திருப்பரங்குன்றம்
முருகவேளுக்குரிய படைவீடுகள் ஆறு. படை வீடு என்பது, அரசன் ஒருவன் தன் பகைவரோடு போர் செய்யும் பொருட்டுப் படைகளுடன் பாளையம் இறங்கியிருக்கும் இடத்துக்குப் பெயர். படை தங்கியிருக்கும் இடம் என்பது அதன் பொருள்.
முருகன் சூரபன்மனோடு போர் புரியச் செல்லு முன் திருச்செந்தூரில் தங்கி, வீரவாகு தேவரை அங்கிருந்து சூரனிடம் தூதாக அனுப்பி, அப்பால் போருக்குப் புறப்பட்டான்.. அப்போது திருச்செந்தூர் அப்பெருமானுக்குப் படைவீடாக உதவியது.
எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு கருணைத் திருவிளையாடல் செய்யும்பொழுது ஒவ்வோரிடத்தில் வெளிப்படுகிறான். அந்தத் திருவிளையாட்டோடு சிறப்பான தொடர்பு பூண்டு விளங்குவது அந்தத் தலம். சிவபெருமான் யாண்டும் நிறைந்தவனாயினும், பதஞ்சலி வியாக்கிரபாதர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஆனந்தத் தாண்டவம் புரிந்த இடமாதலின் தில்லைக்குச் சிறப்பு உண்டாயிற்று. இப்படியே முருகவேள் திருக் கோயில் கொண்டுள்ள தலங்களும் அமைந்திருக் கின்றன.
ஆறு படை வீடுகள்
ஆறு று படைவீடுகள் முருகனுக்குரிய தலங்களுள் சிறந்தன என்று கொள்வது அடியார் மரபு. ஆறு முகம் கொண்ட முருகனோடு தொடர்புடைய பொருள்கள் பலவற்றை ஆறாக நினைப்பதில் இன்பம் கண்டனர் அன்பர்கள். நக்கீரர் தாம் பாடிய திருமுருகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்கள் இவை என்று சுட்டும்போது ஆறு இடங்களைக் கூறு கிறார். அவர் அப்படிக் கூறியது முதலே ஆறு படைவீடுகள் என்ற வரையறை வழக்கில் வந்தது.
ஆறு திருப்பதிகண் டாறெழுத்தும் அன்பினுடன்
கூறுமவர் சிந்தைகுடி கொண்டோனே
என்று குமரகுருபர முனிவர் ஆறு படைவீடுகளை ஆறு திருப்பதி என்று குறிக்கிறார்.
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய பெருமாளே,
ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே
என்று அருணகிரிநாதர் திருப்புகழில் ஆறு திருப்பதி என்றே படைவீடுகளைக் குறிக்கின்றார்.
கந்தபுராணத்தில் ஆறு படைவீடுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு துதியைக் கச்சியப்ப சிவாசாரியார் அமைத்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன் குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர் சோலை என்னும் ஆறும் ஆறு படை வீடுகளாகும். அந்த ஆறில் ஐந்தாவதாகிய குன்று தோறாடல் என்பது எல்லா மலைகளையும் குறிக்கும். குறிஞ்சி நிலத்துக்குக் கடவுளாகிய முருகவேள் எல்லா மலைகளிலும் எழுந்தருளியிருக்கிறான். அந்த மலைகள் எல்லாவற்றையும் ஒன்றாக வைத்துக் குன்றுதோறாடல் என்னும் தொகைத் தலமாகக் குறிப்பிடுவது மரபு.
குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே
என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சொல் கிறார்.
நக்கீரர் வருணனை
ஆறு படைவீடுகளுள் முதலாவதாகிய திருப்பரங்குன்றம் மதுரைக்கு அருகில் உள்ளது. பரன் குன்றம் என்பது பரங்குன்றம் என்று ஆயிற்று. சிவபெருமான் திருக்கோயிலும் அங்கே உண்டு. தேவாரம் பெற்ற தலம் அது.
