புகழ்வரம்பு இகந்தோன்

இந்திரன் தேவலோகத்துக்குத் தலைவன். பல பொருள்களைப் படைத்தவன். புண்ணியத்தால் வரும் போகங்களைத் தேவர்கள் துய்க்கிறார்கள். அவர்களுக்குள்ளே சிறந்து தலைமைப் பதவி வகிப்பவனாதலால், அவன் போக நுகர்ச்சியிலும் யாவரினும் சிறந்தவனாக இருக்கிறான். அதனால் அவனுக்குப் போகி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

கையிலே பொருள் உடையவருக்கு வேறு யாரேனும் அதைக் கைப்பற்றிக் கொள்வார்களோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும். ‘மடியிலே கனம் இருந்தால் வழியிலே பயம் உண்டு’ என்ற பழ மொழி இக்கருத்தையே வெளிப்படுத்துகிறது. உலகத்துப் பொருளுடையவரே இவ்வாறு அஞ்சுவதானால் எல்லா ஐசுவரியத்துக்கும் மேலான ஐசுவரியத்தையும் போகத்தையும் பெற்ற இந்திரனுக்கு எவ்வளவு அச்சம் இருக்கவேண்டும்? ஒவ்வொரு கணமும் அவன் தன் பதவி தனக்கு நிலைத்திருக்க வேண்டுமே என்ற கவலையோடே இருக்கின்றான். அவன் இறைவனைத் தரிசித்து வழிபடுவது கூட முத்தி பெற வேண்டும் என்ற ஆசையினால் அன்று. தன் பதவிக்கு மோசம் வராமல் இருக்கவேண்டுமென்ற பிரார்த்தனைதான் இறைவன் திருமுன்னர் அவனுக் குத் தோன்றுகிறது.

வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்

என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார்.

யாரேனும் யாகம் செய்தாலும் தவம் புரிந்தாலும் தன் பதவியைப் பற்றிக்கொள்ளத்தான் அவற்றைச் செய்வதாக எண்ணி, இடையூறு செய்ய நினைப்பவன் இந்திரன். நூறு யாகங்கள் செய்து இந்திர பதவியைப் பெற்றவன் அவன். அதனால் சதமகன் என்று ஒரு பெயர் அவனுக்கு வழங்கும். ஒரு யாகம் ஒருவர் செய்தாலே, இவன் நூறு யாகம் செய்து விட்டால் என்ன செய்வது என்ற தலைவலி அவனுக்கு வந்துவிடும். அதிக ஆற்றல் படைத்தவன் யாராவது இருந்தால், ஒருகால் அவன் தன்னோடு போர்புரிந்து தன் பதவியைக் கைக்கொண்டு விடுவானோ என்ற அச்சம் அவன் உள்ளத்தில் முளைக்கும். இவ்வளவுக்கும் காரணம் அவனுக்கு இருக்கும் பதவியாசைதான்.

சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாகச் சிவபிரானுடைய அமிசம் தோன்றியது, இந்திரனுக்கு அச்சத்தை உண்டாக்கிவிட்டது. அக்குழந்தைகளின் மூலத்தை உணராமல் அறுமீன் புதல்வர் என்ற அறியாமையால் அவன் அஞ்சினான். ‘அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என் பது பழமொழி அல்லவா?

உதயமான அன்றே, அச்சத்தால் கலங்கிய அமரர் செல்வன் அங்கே வந்து தன் வச்சிரத்தை அக் குழந்தைகளின் மேல் எறிந்தான். அறநிலை கடந்து, எழுமுனிவருக்குத் தான் முன்பு சிவபிரான் அமிசத்தை அளித்ததையும் மறந்து, எரியுமிழ் வச்சிரத்தை எறிந்தான்.

