
பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர் விசுவாமித்திரர்; கெளசிகன் என்ற பெயரோடு பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி. வாளெடுத்துப் போர் செய்யும் மரபில் உதித்த அவருக்கு, காட்டில் போய் உட்கார்ந்து கொண்டு தவம் செய்யும் ஆற்றல் இயல்பிலே உண்டாகாது. நாட்டைத் துறந்து, அரசாட்சியைத் துறந்து, அரசனுக்குரிய இன்பத்தைத் துறந்து, வன விலங்குகளிடையே உறைந்து கடுமையான தவம் செய்தவர் விசுவாமித்திரர். தவம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உண்டானது எப்படித் தெரியுமா?
ஒருநாள் தன் பெரும்படைகளுடன் கௌசிக அரசன் காட்டுக்குப் போனான். அங்கே வசிஷ்டர் தவம் செய்து கொண்டிருந்தார். அரசன் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வருகிறான் என்று உணர்ந்தவுடன் வசிஷ்டர் மரியாதையுடன் வரவேற்று அவனுக்கும் அவனுடைய பரிவாரங்களுக்கும் விருந்து அளிக்க நினைத்தார். தம் கருத்தை மன்னனிடம் தெரிவித்தார்.
கௌசிக மன்னனுக்குச் சிரிப்பு வந்தது. ‘காட்டில் வாழும் முனிவர், தம்முடைய உணவுக்கே வழியில்லாமல் காய் கிழங்குகளைத் தின்று கொண்டு வாழ்பவர், நமக்கும் நம் பரிவாரங்களுக்கும் விருந்து வைப்பதா? இது என்ன ஆச்சரியம்?’ என்று எண்ணினவனாய், “அப்படியே தங்கள் விருந்தை நாங்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்வோம்” என்று சொன்னான்.
சாப்பாட்டு நேரம் வந்தது. ”இலை போடலாமா?” என்று கேட்டார் வசிஷ்டர். “போடுங்கள்” என்று இசைந்தான் கெளசிகன்.
அடுத்த கணம் வசிஷ்டர் தேவலோகத்துப் பசுவாகிய காம தேனுவை ஏவினார். அது வந்தது. அத்தனை பேர்களுக்கும் இலை போட்டார்கள்; அறுசுவை உண்டி பரிமாறினார்கள்.
அத்தனை பேர்களுக்கும் உணவு கிடைத்தது கிடக்கட்டும். இத்தகைய விருந்தை இத்தனை நாள் வரையில் கெளசிக அரசன் உண்டதே இல்லை. விருந்து நுகரும் போதே அவன் மனத்தில் கெட்ட எண்ணம் தோன்றியது. அவன் க்ஷத்திரியன்; தன்னுடைய படை வீரத்தினால் பகைவர்களின் நாட்டைப் பற்றும் ஆசை ஊறிய உள்ளம் உடையவன். இந்தக் காமதேனுவை நாம் பிடித்துக் கொண்டு போய்விட்டால் என்ன? நமக்கு வேண்டிய செல்வம் எல்லாம் இதனால் கிடைக்குமே! இந்த முனிவரிடம் கேட்போம். கொடுக்க மறுத்தால் இருக்கவே இருக்கின்றன, நம் படைகள். ‘இவரை அடக்கிவிட்டு இதைப் பிடித்துக் கொண்டு போய்விடுவோம்’ என்று எண்ணினான். வசிஷ்டரிடம் போய், “சுவாமி, நீர் அளித்த விருந்துக்கு நன்றி; அந்தப் பசு உமக்கு எதற்கு? எனக்கு வேண்டும்” என்று கேட்டான்.
வசிஷ்டர் அதை எப்படி அனுப்புவார்? ”அரசே! உனக்கு ஏற்பட்ட ஆசை தகாது. இருந்தாலும் உன்னால் முடியுமானால் அதை ஓட்டிக்கொண்டு போகலாம்” என்று சொல்லிவிட்டார்.
“சரிதான். நானே ஓட்டிப் போகிறேன்” என்று சொல்லிக் கௌசிகன் காமதேனுவைப் பிடிக்க நெருங்கினான். அப்போது அது தன் உடம்பைக் குலுக்கிற்று. அந்த ஒரே குலுக்கலில் எண்ணற்ற வீரர்கள் கீழே குதித்துக் கெளசிக மன்னனையும் அவன் படைகளையும் அடித்துத் துரத்திவிட்டார்கள். காமதேனு தேவலோகத்திற்குப் பறந்து போய்விட்டது.
ஏமாற்றத்தால் கெளசிக மன்னன் கண்கள் சிவந்து விட்டன. “அடே! தாடி வைத்துக் கொண்டிருக்கும் இந்த முனிவனுக்கு இவ்வளவு அகந்தையா? அந்த மாட்டைத் தானே பிடித்து என்னிடம் கொடுக்க வேண்டியது இருக்க, என்னைப் பிடித்துக் கொண்டு போ என்று சொல்லி எனக்குத் தோல்வியை உண்டு பண்ணிவிட்டு இவன் உட்கார்ந்து தவம் செய்வதா? இவனையே என் படைப்பலம் கொண்டு அடித்துக் கொல்கிறேன் பார்” என்று பெரும்படையுடன் வசிஷ்டருடைய ஆசிரமத்தைத் தாக்க ஆரம்பித்தான்.