திருப்பரங்குன்றத்தில் முருகவேள் தேவயானையைத் திருமணம் செய்துகொண்டருளினார். அக்குன்றம் பாண்டியர்களின் தலைநகராகிய மதுரையை அடுத்து விளங்குவதால் பழங்கால முதற்கொண்டே சிறப்பை உடையதாக இருந்தது. நக்கீரர் அதனைக் குன்று என்றே குறிக்கிறார்.
மாடமலி மறுகிற் கூடற் குடவயின்
இருஞ்சேற்று அகல்வயல் விரிந்து வாய் அவிழ்ந்த
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக்
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து உறைதலும் உரியன்
என்பது திருமுருகாற்றுப்படை.
மதுரைக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருக்கிறது. மலையின் அடிவாரத்தை அடுத்து வயல்கள் உள்ளன. நில வளத்தைக் காட்டும் கரிய சேறு நிரம்பிய வயல் அவை. அந்த அகன்ற வயல்களில் நீர்தேங்கிய இடங்களில் தாமரை மலர்கள் மலர்ந்துள்ளன. முள்ளைத் தாளிலேயுடைய தாமரைக் கொடிகள் படர்ந்திருக்கின்றன. தாமரை மலரில் உள்ள தேனுக்கும் பூந்தாதுக்கும் ஆசைப்பட்ட வண்டுகள் பகல் நேரத்தில் அம் மலர்களிலே வந்து ஊதுகின்றன. அப்பால் மாலை வரவே தாமரை மலர்கள் இதழ்க் கதவை அடைத்து விடுகின்றன. மெத் தென்ற அகவிதழ்களையுடைய அந்த மலருக்குள்ளே சுகமாகத் தூங்கிப் போகின்றன வண்டுகள். விடியற்காலையில் அம்மலர்கள் சற்று நெகிழவே வண்டுகள் துயில் எழுகின்றன. உடனே அருகில் தேன் கமழ்கின்ற நெய்தல் மலரிலே சென்று தாது ஊதி அதில் உள்ள தேனைக் குடிக்கின்றன. பிறகு கதிரவன் உதயமாகின்றான். அப்போது திருப்பரங்குன்றத்தின் சாரலைக் காண மேலே பறந்து செல்கின்றன. அங்குள்ள சுனைகளில் பல மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அம் மலர்களிலே சென்று தேனை உண்டு ரீங்காரம் செய்கின்றன. இவ்வாறு வண்டுகள் உறையுளும் உணவும் பெற்று இன்ப மாக வாழும் இடம் திருப்பரங்குன்றம். வயலும் பொய்கையும் சூழ்ந்த இடத்தில் திருப்பரங்குன்றம் இருப்பதை நக்கீரர் இந்த வருணனையால் தெளிய வைக்கிறார்.
பரிபாடலில் உள்ள செய்திகள்
மதுரை மாநகரிலிருந்து திருவிழாக் காலங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் திருப்பரங்குன்றத்திற்குச் சென்றனர். வழிநெடுகச் சோலைகள் இருந்தன. மலையில் மரங்கள் அடர்ந்து வளர்ந் திருந்தன. இவற்றையும் மலைக் காட்சியையும் மதுரை நகரத்தார் அங்கே வந்து செய்யும் செயல் களையும் பரிபாடல் என்ற சங்க நூல் மிக விரிவாகத் தெரிவிக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் உள்ள பொய்கையில் நீர் நிறைந்திருந்தது. மழை வளம் சிறந்திருந்தமையால் மலை முழுவதும் அடர்ந்த மரச் செறிவு இருந்தது. அருவியும் சுனைகளும் இருந்தன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் எங்கும் காடுகள் மிகுதியாக இருந்தன. மக்கள் பெருகப் பெருகக் காட்டை வெட்டி நாடாக்கினர். அதனால் மழை வளம் வரவரக் குறைந்து போயிற்று.
