2. நக்கீரர் வரலாறு
திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் நக்கீரனார் என்னும் நல்லிசைப் புலமைச் சான்றோர் ஆவர். இவர் நக்கீரர் எனவும் நக்கீரனார் எனவும் பல பெயர்களால் அழைக்கப் பெறுகின்றார்.இவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று வழங்கப்படுகின்றமையால் இவர் மதுரையில் பிறந்தவரென்பதும், மதுரைமாநகரில் அக் காலத்தே சீர்பெற்றுத் திகழ்ந்திருந்த ஓர் கணக்காயனார் ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் என்பவர் தம் மகனாரே இந்நக்கீரர் என்பதும் அறியப்பெறும். கீரர் என்பது இவர் தம் இயற்பெயர் ஆகும். ‘ஈ’ என்பது சிறப்பினைக் குறிப்பதோர் இடைச்சொல். எனவே இவர் இயற்பெயரின் முதற் கண் சிறப்புணர்த்தும் இடைச்சொல்லும், இறுதியில் ‘ஆர்’ என்னும் சிறப்பு விகுதியும் பெற்று நக்கீரனார் என்று அழைக்கப் பெற்றார். “குலநினையல் நம்பி’ என்னும் சிந்தாமணிச் செய்யுளுரையில், நப்பின்னை’ என்பதனை விளக் குழி “பின்னை, அவள் பெயர்: ந-சிறப்புப் பொருளுணர்த் துவதோரிடைச் சொல்; நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல” என நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. இவ்வாறு கூறுவது கொண்டு பண்டைக் காலத்தே கல்வி கேள்விகளானே நிறைவும் செறிவும் பொருந்திய நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர்கள் தங்கள் பெயர்க்கு முன் நகர இடைச் சொல் பெற்று வழங்கப் பெற்றனர் என்பது தாமே போதரும். ‘வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன்’ என்பது பழமொழி.
பழைய திருவிளையாடலில் ஒரு செய்யுள் காணப்படு கின்றது. அது வருமாறு:
அங்கங் குலுங்க வரிவாளி னெய்யென்றோர்
பங்கக் கவிதை பரமன் சொல விளிந்து சங்கறுப்ப
தெங்கள்குலந் தம்பிராற் கேதென்றோர்
துங்க முறுங்கவிதை சொன்னா னெதிர் துணிந்து.
‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்னும் செய்யுட் பொருள் பற்றி மதுரைச் சொக்கநாதருக்கும் நக்கீரனாருக்கும் வாது நிகழ்ந்தது. அதுபோழ்து,
அங்கங் குலுங்க வரிவாளி னெய்தடவிப்
பக்கம் படவிரண்டு கால்பரப்பிச்– சங்கதனைக்
கீர்கீ ரெனவறுக்குங் கீரனோ வென்கவியை
ஆராயு முள்ளத் தவன்
என்று சொக்கநாதர் சினந்து கூற அதற்கு எதிராக நக்கீரனாரும்,
சங்கறுப்ப தெங்கள்குலந் தம்பிராற் கேதுகுலம்
பங்கமறச் சொன்னார் பழுதாமே–சங்கை
அரிந்துண்டு வாழ்து மரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வ திலை.
என ஆல்வாயுறை அண்ணலை அவமதித்துரைத்தனரென்றும் வழங்கும் ஓர் கதைக்கு மேற்கூறிய பழைய திருவிளை யாடற் செய்யுள் ஒன்றே சான்று கூறுகின்றது. இக் கதைகட்கெல்லாம் சான்றுகள் இல்லை. இக்கதையினைச் சார்பாகக்கொண்டு புலவர். புராணமுடையார், நக்கீரனார் நெய்தல் நிலத்தில் பரதவர் குடி ஒன்றில் பிறந்தவர் எனக்கூறிப் போயினர். இக்கதையினையும்,
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளைகளைத் தொழிந்த கொழுந்து.
