கடுவன் இளவெயினனார் பாட்டு
கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்கள் சமரச நோக்கோடு வாழ்ந்தனர். எல்லாத் தெய்வங் களிடத்தும் மதிப்புடையவர்களாக இருந்தனர். ஒரு தெய்வத்தினிடம் ஆழ்ந்த அன்பு உடையவர்களாய் அத் தெய்வத்தையே வழிபடு கடவுளாகக் கொண்டிருக்கலாம். அதனால் மற்றத் தெய்வங்களை வெறுக்கும் தன்மை அவர்களிடம் இல்லை.
இப்படி இருந்த புலவர்களுக்குள் கடுவன் இள வெயினனார் என்பவர் ஒருவர். இவர் வேட்டுவக் குலத்திலே பிறந்தவ ரென்று தோன்றுகிறது. இவர் கடைச்சங்கப் புலவர்களில் ஒருவர். இனிய பாக்களை இயற்றும் வன்மையுடையவர்.
பழைய காலத்தில் புலவர்கள் பாடி வந்த பாடல்கள் பலவிதமாக இருந்தன. இப்போது அதிகமாக விருத்த வகைகளில் புலவர்கள் பாடுகிறார்கள். சுப்பிரமணிய பாரதியாரைப் பின்பற்றும் புதிய புலவர்கள் இசைப்பாட்டுகளைப் பாடுகிறார்கள்.
பழங்காலத்தில் அகவற்பாவில் புலவர்கள் தம் திறமையைக் காட்டினர். வெண்பா, கலிப்பா என்ற வகையிலும் பல பாடல்களை இயற்றினர். அவற்றை இப்போதும் பாடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒருவகையான பாட்டு மிகப் பழங்கால முதல் இருந்து வந்து, வரவரப் பாடுவார் இல்லாத நிலைக்கு வந்திருக்கிறது. பரிபாடல் என்று அதற்குப் பெயர். அது இயலும் இசையும் கலந்த பாட்டு. நடுவிலே முடுகு வரும். அதற்கு ராகம் உண்டு; தாளம் உண்டு. மிகப் பழங்காலத்தில் அந்தச் செய்யுளில் பலவற்றைப் புலவர்கள் பாடி வந்தார்கள் என்று தெரிகிறது. தொல்காப்பியத்தில் அதற்கு இலக்கணம் இருக்கிறது. பிற்காலத்தில் உண்டான யாப்பிலக்கண நூல்களில் அதன் இலக்கணத்தை விட்டுவிட்டார்கள். வழக்கில் இல்லாத ஒன்றை எதற்குச் சொல்ல வேண்டுமென்று எண்ணியிருக்கலாம். யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இரண்டு நூல்களும் செய்யுளிலக்கணத்தைச் சொல்லும் புத்தகங்களிற் சிறந்தவை. அவற்றில் பரிபாடலின் இலக்கணம் இல்லை. ஆனால் நூறு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் இருந்த புலவர் ஒருவர் மாத்திரம் ‘பாப்பாவினம்” என்ற தம் நூலில் அதன் இலக் கணத்தைச் சொல்லியிருக்கிறார்.
பரிபாடலால் அமைந்த நூல்கள் முதல் இரண்டு சங்கங்களில் அதிகமாக வழங்கியிருக்க வேண்டும். வரவர அதில் குறைவாகவே பாடினார்கள் என்று தோன்றுகிறது. கடைச் சங்ககாலத்தில் பாடிய பரி பாடல்களைத் தொகுத்து, பரிபாடல் என்று பெயரிட்டுத் தமிழ்மக்கள் படித்து இன்புற்றார்கள். கடைச்சங்க நூல் வரிசையில் ஒன்றாகிய எட்டுத் தொகையில் இந் தப் பரிபாடலும் ஒன்று. எழுபது பாட்டுக்களை உடை யது இந்தத் தொகை நூல். அவற்றில் முருகவேளின் சிறப்பைச் சொல்லும் பாட்டுக்கள் முப்பத்தொன்று.
அந்த நூலில் உள்ள எழுபது பாடல்களில் இப்போது இருபத்திரண்டு பாடல்களே கிடைக்கின்றன. அவற்றைக் கண்டு பிடித்து ஆராய்ந்து மிக அருமையான குறிப்புக்களுடன் என்னுடைய ஆசிரியப்பிரானாகிய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முருகக்கடவுளுக்குரிய பாடல்கள் எட்டு அந்தப் புத்தகத்திலே இருக்கின்றன. கடுவன் இளவெயினனார், ஆசிரியன் நல்லந்துவனார், குன்றம் பூதனார், கேசவனார், நல்லழிசியார், நப்பண்ணனார், நல்லச் சுதனார் என்ற புலவர்கள் அப்பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். குன்றம் பூதனார் பாடிய இரண்டு பாடல்கள் உள்ளன.
இப்போது உள்ள ‘பரிபாடல்’ என்ற நூலில் கடுவன் இளவெயினனார் இயற்றிய பாடல் ஐந்தாவதாக அமைந்திருக்கின்றது. அவர் திருமாலைப்பற்றியும் இரண்டு பரிபாடல் இயற்றியிருக்கிறார். முருகனைப்பற்றி அவர் பாடிய பாட்டில் அப்பெருமானது திருவவதாரமும் பிற திருவிளையாடல்களும் வரு கின்றன.
சூரனை முருகன் வென்ற திறத்தை அவர் பாடுகிறார். சரவணப் பூம் பொய்கையில் விளையாடியிருந்த பொழுதே இந்திரனோடு பொருது அவன் செருக்கை அடக்கிய செய்தியைச் சொல்கிறார். மலையடர்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்தில் பூசாரி அவனை வழிபடும் வகையைத் தெரிவிக்கிறார். முருகன் திருவவ தாரக் கதையைப் பழைய சம்பிரதாயப்படி சொல்கிறார். முருகன் அவதரித்த போதே தேவர்கள் அவனுடைய பெருவலியை உணர்ந்து வணங்கி வாகனமும் கொடியும் படைக்கலமும் தந்தனர் என்று கூறுகிறார். முருகன் திருக்கரங்களில் உள்ள ஆயுதங்களைப் புலப்படுத்துகிறார். “உயிர்களைக் கொல்பவர்களும், சினமுடையோரும், அறநெறியில் நடவாத புல்லரும், பழியுடையோரும், ஒழுக்கம் தவறினவரும், மறுபிறப்பு இல்லை யென்று சாதிப் பாரும் உன் அருளைப் பெறமாட்டார்கள்” என்று சொல்கிறார்.
இறுதியில் அவர் முருகப்பிரானை வேண்டுகிறார். “உன்னுடைய அருளைப் பெறுவாரே பெரியரென்பதை உணர்ந்தோம். ஆதலால் நின்பால் நாங்கள் கேட்பது பொருள் அன்று; பொன் அன்று; போக மும் அன்று. நின்னுடைய அருள் வேண்டும். அந்த அருளைப் பெற்று ஆருயிர்களிடத்திலே அன்பு பூண வேண்டும். அந்த அன்புள்ளத்தால் அறநெறி வழா திருக்க வேண்டும். அருளும், அன்பும், அறமும் ஆகிய இந்த மூன்றும், கடப்பந் தாரை அணிந்த கடவுளே! நீ எங்களுக்கு வழங்கவேண்டும்” என்று பிரார்த்தனை செய்கிறார்.
அழகான பிரார்த்தனை. அவருடைய பாட்டும் அழகான பாட்டு. அதை இனி விரிவாகப் பார்க்கலாம்.