அக்காலத்தில் திருப்பரங்குன்றத்தில் அருவி கூட இருந்த தென்றே தெரிகிறது. அதில் ஆட வரும் மகளிரும் நீராடினர். புனல் விளையாட்டு அங்கே நடைபெற்றது. மணமாவதற்கு முன் முருகனுடைய திருக்கோயிலைச் சார்ந்த சோலையிலே சந்தித்து அன்பு செய்தனர், சில காதலர். மணம் செய்து கொண்டவர்கள் இங்கே வந்து தங்கி இன் புற்றனர். கன்னிப் பெண்கள் இத்தலத்திற்கு வந்து, தமக்கு நல்ல கணவராக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். மணமான் மகளிர் ஊருக்குச் சென்ற கணவர் போன காரியம் பலித்து விரைவிலே வந்து சேர வேண்டுமென்று வேண்டினர். வேறு சில மகளிர் தங்களுக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்று பிரர்த்தனை செய்தனர். அவர்கள் கோயில் யானைக்குக் கரும்பு முதலியவற்றைக் கொடுத்தார்கள். சோற்றைக் கொடுத்தார்கள். அது உண்டொழிந்த மிச்சத்தைப் பிரசாதமாகப் பெற்று உண்டனர். அதனால் யானையைப் போலப் பலமுடைய பிள்ளை பிறக்கும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது போலும் !
முருகவேள் திருக்கோயிலுக்கு வருகிறவர்கள் அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை ஊதியங்களையும் தனித்தனியே பெற எண்ணி வந்தார்கள். முருகனுடைய சந்நிதியில் பொன்னாலும் வெள்ளியினாலும் செய்த பலவகைப் பொருள்களைக் கொணர்ந்து சமர்ப்பித்தனர். முருகனுடைய கையில் உள்ள ஆயுதங்களையும், மணியையும், அவனுடைய வாகனங்களையும் கொண்டுவந்து கொடுத்தனர்.
திருப்பரங்குன்றத்துப் பொய்கையிலே ஆடவரும் மகளிரும் நீந்தி விளையாடினர். நீர் வீசு கருவியினால் நீரை ஒருவர் மேல் ஒருவர் வீசிக் கொண்ட னர். ஊடியும் கோபித்தும் மறைந்தும் பொழுது போக்கினர். உதிர்ந்த மலர்களே படுக்கையாகப் படுத்து உறங்கினர்.
சிலர் குரங்குகளுக்குச் சிற்றுண்டிகளை வீசினர். அவை தாவித் தாவி ஓடும் வேடிக்கையைப் பார்த்தனர்.
பாண்டிய மன்னன் விழாக் காலங்களில் தன்னுடைய பரிவாரங்களோடு அங்கே வந்து தரிசனம் செய்தான். அந்தப் பரிவாரங்கள் தேர்மேலும், யானை மேலும், குதிரை மேலும் வந்தன. திருப்பரங் குன்றத்தில் மக்கள் தரிசிக்க நடந்துவரும் வழியை விட்டுவிட்டு மரத்தடிகளில் அவ் வாகனங்களை நிறுத்தினர்.
திருப்பரங்குன்றத்தில் ஒரு சித்திரசாலை இருந்தது. எழுத்து நிலை மண்டபம் என்று சித்திரசாலையைச் சொல்வார்கள். நல்ல வண்ணங்களைக்கொண்டு எழுதிய ஓவியங்கள் அங்கே இருந்தன.
மலர்கள், பூம்பொய்கை முதலிய அழகிய காட்சிகள் அந்தச் சித்திரங்களில் இருந்தன. துருவ சக்கரமும் அதனைச் சார்ந்த சூரியன் முதலிய கிரகங்களும் ஒரு சித்திரத்தில் அமைந்திருந்தன. இரதியின் அழகிய ஓவியமும் காமனது உருவமும் ஒரு சித்திரத்தில் இருந்தன. இவற்றை அன்றிப் புராண கதைகளை விளக்கும் சித்திரங்களும் இருந்தன. அகலிகையின் கதையை விரிவாகக் காட்டும் ஓவியங்கள் இருந்தன. இவற்றை ஆடவரும் மகளிரும் கண்டு களித்தனர்.
