4. பரிபாடற் புலவர்கள் காட்டும் முருகன்

கடைச் சங்கப் புலவர்கள் இயற்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று பரிபாடலாகும். எட்டுத்தொகை நூல்கள் அடியளவானும் பொருளானும் பாவானும் பெயரிடப் பட்டிருக்கின்றன. அவ் வகையில் அடியளவாற் பெயர் பெற்றன குறுந்தொகை ஐங்குறுநூறு முதலாயின என்றும், பொருளாற் பெயர் பெற்றன அகநானூறு புறநானூறு என்றும், பாவகையான் பெயர் பெற்றது பரிபாடல் என்றும் கூறப்படும். பரிபாடல் என்னும் ஒரு வகைப் பாவினால் இந்நூல் இயன்றதாதலின் பரிபாடல் என இந்நூல் வழங் கப்படுகின்றது. எழுபது பரிபாடல்கள் இருந்தனவாக இறையனார் அகப்பொருளுரை குறிக்கின்றது. ஆனால் இன்று நமக்கு முழுமையாகக் கிடைக்கும் பரிபாடலின் தொகை இருபத்திரண்டு ஆகும். இவ்விருபத்திரண்டு பாடல்களுக்குள்ளும் செவ்வேளாம் முருகனுக்குரிய பாடல்கள் எட்டாகும்.

பரிபாடலின் ஒவ்வொரு பாடலின் பின்னர், பாடினார் பெயர், பண்ணின் பெயர், இசைவகுத்தார் பெயர் முதலிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. எனவே இயற்றமிழோடு நில்லாது இசைத்தமிழையும் தழுவிப் பரிபாடற் பாடல்கள் அமைந்துள்ள சிறப்பினை நன்குணரலாம். இசைப் பாவகையில் பரிபாடல் செந்துறையைச் சார்ந்ததாக அறிகிறோம். ‘பாயிரும் பனிக்கடல்’ என்ற பாடலைப் பாடிய புலவர் கடுவன் இளவெயினனார் ஆவர். ‘மண்மிசை யவிழ் துழாய்’ என்ற பாடல் ஆசிரியர் நல்லந்துவனார் பாடியதாகும். குன்றம் பூதனார் என்னும் புலவர், ‘இருநிலந்துளங் காமை’ எனத் தொடங்கும் பாடலையும், ‘போரெதிர் தேற்றார்’ எனத் தொடங்கும் பாடலையும் பாடியவர் ஆவர். ‘கார்மலி கதழ் பெயல்’ என்ற பாடலைக் கேசவனார் பாடியுள்ளார். நல்லமுசியார் ‘தேம்படு மலர்குழை’ என்னும் பாடலைப் பாடியவர் ஆவர். நப்பண்ணனார் ‘நிலவரை யழுவத்தான்’ எனத் தொடங்கும் பாடலையும், நல்லச்சுதனார், ‘ஊர்ந்ததை’ எனத் தொடங்கும் பாடலையும் பாடியுள்ளனர். ஆக ஏழு புலவர்கள் பாடிய இவ்வெட்டுப் பாடல்களும் செவ்வேளைப் பற்றியனவாகும். இப் பாடல்கள் செவ்வேள் விரும்பியுறையும் திருப்பரங்குன்றத்தைப் பற்றியும் சிறப்பாகக் குறிக்கின்றன. முருகன் செந்நிறம் கொண்டவன்; எனவே செவ்வேள் என்றும் சேயோன் என்றும் வழங்கப்படுகின்றான். அடுத்து, வேள் என்ற சொல் விருப்பத்தைச் செய்கின்றவன் அல்லது விருப்பத்தைக் கொடுக்கின்றவன் என இருவகையிலும் பொருள் தரும். சங்க இலக்கியங்களில் முருகன் செவ்வேள் என்றும், விறல்வேள் என்றும், வெல்வேள் என்றும், நெடுவேள் என்றும், செய்யோன் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றான்.

செவ்வேள் என்ற சொல் வழக்கு முருகனைக் குறிக்கும் என்பதனை,

மூவிரு கயந்தலை முந் நான்கு முழவுத்தோள்
ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை
காஅய் கடவுள் சேஎய் செவ்வேள்

-பரிபாடல் : 5 : 11-13

என வரும் பகுதியானும்,

ஈவாரைக் கொண்டாடி யேற்பாரைப் பார்த்துவக்குஞ்
சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்

-பரிபாடல் திரட்டு : 11 : 1-2.

என்ற பகுதியானும் அறியலாம். சிலப்பதிகாரமும்,

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

-சிலப்பதிகாரம்: இந்திர விழவூரெடுத்த காதை : 170

எனச் செவ்வேள் திருக்கோயிலினைச் சிறப்பித்துப் பேசுகின்றது.

அடுத்து விறள்வேள் என்ற சொல்லாட்சி,

மலர்ந்த வள்ளியங் கானக் கிழவோன்
ஆண்டகை விறல்வேள்

– ஐங்குறு நூறு : 250: 3-4

என்றும்,

சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு

– பதிற்றுப்பத்து ; 2 ஆம் பத்து : 1 : 5-6.

