தலைமைப் புலவன்

தமிழ் நாட்டார் தெய்வ பக்தியிற் சிறந்தவர்கள். தெய்வத் திருக்கோயில்களை இந் நாட்டில் அமைத் திருக்கும் அழகோடு வேறு எங்கும் காணல் அரிது. மற்ற எல்லாக் கடவுளரையும் தங்கள் தங்கள் மன இயல்புக்கு ஏற்பப் பூசித்து வந்தாலும், தமிழர்கள் தங்களுடைய நாட்டுக்கே தனியுரிமை படைத்த தெய்வமாக முருகனை வைத்துப் பூசித்தார்கள். முருக வழிபாடு இத் தென்னாட்டில் இருப்பது போல வேறு நாட்டில் இல்லை.

மிகப் பழங்காலந் தொடங்கியே முருகனுடைய கருணைத் திருவிளையாடல்களை நினைந்து பாடிப் போற்றி வந்தவர் தமிழர். தமிழுக்கு உரியதாக ஒரு பெரிய இலக்கணத்தை அருளியவர் அகத்திய மாமுனிவர். அவர் தென்னாட்டிற்கு வந்த பிறகு தமிழின் விரிவைக் கண்டு அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் உற்றார். முருகனுடைய திருவருள் பெற்றால் தமிழ் முழுதும் அறியலாம் என்ற உணர்வு வந்தது. உடனே வடிவேற் பெருமானை உபாசித்துத் தமிழை அவன்பால் அறிந் தார். இதனை,

குறுமுனிக்கும் தமிழுரைக்கும் குமரமுத்தம் தருகவே

என்ற பிள்ளைத் தமிழும்,

சிவனை நிகர் பொதியவரை முனிவனக மகிழஇரு
செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே

என வரும் திருப்புகழும் தெளிவிக்கும். அகத்திய முனிவருக்குத் தமிழோடு மணி மந்திர ஔஷத வித்தைகளையும் முருகன் போதித்தான் என்றும் கூறுவதுண்டு. சித்தர்களுள் ஒருவர் அகத்தியர். சித்தர்களெல்லாம் வழிபடும் மாறா இளமை படைத்த சித்தன் முருகன். ஆதலின் அகத்தியர் அப்பெருமானிடத்தில் யாவும் உணர்ந்தார்.

தமிழர்கள் முருகனிடம் கொண்ட பேரன்புக்கு அடையாளம் அவனைக் குறிஞ்சித் தலைவனாக வைத் திருப்பதே. உலக மெல்லாம் முதலில் கடலில் மூழ்கியிருந்ததென்றும், பிறகு நீர் வடிய வடிய முதலில் மலை தோன்றிப் பின் மண் தோன்றிய தென்றும் கூறுவர். முதலில் தோன்றிய மலையையும் அதைச் சார்ந்த இடத்தையும் தமிழர் குறிஞ்சி நிலம் என்று வகுத்துக் கொண்டனர். அந்தக் குறிஞ் சிக்கு உரிய தெய்வம் முருகன் என்பது தமிழர் கொள்கை.

சேயோன் மேய மைவரை உலகமும்

என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

முதல் முதலில் தோன்றிய திணைக்கு உரிய தெய்வமாக முருகனை வைத்த தமிழருக்கு, அப்பெரு மான்பால் முதல் தரமான பக்தி இருக்க வேண்டும் அல்லவா?

மலையின்மேல் முருகனை எழுந்தருளச் செய்த தற்கு மற்றொரு காரணமும் உண்டு. உலகத்தில் கல்வி முதலியவற்றால் மிக்க பெரியவர்களை உயரிய ஆதனத்தில் இருத்தி வழிபடுவது வழக்கம்; “உச்சத் தானத்தில் இருப்பவன் பூசித்தற் குரியவன்” என்ற பொருளுடைய வடமொழி வசனமும் உண்டு.

தெய்வத்தையும் உயர்ந்த ஆதனத்தில் வைத்து வழிபடுவது இயல்பு. மனிதன் படைத்து அமைக்கும் உயர்ந்த ஆதனங்கள் ஓரளவுக்குள்ளே அடங்கும். உலகத்தில் எது உயர்ந்த இடம் என்று பார்த்தனர் தமிழர். நிலப் பரப்பிலே உயர்ந்து நிற்பது மலை தானே? அந்த மலையாகிய உயர்ந்த ஆதனத்தில் உயர்ந்த ஆண்டவனை வைத்து வழிபடுவதே தக்க நெறியென்று கொண்டார்கள்.