பாடுபவர்கள் போடும் தாளமும் ஆடுபவர்கள் போடும் தாளமும் சேர்ந்து முழங்க, குன்றத்தி லிருந்து அவற்றின் எதிரொலி முழங்கியது. சிலர் பிரம்ம வீணையை வாசித்தார்கள்; சிலர் ஐந்து துளை களை உடைய குழலை ஊதினர்; சிலர் ஏழு துளைகளையுடைய புல்லாங்குழலை வாசித்தனர். சிலர் யாழ் வாசித்தனர். அதற்கு ஏற்றவாறு சிலர் முரசொலித்தனர்.
திருப்பரங்குன்றத்தின் மேலும் முருகவேளின் மேலும் வேல் மயில் என்பவற்றின் மேலும் ஆணையிட்டு, ஆடவர்கள் தாங்கள் தூயவர்களென்று காதலிமாரைத் தேற்றினர்.
இவற்றைப் போன்ற பல செய்திகளைப் பரிபாட லில் உள்ள செய்யுட்கள் தெரிவிக்கின்றன.
நல்லந்துவனார் பாட்டு
ஆசிரியர் நல்லந்துவனார் பாட்டு ஒன்று பரிபாடலில் உண்டு. அவர் மதுரைக்காரர். அவர், “பரங் குன்று இமயக் குன்றத்துக்கு ஒப்பாக இருக்கிறது” என் று சொல்கிறார். எதனால் என்பதை அவரே விளக்குகிறார்.
திருப்பரங்குன்றத்தில் முருகன் எழுந்தருளி யிருப்பதை உணர்ந்த தேவர்களும் அசுரர்களும் தவ முனிவர்களும் அங்கே கூட்டமாக வந்து வழிபடுகின்றனர். யார் யார் வந்திருக்கிறார்கள்? – துழாய் மாலையையும் அளவற்ற செல்வத்தையும் கருடக் கொடியையும் உடைய திருமால் முதலில் வருகிறான். அவனை அடுத்து இடப வாகனத்தையுடைய சிவபெருமான் எழுந்தருளுகிறான். பிரமதேவனும் அவரைத் தொடர்ந்து வருகிறான். துவாதச ஆதித்தர்களும், தேவ வைத்தியர்களாகிய அசுவினிதேவர் இருவரும், அட்டவசுக்களும், ஏகாதசருத்திரர்களும், திக்குப் பாலகர்களும் ஆகிய அமரர்கள் அனைவரும் வருகின் றனர். தேவர்கள் வரங்கேட்டால் நாமும் வரங் கேட்கலாமென்று அசுரர்களும் வருகிறார்கள். வேதத்தை முழக்கும் விழுத்தவ முனிவர் வருகின்றனர். இவ்வளவு பேர்களையும் ஒருங்கே பார்க்கும் இடம் எது? சிவபிரான் வீற்றிருக்கும் இமயமலை ஒன்றிலேதான் பார்க்க முடியும். பரனது மலையாகிய அங்கே பார்ப்பது போலவே இந்தப் பரங்குன்றிலும் காணலாம். ஆகவே இமயக்குன்றத்தை ஒத்தது திருப்பரங்குன்றம்.
இமயச் சாரலில் சரவணப் பூம்பொய்கையில் முருகன் தோன்றினான். அந்தப் பொய்கையைப் போல இங்கும் அருவி நீரால் நிரம்பியிருக்கும் சுனை இருக்கிறது. இமயத்தில் முருகனது யானை முழக்கம் கேட்கும்; இங்கே கேட்கும் மேக முழக்கம் அதைப் போல இருக்கிறது.
மதுரையிலே சில வீடுகளில் கல்யாணம் நடக்கிறது. அதில் மண முரசம் ஒலிக்கிறது. அந்த ஒலி திருப்பரங்குன்றத்தில் சிலையோடுகிறது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்துக்கு வரும் வழியில் மணல் பரந்திருக்கிறது. விழாக்கால மாகையால் அடியவர் பலர் திருப்பரங்குன்றத்தை நோக்கி வருகின்றனர். வருகின்றவர்கள் வெறுங் கையோடு வரவில்லை. முருகனது பூசைக்கு உரியவற்றையும், காணிக்கைகளையும் ஏந்தி வருகின்றனர். வெவ்வேறு விதமான சந்தனத்தைச் சிலர் கொண்டு வருகின்றனர். காற்று வீசினால் அணையாத நந்தா விளக்குக்கு வேண்டிய பொருள்களைச் சிலர் கொணர்கின்றனர். மணம் பெற்ற மலர்களைச் சிலர் ஏந்தி வருகின்றனர். முழவத்தைக் கொண்டு வருகின்றனர் சிலர். மணியும் கயிறும் மயிலும் அங்குசமும் யானையும் பிறகாணிக்கைப் பொருள்களும் சிலர் எடுத்து வருகின்றனர்.
