இருப்பவல்

அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழ், பாகும் தேனும் கலந்தாற் போலச் சந்த இசையும் தண்டமிழ் நயமும் செறிந்தது. முருகனுடைய திருவருளைத் துணைக் கொண்டு அவனுடைய ஆணையின்படியே பாடியது திருப்புகழ் என்பதைத் திருப்புகழ்ப் பாடல்களில் உள்ள சில பகுதிகளே தெரிவிக்கும்.

ஒரு பாடலில் தாம் திருப்புகழைப் பாடும்படி முருகவேள் அநுக்கிரகம் செய்ததை மறவாமல் பாராட்டுகிறார். அங்கே திருப்புகழின் பெருமையை அவரே விரிவாகச் சொல்கிறார். “நாலுதிசைகளிலும் உள்ள பக்தர்கள் மகா அற்புதம், அற்புதம் என்று பாராட்டுகிறார்கள். சித்திரகவி வகைகளில் ஒன்றாகச் சேரும் இயல்புடையது; இனிய சந்தம் மிக்கது. இத்தகைய திருப்புகழை அடியேனைச் சொல்லும் படியாக வைத்து, அது எங்கும் பரவும்படி யாகச் செய்த பேரருளை நான் என்றும் மறவேன்” என்று சொல்கிறார்.

பூர்வ பச்சிம தட்சிண உத்தர திக்குள
பக்தர்கள் அற்புதம் எனஓதும்

சித்ரக வித்துவ சத்த மிகுத்த திருப்புக ழைச்சிறிதடியேனும்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்த அநுக்ரகம் மறவேனே.

அது “மனத்தையும் உருக்கும்” என்று மற்றோரிடத் தில் கூறுகிறார்.

திருப்புகழின் இனிமையையும் உயர்வையும் வேறு பல புலவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

அருணகிரி சொரிகவிதை யமுதம்

என்று அந்தகக்கவி வீரராகவ முதலியார் பாடுகிறார்.

உதிருங் கனியை நறும்பாகில்
உடைத்துக் கலந்து தேனைவடித்து
ஊற்றி அமுதி னுடன்கூட்டி
ஒக்கக் குழைத்த ருசிபிறந்து
மதுரங் கனிந்த திருப்புகழ்ப்பா மாலை

என்று திருமலைப் பிள்ளைத் தமிழ் ஆசிரியர் மிகச் சிறப்பாகப் பாராட்டுகிறார். திருப்புகழில் இனிமையும் தெளிவும் இருப்பது இதனால் விளங்கும்.

சந்தப் பாடல்களாக இருப்பதால் தாளத்தோடு பாட ஏற்புடையவை திருப்புகழ்ப் பாடல்கள். இருபது முப்பது ஆண்டுகளாகவே திருப்புகழ் தமிழ் நாடெங்கும் ஓங்கிப் பரவி வருகின்றது. இசை நயமும் இலக்கியச் சுவையும் வெளிப்படப் பாடுவாரும் பொருளுரைப்பாருமாகப் பலர் இப்போது இருக்கின்றனர்.

திருப்புகழை ஒரே மாதிரி இசையோடு கட கட கட வென்று முன்காலத்தில் சிலர் சொல்வதுண்டு. மலையருவி விழுவது போலவும் ரெயில் வண்டி ஓடுவது போலவும் அவர்கள் பாடுவார்கள். பாட்டின் சொற்கள் தெளிவாகக் காதில் விழாவண்ணம் பாடு வார்கள். அவர்கள் பாடுவதைக் கேட்டால், “திருப்புகழ் மிகவும் கடினமானதுபோலும்!” என்று தோன்றும். பலர் அப்படியே நினைத்த காலம் உண்டு. நல்ல வேளையாக மதுரை ஸ்ரீ சாமி ஐயர், ஸ்ரீ வள்ளிமலை சுவாமிகள், ஸ்ரீ திருப்புகழ் மணி ஐயரவர்கள், ஸ்ரீ கிருபானந்த வாரியாரவர்கள் முதலியோர் இசையோடு நல்ல முறையில் திருப்புகழ்ப் பாக்களைப் பாடித் தமிழ் மக்களின் உள்ளத்தில் இருந்த இந்தப் பயத்தைப் போக்கிவிட்டார்கள்.