என்ன ஆச்சரியம்! இந்திரனுடைய வச்சிராயுதம் பேராற்றலை உடையது. மலைச்சிறகை அறுத்தது. எதன்மேல் விட்டாலும் அதைக் கூறு கூறாகப் பிளந்தெறியும் வன்மையை உடையது.

அத்தகைய வச்சிராயுதத்தை இந்திரன் விட்டபோது என்ன ஆயிற்றுத் தெரியுமா? சரவணப் பொய்கையிலே தோன்றிய பச்சிளங் குழந்தைகளை ஒன்றும் செய்யமுடியவில்லை. ஒரு பொருளைப் பல துண்டுகளாக ஆக்குவது வச்சிரம். இங்கோ அந்த ஆறு குழந்தைகளும் ஒன்றுபட்டன ; ஒரே திருவுருவமாக அமைந்து விட்டன.

ஆறு குழந்தைகளாகத் தோன்றிய அன்றே, இந்திரன் தன் செருக்கினாலும் அச்சத்தாலும் செய்த காரியம் முருகன் திரு அவதாரத்தைப் பயனுடைய தாக்கிவிட்டது. அறு வேறு குழந்தைகளும் ஒன்றாயினர். முருகன் ஒரு திருமேனியோடு நின்றான். மேலும் மேலும் வளரும் விறலோடும் சிவந்த நிறத்தோடும் இந்திரனது அகங்காரத்தைப் போக்க நின்றான். ஓங்கு விறற் சேயாகி நின்ற அப்பெருமான் இந்திரனோடு போர் செய்யத் தொடங் கினான்.

பெரும்பெயர் முருக, நிற் பயந்த ஞான்றே
அரிதுஅமர் சிறப்பின் அமரர் செல்வன்
எரிஉமிழ் வச்சிரம்கொண்டு இகந்துவந்து எறிந்தென

அறுவேறு துணியும் அறுவர் ஆகி
ஒருவனை வாழி! ஓங்குவிறற் சேஎய்!

[பிறருக்கெல்லாம் கிட்டாத பெரிய பெயரை உடைய முருகனே, ஆறு கார்த்திகை மாதரும் உன்னைக் கருவுயிர்த்த அன்றே,பிறருக்கு அரிதாகத் தனக்கு உரிமையாகப் பொருந்திய சிறப்பை உடைய தேவராஜன், நெருப்பைக் கக்கும் வச்சிராயுதத் தைக் கைக்கொண்டு வந்து, தர்மநெறியைக் கடந்து எறிந்தான். அப்படி எறியவே, ஆறு வேறு கூறாக இருந்த பகுதிகள் ஆறு குழந்தைகளாகி அப்பால் அவ்வாறு குழந்தைகளும் ஒரே உருவ மாக ஒரு வனானாய்.உன் திருவுருவம் வாழ்க! ஓங்கிய வலிமையை யுடைய சேயே!]

“பெரும் பெயர் முருக ” என்று கடுவன் இள எயினார் இங்கே முருகவேளை விளிக்கிறார். “அரும் பெறல் மரபிற் பெரும்பெயர் முருக ‘” என்று திரு முருகாற்றுப்படையில் நக்கீரரும் சொல்லியுள்ளார். ஆறு திருவுருவங்களும் ஒரு திருவுருவமான செய்தியைச் சொன்னவுடன் ‘வாழி?’ என வாழ்த்துகிறார் புலவர். அதுமுதல் முருகன் தன் திருவவ தாரத்தால் ஆற்ற வேண்டிய திருவிளையாடல்களைச் செய்யப் புகுகின்றான். அதுகாறும் இறைவன் கூறாகத் தனித்தனி நின்றவன், ஒன்று பட்டு முருகன் ஆகிவிட்டான். அந்த நிலையில்தான் உண்மை முருகன் உதயமாகிறான். அதை நினைந்தே, “ஒருவனை வாழி!” என்று வாழ்த்துகிறார் நல்லிசைச் சான்றோராகிய கடுவன் இள எயினனார்.