என்னும் அகப்பாட்டு வரிகளையும், “யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான் இவர்களுக்குச் சங்கருக்கையுந் தொழில் என்னும் உரைக்குறிப்பினையும் ஆதாரமாகக் கொண்டு நக்கீரனார் வேள்வி வேட்காது சங்கறுக்குந் தொழிலை மேற்கொண் டொழுகிய அந்தணர் என்பர் மகாவித்துவான் இராகவையங்கார். வேளாப் பார்ப்பார் என்ற சொல், பொற்றொழில் புரியும் மரபினரைக் குறிக்கும். பொற் கொல்லர், தம்மை ‘விசுவப் பிராமணர்’ என்று கூறிக் கொள்வதும், அகப்பாட்டு உரைகாரர் ‘ஊர்ப்பார்ப்பான்’ என்று உரை கூறுவதும் ஈண்டுக் கருதற்குரியன. விசுவம் என்ற சொல் உலகம் என்னும் பொருண்மைத்து. ஆயினும் நக்கீரனாரை ஒரு குலத்திற்கு உரியவர் என்று தளையிட்டு விடாமல் “செஞ்சொற் கவிதை தந்த அஞ்சொற் கவிஞர்’ என்று கூறுதல் அமைவுடைத்தாகும்.
இவரைச் சைவ சமயத்தினர் என்பர். சைவ நூல்கள் பலவும் இக்கருத்துக்குச் சான்று பகரும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் திருத்தொண்டத் தொகையுள் ‘பொய்ய டிமையில்லாத புலவர்க்கும் அடியேன்’ என்று பாடினார். நம்பியாண்டார் நம்பிகள் தாம் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியில் பொய்யடிமையில்லாத புலவர்களைக் குறிப்பிடுகின்ற பொழுது நக்கீரனார் உள்ளிட்ட சங்கப் புலவர்கள் சிலரைக் குறிப்பிட்டுள்ளார்:
தரணியிற் பொய்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கபிலர்
பரணர்நக் கீரர் முதனாற்பத் தொன்பது பல்புலவோர்
அருணமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.
இவர்தம் பாடல்களில் சிவபெருமான், மணிவண்ணன், வாலியோன்,முருகன், இந்திரன் முதலிய கடவுளர்களைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
-தொல்காப்பியம் : செய்யுள் இயல்: 176
என்னும் தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திரவுரையில் பேராசிரியர், “இவை தெற்கண்வாய் திறவாத பட்டி மண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் அங்கதப் பாட்டாயின” என எழுதியுள்ளார். இவ்வாறு இவர் உரை கூறினமைக்கு ஒரு கதை பண்டுதொட்டுக் கூறப்பட்டு வருகின்றது. ஒரு காலத்தே மதுரையம்பதியில் பட்டிமண்டபத்திடை இப்புலவர் பெருமான் வீற்றிருந்த பொழுது குயக் கொண்டான் என்பான் ஒருவன், வடமொழியே சிறந்ததென்றும் தமிழ்மொழி தாழ்ந்த தென்றும் கூறினானாக, தண்டமிழாற்றலின் தன்மையைத் தாழ்த்திப் பேசினமையைப் பொறாத -தண்ணார் தமிழைத் தம் உயிரினும் மேலாகக் கருதிய நக்கீரனார்,
முரணில் பொதியின் முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி–அரணியல்
ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன்
ஆனந்தஞ் சேர்கசுவாகா
என்று பாடியருள, அக் குயக் கொண்டான் அப்பொழுதே இறந்து வீழ்ந்தான் என்றும், சான்றோர் சிலர் அவன் அறியாமைக்கும் சாவிற்கும் வருந்தி நக்கீரனாரை அவனை மீண்டும் உயிர்ப்பிக்கக் கேட்டருள அவரும் அதற்கு இணங்கி,
ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச்–சீரிய
அந்தண் பொதியின் அகத்தியனார் ஆணையாற்
செந்தமிழே தீர்க்கசுவாகா
என்று பாடி அவனை உயிர்ப்பித்தார் என்ப.
