7. அருணகிரிநாதர் காட்டும் முருகன்
நினைக்கவே முத்திதரும் தலம் திருவண்ணமலையாகும். கி.பி.1450 ஆம் ஆண்டில் விஜய நகரத்தை ஆண்ட பிரபுடதேவராயர் காலத்தவர் அருணையம்பதியில் உதித்த அருணகிரியார். இளமையிலேயே திருமுருகாற்றுப்படை, தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள், யாப்பருங்கலக் காரிகை முதலிய நூல்களை நன்கு கற்றார். சிறு பிரபந்தங்களாகிய உலா, கலம்பகம், கோவை, சிந்து, தூது, பரணி, மடல், ஏசல், மாலை முதலிய நூல்களை நன்கு பயின்றார். எனவே முற்றுக் கற்றுத் துறைபோய புலவராய் விளங்கினார்.
செல்வர்கள் மீது துதி பாடிப் பொருட் பரிசு பெற்று அப்பொருளினைப் பொருட் பெண்டிர்பால் தந்து காமுகராக இளமையில் இருந்தார் என்று இவர் நூல் கொண்டு அகச் சான்றாய்க் கூறுவர். ஆயினும் மாணிக்கவாசகர் போன்ற பெரியவர்கள் தங்களை இழிந்தவர்களாகக் கூறிக் கொண்டு தங்களுக்கும் எளிவந்த இறைவனின் இணையிலாக் கருணையை நன்றிப் பெருக்குடன் நினைந்து பாடுவதுண்டு. அம்முறையிலும் இவர் பாடல் அமைந்தனவாகலாம். பெரியவர் ஒருவர் தம் உபதேசத்தால் இவர் மனந் திருந்தினார் என்றும் கூறுவர். இப் பெரியவர் பெயர் பெரிய குணதரர் என்பர். சிவபிரானை இவர் திருச்சிராப்பள்ளித் திருப்புகழில், “திரிசிர குன்றில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ” (திருப்: 3-42) என்று குறிப்பிட்டுள்ளமை கொண்டு திருவண்ணாமலையிற் கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் உண்ணாமலை யுமையாளோடு உடனாகிய ஒருவனாகிய அருணாசலம் எனப்படும் அருணாசலேசுவரர் என்றும் அறிஞர் குறிப்பிடுவர், ‘வேசையர் மயல் மேலாய் வெடுக் கெடுத்து மகாபிணி மேலிட முடக்கி வெட்கு மதாமத விணன்’ எனத் தம்மைத் தம் பாடலில் குறிப்பிட்டுக் கொள்ளும் இவர் முருகப் பெருமானுக்கு வழிவழித் தொண்டாற்றும் குலத்தினில் வந்தவராதலால் ‘ஏழைத் தொழும்பனேன், எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரணைப் பணியாதே’ என்று, காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப் பாடிய மாணிக்கவாசகர் போன்று, “சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரந் தருவாய்” என்று முருகப் பெருமானை வேண்டித் திருவண்ணாமலை பெரிய கோபுரத்து வடவாயிலில் தவங் கிடந்தார். அறுமுகன் தனக்குப் பன்னுாள் ஆகியும் திருவருள் சுரக்கவில்லையே என மனம் கவன்ற இவர் அருணைத் திருக்கோயிலின் கோபுரத்தின் மீதேறிக் குதித்துத் தம் உயிரை மாய்க்க எண்ணி, எண்ணியவாறே செயல்பட்டனர்.
அடியவர்க்கு அருளவரும் அறுமுகனும் அன்பருக்கு யாதொரு ஊஊறும் நேரிடாது தமது திருக் கரத்தால் தாங்கிப் பிடித்து ‘அஞ்சல்’ ஓம்புமதி’ என அபயம் அளித்தனர். ‘நாதன்’ என்ற பட்டத்தினையும் அளித்தனர். இதனை அருணகிரியார் ‘அகமதை எடுத்த சேமம் இதுவோ என் றடியனுநினைத்து நாளும், உடலுயிர் விடுத்தபோதும் அணுகி’ என்று தம் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார். “சும்மா இரு; சொல்லற” என்ற மௌன உபதேசமும் முருகன் மொழிந்தார்; பின்னர், ‘நமது பாத மலரைப் பாடுக’ என்று அருணகிரியாருக்குக் கட்டளையிட்டார். ‘எங்ஙனம் ஏழையேன் தங்களைப் பாடுவேன்’ என்ற அருணகிரியாருக்கு முத்தைத் தரு பத்தித் திருநகை’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் தமிழ்த் தெய்வமாம் முருகன். முருகன் திருவருளையே துணையாகக் கொண்ட அருணகிரியாரும் ‘முத்தைத் தரு பத்தித் திரு நகை’ எனத் தொடங்கும் பின்வரும் சந்தப் பாடலைப் பாடினார்:
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர
எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு
முப்பத்துமு வர்க்கத் தமரரு
மடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியி
லிரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பத்தொடு ரக்ஷித்தருள்வது
மொருநாளே
தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு
கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக
எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு
குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல
பெருமாளே.
