பிரார்த்தனை
இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறங்களிலும் நின்று, வழுவாது தமக்குரிய செயல்களைச் செய்வார் உலகில் அறத்தையும் அன்பையும் அருளையும் வளர்ப்பவர்கள். அறம் இல்லாவிட்டால் உலகத்தில் உயிர்கள் வாழ இயலாது. அறநெறிபற்றி வாழும் ஆருயிர்களுக்குப் பகை, சினம் முதலிய தீய இயல்புகளைப் போக்கக் காரணமாக இருப்பது அன்பு. அந்த அன்புகொண்டு வாழும் மக்களுக்கு இறைவனது அருள் கிடைக்கும்.
இல்லறம், துறவறம் என்னும் அறநெறியில் நிற்பவர்கள் இறைவன் திருவருளைப் பெறுவார்கள். அல்லாதார் பெற இயலாது. அறத்தினின்று வழு வியவர் அன்பு செய்தும் பயன் இல்லை. முருகன் உலகில் அறநெறியை நிலைநிறுத்துவதற்குத் துணையாகிய திருவருளை உடையவன். அறத்தை அணியாகக் கொள்ளும் மக்கள் யாவரும் அவனுக்கு அடி யார்களே.
அறத்தை மேற்கொண்டவர்கள் முருகனுடைய அருளை உடையவர்கள். அவன் அருளின்றி அறம் செம்மை நெறியில் நடப்பது அரிது. இல்லறம் நன்கு நடைபெற வேண்டி முருகன் மணவாளத் திருக்கோலத்தோடு காட்சி அளிக்கிறான்.
ஞானநெறி பற்றித் தவம்புரியும் பெரியோர்களும் முருகனுக்கு அடியார்களே. அந்த ஞானியரை மாதவர்களெல்லாம் வழிபடுவார்கள்.
அறச் செல்வரும் ஞானச் செல்வருமாகிய இரு சாராரும் முருகனுக்குப் பிரியமானவர்கள். அல்லாதவர் அவனை அணுக முடியாது.
கடுவன் இள எயினனார் இந்தச் செய்தியைச் சொல்கிறார்.
“முருகா! உலகத்தில் அறத்தை மேற்கொண்டவர்கள் உன் குணமாகிய அருளை மேற்கொண்டவர் கள். அறம் நிரம்பிய இடத்தில் உன் அருள் தங்கும். அவர்கள் உன்னை அணுகும் தகுதி உடையவர்கள். என்றும் நிலைபெற்ற ஞானம் என்னும் இயல்புடையோர் பெருந் தவசிகளாலும் போற்றற் குரியவர்கள். அவர்களும் உன்னைச் சேர்ந்து அருள் பெறும் தகுதி உடையோர். அல்லாதவர்கள் உன்னை அணுகுவது இயலாத காரியம்.”
அல்லாதவர் யார்? அவர்கள் இயல்பையும் ஓரளவு சொல்கிறார் புலவர். ஆருயிர்களிடத்தில் அன்பில்லாதவர் நெஞ்சம் தீய நெஞ்சம். அந்த நெஞ்சத்தில் சினம் நிலைபெற்றிருக்கும். பிறருக்குத் துன்பத்தை உண்டாக்குவதே அத்தகைய நெஞ்சத்தை உடையவர் வேலை. அசுரசாதி யென்பது அத்தகையவர்களின் கூட்டந்தான். அன்பில்லாத மக்கள் அவர்கள்.
அல்லாதாரில் இரண்டாவது வகையினர் அறத்தைச் சேராதவர்கள். அறம் இல்லாதவர்க்குப் புகழ் இல்லை. பிற சிறப்புக்கள் இருந்தாலும் அறத்தோடு சாராதவருக்கு அச்சிறப்புக்கள் சிறப்புக்கள் ஆகா. சிறப்பில்லாத புல்லியோர் கூட்டத்தில் சேரத்தக்கவர்கள் அவர்கள். ”சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு, ஆக்கம் எவனோ உயிர்க்கு” என்பது வள்ளுவர் வாய்மொழி. அறத்தை விட்டார் சிறப்பை விட்டாரே ஆவர்.
