பூசாரி பாட்டு
தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக வழிபடப் பெறும் கடவுள் முருகன் என்று சொல்வது புலவர் வழக்கம். மற்றக் கடவுளரை வழிபடும் முறைகள் இருக்கவும் முருக வழிபாட்டு தமிழருக்கே சிறப்பாக உரியதென்பதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். தமிழ் மொழியினுடைய வளர்ச்சியில் முருகனுடைய தொடர்பு மிகுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டிலே திருவவதாரம் செய்த வள்ளியெம் பெருமாட்டியை முருகன் மணந்துகொண்டான். சூர சங்காரம் செய்து வெற்றி கொண்டாடிய இடம் தமிழ் நாட்டில் உள்ள திருச்சீரலைவாயாகிய திருச் செந்தூர். தேவயானையின் திருமணம் திருப்பரங் குன்றத்திலே நிகழ்ந்தது. முருகனைப் புகழ்வதற்குரிய தோத்திர நூல்கள் தமிழில்தான் மிகுதியாக உள்ளன. அன்றும் இன்றும் முருகன் ஆவேச ரூபமாக வந்து வேண்டுவார் வேண்டுவன அருள் செய்யும் பிரத்தியட்ச தெய்வமாகத் தமிழ் நாட்டில் விளையாடுகிறான்.
இந்த நாட்டில் முருக வழிபாடு சிறந்து நிற்பதை எவ்வாறு அறிவது? தமிழ் நாட்டினருடைய உணவு நெல்லஞ் சோறு என்று சொல்கிறோம்; கம்பு, கேழ் வரகு, சோளம், வரகு முதலிய பிற உணவுகளை உண்பார் இருந்தாலும் ஏழை முதல் செல்வர் வரையில் யாவரும் அரிசிச் சோற்றை உண்கிறார்கள். ஏழையர் முதல் செல்வர் வரையில் விரவியிருக்கும் தன்மை அதன் தலைமையை வெளிப் படுத்துகிறது.
அப்படியே முருக வழிபாடு தமிழ் நாட்டில் தலைமை பெற்றதென்பதற்கு அடையாளம், உயர்ந்த அறிவு படைத்த ஞானியரும், இந்த உலக வாழ்வில் ஈடுபட்டு வாழ்பவர்களாகிய மலைவாழ் சாதியினரும், இடைப்பட்ட பிறரும் தங்கள் தங்கள் இயல்புக்கு ஏற்றபடி முருகனைக் கொண்டாடுகிறார்கள் என்பது. வேதம் வல்ல வித்தகரும், விரதம் வல்ல முனிவரும், அறிவு மிக்க சான்றோரும், புலமை மிக்க புலவாணரும், நாகரிகம் மிக்க நகரவாசிகளும் முருகனை வழிபடுவர். அவ்வாறே குறவரும், கொல்லுந் தொழிலையுடைய வேட்டுவரும், பிறரும் முருகனை வழிபடுவர். இப்படி, ‘தோட்டி முதல் தொண்டைமான் வரையில்’, வேட்டுவர் முதல் வேந்தன் வரையில் அப் பெருமானைக் கொண்டாடும் நெறி தமிழ்நாட்டில் அமைந்ததனால் இந்த நாட்டுக்குச் சிறந்த கடவுள் முருகன் என்று அறிஞர் கூறினர்.
பலரும் பரவும் தெய்வம் முருகனாக இருப்பினும் அவனை வழிபடும் முறை அந்த அந்தக் குழுவிற்கு ஏற்றபடி வெவ்வேறு வகையாக அமையும். குறவர் கூடி ஆடறுத்து வெறியாடி முருகனை வழிபடுவர். காட்டில் உள்ளார் கடம்பிலும் ஆலமரத்திலும் முருகனை வழிபடுவர். ஆற்றங்கரையில் வாழ்வார் நீர்த் துறையில் முருகனை வழிபடுவர். இவ்வாறே சதுக்கத் திலும் சந்தியிலும் ஆற்றிடைக் குறையிலும் பூம்பொழிலிலும் முருகனுக்கு வழிபாடு எடுப்பது தமிழர் மரபு.
இவற்றையன்றி அங்கங்கே உள்ள திருக் கோயில்களில் பூசையாதியன நிகழ்த்தியும் முருகனை வழிப்பட்டனர். உருவம் கடந்த நிலையில் அவனை வழிபட்டனர் மெய்ஞ்ஞானியர். பல பல உருவம் வைத்து வழிபட்டனர் வேறு பலர். உருவமும் அருவமும் இல்லாத நிலையில் கந்திலும் கடம்பிலும் முருகனைப் பூசித்தனர் வேறு சிலர்.
