5. இளங்கோவடிகள் காட்டும் முருகன்

முருகன் தமிழ்க் கடவுள். முருகு என்றால் அழகு, முருகன் என்றால் அழகன் என்று பொருள். பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் முருகனைப் பரவிப் போற்றுகின்றன. தமிழில் உள்ள நூல்களில் மிகப் பழமையாகக் கருதப்படுவது தொல்காப்பியமாகும். அந்நூல் ஓர் இலக்கண நூல் என்பது வெள்ளிடை மலை. அந்நூலிலேயே முருகன் குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வமாகக் குறிக்கப் பெறுகிறான். இதனைத் தொல்காப்பியனார், ‘சேயோன் மேய மைவரை யுலகமும்’ என்று குறிப்பிடுகின்றார். மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும். குன்று தோறும் முருகன் கோயில் கொண்டுள்ளான். குன்றுதோறாடல் முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் ஒன்றாகும். குன்று தோறும் முருகன் ஆடி வருகிறான்.

நாட்டு மக்கள் வாழ்வினையும் அவர் தம் ஆடல் பாடல் முதலான கலைகளையும் நன்கு கண்டவர் இளங்கோவடிகள். அது பொழுது வழங்கிய நாட்டுப் பாடல்களுக்கும் ஆடல்களுக்கும் இலக்கியத்தில் சிறப்பான இடம் தந்த முதல்வர் அவர். இளங்கோவடிகள் குன்றத்தில் வாழும் குறமகளிர் முருகனைப் பரவிப்பாடி மகிழ்ந்தமையைச் சிலப்பதிகாரத் தில் செவ்விதின் உணர்த்துகின்றார்.

இளங்கோவடிகள் சமயவொற்றுமையை விரும்பியவர். எச் சமயத்தினையும் ஒத்து நோக்கும் இனிய இயல்பினர். அவர்தம் நூலில் பல்வேறு சமயக் கடவுளர்களையும் குறிப்பிடுகின்றார். பலவிடங்களில் சிவபெருமானைப் புகழ்ந்து பேசுகின்றார். அருகக் கடவுளைக் கவுந்தியடிகள் வாயிலாகப் புகழ்கின்றார்.ஆய்ச்சியர் குரவையில் ‘கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே’ என்று திருமாலுக்கு ஏற்றம் தருகின்றார். வேட்டுவ வரியில் வேட்டுவர்கள் காளிக்கு வழிபாடு ஆற்றுவதைக் காட்டுகின்றார். வஞ்சிக் காண்டத்தின் முதற்காதையான குன்றக் குரவையில் முருகனின் பெருமையைப் பலப்படப் புகழ்ந்து கூறுகின்றார். முருகன் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களையும், அவன் சூரபதுமனை வென்றதனையும், சரவணப்பூம் பொய்கையில் பிறந்தமையையும், ஓராறு முகமும் ஈராறு கையுமாய் எழுந்தருளும் தோற்றத்தினையும் அவன் தன் அழகுக் கரத்தில் காணப்படும் வேலினையும் இனிமையுற எடுத்து மொழிகின்றார். இனி, குன்றக் குரவையில் இளங்கோவடிகள் காட்டும் முருகனைப் பற்றிய செய்திகளைக் காண்போம்.

குன்றுவாழ் குறமகளிர் புனலில் மூழ்கி விளையாடுகின்றனர். பின்னர் முருகனை வாழ்த்திக் குரவைப் பாட்டுப் பாடுகின்றனர். சூரபதுமனை வென்ற வேலவனின் வெற்றியை விளம்புகின்றனர்:

உரையினி மாதராய் உண்கண் சிவப்பப்
புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின்
உரவுநீர் மாகொன்ற வேலேந்தி யேத்திக்
குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி.

– சிலம்பு : குன்றக் குரவை: 7

பின்னர் அவர்கள் தெய்வம் பராவு முகத்தான் மூன்று பாடல்கள் பாடுகின்றனர். ”பெரிய கடலின் நடுவிடத்தே புகுந்து முன்னொரு காலத்திலே சூரபதுமனாகிய மாமரத்தை அறுத்த ஒளி உமிழும் வெள்ளிய வேல்,சிறப்பு மிகுந்த திருச்செந்தூர், திருச்செங்கோடு, சுவாமி மலை, ஏரகம் ஆகிய இடங்களைவிட்டு நீங்காத முருகனின் கையிடத்த தாகிய வேலேயாம்” என்கின்றனர்:

சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமு நீங்கா விறைவன்கை வேலன்றே பாரிரும்
பௌவத்தின் உள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே.

