குறிஞ்சிக் கடவுள்
முருகவேளுடைய பெருமையைத் தமிழ்நாட்டார் பழங் காலமுதல் உணர்ந்து பாராட்டி, அப் பெருமானைப் போற்றி, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பயனையும் பெற்றார்கள். நெடுங் காலமாகப் புலவர் பெருமக்களால் வளர்க்கப்பட்டு வரும் தமிழில் உள்ள பல நூல்கள் அங்கங்கே முருகனைப்பற்றிய செய்திகளைத் தருகின்றன. தமிழுக்கே சிறப்பாக உரியது என்று சொல்லப் பெறும் அகப் பொருள் அமைதியையுடைய பாடல்களில் மிகுதியாக முருகனைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அதற்குக் காரணம், தமிழர் வரம்பு கட்டிப் போற்றிய அகப்பொருள் ஒழுக்கமாகிய காதல் நாடகம் ஆரம்பிக்கும் முதல் நிலத்தின் தெய்வமாக முருகன் அமைந்ததுதான்.
நிலப்பரப்பை ஐந்தாக வகுத்து மலையும் அதனைச் சார்ந்த இடமும் குறிஞ்சியெனக் கொண்ட தமிழர் அந்நிலத்துக்குத் தெய்வமாக முருகனை வைத்து வழிபட்டனர். குறிஞ்சி என்ற பெயர் அந்த நிலத்தில் அருமையாக வளர்ந்து மலரும் குறிஞ்சிப் பூவிலிருந்து வந்தது. அம்மலர் நீலநிறமுடையது; பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலருமாம்.
சேயோன்
குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வம் முருகன் என்பதைத் தொல்காப்பியர்,
சேயோன் மேய மைவரை உலகமும்
என்று புலப்படுத்துகிறார். ‘செங்கேழ் முருகன் காதலித்த வான் தங்கிய வரைசூழ் உலகம்’ என்று நச்சினார்க்கினியர் இதற்குப் பொருள் எழுதுவர். சேய் என்றும் சேயோன் என்றும் முருகனுக்குப் பெயர் தொன்றுதொட்டு வழங்கும். சேய் என்பது குமாரன் என்ற வடசொல்லின் மொழிபெயர்ப்பு என்று கூறுவார் உண்டு. ஆனால் பழைய தமிழ் நூல்களில் அச்சொல் வரும்போதெல்லாம் ‘சிவந்த நிறமுடையவன்’ என்றே பொருள் எழுதுவர். தொல்காப்பியர் இங்கே ‘சேயோன்’ என்று முருகனைக் குறிக்கிறார். அதற்கு நச்சினார்க்கினியர், ‘செங்கேழ் முருகன்’ என்று உரை வகுத்தார். கேழ் என்பது நிறம்; சிவந்த நிறமுடைய முருகன் என்பது பொருள். முருகன் செந்நிறமுடையவன் என்பதை நக்கீரர், செய்யன் சிவந்த ஆடையன்’ என்று திருமுருகாற் றுப்படையில் கூறுகின்றார். சிவபெருமான் பவழம் போன்ற மேனியுடையவன். அப்பெருமானினின் றும் வேறல்லாத முருகனும் அந்நிறமே உடையவன். ஆகையால் பெருந்தேவனார் என்ற சங்கப் புலவர் முருகனுடைய துதி ஒன்றில்,
பவழத் தன்ன மேனி
என்று பாராட்டுகின்றார். “பவழம்போல் மேனியிற் பால்வெண் ணீறும்” என்று சிவபெருமானை அப்பர் சுவாமிகள் பாராட்டியிருக்கிறார் அல்லவா?
சேயோன் மேய மைவரை உலகம்’ என்று குறிப்பிடும் தொல்காப்பியச் சூத்திரத்தில் மேய என்ற சொல்லுக்குக் ‘காதலித்த’ என்று உரை எழுதுவார் நச்சினார்க்கினியர். மேய என்பதும் மேவிய என்பதும் ஒரே சொல்லின் வேறு வேறு உருவம். மேவிய என்பது விரும்பிய என்றும், தங்கிய என்றும் இருபொருளைத் தரும். முருகன் குறிஞ்சி நிலத்தில் விரும்பித் தங்குகிறான்.
மேகம் சூழ்ந்த மலை நிலம் என்ற பொருள் தோன்றக் குறிஞ்சியை, மைவரை உலகம் 19 என்று சொல்லுகிறார். மை-மேகம். மேகத்தைக் கூறினமையால் மழை உண்டென்பதும், அந்த மழையால் அருவி உண்டென்பதும், வளம் உண்டென்பதும் பெறப்படுகின்றன. இயற்கைத் தேவியின் பருவ வளப்பத்தைப் புலப்படுத்தும் பகுதியாக விளங்குவது மலை. அந்த மலை வளத்தைக் கண்டு காதலித்த முருகன், ‘இதுவே என் ராஜ்யம்’ என்று விரும்பித் தங்குகிறான்.