இவரை ‘வாக்கிற்கருணகிரியார்,’ “கீதமொழி கூட்டி வேதமொழி சூட்டு கீரர்” என்று பாராட்டியுள்ளார். அளப்பரிய இவர் கல்வி வன்மை பற்றி ‘இனைவறு குறுமுனி யிலக்கணம் பெறப், புனை தரும் இலக்கியப் புலவர் சிங்கம்’ என்று பதினெட்டாம் நூற்றாண்டின் இணையிலா இலக்கியப் புலவரும் கற்பனைக் களஞ்சியமும் ஆகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாராட்டியுள்ளார். கந்தபுராணம் பாடிய கவியரசராகிய கச்சியப்ப சிவாசாரியரும், ‘பொய் யற்ற கீரன் முதலாம் புலவோர் புகழ்ந்த, ஐயன்’ என முருகன் பெருமையினைப் பாராட்டு முகத்தானே முருகனைப் பரவிய அடியவராம் நக்கீரனாரின் பெருமையினை நயம்படக் கிளத்தினர். கடைச்சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின் மரில் தலைமைப் புலவராய் இவர் வீற்றிருந்தமையே இவருடைய சீரினையும் சிறப்பினையும் புகழினையும் புலமை யினையும் நன்கு புலப்படுத்தா நிற்கும்.
கொங்குதேர் வாழ்க்கை
நக்கீரனார் வரலாற்றோடு தொடர்புடைய பாட்டாகக் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற பாட்டு காணப்பெறுகின்றது. தருமி என்ற ஏழை அந்தணன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். பெற்ற தாயையும் பேணிக்காக்கும் தந்தையையும் இழந்த தருமி வறுமையின் கொடுமையால் வாடி மெலிந்தான், அவன் நல்ல கட்டிளம் காளைப் பருவத்தினன்; திருமணம் செய்து நல்லறமாம் இல்லறத்தில் தலைப் படவேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் வேர் விட்டுத் தழைத்திருந்தது. ஆயினும் கோயிலில் அருச்சனை செய்யும் தொழிலை மேற்கொண்டிருந்த காரணத்தால், வறுமையுற்ற அவன் வாழ்வில் அவ்வெண்ணம் செயல்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நாள்தோறும் தான் பூசித்து வணங்கும் சிவபெருமானிடம் பின்வருமாறு முறையிட்டு வந்தான்:
தந்தை தாயிலேன் தனியன் ஆகிய
மைந்த னேன்புது வதுவை வேட்கையேன்.
வடிவில் இல்லற வாழ்க்கை இன்றிநின்
அடிய ருச்சனைக் கருகன் ஆவனோ.
-பரஞ்சோதி திருவிளையாடல்: 52 : 85, 86
தருமி இவ்வாறு வறுமையில் வாடி வருந்தி வரும் நாளில் பாண்டிய மன்னன் செண்பக மாறன் தன் வாழ்க்கைத் துணைவியோடு இளவேனிலின் வெம்மைத் துயர் தணியும் பொருட்டுத் தன் சோலையின் பாங்கர் அமைந்திருந்த செய்குன்றில் அமர்ந்து, அசைந்து தவழ்த்துவரும் தென்றலின் இனிமையில் தோய்ந்து கிடந்தான். தென்றலொடு நறுமணமும் கலந்து வந்தது.
வெவ்விய வேலான் வீசும் வாசமோந் தீது வேறு
திவ்விய வாச மாக விருந்தது தென்றல் காவில்
வௌவிய வாச மன்று காலுக்கும் வாச மில்லை
எவ்வியல் வாச மேயோ விதுவென வெண்ணங் கொள்வான்.
-பரஞ்சோதி திருவிளையாடல்: 52:79
தென்றற் காற்றில் மிதந்து வந்த நறுமணம் பாண்டிய மன்னனின் அறிவுக்கு வேலைகொடுத்துவிட்டது.
“காற்றிற்கு மணம் இல்லையே; நந்தவனப் பூக்களின் மணமும் அன்றே இது. இப்புதிய நறுமணம் எங்கிருந்து வருகின்றது” என்ற எண்ணத்தில் – ஆராய்ச்சியில் மனம் உளைந்தான். தன் பக்களில் அமர்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்தான். அவள் கூந்தலில் அந்த நறுமணம் கமழ்ந்ததாக எண்ணினான். வண்டும் அறியாத புதிய மணமாக அஃது அவனுக்குத் தோன்றியது. எனவே, “கூந்தல் இயற்கை மணமுடைத்தோ அன்றிச் செயற்கை மண முடைத்தோ?” என்று ஐயுற்றான். “என் ஐயப்பாட்டை அறிந்து அதற்கு விளக்கந் தரும் முறையில் உண்மையை உணர்ந்து யார் பாட்டு இயற்றுகின்றார்களோ அவர்கள் ஆயிரம் பொன்னைப் பரிசாகப் பெறுவார்கள்” என்று அறிவித்துப் பொற்கிழி ஒன்றினை மதுரைத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் கட்டி வைத்தான்.