– சிலம்பு : குன்றக் குரவை : 8

இப் பாட்டில் குறிப்பிடப்பெறும் செந்தில் திருச்செந்தூராகும். இதனைப் புறநானூறு,

வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவேல் நிலைஇய காமர் வியன்றுறை

-புறநானூறு 55: 18-19

என்று குறிக்கின்றது. இத்தலம் திருச்சீரலைவாய் என்று திருமுருகாற்றுப்படையில் கூறப்படுகிறது. வெண்குன்று என்பது சுவாமி மலை என்பர் அரும்பதவுரைகாரர். ஏரகம், ‘மலை நாட்டகத் தொரு திருப்பதி’ என்பர் நச்சினார்க்கினியர். முருகன், சூர்மா தடிந்த செய்தி,

பத்திரா பதிமிசைப் பனிக்கடற் பிறந்த
வெஞ்சூர் தடிந்த அஞ்சுவரு சீற்றத்து
முருகவேள்……

– பெருங்கதை: 1-42 : 229-31

என்ற பெருங்கதையிலும் கூறப்பெறுகிறது.

அடுத்த பாட்டில், மயில் மீதேறி அசுரர் பெருமையை எல்லாம் அழித்து தேவர்க்கரசனான இந்திரன் போற்றப் பகைவர்களை அழித்த வேல்,ஓராறு திருமுகமும் ஈராறு கையுமாய் ஒப்பாரற்று விளங்கும் முருகன் ஏந்திய வேலேயாம் என்கின்றனர் குற மகளிர்:

அணிமுகங்கள் ஓராறும் ஈராறு கையும் இணையின்றித்
தானுடையான் ஏந்திய வேலன்றே பிணிமுகமேற்
கொண்டுஅவுணர் பீடழியும் வண்ணம் மணிவிசும்பிற்
கோனேத்த மாறட்ட வெள்வேலே.

– சிலம்பு : குன்றக் குரவை : 9

ஈண்டுப் பிணிமுகம் எனப்படுவது மயிலாகும். இதனைக் கல்லாடம்,

பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய
மூவிரு திருமுகத் தொருவே லவற்கு

-கல்லாடம்:7:7-8

என்று குறிப்பிடுகிறது. பிணிமுகம் என்பதற்கு ‘முருகக் கடவுள் ஊரும் யானை’ என்றும் பொருள் உரைப்பர். இதனைச் ‘சேயுயர் பிணிமுக மூர்ந்து’ என்று பரிபாடல் கூறும்.

இறுதிப் பாட்டில் மலையினைச் சூழவரும் அசுரனின் நெஞ்சு பிளக்கக் கிரவுஞ்ச மலையினை அழித்த நெடிய வேல், சரவணப் பொய்கையில் தாமரை மலர்ப்படுக்கையில் கார்த்திகைப் பெண்டிராம் தாய்மார் அறுவரின் திருமுலைப் பாலினை உண்ட முருகனுடைய அழகிய கையிலுள்ள வேலேயாம் என்று குறமகளிர் துதித்து நிற்கின்றனர்:

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர்
திருமுலைப்பால் உண்டான் திருக்கைவே லன்றே
வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகுபெயர்க் குன்றங் கொன்ற நெடுவேலே.

-சிலம்பு : குன்றக் குரவை : 10

சரவணப் பூம்பொய்கையில் கார்த்திகைப் பெண்டிரால் திருமுருகன் வளர்க்கப்பட்ட செய்தியினை,

நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள்
ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ

-திருமுருகு:253-55

என்று திருமுருகாற்றுப்படை பேசுகின்றது. ‘குருகு பெயர்க் குன்றம் கொன்றோன்’ என மணிமேகலை முருகனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே.

கயிலைநன் மலையிறை மகனைநின் மதிநுதல்
மயிலியன் மடவரன் மலையர்தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயன்மணம் ஒழியருள் அவர் மணம் எனவே.

மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல்
குலமலை யுறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலரறி மணம்அவர் படுகுவர் எனவே.

குறமகள் அவள்எம் குலமகள் அலளொடும்
அறுமுக பொருவன்நின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர் பெருகநன்
மணம்விடு பிழைமணம் எனவே.

– சிலம்பு : குன்றக் குரவை : 15-18

இவ்வாறாகக் குறமகளிர் ‘நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன்’ வரவேண்டும் என வேண்டுகின்றனர். குறமகளும் குறவர் தம் குலமகளு மாகிய வள்ளிநாயகியைப் பரவுகின்றனர். இவ்வண்ணம் ‘ஆறிரு தடந்தோளினையும் அறுமுகத்தினையும்,வெற்பைக் கூறு செய் தனி வேலினையும், செவ்வேள் ஏறிய மஞ்ஞை யினையும், மாறிலா வள்ளியினையும் வாயாரப் புகழ்ந்து நெஞ்சாரத் துதித்துக் குன்றுவாழ் குறவர்கள் வழிபடு கின்றனர்.