அல்லாதாருள் மூன்றாம் வகையினர் அருளை ஒழிந்தவர்; ஆருயிர்களுக்குத் தீங்கு நேர்ந்தால் வருந்தும் அருள் இல்லாதார்; தவக்கோலம் பூண்டும் விரதம் காவாமல் தவறிய மக்கள். இவர்கள் முருகன் அருளைப் பெறத் தகுதியில்லாதவர்கள்.
நான்காம் வகையினர் நாஸ்திகர்; மறுபிறப்பு இல்லை என்று கூறும் பேதையர். உயிர் பல பல பிறவிகளை எடுத்து இன்ப துன்ப அநுபவங்களை அடைந்து, பிறகு ஞானம் பெற்று வீடு எய்தும் என்பது நம் நாட்டு நூல்களின் துணிபு. இந்தப் பிறவியில் ஓரளவு முயன்றாலும், அந்த முயற்சியின் பயன் மறுபிறவியிலும் தொடர்ந்துவரும் என்ற நம்பிக்கை யினால், மனிதன் இயன்ற அளவு நன்மை செய்ய எண்ணுகிறான். மறுபிறப்பு இல்லையென்று சொல்பவர்கள் முருகன் அருளை உணர இயலாது.
திருமுருகாற்றுப்படையில் ஓரிடத்தில் குறமகள் முருகனை வழிபடும் காட்சி வருகின்றது. அவள் விரதம் இருந்து பூசை போடுகிறாள். குறிஞ்சி நிலத்து மக்கள் யாவரும் கூடி அவள் வழிபாட்டைக் கவனித்து ஈடுபடுகிறார்கள். வாத்தியங்கள் முழங்க ஆடிப் பாடி முருகனைத் துதிக்கிறார்கள். அப்போது குறமகளுக்கு ஆவேசம் வருகிறது. எங்கும் முருகனது நினைவும் முருகனது புகழொலியும் நிரம்பி யிருக்கும் அந்தச் சூழலில் வேடிக்கை பார்க்க வந்த சிலர் இருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பதோடு நில்லாமல், “எல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்! கடவுளாவது ஒன்றாவது!” என்று பரிகாசம் செய்யும் இயல்பை உடையவர்கள் அவர்கள்.
குறமகள் ஆடும்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் உலக நினைவே இன்றி ஆடுகிறார்கள். இந்தச் சூழலில் வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூடத் தம்மை மறக்கின்றனர். அவர்கள் நெஞ்சு அடித் துக்கொள்கிறது. முரண்பாடான கொள்கையை யுடைய அவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்கள் அஞ்சும்படியாக அந்தக் குறமகள் முருகனையே வருவித்துவிட்டாள்!
முரணினர் உட்க, முருகாற்றுப் படுத்த
உருகெழு வியன் நகர்
என்று வருகிறது பாட்டு. அங்கே முரணினர் என்பதற்கு, “தெய்வம் இல்லையென்று சொல்லும் மாறுபாட்டை உடையவர்” என்று நச்சினார்க்கினியர் உரை எழுதுகிறார். கடவுள் இல்லை, மறுபிறப்பு இல்லை என்பவரை நாஸ்திகர் என்று சொல்வார் கள். திருமுருகாற்றுப்படையிலே வரும் நாஸ்திகரைப் போலப் பரிபாடலிலும் கடுவன் இளவெயினனார் ஒருவகை நாஸ்திகரைச் சொல்கின்றார். ‘மறு பிறப்பு இல்லையென்று சொல்லும் அறிவிலிகள்’ என்று குறிக்கின்றார். அவர்களும் முருகன் தாள் நிழலை அணுகும் தகுதியில்லாதவர்கள்.
இல்லற நெறிநின்று அறம் வளர்ப்போரும், துறவற நெறி நின்று ஞானம் நிரம்பியவரும் முருகன் தாள் நிழலை அடைவார்கள். தீய நெஞ்சம் படைத்த கோபிகளும், அறவுள்ளம் இல்லாதாரும், துறவுவேடம் பூண்டு விரதத்தில் தவறியவர்களும், மறுபிறப்பு இல்லையென்போரும் அடையமாட்டார் கள்.