ஐயுறு கருத்தை யாவ ராயினு மறிந்து பாடல்
செய்யுந ரவர்க்கே யின்ன வாயிரஞ் செம்பொ
கையுறை வேலா னீந்த பொற்கிழி [னென்றக்
-பரஞ்சோதி திருவிளையாடல்: 52 : 81
பாண்டியன் மனத்தில் தோன்றிய ஐயத்தை அகற்றும் வகையில் ஒரு பாடல் கிடைத்தால், தன்னுடைய தீராத வறுமையும் தீருமே என்று எண்ணி ஏங்கி நலிந்த ஏழைத். தருமி எல்லாம் வல்ல இறைவனும் சிவபெருமானிடம் தன் குறை நேர்ந்து முறையிட்டுக் கொண்டான். அவன் வேண்டுகோளை ஏற்று இறைவன் எழுதியளித்த பாட்டே இக் ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற பாட்டாகும்.
இப்பாட்டு எட்டுத் தொகை நூலில் ஒன்றாகிய குறுந் தொகையில் இரண்டாவது பாடலாக அமைந்துள்ளது– அது வருமாறு:
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோநீ அறியும் பூவே.
-குறுந்தொகை :2
குறுந்தொகையில் இப் பாடலைப் பாடியவர் பெயர் இறையனார் என்று காணப்படுகிறது. குறுந்தொகையின் இறுதியில் ‘இத்தொகை முடித்தான் பூரிக்கோ’ என்று காணப்படுகின்றமையால் சிதறுண்டு கிடந்த சங்கப் பழம் பாடல்களில் நானூற்றை அடியளவு கண்டு பார்த்துத் தொகுத்துக் ‘குறுந்தொகை’ என்ற நூலாக நமக்குத் தந்தவர் ‘பூரிக்கோ’ என்னும் நல்லார் என்று நாம் அறிகின்றோம்.
இப்பாடலின் கீழ்க் காணப் பெறும் பழங்குறிப்பு “இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன் தலைமகளை நாணின் நீக்குதற் பொருட்டு மெய் தொட்டுப்பயிறல் முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திக் கூடித் தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது” என்று காணப்படுகின்றது. ஆயினும் தமிழ்நாவலர் சரிதையில்
இந்தப் பாடலின் அடியிற் காணப்பெறும் குறிப்பு “இது தருமியென்னும் பிரமசாரிக்குப் பொற்கிழி வாங்கிக் கொடுக்க இறையனார் சிந்தா சமுத்தி பாடியது” என்று காணப்படுகிறது. இந்த ஐந்துவரிப் பாட்டினைப் பார்க்கும் பொழுது ஒன்றும் கதைக்குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இப்பாடல் புறநானூற்றில் இடம் பெறாமல் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது. பாட்டு முந்தியது; கதைக்குறிப்புப் பிந்தியது. ஆயினும் எப்படியோ இக் கதைக்குறிப்பு எக்காலத்திலோ, யாராலோ ஏற்றியுரைக்கப்பட்டு விட்டது போல் தோன்றுகின்றது. ஏனெனில் பின்வந்த நூல்களில் தருமியின் பொருட்டு இறைவனுக்கும் நக்கீரர்க்கும் இடையில் ஏற்பட்ட சொற் ‘போர்’ சுட்டிக்காட்டப் பெறுகின்றது. முதற்கண் சங்கம் என்ற சொல் நேரிடையாக வரப்பெறும் ஆளுடைய அரசராம் திருநாவுக்கரசரின் திருப்புத்தூர்த் தேவாரத்திலே இக்குறிப்பு இடம் பெற்றுள்ளது :
மின்காட்டுங் கொடிமருங்கு லுமையாட் கென்றும்
விருப்பவன்காண் பொருப்புவலிச் சிலைக்கை
யோன்காண் நன்பாட்டுப் புலவனாய்ச்சங்க மேறி
நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்
பொன்காட்டக் கடிக்கொன்றை மருங்கே நின்ற
புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு
தென்காட்டுஞ் செழும்புறவிற் றிருப்புத் தூரில்
திருத்தளியான் காணவனென் சிந்தை யானே.