தமிழ் நாட்டில் அகத்தியருக்குப் பின் நூற்றுக்கணக்கான புலவர்கள் வாழ்ந்து தமிழ் ஆராய்ந்து நூல் இயற்றினார்கள். தமிழ்ப் புலவர்கள் ஒன்று கூடித் தமிழாராய்ச்சி செய்த இடத்துக்குச் சங்கம் என்று பெயர். மூன்று சங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தமிழ் நாட்டில் இருந்தன. தலைச் சங்கம் இடைச் சங்கம், கடைச் சங்கம் என்று அந்த மூன்றையும் சொல்வார்கள்.

தலைச் சங்கத்தில் புலவரோடு புலவராகக் கடவுளரும் இருந்து தமிழாராய்ந்தார்களாம். திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளும், குன்றம் எறிந்த குமரவேளும், பிறரும் சங்கப் புலவர்களோடு இருந்து தமிழுக்கு வளம் வழங்கினர். அந்தப் புலவர்களுக்குள் தலைமைப் புலவராக இருந்தவர் அகத்தியர். சங்கம் நிறைந்திருந்த பொழுது, அவ் வகத்தியருக்கும் தமிழுரைத்த முருகக் கடவுளே பெருந்தலைவனாக வீற்றிருந்தான். புலவர்களுக்குள் முதற் புலவனாக அவன் இருந்தான். இப்படித் தலைச் சங்கத்தின் தலைப் புலவனாக அவன் வீற்றிருந்த பெருமையை நக்கீரர்,

பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே

என்று கூறி அப்பெருமானைப் போற்றுகிறார். குமர குருபர சுவாமிகள் தாம் இயற்றிய முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழில்,

சங்கத் தமிழின் தலைமைப் புலவா தாலோ தாலேலோ

என்று பாடுகின்றார்.

தலைச் சங்கத்தின் பின் இடைச்சங்கம் ஏற்பட்டது. அதிலும் பல புலவர்கள் இருந்தார்கள். பிறகு கடைச்சங்கம் எழுந்தது. அச் சங்கத்தில் இருந்த புலவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர் என்பவர் தலையாயவர். கபிலர், முருகனுடைய குறிஞ்சித் திணையைப் பற்றியும் அந்நிலத்து ஒழுக்கத்தைப் பற்றியும் சொல்லும் “குறிஞ்சிப் பாட்டு ” என்ற நூலை இயற்றியிருக்கிறார். அப்பாட்டு அளவாலும் தகுதியாலும் பெருமையுடையதாதலால் அதற்குப் ‘பெருங்குறிஞ்சி’ என்ற பெயரும் உண்டாயிற்று. பரணரும் தாம் பாடிய பாடல்களில் முருகனைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

நக்கீரர் முருகனைப் பற்றியே தனிநூல் ஒன்று இயற்றினார். அதுதான் திருமுருகாற்றுப்படை. வேறு எந்தத் தெய்வத்தைப் பற்றியும் அந்த அளவில் ஒரு நூல் சங்கத் தமிழில் இல்லை.

அதோடு, திருமுருகாற்றுப்படைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. கடைச் சங்க நூல்களைப் பிற்காலத்தில் புலவர்கள் தொகுத்தார்கள். அவற்றை மூன்று வரிசையாகப் பிரித்தார்கள். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று மூன்று நூல் வரிசைகளாக்கினர். பத்துப்பாட்டு என்ற வரிசையில் பத்து நீண்ட பாடல்கள் உண்டு. எட்டுத்தொகை என்ற மாலையில் பல பாடல்கள் சேர்ந்த எட்டு நூல்கள் உள்ளன. பதினெண் கீழ்க் கணக்கு என்னும் தொகுதியில் பதினெட்டு நூல்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் பற்றிப் புலவர்கள் குறிப்பிடும்போது, பாட்டு, தொகை, கீழ்க் கணக்கு என்று சுருக்கமாகக் கூறுவர். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக நிற்கும் மூன்றிலும் முதலில் நிற்பது பத்துப்பாட்டு என்னும் வரிசை. அதில் முதலாக இருப்பது திருமுருகாற்றுப்படை. நக்கீரருக்கு முந்தியவர் கபிலர். அவர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டும் பத்துப்பாட்டில் சேர்ந்ததே. ஆனாலும் நக்கீரர் இயற்றிய நூல் முருகன் பெருமையை விரிவாகச் சொல்வதனால் அதற்கே புலவர்கள் முதல் இடம் கொடுத்தார்கள். திருமுருகாற்றுப்படை இவ்வாறு கடைச்சங்கச் செய்யுள்களுக்குள்ளே முதலில் அமைந்து சிறப்படைந்ததை நினைந்த சிவப் பிரகாசர்,

பாவுள், முன்னுற வந்து நிற்கும்
முருகாற்றுப் படைமொ ழிந்தான்

என்று பாடுகின்றார்.