நின்குணம் எதிர்கொண்டோர்
அறங்கொண்டோர் அல்லதை
மன்குணம் உடையோர்
மாதவர் வணங்கியோர், அல்லதை.
[நின் இயல்பாகிய அருளை ஏற்றுக்கொண்டோராகிய அற நெறி மேற்கொண்டோரையன்றி, நிலைபெற்ற ஞானத்தை உடையவரும் தவமுனிவரால் வழிபடப் பெற்றோருமாகிய ஞானியரை யன்றி.]
செறுதீ நெஞ்சத்துச் சினம் நீடி னோரும்
சேரா அறந்துச் சீரி லோரும்
அழிதவப் படிவத்து அயரி யோரும்
மறுபிறப்பு இல்லெனும் மடவோரும்
சேரார் நின் நிழல்.
[உயிர்களுக்குத் தீங்கு செய்யும் தீய நெஞ்சத்தில் கோபம் தங்கியிருப்பவர்களும், தர்மத்தைச் சேராமல் சிறப்பின்றி இருப்பவர்களும், கெட்ட ஒழுக்கத்தால் அழிந்த தவமும் விரதத்தைக் கைவிட்ட தளர்ச்சியும் உடையவர்களும், மறுபிறப்பு இல்லை யென்று சொல்லும் பேதையரும் நின் தாள் நிழலைச் சேரமாட்டார்கள்.
செறுதல் – தீங்கு விளைத்தல். படிவம் – விரதம். அயரி யோர் – வழுவியவர்.]
அன்னோர் அல்லது இன்னோர் சேர்வர்.
[அத்தகையவர்கள் அல்லாத இத்தகைய நற்குணம் உடையோர் நின் தாள் நிழலைச் சேர்வர்.]
நிழல் என்றது வீடுபேற்றை என்றும் அழியாத இன்ப வீடு இறைவனது தாள். இறைவன் திருவடியே வீடாக இருப்பது. உலகியலிலும் ‘நிற்க நிழல்’ என்று வீட்டைக் குறிப்பதுண்டு. அழிவற்ற நிழலாக இருப்பது மோட்சமாகிய வீடு. அதுவே இறைவனது திருவடி. அந்த நிழலை அடையும் தகுதி உடையவர்களையும், தகுதி இல்லாதவர்களையும் ஒருவாறு குறித்தார் புலவர்.
பிறகு தம்முடைய விருப்பத்தைத் தெரிவித்துப் பிரார்த்தனை செய்கிறார். இறைவனிடம் நாம் எதை வேண்டுவது? வீடு வேண்டுமென்று கேட்கலாம். ஆனால் சிறந்த பக்தர்கள் அப்படிக் கேட்பதில்லை; அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வதையே விரும்புவார்கள். ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் என்று கேட்பார்கள்.
உலகியலில் ஈடுபட்டவர்கள் கேட்கும் பொருள்கள் எவை? அவர்களுக்கு உலக வாழ்வுதான் நிலையானது. ஆகவே பலவகைப் பொருள் வேண்டு மென்று கேட்பார்கள்; பொருள்களைக் குறைவறப் பெறுவதற்குரிய பொன் வேண்டுமென்று கேட்பார்கள். பொருளும் பொன்னும் நிரம்ப இருந்தும் அவற்றால் இன்பம் துய்க்காமல் இருப்பவர்களும் உலகில் உண்டு. அப்படியின்றிப் பொருளும் பொன்னும் நிரம்பிய வாழ்வில் போகம் நிரம்பத் துய்க்கவேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
புலவர் இவற்றைக் கேட்கவில்லை. முருகனது பெருமையையும் அவன் அருளைப் பெறும் அடியவர் களது இயல்பையும் உணர்ந்தவர் ஆதலின் அவர் நிலையற்ற இவற்றை விரும்பவில்லை.
ஆதலின் யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல
[ஆகையால், யாம் நின்னிடம் வேண்டுமென்று கேட்பவை பொருளும் பொன்னும் இன்ப நுகர்ச்சியும் அல்ல.]