-திருப்புகழ்: 6
இவ்வாறு முருகன் அருள் பெற்ற அருணகிரியார் ‘அடிநாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே’ என்று சந்தப் பாக்களால் முருகனை நாடோறும் துதித்துப் பரவி வந்தார்.
அக்காலத்தில் சம்பந்தாண்டான் என்றொரு தேவி உபாசகன் வாழ்ந்து வந்தான். அவன் அருணகிரியாரின் புகழ் பரவுதலைக் கண்டு அழுக்காறு அடைந்தான். அரசன் பிரபுடதேவராயனும் அருணகிரியாரை அழைத்து ‘தவச் சிரேட்டரே! தங்களைக் காத்தருளிய கருணாமூர்த்தியான கந்தப் பெருமானை நாங்களும் காணக் காட்டி அருளுக’ என வேண்டினான். இது கேட்ட சம்பந்தாண்டான் அரசனிடம் சென்று, “யார் ஒருவர் தாம் வணங்கும் மூர்த்தியை அவைக்கு வரவழைக்கின்றனரோ அவருக்குத்தான் நீங்கள் அன்பு செய்தல் வேண்டும்” என்று கூறினன். அரசனும் இசைந்தனன்; அருணகிரியாரும் ‘ஆண்டவன் திருவருள் போல’ என்று கூறி இசைந்தனர். சொன்னபடி சம்பந்தாண்டான் தேவியை அழைக்க இயலாமல் தோற்றுப் போனான். அருணகிரியார் ‘கந்தப் பொழில் திகழ் குரு மலை மருவிய பெருமாளே! சந்தச் சபைதனில் எனதுளம் உருகவும் வருவாயே’ என்று வேண்டி, ‘முருகா! இங்குள்ள மன்னன் மனம் மகிழ நீ எதிர் தோன்றி,பாதலத்தில் உள்ள சேடனா ராட, மேரு ஆட, காளி யாட, சிவனாட, பூத வேதாளம் ஆட, ஆட,பிரமன் ஆட, வானுளோர் ஆட, மதியாட, மாமியா ராட, மாமனா ராட, மயிலு மாடி நீ யாடி வரவேணும்’ என்ற கருத்துப்பட ‘அதல சேடனா ராட’ எனத் தொடங்கும் பாடலைப் பாட, முருகப் பெருமானும் திருக்கையில் வேல் தாங்கி, மயில் மீது அமர்ந்து மன்றிலே காட்சியளித்து மறைந்தான். இதனை விருத்தாசலத் திருப்புகழில், “உலகினில் அனைவர்கள் புகழ்வுற அருணையில் ஒரு நொடிதனில் வரு மயில் வீரா” என்று அருணகிரியார் குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் சந்தத்திருப்புகழ்ப் பாடல்கள் பல பாடிப் பின்னர்த் தென்திசைப் பயணத்தினை மேற் கொண்டார். திருக் கோவலூர், திருவெண்ணெய் நல்லூர், திருநாவலூர், திருவாமூர், வடுகூர், துறையூர், திருவதிகை, திருப்பாதிரிப் புலியூர், திருமாணிகுழி, தில்லை, திருவேட்களம், சீகாழி முதலிய பதிகளை வணங்கிச் சென்றார். திருவாரூர், சிக்கல், நாகபட்டினம், வேதாரணியம், கும்பகோணம், சுவாமிமலை முதலாய பல திருத்தலங்களைத் தரிசித்து, நாமணக்கும் தமிழில் நல்ல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார். சுவாமிமலையில் பாடிய பாடல்களில் இரண்டு அடிகள் நினைவிற் கொள்ளத் தக்கன. அவை வருமாறு:
பதினாலு லகத்தினில் உற்றுறு பத்தர்கள்
ஏதுநினைத்தது மெத்த அளித்தருள் இளையோனே!
-திருப்புகழ்: 197
சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே!