வசிஷ்டர் புன்னகை புரிந்தார். தம்முடைய கையில் இருந்த தண்டத்தைத் தமக்கு முன்னால் ஊன்றி அப்படியே உட்கார்ந்தார். எத்தனை எத்தனையோ விதமாகக் கௌசிகன் போரிட்டான். அவனுடைய படைகளை எல்லாம் வசிஷ்டருக்கு முன்னால் இருந்த தண்டம் விழுங்கிவிட்டது.
அப்போது நினைத்தான் கௌசிகன்: “சீ சீ என்னுடைய உடல் பலத்தினால் பயன் இல்லை. என்னிடமுள்ள பெரிய படைப்பலத்தினாலும் பயன் இல்லை. பெரிய நாட்டுக்கு நான் அரசனாக இருப்பதனாலும் பயன் இல்லை. என்னிடம் இருக்கும் செல்வத்தில் அணுவளவுகூட இல்லாத இந்த முனிவர் அவ்வளவு செல்வமும் தோற்றுப் போகும்படி செய்துவிட்டாரே! என் படைகள் எல்லாம் பயன் இல்லாமல் போகும்படியாகச் செய்தவரிடம் இருக்கும் படை ஒன்றே ஒன்றுதான். அது இவருடைய தவம். அந்தத் தவத்தை நான் இனிச் செய்வேன். எனக்கு நாடு வேண்டாம்; அரண்மனை வேண்டாம்; பெண்டு பிள்ளைகள் வேண்டாம்; மந்திரிகள் வேண்டாம்; படை வீரர்கள் வேண்டாம். இந்தக் கணமே எல்லாவற்றையும் துறந்துவிட்டு வசிஷ்டரைப் போலக் காட்டுக்குச் சென்று தவவலிமை உடையவன் ஆவேன்” என்று உறுதி பூண்டு எல்லாவற்றையும் துறந்து காட்டிற்கு ஓடிவந்தான் கெளசிக மன்னன். தன் குலத்திற்கு இயல்பல்லாத தவத் தொழிலை மேற்கொண்டு முனிவன் ஆனான். அவனுடைய திறமை எவ்வளவு சிறப்பானதாக இருக்கவேண்டும்!அவனே விசுவாமித்திர முனிவர்.
‘மிகக் கடுமையாகத் தவம் செய்யலானார் விசுவாமித்திர முனிவர். அந்தத் துறவியின் தவத்தைக் கண்டு இந்திரனே நடுங்கினான். எப்படியாவது இவர் தவத்தைக் கலைத்துவிட்டால் நல்லது; என்ன செய்யலாம்?’ என்று யோசித்தான்.
முனிவரின் தவத்தைக் குலைக்க வேண்டுமானால் அவரது மன உறுதியைக் குலைக்கும் ஆற்றலைப் பெற்ற படையை அனுப்ப வேண்டும். துறவியின் உள்ளத்தையும் தகர்க்கும் படை கண் தான். வாள் போன்ற கூர்மையான கண்ணை உடைய தேவலோகத்து மாதர்களில் ஒருத்தியான மேனகையை அனுப்பி வைப்போம் என்று தீர்மானித்தான்; அப்படியே செய்தான்.
தன் கூர்மையான விழிகளை உருட்டிக் கொண்டு மேனகை விசுவாமித்திரரின் அருகில் வந்து நடனம் ஆடினாள். சதங்கைச் சத்தத்தைக் கேட்டவுடனேயே, ”சீ சீ! என் தவத்தைக் குலைக்கும் படை வந்துவிட்டதே! இதற்குத் தோற்றுப் போகக் கூடாது. அவளைக் கண்ணால் பார்க்கக் கூடாது; பார்க்கக் கூடாது” என்று விசுவாமித்திரர் தம் கண்களை இறுக மூடிக்கொண்டார். மேனகையின் சதங்கை ஒலி அவர் உள்ளத்தைப் பிடித்துப் பிடித்து இழுத்தது. “அவளைப் பார்க்கக் கூடாது, பார்க்கக் கூடாது” என்று அவர் எவ்வளவுக்கு எவ்வளவு எண்ணினாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் உள்ளம் மிக வேகமாகத் துடித்தது; படபட வென்று அடித்துக் கொண்டது. கண் மெல்லத் திறந்து பார்க்க ஆரம்பித்தது. பார்த்தபோது அவர் நெஞ்சு பதைத்தது. அந்த மகாமுனிவரின் பக்கத்தில் வந்துவிட்டாள் மேனகை. “இது என்ன கோலம்? என்னைப் பாருங்கள்! கண்ணுக்கு எதிரே கிடைக்கும் இன்பத்தை உதறலாமா?” என்பதைப் போல அவள் கண் கெஞ்சிக் கொண்டே அவரது உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து விட்டது. முதலில் கண்ணைத் திறந்தார். விசுவாமித்திரர். அவளைப் பார்த்தவுடனேயே அவரது உள்ளமும் திறந்துவிட்டது. அந்தத் துறவியை வளைத்துப் பிடித்து, அவரது நெஞ்சம் பதைக்கப் பதைக்க வதைத்தது மேனகையின் கண். விசுவாமித்திரர் மேனகையின் கையைப் பிடித்துக் கொண்டு விட்டார். அவளுடைய கண்ணாகிய வாட் படைக்கு இளைத்துத் தவித்துத் தோற்றுப் போய் விட்டார் அவர்.