செல்வரிடம் சென்று ஒருவேளைச் சோறு போடு என்று ஒருவன் கேட்கிறான்; மற்றொருவன் ஒரு மூட்டை நெல் வேண்டுமென்று கேட்கிறான்; வேறொருவன் ஒரு காணி நிலம் வேண்டுமென்று கேட்கிறான். இந்த மூவரிலும் நிலத்தைக் கேட்கிறவன்தான் சாமர்த்தியசாலி. எதைக் கேட்டாலும் கொடுக்கும் வள்ளலிடத்தில் போவது பெரிதல்ல; அவனிடம் எதைக் கேட்க வேண்டுமென்று ஆராய்ந்து கேட்கவேண்டும்.
புலவர் இந்தக் கலையில் வல்லவர். எப்போதும் சோறு போடும் நிலத்தை யாசிப்பவரைப் போல முருகனிடம் வேண்டிக் கொள்கிறார்.
“முருகா, உருளுகின்ற பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூக்கும் கடம்பமாலையை அணிந்த பெருமானே! உன் பெருமையை உணர்ந்திருக் கிறோம். புரந்தராதியர் பெற்ற பொருளும் குபேரன் பெற்ற பொன்னும் அமரர் பெற்ற போகமும் நின் அருள் பெறாவிடில் வீணாகி ஒழிவதை நாங்கள் உணர்வோம். உன் அருள் இல்லாத இடத்தில் அன்பு இல்லை. அன்பு இல்லாத இடத்தில் அறம் இல்லை. அறம் இல்லாவிட்டால் வாழ்வு இல்லை. ஆகவே, உன்னிடத்தில் அடியார்களாகிய நாங்கள் வேண்டும் பொருள் மூன்று. பிறர் வேண்டும் பொருள்களும் மூன்றே. பொருள், பொன், போகம் என்னும் மூன்றையும் அவர்கள் வேண்டுகிறார்கள். எங்களுக்கு அவை தாமே வரும். உன்னை அணுகி அவற்றையா வேண்டுவது? எங்களுக்கு வேண்டும் பொருள்கள் வேறு. பொருள் அல்ல; பண்புகள். முதலில் முருகா, நின் திருவருள் வேண்டும்; அந்த அருளே புணையாகப் பற்றி ஆருயிர்களிடத்தில் மாறாமல் செய்யும் அன்பு வேண்டும்; அருளும் அன்பும் கொண்டு அறம்புரியும் திறம் வேண்டும். அருள், அன்பு, அறம் என்ற இந்த மூன்றும் குறைவறப் பெற்றால் எங்களுக்குக் கைகூடாதது வேறொன்றும் இல்லை. உன் அருள் உயிர்களிடத்தில் அன்பு செய்யத் துணையாகும். அந்த அன்பைச் செயலிலே காட்டுவதே அறம். ஆகவே இந்த மூன்றையும் எங்களுக்கு வழங்கவேண்டும் அப்பா!”
என்ன அழகான பிரார்த்தனை ! அருளால் அன்பும் அன்பினால் அறமும் நிரம்பினால் உலக முழுவதும் இன்ப வீடாகிவிடும். வீடு என்ற மோட் சம் இந்த உலகத்துக்கே வந்துவிடும். உலக முழு வதுமே உய்யவேண்டும் என்ற நோக்கம் உள்ள சான்றோருக்குத்தான் இப்படிப் பிரார்த்தனை செய்யும் உணர்வு வரும்.
நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே!
[உருளுகின்ற பூங்கொத்தையுடைய தழைத்த கடம்ப மாலையை அணிந்தவனே, (யாம் உன்னிடத்தில் வேண்டுமென்று இரக்கும் பொருள்கள்) நின்னிடத்தில் அமைந்துள்ள அருளும், அன்பும், அறமும் ஆகிய இம் மூன்றுமே.]