கந்தபுராணக் கதைக்கும் இந்த வரலாற்றுக்கும் இங்கும் வேறுபாடு இருக்கிறது. ஆறு குழந்தைகளாக அமர்ந்த முருகனை, இறைவன் இறைவியோடு எழுந்தருளி வந்து அவ்விறைவிக்குக் காட்டினான். இறைவி ஆறு குழந்தைகளையும் ஆவலோடு அணையவே அந்த ஆறு வடிவங்களும் ஒன்றாயின; ஆறு திருமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் உடைய மூர்த்தியாயின. அந்த நிலையில் முருகன், கந்தன் என்னும் திருநாமம் பெற்றான். அப்பால் அப்பெருமான் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினான். வீர பராக்கிரமச் செயல்களைச் செய்தான். அவற்றைக் கண்டு சினந்த இந்திரனும் தேவர்களும் அப்பிரானோடு போரிட்டு மயங்கி வீழ்ந்தனர். பிருகஸ்பதி பகவான் வந்து வேண்ட முருகன் மீண்டும் அவர்களை எழுப்பினன். இந்திரன் கந்தவேள் கழலிணை பணிந்து, அவனைத் தேவர் படைக்குத் தலைவனாக இருக்கவேண்டுமென்று வேண்டிக் கொண்டான். அன்று முதல் முருகன், ‘வானோர் வணங்குவில் தானைத் தலைவ’ னாக விளங்குகிறான்.

இவ்வாறு கந்த புராணம் சொல்கிறது.

இனி பரிபாடலில் உள்ள வரலாற்றைத் தொடர்ந்து நோக்குவோம்.

இந்திரனுக்கும் முருகனுக்கும் போர் மூண்டது. பச்சிளம் பாலகனாகிய அந்த நிலையிலே கூட முருகன் மிக்க பராக்கிரமத்தை உடையவனாக விளங்கினான். அவனுக்கு அந்தப் போர் பொருந்தாததாக இருக்கவில்லை. குழந்தை இயற்கையாக விளையாடுவதைப் போல அவன் போர் செய்தான். ஆயுதம் ஒன்றும் இன்றிப் போரிட்டான். போரென்ற பெயரால் அவன் ஆடிய திருவிளையாட்டு அது. பச்சைக் குழந்தையின் செயலெல்லாம் விளையாட்டுத்தானே? குழந்தை தோன்றியவுடனே செய்த விளையாட்டு இது! அந்த விளையாட்டுக்கு எதிர் நிற்க மாட்டாமல் புரந்தரன் தோல்வியை அடைந்தான். அருள்மயமாகிய முருகனுக்கு முன்னே ஆணவமயமாகிய இந்திரன் எம்மாத்திரம்?

ஆரா உடம்பின் நீ அமர்ந்துவிளை யாடிய
போரால் வறுங்கைக்குப் புரந்தரன் உடைய.

[பூரண வளர்ச்சி பெறாத திருவுருவத்தையுடைய நீ பொருந்தும்படியாக விளையாடிய போரினால், ஆயுதமின்றியிருந்த உன் வறுங்கைக்குப் புரந்தரன் தோல்வி அடைய. ஆரா-நிரம்பாத. அமர்ந்து – விரும்பி என்றும் சொல்லாம்.]

இந்திரன் இப்போது உண்மையை உணர்ந்தான். ‘இப்பெருமானே நம் படைக்குத் தலைவனா வதற்கு உரியன்’ என்ற எண்ணத்தைக் கொண்டான். ஓங்குவிறற் சேயாகிய முருகன் வறுங்கையோடு இருந்தே இத்துணை ஆற்றலைக் காட்டினானே என வியந்தான். கைகளுக்கேற்ற ஆயுதங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று தேவராஜன் எண்ணி அதனை மற்றத் தேவர்களுக்கும் அறிவித்தான். உடனே வலிமை பொருந்திய தேவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொருளை வழங்கினர். முருகனுடைய திருக்கரங்களில் அவர்கள் வழங்கிய பொருள்கள் ஏறின.

