உண்மையா, பொய்யா?

வேலனாகிய பூசாரி பாடும் பாட்டில், அவன் பரம்பரை பரம்பரையாகக் கேட்டறிந்த செய்திகளை அன்பினாலும் ஆவேசத்தாலும் முழக்கி வெளியிடுகிறான். ஆறு திருமாமுடிக்காரப் பெருமானே, ஆறிரண்டு திருக்கரக்காரப் பெருமானே, செங்கதிரவனைப் போன்ற திருமேனிப் பெருமானே, தாமரையில் தோன்றிய பெருமானே, சங்காரமூர்த்தியின் சிங்காரக் குழந்தைப் பெருமானே, செவ்வண்ணப் பெருமானே, செவ்வேளே” என்று அந்த வேலன் புங்கானுபுங்கமாகப் புகழ்கிறான்; அழைக்கிறான்; ஆவேசம் கொண்டு கர்ஜிக்கிறான். இந்தப் பயங்கரமான விழாவில் வேலன் ஏத்தும் வெறிப்பாட்டு ஒன்றா, இரண்டா? எத்துணையோ உண்டு.

எனப் பேஎ விழவினுள்
வேலன் ஏத்தும் வெறியும் உளவே !

[என்று, அச்சத்தை உண்டாக்கும் வெறியாட்டு விழாவில் பூசாரி புகழ்ந்துப்பாடும் வெறிப் பாட்டுக்களும் உள்ளன. பேஎ – அச்சம். வெறி – வெறியாட்டில் பாடும் பாட்டு.)

இப்படிப் பாடும் பாட்டின் பொருளில் மனசைச் செலுத்திப் பார்க்கலாம். அநாதியாக இருக்கும் பிரமமாகிய முருகவேள் நளினத்திலே பிறந்தான் என்று சொல்வது உண்மையாகுமா? உருவங் கடந்த ஒரு தனிப்பொருளை ஆறுமுகம், ஆறிரண்டு கை உடையவன் என்பது நியாயமா? சிவபெருமானுக்குப் பிள்ளை என்று சொல்கிறானே, வேலன். அது பொருந்துமா? சிவபிரான் யார்? முருகன் யார்? ஒரே கடவுளுக்கு வேறு வேறாகச் சொல்லும் பெயர் களே அல்லவா ? இவர்களுள் யார் தந்தை? யார் புதல்வன்?

இப்படி யோசித்துக்கொண்டே போனால் அந்தப் பயங்கர வெறியாடலை நடத்தும் பூசாரியின் வார்த்தைகள் அத்தனையும் பொய்யென்றே படுகின்றது; அவை உண்மையல்ல என்றே தோன்று கிறது.

உண்மை அல்லவானால், மற்றவர்கள் கூட அப் படி ஏத்துகிறார்களே! வேதம் உணர்ந்தோரும் சாத்திரப்பொருள் தெரிந்தோரும் முருகனை ஆறுமுகன் என்றும் சிவகுமாரனென்றும் சொல்கிறார்களே ! அவர்கள் உண்மைப் பொருளைப் பற்றிக் கற்றுத் தேர்ந்தவர்கள். அவர்கள் பொய்யை எதற்காகச் சொல்ல வேண்டும்?

ஆகவே அவை பொய்யென்றும் சொல்லிவிடக் கூடாது.

மற்றொரு விஷயம்: வேலன் உரக்கக் கத்தி ஏத்தினால் முருகன் ஆவேச ரூபத்தில் எழுந்தருளுகிறான். வேலனும் குறவரும் மழை வேண்டுமென்று வேண்டுகிறார்கள் ; மழை பெய்கிறது. நல்ல பயிர் விளையவேண்டுமென்று தொழுகிறார்கள் ; அப்படியே விளைகிறது. அதிகமாக மழை பெய்துவிட்டது; நிற்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறார்கள் ; மழை நிற்கிறது. இவ்வளவு காரியங்களும் ‘நளினத்துப் பிறவியை’ என்பது முதலிய தோத்திரங்களின் பயனாகக் கண்முன்னே நிகழும் பயன்கள். அவர்கள் வேண்டுகோள் பயன்பெறுதலின் அவற்றைப் பொய்யென்று எப்படிச் சொல்வது ?

பொய்யென்றோ, மெய்யென்றோ வரையறையாகச் சொல்ல முடியவில்லை; ஆகவே புலவர் மிகவும் யோசித்து ஒரு முடிவுக்கு வருகிறார். “வேலன் ஏத்தும் வெறிப்பாட்டுக்கள் உண்மையும் அல்ல ; பொய்யும் அல்ல ” என்று எதிர்மறை வாய்பாட்டிலே சொல்கிறார். பொய் என்னாமல் உண்மை அல்ல என்கிறார்; மெய் என்னாமல் பொய்யும் அல்ல என்கிறார். இரண்டு தன்மையும் கலந்த வியப்புக்குரிய செய்தியாக இருக்கிறது முருகன் இயல்பு.

அவை, வாயும் அல்ல பொய்யும் அல்ல.

[அந்தப் பாட்டுக்கள் உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல. வாய் – உண்மை.]

இப்படிச் சொன்ன புலவருக்கு மேலே யோசனை படர்கிறது. முருகன் திருவவதாரம் அவர் ஞாபகத்திற்கு வருகிறது. அவனுடைய திருவவதாரம் மனிதன் பிறவி எடுப்பது போன்றதொரு காரியமா? பிறவியினால் உயர்வும் தாழ்வும் கற்பிக் கிறார்களே பைத்தியக்கார உலகத்தார், அந்த வகையில் சேர்ந்ததா அவன் அவதாரம்? புண்ணியங்களைச் செய்தவர் சிறந்த பிறவியையும், பாவம் செய்தவர் இழிந்த பிறவியையும் பெறுவார்கள் என்று சொல்லுகிறார்களே; முருகன் திருவவதாரம் புண்ணியப் பயனா? பாவப் பயனா? இப்படிப் பலபல கேள்விகள் புலவர் உள்ளத்தே எழுகின்றன.