அருளென்னும் பொருளும் அன்பென்னும் பொன்னும் அறமென்னும் போகமும் வேண்டுகிறார். புலவர். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அருளல்லாத மருளும், அன்பல்லாத பகைமையும், அறமல்லாத மறமும் வளரும் இடம் அசுர லோகம். அருள், அன்பு, அறம் ஆகிய மூன்றும் தெய்விகப் பண்புகள். மனிதன் இந்த மூன்றையும் பெற்றால் தெய்வமாகி விடுகிறான். இவற்றிற்கு மறுதலையாகிய மருள், பகை, மறம் என்ற இயல்புகள் உலகில் வளர இடம் கொடுத்தல் ஆகாது. கடவுளின் பெருமையையும் ஆற்றலையும் உணராத மருளும், ஆருயிர்களிடத்தில் மன நெகிழ்ச்சி பெற்று அன்பு செய்யாத பகையும், செய்யும் செயலை நன்மை பயக்கும் வண்ணம் அற நெறி நின்று செய்யாத மறமும் உலக வாழ்வை நரகமாக்குகின்றன. உலகில் அருளும் அன்பும் அறமும் ஒருசார் இருக்கின்றன. மருளும் பகையும் மறமும் ஒருபால் தாண்டவமாடுகின்றன. மருள் முதலிய மூன்றும் தலைமைபெற்று அரசாளுவதனால் அணுக்குண்டும் அடக்குமுறையும் போர்களும் நிகழ்கின்றன. அமைதி குலைகிறது. மக்களின் உயிரும் உள்ளமும் உடம்பும் அழிகின்றன. அருளால் உயிர் தழைக்கும்; அன்பால் உள்ளம் தழைக்கும்; அறத் தால் உடல் தழைக்கும். முருகன் இந்த மூன்றையும் உலகில் மலியும்படி செய்யும் தெய்வம். ஆகவே அப் பெருமானிடத்தில் புலவர் இந்த மூன்றையும் வேண்டுகிறார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சிறந்த நிலையில் முருகனைத் தமிழர் வழிபட் டிருக்கிறார்கள். இந்த உலக வாழ்வைச் சுயநலத்தோடு அநுபவிக்கும் ஆசை புலவருக்கு இல்லை. உலகத்தினின்றும் நீங்கி எங்கோ உள்ள மோட்ச லோகத்தில் வாழும் ஆசையும் இல்லை. இந்த உலகத்தையே இன்ப உலகமாக்க விரும்புகிறார். அருள் வித்திட்டு அன்புப்பயிர் விளைத்து அறமென் போகத்தை ஆருயிரனைத்தும் நுகரும்படி செய்யவேண்டு மென்பது அவர் ஆர்வம். அவர் செய்யும் பிரார்த்தனை இந்த ஆர்வத்தை உள்ளடக்கியது. அதைக் காட்டிலும் சிறந்த வேண்டுகோளைக் காண்பது அரிது.
யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல,
நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும்,
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே !
என்ற பிரார்த்தனையை உலக முழுவதுமே முருகனிடம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இந்த அரிய கருத்துக்களையுடைய பாடல், பரி பாடலென்னும் தொகை நூலில் ஐந்தாவது செய்யுளாக விளங்குகிறது. அந்தக் காலத்தில் இந்தப் பாட்டை ராகத்தோடு பாடினார்கள். பாலைப் பண்ணில் பாடினார்களென்று தெரிகிறது. இந்தப் பண்ணை அமைத்தவர் கண்ணன் நாகனார் என்ற புலவர்.
பாடல் முழுவதையும் இப்போது சேர்த்துப் பார்க்கலாம்.
செவ்வேள்
பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச் சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கித் தீ அழல் துவைப்பத் திரியவிட்டு எறிந்து நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து
5. வெற்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய
கொன்றுஉணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை
மாய அவுணர் மருங்கு அறத் தபுத்தவேல் நாவலந் தண்பொழில் வடபொழில் ஆயிடைக் குருகொடு பெயர்பெற்ற மால்வரை உடைத்து
10.மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை!