இங்கே குறவர் முதலியவர் கூடி வெறியாட் டெடுத்து முருகனை வழிபடுவார்கள். குறவர் நாகரிக மற்ற சாதியினர் என்று அவன் நினைப்பானா? அவர்களுடைய அன்பை உணர்ந்து அவர்களுக்கு அருள் செய்யும்பொருட்டு வெளிப்படுவான்.
தேனும் தினையும் ஊனும் மலைநெல்லும் வைத்து, ஆட்டை அறுத்துப் பலிகொடுத்துக் குர வைக் கூத்தாடிக் குறவரும் குறத்தியரும் ஆடும் ஆட்டத்துக்கு வெறியாட்டென்று பெயர். அது முருகனை நோக்கிச் செய்வது. குறிஞ்சி நிலத்தில் இந்தப் பூசை நிகழும். இதை நடத்தும் பூசாரிக்கு வேலன் என்று பெயர்.
வெறியாட்டில் ஆட்டுப்பலி முதலியன நிகழ்ந் தாலும் முருகன் அன்பு ஒன்றையே கருதி வெளிப்படுவான். ‘குறிஞ்சி நிலத்துக் குறவர் முதலியோர் குழீஇ வெறி அயர்தற்கு வேண்டும் பொருள் கொண்டு வெறி அயர்ப ஆகலின், ஆண்டு முருகன் வெளிப்படும் என்றார்’ என்று நச்சினார்க்கினியர் குறிஞ்சி நிலத்தின்மேல் முருகனுக்கு உண்டான காதலுக்குரிய காரணத்தை விளக்குகிறார்.
முருகனைத் தெய்வமாக உடைய குறிஞ்சி நிலத்துக்குச் சிறப்பான பருவம் ஐப்பசி கார்த்திகை மாதங்களாகிய கூதிர் காலமாம். சிறு பொழுதுகளில் நள்ளிருள் யாமம் சிறந்ததாம்.
காதலர் முதல் முதலாகக் கண்டு காதல் கொள்வதற்குக் குறிஞ்சி நிலம் சிறந்தது. ஆகவே காதல் நாடகத்தில் குறிஞ்சித் திணை என்ற பிரிவு காதலர் கூடுதற்குக் காரணமான செய்திகளையும் கூடும் செய்திகளையும் விரிவாகச் சொல்லும். முருகன் உண்மைக் காதலர்கள் ஒன்றுபடுவதற்குரிய திருவருளைச் செய்பவன் என்ற கருத்தைத் தமிழர் கொண்டிருந்தனர் என்று இதைக்கொண்டு சொல்லலாம் அல்லவா?
கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன்பே காதலர் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டு அன்பு செய்வதைக் களவுப் புணர்ச்சி என்று சொல்வார்கள். வள்ளியெம்பிராட்டியிடம் முருகப் பெருமான் காதல் செய்தது போன்றது இது. இந்த நிகழ்ச்சியில் பிறர் அறியாவாறு, மிகவும் அரியவளாகிய காதலியைத் தேடிக் கொண்டு காதலன் வருவான். ஐப்பசியும் கார்த்திகையுமாகிய வாடைக் காலத்தில் வந்து காதலியைக் காண்பது அருமை; நள்ளிருளில் காண் பதும் அத்தகையதே. சலார் சலாரென்று வாடை யோடு நீர்த்துளி வீசுவதாலும், நடு இரவில் விலங்குகள் தம் விருப்பப்படி ஆணும் பெண்ணும் சேர்வதாலும் காதலியைக் காணவேண்டு மென்றிருக்கும் காதலனுக்கு ஆர்வம் மிகுதியாகும். அதிகமாகப் பசித்தவனுக்கு உணவு கிடைத்தால் அதிகமாக ருசிக்கும். அதுபோல இந்த இடையூறுகளால், காண முடியாதோ என்று அதிகமாக வேகங்கொண்ட தலைவன் பெரு முயற்சி செய்து தலைவியைக் கண்டு அளவளாவினால் அப்போது உண்டாகும் இன்பம் மிகச் சிறந்ததாக இருக்கும். தலைவனும் தலைவியும் ஒன்றுபடும் இன்பம் மிக அதிகமாகும் படியாகச் செய்யக் காரணமாக இருப்பதால், கூதிர் காலமும் அர்த்த யாமமும் குறிஞ்சிக்குச் சிறந்தவை யென்று அமைத்திருக்கிறார்கள். இதைப் பின்வருமாறு நச்சினார்க்கினியர் எழுதியிருக்கிறார்.