நாடு முழுவதும் முருகனை வழிபட்டார்களாயினும், மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சிக்குத் தனி உரிமை பூண்டவன் முருகன். அந்த நிலத்தில் பெரும்பாலும் முருக வழிபாடே நிலவும். விலங்குகளைக் கொன்று தின்றும் தினை விளைத்து உண்டும் வாழும் குறவருக்கு முருகன் வழிபடு கடவுள். அக்குறவர்களுக்குத் தெய்வ உணர்ச்சியை உண்டாக்கி அவர்களுக்குப் பிரதிநிதியாக முருகனை வழிபடும் பூசாரிக்கு வேலன் என்று பெயர். அவன் தன் கையில் வேலை வைத்துக்கொண்டு ஆடுவான். அதனால் அப் பெயர் உண்டாயிற்று. முருகனுடைய விக்கிரகத்தைப் பாதுகாத்துப் பூசித்து வருபவன் ஆகையால் அவனைப் படிமத்தான் என்று கூறுவதுண்டு. படிமம் என்பது விக்கிரகத்துக்கு ஒரு பெயர்.
வேலன் குறவருக்குக் குரு; முருகன் கோயிற் பூசாரி. அவனும் உண்மையான முருகனுடைய உயர்வை அறிந்தவன் அல்ல. தினையரிசியை வைத்து ஆட்டைப் பலியிட்டுப் பூவும் புகையும் கொண்டு முருக வேளைப் பூசை செய்வான். தனக்குத் தெரிந்த வகையில் அப்பெருமானைத் துதிப்பான். அங்கேயும் முருகன் அவர்களுடைய அன்பொன்றையே கருதி வெளிப்படுவான். அவர்களுக்கு வேண்டிய நன்மைகளை அருள் செய்வான். அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற முருகன், வேலன் வெறியாட்டிலே செய்யும் உபசாரங்களை உவந்து, அவன் செய்யும் தோத்திரங் களையும் ஏற்றுக்கொண்டு அங்கே வெளிப்படும் செயல் வியக்கத்தக்கது. உலகமெல்லாம் ஆக்கி அளித்து அழிக்கும் கடவுள் அந்த நாகரிகமற்ற மக்கள் கூட்டத்திற்கும் இனியனாக எழுந்தருள்கிறானே! வேலன் ஏத்தும் வெறிப்பாட்டு உண்மையாக முருகவேளின் புகழைச் சொல்வதா? அல்லவே!
கடுவன் இள எயினனார் இந்தச் செய்திகளை நினைத்துப் பார்க்கிறார். “என்ன ஆச்சரியம்! இந்தப் பைத்தியக்கார வேலன் முருகனை உணர்ந்து விட்டவன் போல என்ன என்னவோ சொல்லிப் புகழ்கிறான். உருவம் இல்லாத பெருமானுக்கு உருவமும், உறவில்லாத கடவுளுக்கு உறவின் முறையும் கூறுகிறான். பழங்கதைகளில் உள்ளவற்றையே அவன் சொன்னாலும் அறிவு நூல்கள் சொல்லும் உயர்ந்த உண்மை ஒன்றுகூட அவனுக்குத் தெரிவதில்லை. அவன் கூறுவனவற்றை உண்மையென்று சொல்வதா? பொய்யென்று சொல்வதா ?” என்று அவர் சிந்தனை ஓடுகிறது.
வேலன் எவ்வாறு ஏத்துகிறான்? அவனுக்கும் முருகன் திருவவதார வரலாறு முதலிய கதைகள் தெரியும். புராணப் பகுதியை மாத்திரம் அறிந்தவன் அவன். அதற்கு அப்பால் உள்ள தத்துவப் பகுதியை அறியாதவன். அவன் செய்யும் துதிகளில் முருகவேள் உருவ வருணனையும் அவதாரப் பெருமையும் வருகின்றன.
ஆறு மெல்லிய திருத் தலைகளை உடையவன் முருகன் ; பன்னிரண்டு திரண்ட தோள்களையுடையவன்; அத் தோள்கள் முழவைப் போல் திரண்டு உருண்டு அழகாக இருக்கின்றன. அவனுடைய திருமேனிச் சோதி கண்ணைப் பறிக்கிறது. இளங் கதிரவனுடைய சோதி போல வீசுகிறது. உதயமாகி எழுந்த சூரியனுடைய சோதி காட்சிக்கு இனியதாக இருக்கும். முருகன் திருமேனிச் சுடர் கண் பொறுக்கும் அளவுக்கு விளங்குகிறது.
முருகன் திருவவதாரம் செய்த இடம் நாணல் அடர்ந்த சரவணப் பூம்பொய்கை. அங்கே தாமரைப் பூவினிடையே அவன் எழுந்தருளினான். நளின மலரின் கண்ணே உருப்பெற்றுத் தோன்றியபோது அவனுடைய பேரழகுக்கும் இளமைக்கும் மென்மைக்கும் ஏற்ற ஆதனமாக அந்தத் தாமரை அமைந்தது. மணங் கமழ் தெய்வத்து இளநலம் உடையவன் முருகன். மணமும் தெய்வத்தன்மையும் இளமையும் அழகும் ஆகிய இப்பண்புகளை முருகு என்ற சொல் குறிக்கும். முருகன் இவ்வளவையும் உடையவன் மலர்களுக்குள் தெய்வத் தன்மை உடையதாகப் புகழ் பெற்றது தாமரைப் பூ. மணமும் அழகும் மென்மையும் உடையது அது. ஆகவே அதுவும் முருகுடைய மலராயிற்று. அதன்கண் முருகுத் தெய்வம் தோன்றியது. இந்த இயல்புகளை பிறர் சொல்லக் கேட்டிருக்கிறான். பரம்பரையாக முருகனைப் பற்றிப் பெரியோர் சொல்லி வந்த சிறப்புக்களை அவன் உணர்ந்தவன்.