“சுக்குமொளகுதிப் – பிலி” என்று பிரித்துக் கொலை பண்ணுபவர்கள் எந்தப் பாட்டைப் பாடினாலும் பொருள் விளங்காதபடியே பாடுவார்கள். திருப்புகழைப் பாடி வந்த பழைய கால பக்தர்கள் தம்மை அறியாமலே அதன் சந்தத்தைப் பெரிதாக்கிக் காட்டினார்கள். இதனால் தமிழ் மக்களில் பலர் திருப்புகழ் இரும்புக்கடலை என்று நினைத்ததில் தவறு இல்லை. சந்தப் பாக்களாகிய திருப்புகழை இயற்றுவது அருமையே அன்றி, படித்துப் பொருள் அறிவது எளிது. எல்லாத் திருப்புகழும் எளிதிலே பொருள் அறியும் வண்ணம் இருக்கின்றன என்று நான் சொல்ல வரவில்லை. கம்பராமாயணத்திலே கூடப் பொருள் விளங்காத பாடல்கள் பல உண்டு. இன்னும் புலவர்கள் பொருள் வரையறை செய்வதில் ஒருமுகப்படாத பாடல்கள் உண்டு. அவற்றைக் கம்ப சூத்திரம் என்று சொல்வார்கள். எல்லா நூல்களிலும் இத்தகைய கவிகள் இருப்பது இயற்கை. ஆகவே திருப்புகழிலும் பொருள் எளிதில் விளங்காத சில பாடல்கள் இருப்பது ஆச்சரியம் அன்று. அதைக் கொண்டு திருப்புகழ் முழுவதும் கடினம் என்று சொல்வதுதான் பொருந்தாது.

எப்படியோ, திருப்புகழ் கடினமானது என்று முன்பு ஒரு கருத்துப் பரவியிருந்தது. அதோடு திருப்புகழில், “இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்” என்ற பகுதி ஒன்று வருகிறது. அதைச் சிலர் எடுத்துக் காட்டி, “அருணகிரி நாத சுவாமிகளே திருப்புகழ் இரும்பினால் பண்ணின அவலைப் போன்றது என்று ஒப்புக் கொள்கிறாரே. நாங்கள் இருப்புக்கடலை என்று சொல்கிறோம். எங்கள் கருத்தில் என்ன தவறு இருக்கிறது ?” என்று கேட்டார்கள். இன்னும் பலர், “இருப்பவல் திருப்புகழ்” என்ற தொடர் திருப்புகழ் அன்பு இல்லாதவர்களுக்கு அது இரும்பு அவலைப் போலக் கடினமாக இருப்பது என்று பொருள் செய்கிறார்கள்.

“இருப்பவலைப் போன்ற திருப்புகழை யார் விருப்பத்தோடு படிக்கிறார்களோ அவர்களுடைய துன்பங்களை அது அறுத்து விடும்” என்ற பொருள் பட, “இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் இடுக்கினை அறுத்திடும்” என்று அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். “விருப்பொடு படிப்பவர்” என்பதைக் கவனிக்க வேண்டும். இரும்பு அவல்போல இருந்தால் அதை விரும்பிப் படிப்பவர் யார் இருப்பார் கள் ? பிற இடங்களில் திருப்புகழைப் பாராட்டிய முறைக்கும், இங்குள்ள முறைக்கும் மாறுபாடு இருப்பதாகக் கொள்வது பொருந்துமா? மதுரங் கனிந்த பாமாலை என்று பிற புலவர்கள் பாடியிருக் கிறார்கள். அதற்கும் மாறாகத் திருப்புகழை இரும்பு அவல் என்று சொல்லலாமா ?

இவற்றையெல்லாம் யோசிக்கும் பொழுது, இருப்பவல் என்ற தொடரே அங்கே இருப்பது தவறு என்று தோற்றுகிறது. தொடர் தவறு என்று கொள்வதைவிட அதற்கு நாம் கொள்ளும் பொருள் தவறு என்று சொல்வதுதான் நியாய மானது. அப்படியானால் திருப்புகழின் சிறப்புக்கு ஏற்ற வகையில் எப்படி அர்த்தம் பண்ணுவது?

இருப்பவல் என்ற தொடரை இரும்பு – அவல் என்ற இரண்டு சொற்களாகப் பிரிப்பதனால்தான் இந்தச் சங்கடம் வருகிறது.

அதை விட்டு விட்டு, இருப்பு + அவல் என்று பிரித்துப் பார்க்கலாம். இருப்பு என்பது கையிலே இருப்பது; சேமித்து வைத்த பொருளுக்குச் சொல்லும் வார்த்தை அது. கையிலே சேமித்து வைத்திருப்பதாகிய அவல் என்று அத் தொடருக்குப் பொருள் கொள்ளலாம்.

உணவு வகைகளில், சமைத்த ஆகாரங்களை ஒரு நாளுக்கு மேல் வைத்துக் கொள்வது நம்முடைய வழக்கம் அன்று. ஆனால் யாத்திரை செய்கிறவர்கள் தம்முடைய பசியைப் போக்கிக் கொள்ளப் பொரி மாவையும் அவலையும் கொண்டு போவார்கள். யாத்திரை போகிறவர்களுக்கு இன்றியமையாத பொருள்களில் அவலும் ஒன்று. பெருங்கதை என்ற பழைய தமிழ் நூலில் அவலை, ‘ஆத்திரைத் தருப்பணம்’ என்று ஆசிரியர் சொல்கிறார். ஆத்திரை என்பது யாத்திரையைக் குறிப்பது. தருப்பணம் என்பது அவலுக்குப் பெயர். யாத்திரை செய்பவர்கள் சமயத்தில் தம் பசியைத் தீர்த்துக் கொள்ளத் துணியில் அவலை முடிந்து வைத்துக்கொள்வார்கள். பல நாள் வழி நடந்து சென்று துவாரகையை அடைந்து கண்ண பிரானைக் கண்டு களிப்பதற்குப் பலநாளும் கெடாமல் இருக்கும் அவலையல்லவா குசேலர் எடுத் துச் சென்றார்?

