
பாம்பும் மயிலும்
திருப்புகழ் பாடுவதற்குக் காரணம் மனம் ஒருமுகப் பட வேண்டு மென்பதுதான். மனத்தின் சலனம் ஒழிந்தால் அது ஒருமுகப்படும். நாம் படிக்கிற பாட்டு மனத்தில் பதிய வேண்டுமானால் மற்றொன்றை நினைக்காமல் அதில் ஒன்று படவேண்டும். எப்பொழுதும் சுழன்று கொண்டே இருக்கும் மனத்தை ஓரிடத்தில் நிலையாக நிறுத்த வேண்டுமானால் அதை வேறு ஒன்று அமுக்கிக்கொண் டிருக்க வேண்டும். பறக்கிற காகிதத்தின் மேலே கனமான பொருளை வைக்கிறோம் அல்லவா? அப்படி, எப்போதும் பறந்து கொண்டிருக்கிற மனத்திலே இறைவன் திருவடி படிந்தால் அது ஒருமுகப்படும்.
இப்படியெல்லாம் நினைந்து அருணகிரியார் கண்ண பிரானுடைய திருவிளையாடலை நினைக்கிறார். அவன் காளிங்க நர்த்தனம் செய்தான். ஐந்து தலை நாகத்தின் மீது ஒரு காலால் நின்றுகொண்டு நடனம் செய்தான். அப்போது பாம்பின் வாலையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டிருந்தான். அந்தப் பாம்பு தலையாடாமல், வால் ஆடாமல் திணறிற்று. தலையாட்டத்தைவிட வாலாட்டம் மிகப் பெரிது. அதனால் அதையும் கையால் பிடித்துக் கொண்டான். தலையை ஆட்டாமல் இருக்கக் காலால் அமிழ்த்திக் கொண் டிருந்தான்.
சாரைப் பாம்புக்கு வாலில் விஷம், நாகப் பாம்புக்குத் தலையில் விஷம் என்பார்கள். தலையிலும் வாலிலும் விஷம் உடைய பெரும் பாம்பு காளிங்கன். அதனுடைய நஞ்சு அந்தப் பொய்கையையே நச்சுப்பொய்கை யாக்கிவிட்டது. அந்தப் பொய்கையில் உள்ள நீர் மாத்திரம் அல்ல, கரையி லுள்ள மரங்கள் எல்லாமே அந்த நஞ்சினாலே பொசுங்கிப் போய்விட்டன. காளிங்கனின் மூச்சுப் பட்ட இடங்கள் நாசமாகிக் கொண்டிருந்தன. அந்தப் பாம்போடு யாராவது விஷப் பரீட்சை செய்வார்களா? முருகனுடைய மாமன் அதன்மேல் நின்று ஆனந்தக் கூத்தாடினான்!
நம்முடைய மனம் காளிங்கன். ஐந்து பொறிகளாகிய படங்களின் வாயிலாக அது நஞ்சைக் கொப்புளிக்கிறது. மனம் என்னும் காளிங்கன் நஞ்சு கொப்புளிக்காமல் இருக்க வேண்டுமென்றால் இறைவன் அதன்மேலே நின்று கூத்தாட வேண்டும். வாலையும், தலையையும் ஆட்டிக் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் நஞ்சைப் பரப்புகிற பாம்பின்மேலே இறைவன் திருவடி பட்டால் போதும்; அவற்றை ஆட்ட முடியாமல் அது நிற்கும்; ஒருமுகப்படும். இந்தத் தத்துவத்தை உள்ளடக்கியது காளிங்க நர்த்தனம். “பெரும் பாம்பின் மீது நின்று ஆனந்தத் தாண்டவம் ஆடிய கண்ண பிரானின் மருகன் அல்லவா நீ?” என்று எடுத்துச் சொல்கிறார் அருணகிரியார்.
பெரும் பாம்பில் நின்று
நடிக்கும் பிரான் மருகா!