வந்து முருகனை வழிபட்டு வேண்டிக்கொள்கின்றனர் மக்கள். மணமாகாத பெண் ஒருத்தி கட்டழகுக் காளை ஒருவனிடம் காதல் கொண்டாள். அவனைச் சந்திக்க முடியாமல் தவித்தாள். அதே நினைவாக இருந்தமையால் ஒரு நாள் இரவில் ஒரு கனவு கண்டாள். வையையில் புதிய வெள்ளம் வந்ததாகவும், அப்போது ஊராரெல்லாம் சென்று புனல் விளையாட்டு நிகழ்த்தியதாகவும், அங்கே தன் காதலனைச் சந்தித்ததாகவும் கனவு கண்டாள். அவள் இப்போது திருப்பரங்குன்றத்திற்கு வந்திருக்கிறாள். முருகனிடத்தில் அவள் பிரார்த்தனை செய்து கொள்கிறாள். “கனவிலே நான் கண்டேனே, அது மெய்யாக வேண்டும். அது நனவிலே நடக்க வேண்டுமானால் முதலில் வையையில் வெள்ளம் வரவேண்டும். ஆகையால், முருகா, வையையில் புதுப்புனல் வரும்படி அருள் புரிவாயாக!” என்று வேண்டிக் கொள்கிறாள்.
வேறு சில மகளிர் மணமாகிச் சில காலமாகியும் குழந்தையின்றி வருந்தினர். அவர்கள் முருகனை வேண்டிக் கொண்டு, கருவுற்றால் இன்ன இன்ன பொருள்களைக் காணிக்கையாக அளிப்போம் என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
ஒரு பெண்மணிக்கு மணம் ஆகிவிட்டது. கணவனோடு வாழ்ந்து வந்தாள். தானே பொருளீட்டி அதைக் கொண்டு தர்மம் செய்யவேண்டும் என்ற கொள்கையை உடைய அவன், வியாபாரத்தால் பொருளீட்டும் பொருட்டு வெளியூர் சென்றிருந்தான். அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்தால் அவன் உடனே ஊருக்கு வந்துவிடுவான். அவன் விரைவிலே வந்து சேர வேண்டுமென்ற ஆவல் உள்ள அவன் மனைவி முருகனிடம் வேண்டிக் கொள்கிறாள். “என் கணவர் விரைவில் வந்து சேர வேண்டும்” என்று நேர் முகமாகக் கேட்கவில்லை. “முருகா, ஊருக்குப் போனவருக்கு வேண்டிய பொருள் விரைவிலே கிடைக்கும்படி நீ அருள்புரிய வேண்டும்” என்று பணிந்து இறைஞ்சுகிறாள்.
போர் செய்யச் சென்ற படைக்குத் தலைவனாக ஒரு வீரன் சென்றிருக்கிறான். அவன் மனைவி திருப் பரங்குன்றத்தில் நடை பெறும் விழாவிற்கு வந்திருக் கிறாள். அவள் முருகனை, “கடவுளே, என் காதலர் யுத்தத்தில் பகைவரை அடுவாராக” என்று வேண்டு கிறாள்; அர்ச்சனை செய்கிறாள்.
பிரியாமல் சேர்ந்திருக்கும் கணவரும் மனைவியரும் முருகனைப் பரங்குன்றில் வணங்குகின்றனர்; பிரிந்து வாழுவோர் மீட்டும் கூட வேண்டுமென்று வழிபடுகின்றனர்.