ஒவ்வொரு தேவரும் தம்முடைய மெய்யினின்றும் பிரித்து அப்பொருள்களை அளித்தனர். பிறரால் அல்லற்படாத ஆற்றலையுடைய அக்கினி தேவன் தன் உடம்பினின்றும் பிரித்த ஆற்றலைச் சிவந்த கோழியாக்கி, அந்தச் செல்வ வாரணத்தை முருகன் திருக்கரத்தில் அமரும்படி வழங்கினான். வானத்து வளங்கெழு செல்வத்தையெல்லாம் ஆளும் அரசனாகிய இந்திரன் ஆயிரங் கண்ணுடையவன். அவன் தன் மெய்யினின்றும் பிரித்துக் கண்கள் பல விளங்கும் தோகையினால் அழகு பெற்ற மயிலைக் கொடுத்தான். ஒரு பால் கோடாத ஆணையைத் தாங்கும் யமன் தன் மேனியினின்றும் பிரித்து வெள்ளாட்டுக் குட்டியைத் தந்தான். இப்படியே தேவர் பலர் பல பொருளை வழங்கினர். புள்ளியையும் கோடுகளையும் உடைய வில்லை ஒரு தேவன் அளித்தான். மானை ஒருவன் வழங்கினான். வாளை ஒருவன் ஈந்தான். இலை செறிந்த ஈட்டியை ஒருவனும், குடாரியை ஒருவனும், கணிச்சியை ஒருவனும் தந்தார்கள். அக்கினி, மாலை, மணி என்பவற்றைச் சிலர் தந்தார்கள். வேறு வேறு உருவத்தோடு உள்ள இப் பொருளைத் தன்னுடைய பன்னிரு திருக் கரங்களிலும் ஏற்றருளினான் முருகன்.

மேலே சொன்ன பன்னிரு பொருள்களும் முருகனுடைய ஏவற்கு அமைந்த படைகளாயின. பெருவலிமையையுடைய அக்கினி முதலிய தேவர் களின் அமிசங்களே முருகனிடம் ஆயுதங்களாக நின்று படையாற்றத் தொடங்கின. பிறந்த புதிதிலே, தாமரைப் பொகுட்டாகிய தொட்டிலில் இருந்தபோதே, முருகன் இத்தனை பராக்கிரமத்தை உடையவனானான். புகழையும் பெற்றான். பல காலமாக அமரலோகத்தை ஆண்டுவந்த இந்திரனுக்குக் கூட இவ்வளவு புகழ் இல்லை. தேவலோகாதிபதிக்குக் கிடைக்காத புகழ் தேவசேனாபதிக்குக் கிடைத் தது. அமரர் செல்வனுக்குக் கிடைத்த புகழுக்கு ஒரு வரம்பு உண்டு; அந்த வரம்பையும் இகந்து நின்றது முருகன் புகழ். மிக்க ஆற்றல் பெற்ற தேவர்களின் சக்தியெல்லாம் அவன் கைப்பிடியில் அடங்கி நின்றன. கோழியாகவும் ஆடாகவும் மயிலாகவும் கணிச்சி முதலியனவாகவும் உருப்பெற்று அடங்கி நின்றன.

அல்லலில் அனலன் தன்மெய்யிற் பிரித்துச்
செல்வ வாரணம் கொடுத்தோன்.

[துன்பம் இல்லாத அக்கினிதேவன் தன் மெய்யினின்றும் பிரித்துச் செல்வமாகிய கோழியைக் கொடுத்தான். கொடியாக நிற்றலின் செல்வ வாரணம் என்று சிறப்பித்தார்.]

வானத்து
வளங்கெழு செல்வன்தன் மெய்யில் பிரித்துத்
திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன்.