இனிக் குறிஞ்சியாவது புணர்தற்பொருட்டு. அஃது இயற்கைப் புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்தபின், களவு நீட்டிப்பக் கருதும் தலைவற்குக் களவினைச் சிறப்பிக்குங்கால், தலைவி அரியளாக வேண்டும். ஆகவே, அவ்வரு மையை ஆக்குவது ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிரும் அதன் இடையாமமும்’ என்பது. என்னை?
இருள் தூங்கித் துளிமிகுதலின் சேறல் அரிதாதலா னும், பானாட் கங்குலிற் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளும் துணையுடன் இன்புற்று வதிதலிற்க காமக் குறிப்புக் கழியவே’ பெருகுதலானும், காவல் மிகுதி நோக்காது வரும் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்கால் இன்பம் பெருகுதலின், இந்நிலத்திற்குக் கூதிர் காலம் சிறந்ததெனப்படும்.’
வேலன் ஆடும் காந்தள்
குறிஞ்சி நிலத்தில் வெறியாடும் பூசாரி தன் கையில் வேலைப் பிடித்திருப்பதால் அவனுக்கு வேலன் என்று பெயர். அவன் கழற்சிக்காய்களை வைத்து நிமித்தம் பார்ப்பான். முருகனுடைய விக்கிரகத்தைப் பாதுகாப்பதால் அவனுக்குப் படிமத்தான் என்றும் பெயருண்டு. படிமம் – விக்கிரகம். அவன் ஆடும்பொழுது காந்தள் என்ற பூவைச் சூடி ஆடு வான். காந்தள் முருகனுக்கு அடையாளக் கண்ணி. அதனைச் சூடி ஆடுவதால் வெறியாட்டுக்குக் காந்தள் என்று ஒரு பெயர் உண்டு.
வெறி அறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும்
என்று அந்தக் கூத்தைப்பற்றித் தொல்காப்பியம் சொல்கின்றது. ‘தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியும் சிறப்பினையும், உயிர்க்கொலை கூறலின் வெவ்வாயினையும் உடைய வேலன் தெய்வமேறி ஆடுதலைச் செய்த காந்தளும்’ என்பது நச்சினார்க்கினியர் உரை. வேலன் ஆவேசம் வந்து ஆடுவான்.
சிறுபான்மை குறமகளிரும் ஆவேசம் வந்து ஆடுவது உண்டு. முருகனைக் கூவி அழைத்துப் பாடுவதனால் அகவல் மகளென்றும், முறத்தில் நெல்லை வைத்துக் கட்டுப் பார்த்து நிமித்தம் கூறுவதனால் கட்டுவிச்சி, கணிகாரி என்றும், தெய்வமேறி யாடுதலால் தேவராட்டி என்றும் அவளைக் கூறுவார்கள்.
காதலனைக் காணாமல் சோர்வுற்றிருக்கும் காதலியைக் கண்டு, அவளுடைய தாய், ‘இவளுக்கு இந்தச் சோர்வு ஏன் வந்தது?’ என்று ஆராயப் புகுவாள். வேலனை அழைத்துக் கழங்கு கொண்டும், கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுக் கொண்டும் நிமித்தம் பார்க்கச் செய்வாள். அவர்கள், ‘இது முருகனால் வந்தது’ என்று சொல்ல, உடனே தாய் அப் பெருமானுக்குப் பூசை போட்டு வெறியாட்டெடுப்பாள். இதைத் தொல்காப்பியம் பின்வருமாறு சொல்லும்:
கட்டினும் கழங்கினும் வெறியென இருவரும்
ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்.
“தேவராட்டியும் பூசாரியும் ஆகிய இருவரும் கட்டினாலும் கழங்கினாலும் ஆராய்ந்து, இது வெறியாட்டுச் செய்தால் தீரு மென்று ஒன்றுபட்டுச் சொன்னபோது அப்படியே செய்யத் தொடங்கும் போது செவிலி பேசுவாள்’ என்பது இதன் பொருள்.
வேலும் மயிலும்
முருகப்பெருமான் வேற்படையையும் மயில் வாகனத்தையும் உடையவன். இவ்விரண்டையும் தியானித்தல் முருகனடியார் இயல்பு. “வேலும் மயிலும்” என்பதை மந்திரம் போல உருப்போடுதலும் உண்டு. தொல்காப்பியத்துக்கு உரைவகுத்த பெரியார்கள் இவ்விரண்டைப்பற்றியும் இரண்டிடங்களில் சொல்லியிருக்கின் றனர்.