கண்ணபிரானுடைய மருமகனே என்று முருகனைப் பார்த்துச் சொன்னவுடன் முருகப் பெருமானின் வாகனம் அவருக்கு நினைவு வருகிறது. பாம்பின் மீது நின்று கண்ண பிரான் மாத்திரமா நர்த்தனம் செய்தார்? மயில்கூட இந்தக் காரியத்தைச் செய்கிறது. அதுவும் பெரும்பாம்பில் நின்று நடிப்பதுதான். பாம்புக்கு ஜன்மப் பகையாகிய மயில் முருகப்பெருமானின் வாகனம். அது தன் காலடியில் அசைய முடியாமல் பாம்பை அமிழ்த்திக் கொண்டிருக்கிறது. இதை நீங்கள் படத்தில் பார்த்திருப்பீர்கள். எம் பெருமானின் வாகனமே பாம்பின் மீது நடிக்கிறது என்ற நினைவு வந்தது. உடனே அந்த மயில் எத்தகையது என்று சொல்கிறார் அருணகிரியார்.
கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே!
சரவணப் பொய்கையில் முருகன் அவதாரம் செய்திருக்கிறான் என்று கேட்டுச் சூரன் நடுங்கினான். அந்தக் குழந்தை எப்போதும் மயில் மீதே திரிகிறான் என்ற செய்தி அவன் காதுக்கு எட்டியது. மயில் சாமானியப் பறவை தானே என்று முதலில் எண்ணினான். ஆனால் அவனிடம் வந்தவர்கள்,“அவன் மயிலை வெறும் பறவை என்று சொல்லலாமா? அதற்கு வன்மையான காரியங்களைச் செய்ய முடியாது என்று நினைக்கக்கூடாது. அது பறந்து போகும் போது அதன் அருகில் ஒரு மலை இருந்தது. அந்த மலை இடிந்து விட்டது. அந்த மயில் இறக்கைகள் அடித்துக் கொண்டாலே மலைகள் தூள் தூளாகப் போகின்றன என்று சொன்னார்கள். அப்போது சூரன் மனமும் இடிந்து விட்டது. “நமக்கு யமனாக அவதாரம் செய்திருப்பவன் இந்த மயிலின் மீது ஏறி வருகிறானாம்” என்று எண்ணியவுடன் தன் பலத்தை இழந்து நடுங்கினான்.
பொல்லாத காரியங்களைச் செய்பவர்கள் எத்தனை பலம் உடையவர்களாக இருந்தாலும் நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.யானையைச் சிங்கம் வெல்கிறது அல்லவா? முருகனின் அழுகைக் குரல் கேட்டவுடன் அச்சத்தால் அழுதவன் சூரன். கோல மயில்மீது இப்போது ஏறி வருகிறான் என்று கேட்டவுடன் திடுக்கிட்டான்; நடுங்கினான்.
இவ்வாறு கற்பனை பண்ணி ஒரு காட்சியைச் சொல்கிறார் அருணகிரியார்.
எம்பெருமான் சூரனைச் சங்காரம் செய்யப்போகிறான். சங்காரம் நடப்பதற்கு முன் கொடுந்தீமை புரிந்து வந்த சூரன் பலம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.
கடைசியில் சூரசங்காரம் நடக்கிறது. திண்மையான மலையை உடைப்பதற்குத் துளை போட்டு மருந்தைக் கெட்டித்து வெடிப்பார்கள். பெரும் பெரும் பாறையாக விரிசல் கண்டவுடன் பின்னர் உடைப்பார்கள். அவ்வாறு திண்மை யாக இருந்த சூரன், கொடுமையே உருவாக இருந்த சூரன், நாசம் அடையவேண்டும். அதற்கு முன்பு அவன் பாறை போன்ற உள்ளத்தில் தைரியத்தை உடைத்து, அவனை நடுங்கச் செய்து, படைகளை அழித்துப் பிறகு அவனை அழிக்கிறான் ஆண்டவன். மலைபோல் உறுதியாக இருக்கிற அவனை, “எம்பெருமான் கோல மயில்மீது வருகிறான். அந்த மயில் இறக்கையை அடித்துக் கொண்டு பறந்தது. மலை இடிந்து விழுகிறது” என்ற செய்தியைக் கேட்டு உள்ளத்தின் உறுதி இடிய, நடுங்க வைக்கிறான் எம்பெருமான்.