[தேவலோகத்துச் செல்வங்களுக்கெல்லாம் உரிமை பூண்ட செல்வனாகிய இந்திரன் தன் மேனியிலிருந்து பிரித்து, விளங்கு கின்ற கண்களோடு கூடிய அலங்காரமான மயிலைக் கொடுத் தான். பீலியை அணிந்த மயில் என்றும் சொல்லலாம்.]

திருந்துகோல் ஞமன்தன் மெய்யிற் பிரிவித்து இருங்கண் வெள்யாட்டு எழில்மறி கொடுத்தோன்.

[பட்சபாதமின்றிச் செலுத்தும் திருத்தமுடைய ஆணையாகிய கோலையுடைய யமன் தன் உடம்பினின்றும் பிரித்து, கரிய கண்ணையும் அழகையுமுடைய வெள்ளாட்டுக் குட்டியைக் கொடுத் தான்.]

ஆஅங்கு, அவரும் பிறரும் அமர்ந்துபடை அளித்த
மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும்
பொறிவரிச் சாபமும் மானும் வாளும்
செறியிலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும்
தெறுகதிர்க் கனலியும் மாலையும் மணியும்
வேறுவேறு உருவின்இவ் வாறிரு கைக்கொண்டு.

[அவ்வாறு அந்தத் தேவர்களும் வேறு தேவர்களும் விரும்பிப் படையாக அளித்த ஆடும், மயிலும், சேவற்கோழியும், புள்ளி களையும் கோடுகளையும் உடைய வில்லும், மானும், வாளும், இலை செறிந்த ஈட்டியும், கோடரியும், குந்தாலியும், சுடுகின்ற கதிரை யுடைய அக்கினியும், மாலையும், மணியும் ஆகிய இவற்றை வேறு வேறு உருவத்தோடு தன் பன்னிரண்டு திருக்கரங்களிலே ஏந்திக் கொண்டு.]

மறுவில் துறக்கத்து அமரர் செல்வன்றன் பொறிவரிக்
கொட்டையொடு புகழ்வரம்பு இகந்தோய்!

[புள்ளியும் கோடும் உடைய தாமரையின் கர்னிகையில் இருக்கும் பருவத்தில் அந்த இருக்கையோடு குற்றமற்ற சொர்க்கலோகத்தில் உள்ள தேவர் கோமானுடைய புகழின் எல்லையை விஞ்சிய பெரும்புகழை உடையோய். தொட்டிலிலே புகழ்படைத்தாய் என்றபடி. கொட்டை – பொகுட்டு; கர்னிகை.]

முருகன் திருவவதாரம் செய்த கணத்திலே தேவர் செருக்கை அடக்கித் தன் ஆற்றலைக் காட்டி னான். எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபிரானது சக்தியாகிய முருகவேளிடம் ஆற்றல் சான்ற அமரர் சக்திகளெல்லாம் படைகளாக உருவெடுத்து அடைந்து, அவன் ஏவலுக்கு அடங்கி ஒழுகும் நிலையில் இருந்தன. தேவர்களை அடக்கி ஆளும் திறலுடைய விறற்சேயாகிய முருகன் ஆயுதம் இன்றியே பெருவீரம் காட்டும் பெம்மானாக இருந்தான். தங்கள் பணிவையும் அன்பையும் காட்டும் பொருட்டே தேவர்கள் அவனுக்குப் படைக்கலங் களை வழங்கினார்கள்.

உதித்தபோதே வீர விளையாட்டைக் காட்டிப் பெரும் புகழ் பெற்ற பெருமான் முருகன். தேவ சேனாபதி என்ற பதவி தேவ அரசனுக்கு அடங்கியதன்று. தேவ மன்னன் வலியிழந்து நிற்கும்படி செய்தவன் அல்லவா முருகன்? அவன் தேவராஜனைக் காட்டிலும் மிக்க வலியும், மிக்க புகழும் உடையவன். புகழ் வரம்பு இகந்த இளமுருகன்.