‘மூவிரு கயந்தலை, முந்நான்கு முழவுத்தோள் ஞாயிற்றுஏர் நிறத்தகை; நளினத்துப் பிறவியை; காஅய் கடவுள் சேஎய்! செவ்வேள்! சால்வ!தலைவ! எனப் பேசு விழவினுள்
15. வேலன் ஏத்தும் வெறியும் உளவே;
அவை – வாயும் அல்ல; பொய்யும் அல்ல; நீயே வரம்பிற்றுஇவ் வுலகம் ஆதலின் சிறப்போய்! சிறப்பின்றிப் பெயர்குவை; சிறப்பினுள் உயர்புஆகலும்
20. பிறப்பினுள் இழிபு ஆகலும்
ஏனோர் நின் வலத்தினதே;
ஆதி அந்தணன் அறிந்து பரிகொளுவ
வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து நாகம்
நாணா மலைவில் ஆக
25.மூவகை -ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
மாதிரம் அழலஎய்து அமரர் வேள்விப் பாகம் உண்ட
பைங்கட் பார்ப்பான் உமையொடு புணர்ந்த
காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
80. இமையா நாட்டத்து ஒருவரம் கொண்டு
விலங்குஎன விண்ணோர் வேள்வி முதல்வன்,
விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்தது அரிதென மாற்றான் வாய்மையன் ஆதலின், ஈரிகனன்று
ஆனாக் குடாரிகொண்டு அவன் உருவு
35. திரித்திட் டோன், இவ் வுலகேழும் மருளக்;
கருப்பெற்றுக் கொண்டோர், கழிந்தசேய் யாக்கை
நொசிப்பின் ஏழுறு முனிவர் நனிஉணர்ந்து;
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
40.சாலார்,தானே தரிக்கென அவர்அவி
உடன்பெய் தோரே, அழல்வேட்டு; அவ்வவித்
தடவுநிமிர் முத்தீப் பேணிய மன்எச்சில்
வடவயின் விளங்குல் உ றைஎழு மகளிர்
கடவுள் ஓருமீன் சாலினி ஒழிய
45. அறுவர் மற்றையோரும் அந்நிலை அயின்றனர்;
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே; நிவந்துஓங்கு
இமயத்து நீலப் பைஞ்சுனைப் பயந்தோர் என்ப,
மதுமத்துப் பாயல்;
50. பெரும்பெயர் முருக!நிற் பயந்த ஞான்றே
அரிதுஅமர் சிறப்பின் அமரர் செல்வன்
எரிஉமிழ் வச்சிரங்கொண்டு இகந்துவந்து எறிந்தென அறுவேறு துணியும் அறுவர் ஆகி
ஒருவனை வாழி! ஓங்குவிறற் சேஎய்!
55. ஆரா உடம்பின் நீ அமர்ந்துவிளை யாடிய
போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய
அல்லல்இல் அனலன் தன்மெய்யிற் பிரித்துச் செல்வ
வாரணம் கொடுத்தோன்; வானத்து வளங்கெழு
செல்வன்தன் மெய்யிற் பிரித்துத்
60. திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்;
திருந்துகோல் ஞமன்தன் மெய்யிற் பிரிவித்து
இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்;
ஆஅங்கு – அவரும் பிறரும் அமர்ந்துபடை அளித்த
மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும்
65. பொறிவரிச் சாபமும் மானும் வாளும்
செறிஇலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும்
தெறுகதிர்க் கனலியும் மாலையும் மணியும்
வேறுவேறு உருவின் இவ் வாறிரு கைக்கொண்டு
மறுவில் துறக்கத்து அமரர் செல்வன்தன்
70. பொறிவரிக் கொட்டையொடு புகழ்வரம்பு இகந்தோய்!
நின்குணம் எதிர்கொண்டோர்
அறங்கொண்டோர் அல்லதை,
மன்குணம் உடையோர்
மாதவர் வணங்கியோர் அல்லதை,
செறுதீ நெஞ்சத்துச் சினம் நீடி னோரும்
சேரா அறத்துச் சீரி லோரும்
75. அழிதவப் படிவத்து அயரி யோரும்
மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார்
நின் நிழல்; அன்னோர் அல்லது இன்னோர் சேர்வார்;
ஆதலின், யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால்
80, அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலிதா ரோயே!
கடவுள் வாழ்த்து.
கடுவன் இளவெயினனார் பாட்டு.
கண்ணன் நாகனூர் இசை.
பண்ணுப் பாலையாழ்.