அவல் மிகவும் சுலபமான உணவு. தனியே உண்ணலாம். நீரிலே ஊறவைத்து உண்ணலாம். மோரிலிட்டு ஊறவைத்தோ, வெல்லம் போட்டோ உண்ணலாம். மீட்டும் பக்குவம் செய்து புளியவல், வெல்ல அவல் முதலிய உருவத்தில் உண்ணலாம். ஏழை முதல் பணக்காரர் வரையில் தங்கள் ஆற்றலுக்கு ஏற்ப அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். செல்வர் வீட்டு விருந்தில் அவல் பாயசம் சிறப்புத் தருவதைச் சுவை கண்டவர்கள் அறிவார்கள்.

திருப்புகழ் சேமித்து வைத்த அவலைப் போன்றது; கையிருப்பிலே உள்ள அவலைப் போன்றது. மடி, ஆசாரம் முதலிய நியமங்களோடு ஓதும் மந்திரங்களைப்போலன்றி எந்தச் சமயத்திலும் யாரும் ஓதலாம். காலன் ஊர்க்குச் செல்லும் நெடுவழிப் பிரயாணத்தில் உபயோகப்படும் அவல் அது. அதை இசையின்றியே பாடலாம், தனி அவலைச் சுவைப்பது போல; கைத்தாளம் கொட்டிப் பாடலாம், வெல்லத்தைக் கடித்துக் கொண்டு அவலை உண்பது போல; இசையோடு பாடலாம், ஊறவைத்த அவலை உண்பது போல. தக்க பக்க வாத்தியங்களுடன் பெரிய கச்சேரியாகச் செய்யலாம், அவல் பாயசம் பண்ணுவது போல.

அவல் எப்படி எளியதாகவும், இனியதாகவும், சமயத்துக்கு உதவுவதாகவும் இருக்கிறதோ, அப்படியே திருப்புகழும் இருக்கிறது. கவியின் அமைப்புக்கு உண்ணும் பொருள்களை உவமை கூறுவது மரபு. மிகவும் கடினமான பாக்களுக்குத் தேங்காயை உவமை கூறுவார்கள்; அத்தகைய கவிகள் நாளிகேர பாக முடையவை என்பார்கள். மாம்பழச் சுவைபோல அமைந்த சஹகார பாகம், திராட்சா பாகம், இட்சு (கரும்பு) பாகம், க்ஷர (பால்) பாகம் என்று செய்யுட் பாகங்கள் பல உண்டு. உண் ணும் கனியையும் அமுதத்தையும் பாக்களுக்குப் பிறர் உவமை கூறினர். அருணகிரி நாதர் மற்றவர் கூறியதையே கூறாமல் புதிதாக அவலைக் கூறினார். தொப்பை யப்பனைப் பாராட்டும்போது கரும்பும் கனியும் உண்பவர் என்பதோடு அவலையும் உண் ணும் விருப்பம் உடையவர் என்று அருணகிரிநாதர் சொல்கிறார்.

கைத்தலம் நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன்

என்றும்,

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன்நெய்
எட்பொரி அவல்துவரை இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ
ரிப்பழம் இடிப்பல்வகை தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணம் எனக்கொள்ஒரு
விக்கின சமர்த்தன்

என்றும் பாடும்போது அவலை மறக்கவில்லை. அது அவர் நினைவில் இருக்கும் பொருள். ஆகவே அந்த அருமையான, ஆனால் எளிதிலே உண்பதற்குரிய பொருளைத் திருப்புகழுக்கு உவமை ஆக்கினார்.

இதில் அவருடைய விநயமும் புலப்படுகிறது. “நான் அமுதம் தரவில்லை; கனி தரவில்லை. வெறும் அவல் தருகிறேன்; இருப்பிலே வைத்திருக்கும் அவல் தருகிறேன். ஏழைகள் ஆண்டவனுக்குத் தருவது அதுதான் என்று குசேலர் காட்டியிருக் கிறார் அல்லவா? ஆகவே நானும் அவல் தருகிறேன்” என்று சொல்வது போல இருக்கிறது அந்த உபமானம். குசேலர் கண்ணனுக்கு ஒரு வகை அவல் கொடுத்தார். அருணகிரி நாதர் கந்தனுக்கு ஒருவகை அவல் கொடுத்தார். குசேலர் அளித்தது நெல் அவல். அருணகிரி நாதர் கொடுத்தது சொல் அவல்.