இவ்வாறு, கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பரிபாடலில் முருகனுடைய சிறப்பைப் பாடுவாராகி, முதலில் பொதுவகையில் அவனதுசிறப்பை எடுத்துரைத்தார். அப்பால் அவன் உயர்ந்தாருக்கு உயர்நிலையில் இருந்தும், தாழ்ந்தாருக்கு எளிய நிலையை மேற்கொண்டும் அருள் செய்யும் கருணைத் திறத்தை வியந்து பாராட்டினார். பிறகு அவர் காலத்து வழங்கிய முறைப்படி முருகன் திருவவ தாரக் கதையைச் சொன்னார். அவனது வீரத் திருவிளையாடலைக் கூறினார். பன்னிரு கைகளிலும் படைக்கலம் பூண்ட பண்பைப் பாடினார். ஓங்கு விறற் சேய், புகழ்வரம்பிகந்தோய் என்று பரவினார். பின்பு அவன்பால் அன்பு செய்து அருள் பெறுவதற்கு உரியவர் இன்னார் என்பதைச் சொல்ல வருகிறார். ஆண்டவனுடைய பெருமையைச் சொல்லி முடித்தவர் அடியார் இயல்பைச் சொல்கிறார்.

முருகனுடைய திருவருள் பெறுவதற்குச் சில தகுதி உண்டு. சில பொல்லாத இயல்பை உடை யவர்கள் அவனுடைய அருளைப் பெற இயலாது இல்லத்தில் நின்று ஒழுக்கத்தினின்றும் பிறழாமல் முருகனுடைய இயல்பை அறிந்து பிறர்பால் அன்பு பாலிக்கும் வகையில் அவனுக்குரிய இயல்பைத் தம்முடையனவாக ஆக்கிக் கொள்வோர் முருகனுடைய அருளுக்கு உரியவராவர். ஆருயிருக்கெல்லாம் அருளுடையவராகி விரதம் காத்துத் துறவறத்திற் சிறந்து நிற்கும் பெரியோர் அவன் பேரருள் வெள்ளத்திலே நீந்துவார்கள்.

அறம் உலகில் நிலைபெற்றால்தான் மனித வாழ்க்கை செவ்வி பெறும். அறத்தோடு அருளும் நிலைபெற்றால் மனித சாதி இன்பத்தை அடையும். பிறருக்கு ஈயும் தானத்தினாற் சிறந்த இல்லறமும், பிறருக்குத் துன்பம் செய்தலின்றித் தமக்கு வரும் துன்பத்தை ஆற்றி விரதம் இருக்கும் துறவறமும் உலக வாழ்க்கையில் மக்களுக்குப் பற்றுக் கோடாக இருப்பவை. தெய்வத்தைப் போற்றுபவர்கள் அறத்தையும் போற்றுவது கடமை. அறமின்றித் தெய்வம் இல்லை. தெய்வமே அறத்தின் உருவமாக இருப்பது. அறத்தைக் கொன்று மறத்தை வளர்ப்பவர் அசுரர். அவர் குலத்தை முதலறத் தொலைக்கத் திருவவதாரம் செய்தவன் முருகன். அறம் செய்வா ரெல்லாம் அவனுக்கு அன்பர். மறம் செய்வார் பகைவர். அவனுக்குப் பகைவர் என்று சொல் வதைவிட ஆருயிர்களுக்கே பகைவரென்று சொல்ல வேண்டும். ஆருயிர்களுக்குப் பகைவர்களே ஆண்ட வனுக்கும் பகைவர்கள்.

ஆண்டவனுடைய அருளுக்குப் பாத்திரமாவதற்கு அறம் செய்யவேண்டும். அறநெறி நின்றார் அருள்வழி நிற்பார். இவற்றையெல்லாம் நினைந்து முருகனடியாராகிய இளவெயினனார் மேலே சில செய்திகளைச் சொல்கிறார்.