ச மலைக்குள்ளே புகுந்துகொண்டான். அந்த மலை பறக்கும் இயல்பு வாய்ந்தது. தனக்குக் கவசம் போல அமைந்த கிரௌஞ்ச மலையோடு சூரன் எங்கும் உலாவினான். வேற்படையை முருகன் ஏவிய போது அம்மலையையும் அதனுள்ளே இருந்த சூரன் மார்பையும் ஒருங்கே அவ்வாயுதம் துளைத்து விட்டது. தக்கயாகப் பரணியில் ஒட்டக்கூத்தர் இதனைச் சொல்கிறார்.

ஒருதோகை மிசையேறி உழல்சூரும்
மலைமார்பும் உடனூடறப்
பொருதோகை சுரராச புரமேற
விடுகாளை புகழ்பாடுவாம்

என்பது அவர் பாட்டு. ‘ஒரு மயிலின்மேல் ஏறியருளித் தனக்குப் பகைவனான சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரபன் மாத்தானும் ஒக்க ஒரே காலத்திலே ஊடுருவும்படி வேலேறுபடப் பொருதருளிச் சமுத்திர ஆரவாரத்தைச் சுவர்க்கத்து ஏறப் போகவிட்ட இளையோனுடைய புகழைப் பாடுவாம்’

என்று பழைய உரையாசிரியர் இதற்குப் பொருள் எழுதியிருக்கிறார். அருணகிரிப் பெருமானுக்கும் இந்தப் பழங் கதை தெரியும்.

கிளைபட் டெழுசூர் உரமுங் கிரியும்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே

என்ற அநுபூதித் திருப்பாட்டில் இச்செய்தியைச் சொல்லியிருக்கிறார்.

சூரனைத் தொளைத்த பெருமைக்குச் சமானமானது கிரௌஞ்ச மலையைப் பிளந்த பெருமை.

…..கார்வந்து
உறங்குசிகைப் பொருப்பும்சூர் உரப்பொருப்பும்
பிளப்ப……….வேல் எடுத்த

என்று திருவிளையாடற் புராணம் கூறுகின்றது. ‘குன்றங் கொன்ற குன்றாக் கொற்றம்’ என்று இந்த வெற்றியைத் திருமுருகாற்றுப்படை பாராட்டு கிறது.

புலவர் அந்தக் கொற்றத்தை நினைக்கிறார். கிரௌஞ்ச மென்னும் பெரிய மலையை உடைத்த பெருமையைச் சொல்கிறார். அந்தக் கிரௌஞ்சமலை நாவலந் தீவின் வடபால் இருந்ததாம். இப்போது இந்தியா என்று வழங்கும் இந்த நாட்டிற்குப் பழங் காலத்தில் ஜம்பூத்வீபம் என்று வடமொழியிலும், நாவலந்தீவு என்று தமிழிலும் பெயர்கள் வழங்கின. வடபால் இருந்த மேருவில் ஒரு நாவல் மரம் இருந்த தென்றும் அதனை எல்லையாகக் கொண்டதனால் நாவலந்தீவு என்ற பெயர் வந்ததென்றும் காரணம் கூறுவர். தீவு முழுதும் சோலை அடர்ந்திருந்தது. ஆகையால் இதனை நாவலந் தண்பொழில் என்றும் சொல்வதுண்டு. தீவுகளுக்கே ‘பொழில்’ பெயர் உண்டு. இந்த நாவலந் தண்பொழிலிலே வட பாகத்தில் கிரௌஞ்ச மென்னும் மாமலை இருந்தது. அன்றிற் பறவையின் பெயரைப் பெற்ற மலை அது அதைத் தமிழ்ப்புலவர்கள் குருகு பெயர்க்குன்றம், குருகொடு பெயர்பெற்ற மால்வரை என்று சொல் வார்கள். பறவையின் பெயரைப் பெற்ற மலை என் பது அத் தொடரின் பொருள். குருகு என்பதே அன்றிலுக்குரிய பெயரென்றும் சொல்லலாம்.

அந்த மால்வரையை உடைத்துத் துளைத்து ஊட றுத்து நடுவிலே பெரும்படைகூடச் செல்லும்படியாக வழிபண்ணி விட்டான் முருகன். அவுணர் குலத்தை அறும்படியாக அழித்த வேலாலே இந்த அற்புதத்தை நிகழ்த்தினான். மலையினூடே வழியை உண்டாக்கினான்; செல்வோர் செல்லும்படியாக வழி திறந்தான்.

அப்படிச் செய்த பெருமான் ஆறு திருமுடியை உடையவன். சின்னஞ் சிறு பாலகனாதலின் தாய் தந்தையர் உச்சி மோக்கும் மெல்லிய தலைகளை உடையவன்.

இவற்றையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்து முருகவேளையே நேரே துதிக்கப் புகுகின்றார் புலவர். “முருகா, ஆறு மென்மையான தலைகளைக்கொண்டவனே, வேலாலே நாவலந் தண்பொழிலின் வடபால் இருந்த குருகொடு பெயர் பெற்ற மால்வரையை உடைத்து வழி திறந்தவனே” என்று புகழ்பாடு கிறார்.

நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக்
குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து
மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை!

[நாவலந்தண் பொழிலாகிய ஜம்பூத்வீபத்தில் வடக்குப் பிர தேசமாகிய அவ்விடத்தில் இருந்த அன்றிலென்னும் பறவை யினாலே பெயரைப் பெற்ற கிரௌஞ்ச மென்னும் பெரிய மலையை (வேலாலே) உடைத்து, மலையினூடே வழியை உண்டாக்கிய, ஆறு மென்மையான தலையை உடையவனே!

பொழில் – பூமி. ஆயிடை – அவ்விடத்தில். குருகு – பறவை; கய -மென்மை; அன்றில். ஆற்றுப்படுத்த- வழியுண்டாக்கிய. கயந்தலை – மெல்லிய தலையை உடையவனே.)

மெல்லிய தலையை உடையவனே என்று சொன்னது, மிகவும் இளையவனாக இருக்கும்போதே இத்தகைய வீர விளையாட்டை நிகழ்த்திய பெருமான் என்ற வியப்பைப் புலப்படுத்தியபடி இந்தப் பாட் டுக்கு உரையெழுதிய பரிமேலழகர், ‘குழவிப் பருவத்து இவ்வீரமெல்லாம் செய்தாயென்னும் கருத் தால் கயந்தலை என்றார்’ என்று நயம் எழுதியிருக்கிறார்.