பலகாலமாகத் தாம் ஆண்ட பெரிய அரசையே வேண்டாம் என்று துறந்து விட்டு வந்த துறவி அவர். பல காலமாகத் தாம் அநுபவித்த அரண்மனை இன்ப போகங்களை வேண்டாம் என்று துறந்துவிட்டு வந்தவர் அவர். பஞ்சு மெத்தை வேண்டாமென்று கானகத்துக் கட்டாந்தரையைத் தேடி ஓடி வந்த துறவியை, பட்டுப் பட்டாடைகள் எல்லாம் வேண்டாமென்று மரவுரி தரித்துத் தம் உடம்பையே சுமையாகத் தூக்கி வந்த துறவியை, மேனகையின் கண் படை என்ன செய்துவிட்டது! அவரது உள்ளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைத்து இளைத்துத் தவிக்கும்படி செய்துவிட்டது. தாடியாகிய படை வைத்திருந்தார்; காவி உடை யாகிய படை வைத்திருந்தார்; வெண்ணீறு ஆகிய படை வைத்திருந்தார்; ருத்திராட்சமாகிய படை வைத்திருந்தார்; தண்டு கமண்டலம் ஆகிய படை வைத்திருந்தார். அத்தனையும் தோற்றுப் போகும்படி செய்து, அவை எல்லாவற்றுக்குமே தலைக்குனிவை உண்டு பண்ணிவிட்டது அந்தக் கண்ணாகிய ஆயுதம். அதற்குக் கிடைத்த வெற்றி தான் சகுந்தலையின் அவதாரம்.
விசுவாமித்திரர் வசிஷ்டரது தவ வலிமை தமக்கும் வர வேண்டும் என அரசை விட்டு ஓடி வந்து பயன் என்ன? அரண் மனையை விட்டு ஓடி வந்து பயன் என்ன? நாடு நகரம், அரண்மனை, அந்தப்புரம் ஆகிய இன்ப போகங்களை எல்வலாம் வேண்டாமென்று துறந்துவிட்டு வந்து பயன் என்ன? அவரை மேனகையின் கண்ணாகிய படை எளிதில் தோல்வியுறச் செய்து விட்டது. மறுபடியும் தவம் செய்தார்.
அத்தகைய மாமுனிவரே தோற்றுப் போய்விட்டார் என்றால் சாதாரண மக்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்? மங்கையர் கண்ணாகிய படையிலிருந்து தப்ப வேண்டுமென்றால் அதையும் விட மிக்க வலிமை உடைய ஆயுதம் நமக்குத் துணையாக வேண்டும். மாரனைச் சங்காரம் செய்த பிறகு தோன்றிய குமாரன் கை வேற் படை துணையாக வந்து ரட்சிக்க வேண்டும் என்று அருணகிரியார் சொல்கிறார்.
துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப்
பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்துத் தவிக்கின்ற என்னைஎந்
நாள்வந்து இரட்சிப்பையே?
துறந்தோர் – எல்லாவிதமான இன்ப போகங்களையும் துறந்தவர்கள். உளத்தை காம நினைவு உடைய மனசை. அதனை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் படையை உடையவர்கள் மங்கையர்கள். பிறர் உள்ளத்தில் காமத்தைக் கொப்புளிக்கும்படியாகச் செய்கின்ற அலங்கார மாதர்கள் இவர்கள்.
இளைத்துத் தவிக்கின்ற என்னை.
‘அவர்களுக்கு முன்னாலே மனோபலம் இழந்து இளைப் புற்றுத் தவிக்கின்றேன் நான்; உள்ளத் திண்மை எல்லாம் போய்த் தவிக்கின்றேன். என்னை நீ காப்பாற்ற வேண்டும். நான் அந்தப் படையை வென்று தலை நிமிர்ந்து நிற்கும்படியாக அருள வேண்டும்.
எந்நாள் வந்து இரட்சிப்பையே?
“எத்தனை தவம் உடையவர்களானாலும் அவர்கள் உள்ளத்தில் மகளிரது கண்ணாகிய படை நுழைந்து சிவ காமத்தை ஒழித்து, அவ காமத்தை எழுப்பி விடுகிறதே! அதனால் தவிக்கிறேன்! என்னை எப்போது வந்து பாதுகாப்பாய், அப்பா?” என்று அருணகிரியார் பாடுகிறார்.
ஓம் சரவணபவ


