பெரும் பெயர் முருகன்

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் முருக வேளுக்குரிய பல திரு நாமங்களை அருச்சனை போலச் சொல்லியிருக்கிறார். அந்தத் திருநாமக் கோவையிலே,

அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக

என்பது ஒரு தொடர். ‘பிறராலே பெறுவதற்கு அரிய இலக்கணங்களை உடைய பெரிய பெயரை யுடைய முருகனே!’ என்பது இதன் பொருள். முருகன் என்னும் திருநாமம் உடையவன் எம் பெருமான்; அப் பெயரால் பல இலக்கணங்கள் குறிக் கப் பெறுகின்றன ; அவ்விலக்கணங்கள் அனைத் தும் ஒருங்கே உடையவன் வடிவேலன்; பிறரிடம் அவை அனைத்தும் ஒருங்கே இல்லாமையால் அத் திருநாமம் பிறரால் பெறுவதற்கு அரிதாயிற்று.

முருகன் என்ற திருநாமம் முருகு என்றும் நிற்கும். திருமுருகாற்றுப்படை என்னும் நூற் பெயரில் முருகு என்ற சொல்லே இருக்கிறது; திரு- முருகு – ஆற்றுப்படை எனப் பிரியும். “வாழிய முருகே” என்று நற்றிணை கூறுகிறது. “முருகாற் றுப்படுத்த உருகெழு வியனகர்” என்று; திரு முருகாற்றுப்படையில் ஓரடி வருகிறது. அவ்விடங் களிலும் முருகனைக் குறிக்க முருகு என்ற சொல்லே அமைந்துள்ளது.

முருகு என்னும் சொல் தனித் தமிழ்ச் சொல். தமிழ் எழுத்துக்களின் மூவினமும் இச் சொல்லில் அமைந்துள்ளன. மு – என்பது மெல்லினம் ; ரு- என்பது இடையினம்; கு-என்பது வல்லினம். தமிழர் சிறப்பாக வைத்துப் போற்றும் தமிழ்க் கடவுளாகிய வடிவேற் பெருமானுடைய திருநாமம், தமிழ் எழுத்துக்களிலுள்ள மூவினத்தினின்றும் எழுத்தைப் பெற்றிருத்தல் பொருத்தமானதே.

முருகன் என்பதற்கு முருகை உடையவன் என்பது பொருள். முருகு என்பதற்குப் பல பொருள்கள் உண்டு. அவற்றுள் தலைமை பெற்றவை நான் கு. நறுமணத்தை முருகு என்னும் சொல்லால் குறிப்பர். தெய்வத் தன்மைக்கு முருகு என்பது ஒரு பெயர். அழகையும் இளமையையும் குறிப்பதற்கு முருகு என்னும் சொல்லை ஆள்வர். மணம், தெய்வத்தன்மை, இளமை, அழகு என்னும் நான்கு பொருள் முருகு என்னும் சொல்லுக்கு உண்டு. இந்த நான்கு முருகுகளில் வடிவேற் பெருமான் எந்த முருகை உடையவன்? இந்த நான்கு முருகுகளையுமே உடையவன். முருகு என்னும் சொல்லுக்கு உரிய பல பொருளும் முருகனுடைய பண்புகள். அவன் நறுமணம் உடையவன்; தெய்வத் தன்மையிற் சிறந்தவன் ; என்றும் மாறாத இளமை யுடையவன்; என்றும் நீங்காத அழகை உடையவன். முருகன் திருமேனி தூய்மையுடையது; ஞான மணம் கமழ்வது.

கந்தமிகு நின்மேனி

என்று அருட்பிரகாச வள்ளலார் பாடுகின்றனர்.

அவன் தெய்வத் தன்மையிலே சிறந்தவன். தெய்வத் தன்மையுடையவர்களைத் தேவர் என்பர். அவருக்குள்ளே பெரிய தேவன் சிவபெருமான். அதனால் அப்பெருமானுக்கு மகாதேவன் என்ற திருநாமம் வந்தது. அந்தப் பெருமானுக்கும் நாதனாக, தெய்வமாக, முருகன் இருக்கிறான். ‘சரவண தகப்பன்சாமி’ என்று அருணகிரி நாதர் பாடுவார்.

