
முருகப் பெருமானின் அருளமுதம்
தேவர்களுக்கு ஒரு நாள் ஓர் ஆசை தோன்றியது. உலகில் இருக்கிற மக்களும் சாகிறார்கள். நாமும் சாகிறோமே! சாவாமல் இருப்பதற்கு ஏதாவது மருந்து வேண்டும். மூலிகைகளை எல்லாம் கொண்டு வந்து கலுவத்தில் அரைத்துச் சாப்பிடலாமா? ‘அது நம் பெருமைக்கு அடுக்காது’ என்று யோசனை பண்ணினார்கள். ‘வேதங்களில் சொல்லப் பட்டிருக்கிறதே அமிருதம் என்ற ஒன்று, அதை எப்படி அடைகிறது?’என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தபோது பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமான் அவர்களுக்கு உபகாரம் செய்ய வந்தார். “தேவர்களே, நான் பாற்கடல் பள்ளியை விட்டு எழுந்து விடுகிறேன். நீங்கள் இந்தப் பாற்கடலைக் கடைந்தால் அமிருதம் கிடைக்கும்” என்று யோசனையும் சொல்லிக் கொடுத்தார்.
பாற்கடலைக் கடைவதானால் நல்ல மத்து வேண்டுமே! உலகத்திலேயே மிகப் பெரிய மலையாக இருப்பது மகாமேரு. அதில் உள்ள ஒரு சிகரம் மந்தரம். அதைக் கொண்டு வந்தார்கள். அதை மத்தாக வைத்துக் கொண்டார்கள். மத்து இருந்துவிட்டால் போதுமா? தூண் வேண்டுமே! அமிருதத்தைக் கடையும் போது நல்ல பொருள் ஒன்று தூணாக இருந்தால் தான் அமிருதத்தின் சுவை கெட்டுப் போகாது. அமிருத மயமாக இருக்கிறவன் சந்திரன். ஆகவே சந்திரனே அதற்கு ஏற்ற தூண் என்று தேவர்கள் முடிவு செய்தார்கள். மத்தைச் சுற்றிக் கடைவதற்குக் கயிறு வேண்டும். நெளிவு சுளுவாக இருக்கக் கூடியதையே தேர்ந்தெடுக்க வேண்டும்; அது மந்தர மலையைச் சுற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆகவே அதற்கு வாசுகி என்னும் பாம்பே சரியானது என்று முடிவு செய்தார்கள்.
மந்தரத்தை மத்தாகக் கொண்டு, சந்திரனைத் தூணாக வைத்து, வாசுகியைக் கயிறாக்கித் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள். கடையும் போது சட்டி சாயாமல் இருக்க வேண்டும். இங்கே பாற்கடலை அடைகல்லாகத் தாங்க வைகுண்டவாசியே கூர்மமாக உரு எடுத்தார். கடையும் போது தேவர்கள் கை சலித்துப் போய்விட்டது. திருமால் ஒரு கை கொடுத்தார். போதாததற்கு ஆலகால நஞ்சு வேறு எழுந்து விட்டது. தேவர்கள் இறைவனை முதலில் மதிக்கா விட்டாலும், “பரமேசுவரா, இதை நீ சாப்பிட்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும்”என்று இப்போது போய்ச் சரணாகதி அடைந்தார்கள். பெருங்கருணைவடிவான பரமேசுவரன் நஞ்சை உண்டு அவர்களுக்கு வாழ்வு அளித்தான். மறுபடியும் அவர்கள் கடைந்தார்கள். அமிருதம் வந்தது. உடனே, “எனக்கு உனக்கு”என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை மூண்டு விட்டது. திருமாலே அப்போதும் மோகினி உருவம் எடுத்துக் கொண்டு வந்து அமிருதம் பரிமாறினார். தேவர்களை ஒரு பக்கமாகவும், அசுரர்களை ஒரு பக்கமாகவும் உட்கார வைத்துத் தேவர்களின் வரிசையில் முதலில் படைக்க ஆரம்பித்தார், அசுரர்கள் அமிருதத்தை மறந்து மோகினியின் அழகிலே சொக்கிப் போனார்கள். அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கு வழங்கி மறைந்தாள் மோகினி.
தேவர்கள் அமிருதத்தைச் சாப்பிட்டு விட்டதனாலே தங்களுக்கு இனி மரணம் இல்லை என்று தலை தருக்கி நின்றார்கள். அவர்களுடைய செருக்கு அதிகமாகிவிட்டது. அவர்கள் அமிருதம் சாப்பிட்டதால் பூர்ண ஆயுளோடு வாழ்ந்தார்களே தவிர, அழிவில்லாமல் நிலையாக இருக்கவில்லை. அவர்களை அழிக்கச் சூரன் தோன்றியவுடன் எத்தனை பேர் மாண்டிருக்கிறார்கள்! மிருத் என்றால் மரணம். அமிருதம் என்றால் மரணத்தை நீக்குவது என்று பொருள். அற்ப ஆயுசு இல்லாமல் பூரண ஆயுசோடு வாழ வைக்கும் அமிருதத்தை தேவர்களுக்கு வழங்கினார் திருமால்.
திருமாலின் மருகனாகிய முருகன் என்ன பண்ணுகிறான் தெரியுமா? அருளாகிய அமிருதத்தைத் தன் அடியார்களுக்கு வழங்குகிறான். திருமால் வழங்கிய அமிருதம் இடைக்காலத்தில் வருகின்ற மரணத்தைத்தான் நீக்கிற்று. ஆனால் அவருடைய மருகன் வழங்கும் அருளாகிய அமிருதம் கடைக் காலத்தில் வருகின்ற மரணத்தையும் நீக்கும் சக்தி உடையது. இதைச் சாப்பிட்ட மனிதன் எப்படி இருப்பான்? சாவாமல் இருப்பான். பிறக்காதவன் சாக முடியாது; பிறந்தவன் சாகத்தான் வேண்டும். பிறப்பையே நீக்கும் அமிருதத்தை முருகன் வழங்குகிறான். பிறப்பு நம்முடைய தீய வினையினால் வருவது. வினை ஒரு நிலையில் கட்டுப்படாமல் திரிகின்ற மனத்தினால் விளைவது. ஒரு நிலைப்படாமல் திரிகின்ற மனத்தைக் கட்டுப்படுத்தியவன் மிகப் பெரியவன்.
“நிலையில் திரியா தடங்கியான் றோற்றம்
மலையினும் மாணப் பெரிது”
என்கிறார் வள்ளுவர். மலை கொஞ்சங்கூட அசையாமல் இருக்கிறது. அதைக் காட்டிலும் பெருமை உடையவன், ஆண்டவன் திருவருள் ஒன்றையே பற்றிக்கொண்டு மனம் ஆடாமல் ஓடாமல் அசங்காமல் இருக்கும் இயல்பைப் பெற்றவன்.
ஒம் சரவணபவ