பத்துப்பாட்டுக்கு அடுத்த நூல்மாலை எட்டுத் தொகை. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்று எட்டு நூல்கள் அடங்கிய தொகை அது. இந்த எட்டு நூல்களிலும் முதலில் தொகுக்கப் பெற்றது குறுந்தொகை யென்று என் ஆசிரியப்பிரானாகிய டாக்டர் ஐயரவர்கள் எழுதி யிருக்கிறார்கள். அந்தக் குறுந்தொகையில் கடவுள் வாழ்த்தாக அமைந்த முதற் பாட்டு முருகனுடைய தோத்திரம். அதைப் பாடினவர் பெருந்தேவனார் என்ற புலவர் பெருமான்.

நூலில் முதற் பாட்டாக இருப்பது ‘திப்புத் தோளார்’ என்ற புலவர் இயற்றிய பாட்டு. கடவுள் வாழ்த்தைப் புறத்தே ஒதுக்கிவிட்டாலும் நூலின் அகவுறுப்பாக முதலில் நிற்கும் அந்தப் பாட்டின் ஆரம்பமே முருகனைப் பற்றிச் சொல்கிறது; “ரத்தத்தால் போர்க்களம் சிவக்கும்படியாக அவுணர்களைச் சங்கரித்த சிவந்த அம்பையும், சிவந்த கொம்பையுடைய யானையையும், கழலுகின்ற தோள்வளையையும் உடைய முருகனுக்கு உரிய இந்த மலையில் அவனுக்குப் பிரியமான காந்தள் மலர் மிகுதியாக உள்ளன” என்ற பொருளுடையது அப்பாட்டு.

செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

இரண்டாவது பாட்டாக வருவது ஆலவாய்ப் பெருமான் தருமிக்குப் பொற்கிழி வாங்கி அளிப்பதற்காகப் பாடிய ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற பாட்டு. இறைவர் இயற்றிய அந்தப் பாட்டைக் கூட முதற் பாட்டாக வைக்கவில்லை; இரண்டாவதாகத்தான் வைத்திருக்கிறார்கள். காரணம், முருகன் சம்பந்தமான பாடலை முதலில் வைக்கவேண்டும் என்ற ஆர்வம் போலும் !

எட்டுத் தொகையில் அமைந்த நூல்களில் பரிபாடல் என்பது ஒன்று. மிகப் பழங்காலத்தில் புலவர்கள் பண்ணோடு அமைத்துப் பாடிய ஒரு வகைப் பாடல் பரிபாடல். பிற்காலத்தில் அந்தப் பாட்டைப் பாடுவார் இல்லை. பரிபாடல் எழுபது சேர்ந்த நூல் அது. ஒவ்வொரு பாட்டுக்கும் ராகமும் தாளமும் உண்டு. பெரும்பாலும் கடவுளர் துதிகளாக அமைந்த நூல் அது ; திருமால், முருகன், துர்க்கை என்ற மூன்று தெய்வங்களைப் பற்றிய துதியும், மதுரையையும் வையையாற்றையும் பாராட்டிய பாடல்களும் உள்ள தொகை.

எழுபது பாடல்களுள் திருமாலுக்கு எட்டுப் பாடல், துர்க்கைக்கு ஒன்று, வையைக்கு இருபத்தாறு, மதுரைக்கு நான்கு, முருகனுக்கு முப்பத் தொன்று. இந்தக் கணக்கிலிருந்து பரிபாடலில் அதிகப் பாடல்களை ஏற்றவன் முருகன் என்பது தெரிய வரும். அது மட்டும் அன்று. மதுரையையும் வையையும் பாடும் பாடல்களில் திருப்பரங்குன்றமும் அங்கே எழுந்தருளிய முருகன் புகழும் விரவி வரும். புலவர்கள் அடிக்கடி முருகனைப் பாராட்டிப் பாடும் இயல்புடையவர்களாக இருந்தனரென்பற்குப் பரி பாடலும் ஒரு சாட்சியாக நிற்கிறது.

கடைச்சங்க காலத்தில் ஆலவாயில் எழுந்தருளி யிருக்கும் இறைவர் அகப்பொருள் நூல் ஒன்றை இயற்றித் தந்தார். அறுபது சூத்திரங்களையுடைய அந்த நூலுக்கு இறையனாரகப் பொருள், களவியல் என்னும் பெயர்கள் வழங்கும்.