ஆகவே அவன் செய்யும் துதியில் அவன் அறிந்த இந்தப் பண்புகளை வைத்துப் பாடுகிறான்.
மூவிரு கய யந்தலை முந்நான்கு முழவுத்தோள்
ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை !
[ஆறு மெல்லிய தலைகளையும் பன்னிரண்டு முழவு போன்ற தோள்களையும் கதிரவனது எழுச்சி பெற்ற நிறத்தின் அழகையும் தாமரையினிடம் தோன்றிய தோற்றத்தையும் உடையாய்! ஏர்- எழுச்சி. தகை – அழகு.]
பிற தெய்வங்களிடம் காணாத தோற்றத்தைச் சொல்கிறான் வேலன். ஆறு முடியும் பன்னிரு தோள்களும் முருகனுக்கே உரியன. ஞாயிறு போன்ற அவன் எழிலைப் புலவர்கள் பலர் பாராட்டி யுள்ளார்கள். நக்கீரர் தாம் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் எடுத்த எடுப்பில், “உதய சூரியனது பேரொளியை ஒத்த ஒளியை உடையவன்” என்று போற்றுகின்றார்.
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி
என்பது அவர் பாட்டு.
முருகனுடைய திருவுருவ வருணனையோடு வேலன் நிற்பதில்லை. அக்கடவுளுடைய பிற வர லாறுகளும் அவனுக்குத் தெரியும். உலகத்தை யெல்லாம் சங்காரம் செய்யும் பரமனுக்குத் திருமகன் முருகன் என்பது அவன் அறிந்த செய்தி. முருகனுடைய திருமேனி செஞ்சோதி வீசுவதாதலின் அவனுக்குச் செவ்வேள் என்ற திருநாமம் இருப்பதையும் வேலன் அறிவான். மக்கள் விரும்பும் அழகும் சிறப்பும் இயல்புகளும் முருகன்பால் உள்ளன. எல்லா நலன்களும் சான்றவன் அவன். யாவருக்கும் மிக்கவன்; தலைவன்.
காஅய் கடவுள் சேஎய், செவ்வேள்,
சால்வ, தலைவ!
[உலகத்தை அழிக்கும் சிவபெருமானுடைய திருக்குமாரனே, செவ்வேளே, எல்லா நலன்களும் அமைந்தவனே, தலைவனே!]
சிவகுமாரனும் செவ்வண்ணப்பிரானும் குண மலையும் பிரபுவுமாகிய முருகனை வேலன் போற்றுகிற விதம் இப்படி. அவன் முருகனைப் பூசைசெய்து நடத்தும் விழாவாகிய வெறியாட்டு மகாகோரமானது. தினையரிசியை ரத்தத்தில் கலந்து வைத்திருக்கிறான். எங்கே பார்த்தாலும் சிவப்பு மலர்கள். எல்லாம் ரத்தத்தை நினைவூட்டும். போதாக் குறைக்கு ஆட்டை அறுத்துப் பலியிடுகிறான். சுத்த சத்துவ மூர்த்தியாக முருகனைத் தியானிப்பவர்களுக்கு இந்தச் சூழலை நினைத்தாலே குலை நடுங்கும். பழக்க மில்லாதவர்கள் இந்தப் பூசாரி பண்ணுகிற அட்டகாசங்களைக் காண நேர்ந்தாலும் அப்படியே நடுங்குவார்கள். குழந்தைகளும் மகளிரும் நடுங்குவதைக் கேட்க வேண்டுமா? அவன் இடி இடித்தாற்போலக் கத்துவதும், உடுக்கையை அடித்து ஆடுவதும், இந்த ரத்தச் சூழலும் ஆகிய எல்லாம் அந்த இடத்தை ஒரே பயம் நிரம்பிய இடமாக்கி விடுகின்றன.
அங்கே நடக்கும் வெறியாட்டு விழா எப்படி மனோகரமாக இருக்கும் ? பயங்கரமாக, அச்சந் தருவதாகத் தான் இருக்க முடியும். அந்த விழாவை, ‘பேஎ விழவு’ என்று புலவர் சொல்கிறார். பேஎ என்பது அச்சத்தைக் குறிக்கும் சொல்.
இந்தப் பயங்கரமான விழாவில் வேலன் முருகனை வழிபட்டுத் துதி பாடுகிறான்.
வெறிப் பாட்டுப் பாடுகிறான். ஆவேசத்தை உண்டாக்கும் பாடல் அது. அந்தப் பூசாரியின் பாட்டில் உள்ள செய்திகள் உண்மையா? பொய்யா?
இதைப்பற்றி அடுத்தபடி ஆராய்கிறார் புலவர்.