கொடுஞ்சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனிமயில்.
வெற்பு – மலை. கலாபம்-தோகை.
இதில் ஒரு நுட்பமான சிறப்பு இருக்கிறது. மெத்தென்ற தோகையை உடையது மயில். அது சிறகை அடித்துக்கொண்டால் மலை இடிந்துவிடுமா என்று கேட்கலாம். சூரியன் தோன்றினால் தாமரை மலர்கிறது. அதை மலரச் செய்யும் சூரியனே புழுக்களையும் பூச்சி களையும் சாக அடிக்கிறான். அதே போன்று இறைவன் திருவருள் பக்தர்களுக்கு மென்மையானதாக, இன்பம் தருவதாக இருக்கிறது. யார் இறைவனை நினையாமல் அடியார்களுக்குத் தீங்கு செய்கிறார்களோ அவர்களுக்கு அதே அருள் வன்மையாகத் துன்பம் அளிப்பதாகத் தோன்றும், இது மயிலின் செயலால் தெரிகிறது. ஆண்டவனுடைய அடியார்களுக்கு மெத்தென்று இருக்கிற மயில் ஆண்டவ னுடைய திருவருளை நினையாமல் வாழ்கிறவர்களுக்குக் கடுமையாக இருக்கிறது. தன் தோகையை அடித்துக் கொள்வதன் மூலம் மயில் இதைக் காட்டுகிறது. தோகையை அடித்துக்கொண்டு வரும்போது அடியார்கள் எல்லாம் உவகை அடைகிறார்கள். மலை ஆடுகிறது; இடிகிறது. அதைக் கண்டு சூரன் உள்ளம் நடுங்குகிறது.
படிக்கும் திருப்புகழ் போற்றுவன்;
கூற்றுவன் பாசத்தினால்
பிடிக்கும் பொழுதுவந்து அஞ்சல்என்
பாய்; பெரும் பாம்பில் நின்று
நடிக்கும் பிரான்மரு கா!கொடும்
சூரன் நடுங்கவெற்பை
இடிக்கும் கலாபத் தனிமயில்
ஏறும் இராவுத்தனே!
(படித்து வரும் உன் திருப்புகழை மனத்தில் வைத்துப் பாது காப்பேன்; யமன் கயிற்றினால் எறிந்து என்னைப் பிடிக்கும் மரண சமயத்தில் நீ எழுந்தருளி வந்து, “பயப்படாதே” என்று திருவாய் மலர்ந்தருளுவாயாக: பெரிய பாம்பாகிய காளிங்கன் மேலே நின்று நடனம் செய்யும் கண்ணபிரானுடைய மருமகனே! கொடுமையான சூரன் நடுங்கும்படியாக மலைகளை இடிக்கும் தோகையை யுடைய ஒப்பற்ற மயில்மீது ஏறிப் பவனிவரும் குதிரை வீரனே!
போற்றுவன் – மனனம் செய்து பாதுகாப்பேன்; “படியில் கல்வி விரும்பினோன் பாடம் போற்றும் அதுபோல” (பிரபுலிங்க லீலை) என்பதில் போற்றும் என்ற சொல் இப்பொருளில் வந்தது. கூற்றுவன்-யமன். பாசம் – கயிறு. அஞ்சல் – அஞ்சாதே. பெரும் பாம்பு – காளிங்கன். பிரான் – கண்ணன். கலாபம்-தோகை; மயிலின் சிறகு. தனி ஒப்பற்ற.இராவுத்தன் – குதிரையை அடக்கி ஓட்டும் வீரன்.)
ஓம் சரவணபவ.