என்றும் வரும் பகுதியான் தெரிய வருகின்றது.

வெண்சுடர் வெல் வேள்

என்று பரிபாடல் (18:2(1)கூறும்.திருமுருகாற்றுப் படை முருகப் பெருமானை,

பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள்

-திருமுருகு : 273

என்று குறிக்கும். ‘செய்யோன்’ என்ற சொல்லாட்சி,

மணிமயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனும்

-புறநானூறு : 56: 7-8

என்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. மேலும் ‘சேயோன் மேய மைவரை யுலகமும்’ என்றே தொல் காப்பியனாரும் முருகனைச் சேயோன் என்று சுட்டியுள்ளார். இவ் அடியினுக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘செங் கேழ் முருகன் காதலித்தவான் தங்கிய மைவரை யுலகமும்’ என்றே உரை கண்டார். இதனாற் குறிஞ்சிநிலக் கோமானாம் குமரக் கடவுள் செந்நிறம் பொருந்தியவன் என்பது பெற்றாம்.

மேலும் இவ் அனைத்துப் பெயர்களிலும் முருகன் என்ற பெயரே சங்கப் புலவர் பெருமக்களால் யாண்டும் பெருவர வாக ஆளப்பட்டுள்ளது என்பதனைப் பின்வரும் பகுதிகள் கொண்டு தெளியலாம்.

அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக

-திருமுருகு : 6

முருகன் சீற்றத்து உரு கெழு குருசில்

– பொருநராற்றுப் படை :131

முருகென மொழியும் வேலன்

–ஐங்குறு நூறு : 129 : 2

பெரும்பெயர் முருக

-பரிபாடல் : 5 : 50

சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமுகு
முருகன் தண்பரங் குன்றத்து

-அக நானூறு : 59:10-11

முருகன் ஆரணங் கென்றலின்

-அகநானூறு : 98: 10

முருகன் அன்ன சீற்றத்து

-அகநானூறு : 158 : 16

கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
சூர் நவை முருகன் சுற்றத் தன்னநின்

-புறநானூறு: 23:3-4

முருகொத் தீயே முன்னியது முடித்தலின்.

-புறநானூறு : 56: 14

இவ் எடுத்துக்காட்டுகள் கொண்டு பெரும் பெயர் முருகனின் அரும் பெறல் திறனை இனிதின் அறியலாம்.

பரிபாடலின் ஐந்தாம் பாடலில் கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் முருகன் பிணி முகம் என்னும் யானை மீதேறிப் போர் நடாத்திச் சூரனை வென்ற வெற்றிச் செய் தியினையும், ஓராறு முகமும், ஈராறு கைகளும் கொண்டு ஞாயிற்றின் எழுச்சி போன்ற முகப் பொலிவு உடையவனாய்த் திகழும் கீர்த்தியினையும் சிறப்பித்துள்ளார். பின்னர் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பிட்டு, முருகப் பெருமானிடம் பொருளும் பொன்னும், போகமும் வேண்டாமல் அவன்பால் அருளும் அன்பும் அறனும் வேண்டியிரந்து பரவி நிற்கின்றார்:

………யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே.

-பரிபாடல் :5:78-81

இந்த வேண்டுகோள் அழியும் பொருளின் புன்மை யறிந்து அழியாப் பொருளின் மேன்மை யுணர்ந்து பாடப் பட்டதாகும். முருகப் பெருமானிடம் நாம் வேண்டும் பேறு இதனினும் வேறென்று இருக்கவும் முடியுமோ?

பரிபாடலின் எட்டாவது பாடலில் ‘இமயக் குன்று நிகர்க்கும் பரங்குன்றினை’யும் அறுமுகனைப் பயந்தெடுத்த பதுமப் பாயலினையும் அழகுபடப் புலவர் நல்லந்துவனார் வருணித்துள்ளார்.

இவர்தம் வருணனைச் சிறப்பினை மதுரை மருதனிள நாகனார் என்னும் புலவர் அகநானூற்றில்,

சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண் பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை

-அகநானூறு : 59 : 10-12

என்று புலப்படுத்தியுள்ளார். இப்பாடலில் புலவர் பெருமான் அகத் துறையினையும் இடமறிந்து புகுத்தியுள்ளார்.

ஒன்பதாவது பரிபாடலின் ஆசிரியராகிய குன்றம் பூதனார் முருகன் திருவவதாரத்தினை முதற்கண் கிளத்திக் கூறி, ‘காதற் காமம் காமத்திற் சிறந்தது’ எனக் களவின் வழி வள்ளி முருகனைக் கூடின சிறப்புக்கூறி, ‘புலத்தலிற் சிறந்தது கற்பு’ எனக்கூறி, வள்ளிக்கும் தெய்வயானைக்கும் இடையே நிகழ்ந்த ஊடலைக் கூறி, இறுதியில் குமரப் பெருமானின் வாழ்த்தோடு பாடலை முடிக்கின்றார்.