பெரும்பாலும் போரைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும், சிறுபான்மை அறம் முதலியவற்றைப் பற்றியும் சொல்லும் பகுதிக்குத் தமிழர் புறம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். புறத்திணையில் பல திணைகளும் துறைகளும் உண்டு. வேலைப் பாராட்டுவது ஒரு துறை. வேலை எடுத்துச் சொல்வதற்குக் காரணம் அது மற்றப்படைகளிலெல்லாம் சிறந்ததாக இருப்பது. வில், வாள், அம்பு, தோமரம் முதலிய பல ஆயுதங்களைப் பழைய நூல்கள்சொல்கின்றன. ஆனாலும் வேலுக்கே மிக்க சிறப்பு உண்டு. யானையைக் கொல்லுதல் பெரிய வீரம். அதற்கு உதவுவது வேல்.
பெரும்பகை தாங்கும் வேலி னானும்
என்று வேலைச் சிறப்பிக்கும் துறைக்கு இலக்கணம் வகுத்தார் தொல்காப்பியர். ‘போர் செய்யாமலே தன்னைக் கண்ட மாத்திரத்திலே பெரிய பகைவர் பயந்து நிற்கும்படியாகச் செய்யும் வேல்’ என்று இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். வேலை யுன்றி மற்றப் படைகளைச் சிறப்பிப்பதும் மரபுதான். வேலைச் சொன்னாலும் அதற்கு இனமாக உள்ளவற்றையும் கொள்ளுவது இலக்கணத்துக்குப் புறம் பல்ல. வேலை எடுத்துச் சொன்னதற்கு அதன் சிறப்புத்தான் காரணம்.
இதை நச்சினார்க்கினியர் உரையில் விளக்குகிறார்; ‘காத்தல் தொழிலன்றி அழித்தல் தொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூல வேல் படையாதலானும், முருகற்கு வேல் படை ஆதலானும், சான்றோர் வேற்படையே சிறப்பப் பெரும்பான்மை கூறலானும் வேலைக் கூறி, ஏனைப் படைகளெல்லாம் உத்தியாற் பெற வைத்தார்.’
முருகன் திருக்கரத்தில் உள்ளது சிறப்புக்கு ஒரு காரணம் என்று அப் பெரியார் கூறுகிறார்.
தொல்காப்பியத்தில் மரபியல் என்பது ஒரு பகுதி. இன்ன பொருளுக்கு இன்ன பெயர் வழங்குவது மரபு என்று சொல்வது அது. சேவல் என்ற பெயர் சிறகுடைய பட்சிகளுக்கு வரும்; ஆனால் மயிலுக்கு மட்டும் வராது. இதை ஒரு சூத்திரம் சொல் கிறது.
சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும்
மாயிருந் தூவி மயிலலங் கடையே
என்பது அச் சூத்திரம். இதற்கு உரை வகுத்த பேராசிரியர் என்னும் பெரியார். சேவல் என்பது மயிலுக்கு வாராததற்குக் காரணம் என்ன வென்பதை ‘மாயிருந் தூவி’ என்பதிலிருந்து ஊகித்துச் சொல்கிறார். ‘மாயிரும் தூவி மயில் என்றதனால் அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயல ஆகலான், ஆண்பால் தன்மை இல என்பது கொள்க’ என்று எழுதுகிறார். உடனே, ‘எனவே செவ்வேள் ஊர்ந்த மயிற்காயின் அதுவும் நேரவும் படும் என்பது’ என்று எழுதி யிருக்கிறார். ஆண் தன்மையாகிய வீரமுடையவற்றிற்குச் சேவல் என்ற பெயர் பொருந்தும். ஆண் மயிலுக்குத் தோகை உண்டு. அந்தத் தோகை அதைப் பின்னும் மென்மை யுடையதாகக் காட்டுகிறது. ஆகையால் மென்மைத் தோற்றமுடைய மயிலுக்குச் சேவல் என்ற பெயர் கூடாதென்பது இலக்கணக்காரர் கொள்கை. வீரத்தோற்றம் இருந்தால் அதைச் சேவல் என்று சொல்லலாம். முருகன் ஊரும் மயில் வீரத்தோற்றத்தை உடையது. அது ‘பக்கரை விசித்திரமணி பொற்கலணை யிட்ட நடைபட்சியெனு முக்ர துரகம்’ என்றும், ‘தீரச் செம்பொன் மயில்’ (திருப்புகழ்) என்றும் பாராட்டப்பெறுவதல்லவா? ஆகவே அதற்குச் சேவல் என்ற பெயர் கொடுக்கலாம் என்று பேராசிரியர் சொல்கிறார். தீராதி தீரப் பெரு மாளுடைய வாகனம் அல்லவா? மற்றக் காட்டு மயில் களுக்கு இல்லாத சிறப்பு அதற்கு இருப்பது ஆச்சரியம் அன்று..