-திருப்புகழ்: 207
இவ்வாறு பக்திப் பரவசத்தில் பாடிக்கொண்டே அருணகிரியார் தரிசித்த தலங்களின் எண்ணிக்கை மிகப் பலவாகும். அவர் பாத துளி படாத தலமே இல்லை யெனலாம். அவர் திருப்புகழ் பெறாக திருப்பதிகள் ஏதும் இல்லை. திருச்செங்கோட்டின் மலைமீது அமர்ந்துறையும் திருமுருகனைத் தம் இரு கண்ணாரக் கண்டு களித்தார். அருணகிரியார். பின் பாடிப் பரவசமுற்றார். தனக்குப் பிரமன் நாலாயிரம் கண் நல்க வில்லையே என வருந்தினார். அக் கந்தர் அலங்காரப் பாடல் வருமாறு:
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை
[மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று
[கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
– கந்தர் அலங்காரம்: 90
வில்லிபுத்தூரரொடு வாதிட்டு வென்று அவர் காதினை அறுக்காமல் விட்டு அவருக்கு அருள் செய்தார் என்ற செய்தியும், அவர் அதுபோது பாடிய பாட்டு கந்தரந்தாதியில் வரும் ‘திதித்த எனத் தொடங்கும் பாடலாகும் என்றும் கூறுவர். இப்பாடலுக்குப் பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் விழித்தாராம். வில்லிபுத்தூரார்தம் செருக்கை யொழித்து அவருக்கு அருள் சுரந்த காரணத் தினாலேயே அருணகிரியார் ‘கருணைக் கருணகிரி’ எனப் பட்டார் என்பர்.
காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி
ஆசுக்குக் காளமுகி லாவனே!-தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன்; உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங் கெளவையெனக் கூறு
என்ற தனிப்பாடல் இதனை உணர்த்தும்.
ஐயா அருணகிரி அப்பா உனைப்போல
மெய்யாக ஓர் சொல் விளம்பினர் யார்
என்றும்,
எந்தையருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ?
என்றும் தாயுமான தயாபரர் அருணகிரிநாதரின் அருட்பெருக்கினை வியந்து போற்றியுள்ளார். அருணகிரி யாரும் வில்லிபுத்தூராரும் சம காலத்தவர் அல்லர் என்றும் எனவே இச் செய்தி கற்பிதமே என்றும் மறைந்த கல்வெட்டறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தம் நூலிற் குறிப்பிட்டுள்ளார்.
அருணகிரியார் பாடிய பிற நூல்கள் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, திருவகுப்பு, கந்தர் அநுபூதி முதலியனவாகும்.
இத்தகு பெரியார் முருகனிடம் வேண்டுவது பின்வருவனவாகும்.
உன்புகழே பாடி நானினி அன்புட னாசார பூஜை [செய்து
உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே.
-திருப்புகழ்: 66
ஆறெழுத்தை நினைந்து குகாகுகா என
வகை வராதோ,
-திருப்புகழ்: 326
உனது பொற்சரணம் எப்பொழுதும்
நட்பொடு நினைத்திட அருட் டருவாயே.
-திருப்புகழ்: 672
மறவாதுன் நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும்படி யருள் புரிவாயே.
– திருப்புகழ்: 1038
நோய்கள் பிறவிகள் தோறும் எனை
நலியாதபடி உனதாள்கள் அருள்வாயே.
-திருப்புகழ்: 260
யான் அவா அடங்க என்று பெறுவேனோ.
-திருப்புகழ்: 739
இறைவா எதுதா அதுதா.
– திருப்புகழ்: 834
அந்தகனும் எனையடர்ந்து வருகையினில்
அஞ்சல் எனவலிய மயில்மேல் நீ – அந்த
[மறலியொடு
உகந்த மனிதன் நமதன்பன் எனமொழிய
[வருவாயே.
-திருப்புகழ்: 70
காலன்… என தாவி தனையே குறுகி வருபோது
ஆதிமுரு காதிமுரு காதிமுரு கா எனவும்
ஆதிமுரு காநினைவு தருவாயே.
-திருப்புகழ்: 1242
வாழி! இனிப்பிறவாது நீ யருள்புரிவாயே.
-திருப்புகழ்: 1204
இவ்வாறு தணிகைமணி திரு. வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள் திருப்புகழை நன்கு கற்று ஆய்ந்து அருணகிரியார் மனக்கிடக்கையை ‘அருணகிரிநாதர்’ என்ற தம் நூலில் புலப்படுத்தியுள்ளார்கள்.
எனவே முருகனை முழுமனதுடன் வழுத்தினால் பிறவா யாக்கை தந்து போருள் சுரப்பான் என்பது திண்ணம்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
-கந்தரநுபூதி : 51