மழை வேறு இடங்களில் பொய்த்துப் போனாலும் இங்கே அருவி நீர் இடையறாமல் இருக்கும். “இந்த இயற்கைச் செல்வம் என்றும் அழியாமல் இருக்கவேண்டும்” என்று நல்லந்துவனார் தாம் பாடிய பாட்டின் இறுதியில் வேண்டுகிறார்.
நல்லழிசியார் பாட்டு
நல்லழிசியார் என்ற மற்றொரு சங்கப் புலவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
மதுரையிலிருந்து மாலைக் காலத்தில் திருப்பரங் குன்றத்திற்கு வருகிறார்கள் பலர். வாத்தியங்கள் சைத்துக் கொண்டு தூபதீபங்களுடன் சந்தனம் முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். வேறு சிலர் நல்ல அழகிய ஆடைகளையும் மணியை யும் வேலையும் ஏந்தி வருகின்றனர். திருப்பரங் குன்றத்தின் அடிவாரத்துக்கு வந்து முருகவேளைப் பாடுகிறார்கள். ஆலாபனம் செய்து இசையோடும் தாளத்தோடும் பாடுகிறார்கள். அவர்களுக்கு அப்போது உண்டாகும் ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை. “தேவலோகத்தில் மிக்க இன்பம் பெறலாம்” என்று யாராவது அவர்களிடம் சொன்னால், வேண் டாம் என்று சொல்லிவிடுவார்களாம். “தேவர்கள் வாழும் சொர்க்க லோக இன்பத்தை விரும்புகிறவர் யார்?” என்று கேட்கிறார் புலவர்.
மாலை மாலை அடியுறை இயை நர்
மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர்?
திருப்பரங்குன்றத்தில்நிகழ்வனவற்றைப்புலவர் விரிவாகச் சொல்கிறார்.
ஒரு பக்கம் பாணர்கள் யாழை மீட்டிப் பாடுகிறார்கள். மற்றொரு புறம் வண்டின் ரீங்காரம் கேட் கிறது. ஒரு பக்கம் புல்லாங்குழலின் இன்னிசை எழுகிறது. வேறொரு புறத்தில் தும்பி யென்னும் உயர்ந்த சாதி வண்டுகள் முரல்கின்றன. ஒரு சார் முழவு முழங்குகிறது. மற்றொருசார் அருவியின் இசை ஒலிக்கிறது. ஒரு பக்கம் விறலியர் அசைந்து ஆடுகின்றனர். மற்றொரு பக்கம் பூங்கொடி நுடங்குகிறது. தாளம் போட்டுப் பாடுகிறார் பலர். மயில் ஆடு கிறது. இப்படிச் செயற்கை நிகழ்ச்சிகளும் இயற்கை நிகழ்ச்சிகளும் எதிரெதிர் எழுகின்றன.
வேறு புலவர்களும் திருப்பரங்குன்றத்தைச் சிறப்பித்துப் பாடியிருக்கின்றனர்.
இதுகாறும் கூறிய செய்திகளைக் கொண்டு பார்த்தால், திருப்பரங்குன்றம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்கை வளம் பொருந்தியிருந்த தென்றும், மதுரை வாசிகள் அடிக்கடி கூட்டம் கூட்டமாக வந்து முருகனை வழிபட்டார்களென்றும், கோயிலில் சித்திர மண்டபம் முதலிய பல மண்டபங்கள் இருந்தன என்றும், முருகனைப் பலவகையில் வழிபட்டுக் காணிக்கை நேர்ந்து பிரார்த்தனை செய்து ஆடிப்பாடி அன்பர்கள் போற்றினர் என்றும் அறியலாம். ஆறு படைவீடுகளுள் முதலாவதாகிய இத் தலம் இன்றும் தமிழ் மக்களால் வழிபடப் பெற்று வருகிறது. அருணகிரி நாதர் பாடிய திருப்புகழ்ப் பாடல்கள் பல இத்தலத்துக்கு இருக்கின்றன. தென் பரங்குன்றிற் பெருமாள் அன்றும் தமிழ்மக்களுக்கு அருள் செய்து கொண்டு விளங்கினான். இன்றும் அப்படியே விளங்குகின்றான்.