இலக்கண நூலுக்கு உரை இன்றியமையாதது. விரிந்த பொருள்களை அடக்கிச் சுருக்கமாகச் சூத்திர உருவத்தில் மூல ஆசிரியர்கள் இலக்கணத்தை அமைத்துச் சொல்வார்கள். அவ்வக் காலத்துக்கு ஏற்ற வகையில் அதற்குப் பொருள் விரித்து உரையெழுதி உதாரணங் காட்டி அதனைப் பயன்படச் செய்வது உரையாசிரியர் கடமை. பழைய தமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியத்துக் குப் பல உரைகள் உண்டு.

இறைவர் இயற்றிய அகப்பொருளுக்கும் பல உரைகள் எழுந்தன. எல்லாம் ஒரே காலத்தில் எழுந்தன. ஒரே காலத்தில் பலர் உரை எழுதினால் எது சிறந்தது என்ற குழப்பம் நேரும் அல்லவா? கடைச்சங்கப் புலவர் யாவரும் பாண்டிய மன்னனது வேண்டுகோளுக்கு இணங்கி ஆளுக்கு ஓருரை எழுதினார்கள். அத்தனை உரையையும் வாசிப்பது சாத்தியமான காரியமா? அவற்றுள், “இதுதான் சிறந்தது ” என்று எப்படி ஒன்றைத் தேர்ந்தெடுப் பது?

ஒருவரோடொருவர் சமானமாக இருந்த அப்புலவர் கூட்டத்தினர் எழுதிய உரைகளை ஆராய வேண்டுமானால், அவர்களைவிட மிஞ்சிய புலமை படைத்த புலவர் ஒருவர் இருந்தால் அவரே, “இது சிறந்தது” என்று சொல்லலாம். அத்தகையவர் ஒருவரும் பாண்டியனுக்குக் கிடைக்கவில்லை. மூல நூலைத் தந்த ஆலவாய்ச் சொக்கரிடத்திலே போய் முறையிட்டுக் கொண்டான். இறைவர், “இலக்கணத்தை மதிப்பிடும் பெருமை படைத்தவன் முருகன் ஒருவனே. அன்றியும் நம்முடைய உள்ளக் கருத்தை உணர்பவர் நம் குழந்தையையன்றி வேறு யார் உள்ளார்?’ என எண்ணி, “இவ்வூரில் வணிகர் வீதியில் ருத்திர ஜன்மன் என்ற ஊமைக் குழந்தை ஒருவன் இருக்கிறான். அவன் முருகனுடைய கூறுடையவன். அவனை அழைத்து வந்து தக்க மரியாதை பண்ணி, உயர்ந்த ஆதனத்தில் இருத்தி, உரைகளெல்லாம் வாசித்தால், எதைக் கேட்கும் போது அவன் புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் விட்டு ரசிக் கிறானோ அதுவே சிறந்ததாகும்” என்று அருள் செய்தார்.

பாண்டியன் அவ்வாறே செய்தான். மற்றப் புலவர்கள் தம் உரைகளை வாசிக்கையில் சும்மா இருந்த ருத்திரஜன்மன் நக்கீரர் உரையைக் கேட்டுக் கேட்டுப் புளகாங்கிதமுற்று உடல் குலுங்கக் கண்ணீர் வார இன்புற்றான். அதனால் நக்கீரர் உரையே சிறந்ததென்று கொண்டான் பாண்டியன். அவ்வுரையே பிறகு வழங்கி வரலாயிற்று.

இப்படிப் புலவருள் தலைவனாக இருந்ததோடு, சங்கப் புலவர்களின் தகுதியறியும் அதிகாரியாகவும் முருகன் இருந்திருக்கிறான். இந்தச் செய்தியை நினைந்தே நக்கீரர் முருகனை, “நூலறி புலவ” என்று திருமுருகாற்றுப் படையில் பாடுகிறார். அந்தக் காலத்தில் நூல் என்பது இலக்கணத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இருந்தது. எனவே அத்தொடருக்கு, ”இலக்கணத்தின் தகுதி தேர்ந்து ஆராய்ந்து அறியும் புலவனே ” என்று பொருள் செய்வதே பொருத்தமாக இருக்கும்.

முருகன் இலக்கணங்களைத் தேர்ந்தறிந்த செய்தி நக்கீரருக் குத்தானே நன்றாகத் தெரியும்? அவர் நூலுரை யைத்தானே அவன் அறிந்து முதற்பரிசு தந்தான்? இந்தப் பழந்தமிழ்நூற் செய்திகளால் தமிழர் முருகனுக்கு நன்றாக அளித்த தலைமைத்திறம் விளங்கும்.