பரிபாடலின் பதினான்காம் பாடலில் கேசவனார் என்னும் புலவர் பருவங் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப முருகவேளைப் பரவுவாளாய், அப்பருவத்தே தலைமகன் வரும் என்பது படத் தோழி வற்புறுத்திப் பாடிய பாடலாகும். இப்பாடலில், ஆறு திருமுகத்தையும் பன்னிரு தோளையும் கொண்டு வள்ளியென்னும் மலர் போன்ற மகளை விரும்பியவன் என்று முருகனின் தண்டாத சிறப்புப் புலவரால் பேசப்படுகின்றது:

அறுமுகத்து ஆறிரு தோளால் வென்றி
நறுமலர் வள்ளிப் பூ நயந் தோயே.

-பரிபாடல் : 14 : 21-22

நல்லமுசியார் என்னும் நல்லிசைப் புலவர் இயற்றிய பரிபாடலின் பதினேழாம் பாடலில் கடப்பமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளைக் கனிந்து இசையுடன் பரவிப் பாடி, தேவருலகும் வேண்டாத திருப்தியுடன் அடியவர்,

மணிநிற மஞ்ஞை ஓங்கிய புட்கொடிப்
பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ
பணியொரீ இ நின்புகழ் ஏத்தி
அணிநெடுங் குன்றம் பாடுதுந் தொழுதும்
அவை, யாமும்எம் சுற்றமும் பரவுதும்
ஏம வைகல் பெறுகயாம் எனவே

-பரிபாடல் : 17 : 48-53

என்று நிற்கின்றனர்.

“மணிநிற மயிலினையும் உயர்ந்த கோழிக் கொடியினையும் உடைய முருக! பிணிமுகத்தின் மேல் ஊர்ந்து போர் செய்து வெற்றி கொள்ளும் தலைவ! பிறவித் துன்பம் நீங்கிய இன்பம் மலிந்த நாட்களை யாம் பெறுக வென்று நின்னை வேண்டி யாமும் எம் கேளிரும் மக்களைப் பணிந் தொழுகுதலின்றி, நின் புகழையேத்தி நின் பரங்குன்றத்தினைப் பாடித் தொழுகின்றோம்! அருள் புரிவாயாக.”

இவ்வாறு வணங்கும் அடியவர் அன்பின் திறந்தான் என்னே!

பரிபாடலின் பதினெட்டாவது பாடலில் சூரன் மாமரமாய் நின்றதும், முருகன் வேல் கொண்டு பிளந்ததுமாகிய வரலாறும், பின்னர் அகத்திணைக்குரிய செய்திகளும், சிறப்பாகக் குறிஞ்சித்திணைக்குரிய முதல், கரு, உரிப் பொருள்களும் கிளத்திக் கூறப்பட்டுள்ளன,

பரிபாடலின் பத்தொன்பதாம் பாடலில் புலவர் நப்பண்ணனார் வள்ளி தெய்வயானை ஆகிய இருவர்தம் திருமண நிகழ்ச்சியினை முதற்கண் கூறி, மதுரை மாநகர மக்களின் வாழ்க்கைப் போக்கினை இடையில் சுட்டி, இறுதியில் குன்றமர்ந்த குமரவேளை வாழ்த்தி முடிக்கின்றார்.

நல்லச்சுதனார் என்னும் நல்லாசிரியர் பரிபாடலின் இருபத் தொன்றாம் பாடலில் முருகன் ஊர்ந்தது, தொட்டது, கையது பூண்டது, அமர்ந்தது ஆகிய செயல்களை அழகுற வருணித்துள்ளார். பின்னர் அகப் பொருளை மாண்புற விளக்கிக் கூறி, இறுதியில், “மாற்றாரைப் போரின்கண் கூரிய வேற்படையையும் பன்னிரு தோளை யும் ஆறு திருமுகத்தையும் கொண்டு அடியோடு அழித்த செல்வ!சுற்றத்தோடு ஒருங்கே நின் அடியின்கண் உறைதல் இன்று போல என்றும் எமக்கு இயைவதாக என்று பரவுகின்றோம்; அதற்கு அருள் புரிவாயாக’ என்று வேண்டிப் பாடலை முடிக்கின்றார்.

மாறமர் அட்டவை மறவேல் பெயர்ப்பவை
ஆறிரு தோளவை யறுமுகம் விரித்தவை
நன்றமர் ஆயமோடு ஒருங்குநின் னடியுறை
இன்று போல் இயைகெனப் பரவுதும்
ஒன்றார்த் தேய்த்த செல்வநிற்றொழுதே.

-பரிபாடல் 21:66-70

இவ்வாறாகப் பரிபாடலில் சென்வேளைப் பற்றி வந்துள்ள எட்டுப் பாடல்களையும் பாடியுள்ள புலவர் எழு வரும் திருமுருகனின் கோலக் காட்சியினைத் திறம்படப் புனைந்துள்ளனர். அவர்கள் கண்ட காட்சியின் மாட்சி, காய் கதிர்க் காட்சியெனச் சுடர்விட்டு ஒளி வீகி நிற்கின்றது.