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே

என்பது திருப்புகழ். சுப்பிரமணியன் என்ற திரு நாமமும் பிரமத்தின் இயல்புடையவர்களுள் உயர்ந்தவன் என்பதையே உணர்த்தும். சாமிநாதனாகிய முருகன், கண்கண்ட தெய்வமாகிய செவ்வேள், தெய்வத் தன்மையிலே சிறந்தவனாக விளங்குகிறான் என்பது இவற்றால் விளங்கும்.

முருகன் என்றும் இளமையுடையவன். பாலன் என்ற திருநாமம் உடையவன்.

என்றும் இளையாய்

என்று பழம் புலவரும்,

என்றும் அழியாத இளமைக்கார

என்று அருணகிரிநாதரும் பாடுகின்றனர். குழந்தை வடிவேலன், குழந்தை என்னும் வழக்காறுகளும் இக்கருத்தைத் தெளிவிக்கும்.

முருகன் அழகுடையவன் என்பதைப் பல அன்பர்கள் பலவாறு கூறியிருக்கின்றனர். குமாரன் என்ற திருநாமமே அவனுடைய பேரழகைக் குறிக்கும். ‘மாரனைக் குற்சிதம் செய்யும் அழகுடையான்’ என்று அதற்கு அறிஞர்கள் பொருள் உரைப்பர். கந்தபுராணத்தில், முருகவேளின் திரு வுருவத்தைத் தரிசித்த சூரபன்மன் கூறுவதாக ஒரு பாட்டு உண்டு.

ஆயிரம் கோடி காமர்
அழகெலாம் திரண்டொன் றாகி
மேயின எனினும் செவ்வேள்
விமலமாம் சரணந் தன்னில்
தூயநல் எழிலுக் காற்றாது
என்றிடின், இனைய தொல்லோன்
மாயிரு வடிவுக் கெல்லாம்
உவமையார் வகுக்க வல்லார்!

ஆயிரங் கோடி மன்மதர்களுடைய அழகு ஒன்று திரண்டாலும், முருகன் திருவடியழகுக்கு ஈடாகா தென்று சூரன் சொல்லுவதாக அமைந்தது இப் பாட்டு. பகைவனே இவ்வாறு போற்றுவ தானால் அப்பெருமானுடைய திருமேனி யழகு எப்படி இருக்கவேண்டும்!

மணமும், தெய்வத் தன்மையும், இளமையும், அழகும் ஒருங்கே உடைமையால் முருகன் என்னும் திருநாமம் செவ்வேளுக்கு அமைந்தது என்ற உண் மையை நக்கீரர் ஓரிடத்தில் குறிப்பாகச் சொல்கிறார். முருகன் தன்னைத் தேடிவந்த புலவனுக்குத் தரிசனம் தந்தருளுவான் என்று கூறுகிறார் புலவர். இன்ன உருவத்தோடு எழுந்தருளுவான் என்று குறிப்பிடும்போது இந்த நால்வகைப் பண்புகளையும் தெரிவிக்கிறார்.

பண்டைத்தன் மணம்கமழ் தெய்வத்து இள நலம் காட்டி

என்பது அவர் வாக்கு. அவன் புலவனுக்குக் காட்டும் திருக்கோலத்தில் மணம் கமழும்; தெய்வத் தன்மை இலங்கும்; இளமை தவழும்; நலம் ததும்பும்; நலம் என்பது அழகு. இறைவன் முருகனாக எழுந்தருளுகிறான்; முருகுடையவனாகக் காட்சி தருகிறான்; முருகு என்னும் சொல்லினால் சிறப்பாகக் குறிக்கப் பெறும் மணம், தெய்வத் தன்மை, இளமை, நலம் என்ற நான்கு பண்பு களையும் உடையவனாக வருகிறான். இந்த முருகத் திருக்கோலம் இறைவனுக்கு இயல்பானது; அநாதி காலமாக இருப்பது. ஆதலின், “பண்டைத்தன்” என்று சிறப்பித்தார். முருகன் என்னும் சொல்லுக் குரிய பொருளை முருகாற்றுப் படையில் உள்ள இந்த அடி புலப்படுத்துகிறது.

இந்த நான்குவகை இயல்புகளும் உடையார் பிறர் யாரும் இலராதலின், அவ்வியல்புகளைக் குறிக் கும் இந் நாமம் பிறரால் பெறுவதற்கு அரிதாகவும், முருகனுக்கே அமைந்ததாகவும் ஆயிற்று. பெறலரிய மரபையுடைய பெரும் பெயர் இது.

முருகன் என்னும் சொல்லில் நான்கு எழுத்துக்களே உண்டு. ஒற்றை நீக்கிக் கணக்கிடும் சம்பிரதாயப்படி பார்த்தாலும், விளியாகக் கொண்ட பொழுதும் மூன்று எழுத்துக்களே இத் திருநாமத்தில் உண்டு. மூன்று எழுத்துக்களால் ஆன மந்திரம் போன்றது ‘முருக’ என்னும் சொல். எழுத்துக்கள் மூன்றே ஆன இத்திருநாமம் ‘பெரும் பெயர்’ என்று கூறுவதற்கு ஏற்றதா? சிறிய திரு நாமம் அல்லவா இது? ஐந்தெழுத்து, ஆறெழுத்து, பன்னீரெழுத்து என்றெல்லாம் பேசும் மந்திரங்களும் திருநாமங்களும் இருக்க, இந்த மூன்றெழுத்துப் பெயரைப் பெரும் பெயர் என்று சொல்லலாமா?- இவ் விஷயத்தைச் சற்றுப் பார்க்கலாம்.

பெரும் பெயர் என்பதிலுள்ள பெருமை எழுத்துப் பெருக்கத்தைக் குறிப்பிடவில்லை. உருவினாற் சிறியனேனும் அகத்தியன் பெரு முனிவரன் ஆனான். அதுபோல் பொருட் பெருமையால் இது பெரிய பெயராயிற்று. அன்றியும் நால்வகையான பொருளைக் குறித்து, நால் வேறு பெயர்களால் அழைப்பதற்குச் சமானமாக அமைவதனால் இந் நாமம் ஒன்றில் நான்கு அடங்கியதாகிறது; அதற்கு மேலும் அடங்கியதாகவும் கொள்ளலாம். பெயரே பல பெயராக விரிவதற்கு உரியதென்றால் அது பெரும் பெயர் என்பதற்கு ஏற்றதே அன்றோ? அதனால்தான் அதனை ஒருமுறை கூறினாலும் பெரும் பயன் கிடைக்கும் என்று பெரியோர் கூறினர்.

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில்
அஞ்சலென வேல்தோன்றும் – நெஞ்சில் ஒருகால்
நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன்
றோதுவார் முன். (பழம் பாடல்)

முருகா எனஓர் தரமோ தடியார் முடிமீ திருதாள்புனைவோனே (திருப்புகழ்)

ஒரு பெயரானாலும் முருகா என்னும் திருநாமம் பல திருநாமங்களாகவே கொள்வதற்குரியது.

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப்
பாதங்கள்; மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காளனும்
நாமங்கள்

என்பது கந்தரலங்காரம். “முருகா எனும் நாமங்கள்” என்று அருணகிரிநாதர் கூறுகிறார். முருகா என்ற ஒரு நாமத்தையே நாமங்கள் என்றார். பல பொருள்களில் வரும்போது அது பல சொற்களாகவே எண்ணுதற்கு உரியது. பல நாமங்களுக்குரிய பொருளும் பயனும் உடையது. ஆதலால் பன்மையாற் கூறினார். இத்தகைய சிறப்பை யெல் லாம் உடையது முருக என்னும் நாமம். ஆகவே தான் நக்கீரர், “அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருக” என்று கூறுகிறார்.