கி.பி. ஏழாம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர் என்று திட்டவட்டமாக நம்பப்படுகின்ற திருநாவுக்கரசர் பெருமான் தருமியின் பொருட்டு இறைவன் புலவனாய்த் தோன்றிப் பொற்கிழி பெற்றுத் தந்ததாகக் கூறியுள்ளார். மணிவாசகப் பெருந்தகையோவெனில் இறைவன் நற்றமிழ் நூல்கள் ஆயப்பெறும் சங்கமண்டபம் சென்றுவிட்டனரோ என்று பொதுப்படக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
சிறைவான் புனற்றில்லைச்சிற்றம் பலத்துமென்
சிந்தையுள்ளும்
உறைவா னுயர்மதிற் கூடலி னாய்ந்தவொண்
டீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்
புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந்
தெய்தியதே.
-திருக்கோவையார் : 20
பக்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவி வலவராம் சேக்கிழார் பெருமானும் தம் திருத்தொண்டர் புராணத்துள்,
சென்றணைந்து மதுரையினிற் றிருந்தியநூற்
சங்கத்துள் அன்றிருந்து தமிழாராய்ந் தருளிய வங்கணர்
என்று சிவபெருமான் சங்கப்புலவருள் ஒருவராய் வீற்றிருந்தமையைக் குறிப்பிட்டுள்ளார்.
‘வையை நாடவன் மனக்கருத்துணர்ந்துய்யவோர் கவியுரைத்து’ அருளவேண்டுமென்று தருமி இறைவனை இறைஞ்சி வேண்டினான். அடியவர்தம் துயர் துடைக்கும் அருளாளனாகிய எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழு கும் அன்புருவான ஆண்டவன் தருமியின் வேண்டுகோளுக்கு இணங்கி இன்னருள் சுரந்தான். அதன் விளைவே, ‘கொங்கு தேர் வாழ்க்கை’ என்ற பாட்டு. இதனைப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் அழகுறக் கூறும்
தென்ன வன்குல தெய்வ மாகிய
மன்னர் ‘கொங்குதேர் வாழ்க்கை‘ யின்றமிழ்
சொன்ன லம்பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்தவன் இறைஞ்சி வாங்கினான்.
-பரஞ்சோதி திருவிளையாடல் : 52 : 88
தருமியும் கற்றைவார் சடையாரின் பாடல்தனைக் கைக் கொண்டு தொன்னிதி பெற்றெடுத்தவன் போன்று மகிழ்ந்து ‘கற்ற நாவலர் கழக நண்ணினான்.’ கல்வி வலார் கழகத்தில் மொழித்துறையின் முட்டறுத்து விளங்கிய மூதறி புலவர்கள் அனைவரும் பாடலைப் படித்து அதன் சொற்சுவை, பொருட்சுவையில் ஊறித் திளைத்து ‘நல்ல நல்ல வென்று’ சாற்றினார்கள். எனவே பாண்டியன் பறை சாற்றிய பரிசிற்குத் தருமி உரியவனானான். அதுபோது நக்கீரனார் குறுக்கிட்டு, குற்றம் இக் கவிக்கு உண்டென்று கூறினார். இது கேட்டுச் சிந்தை நொந்த தருமி; செய்யுள் கொண்டு இறைவன் திருமுன்னர்க் கொண்டுபோய் வைத்து, நின்றன் கவிக்குற்றஞ் சில்வாழ் நாட்சிற் றறிவுடைப் புலவர் சொன்னா லாருனை மதிக்க வல்லார் என்று குறையிரந்து நின்றான்.
இதுகேட்ட, ‘யார்க்கும் பந்தமும் வீடும் வேதப் பனுவலும் பயனுமான சிவபெருமான் புலவராய்த் தோற்றம் கொண்டார்.
கண்டிகை மதாணி யாழி
கதிர்முடி வயிரம் வேய்ந்த
குண்டலங் குடிகொண் டாகத்
தழகெலாங் கொள்ளை கொள்ளத்
தண்டமிழ் முன்றும் வல்லோன்
றானெனக் குறியிட் டாங்கே
புண்டர நுதலிற் பூத்துப்
பொய்யிருள் கிழித்துத் தள்ள
-பரஞ்சோதி திருவிளையாடல்: 52 99.
‘நூலாய்ந்தோர் வைகுந் திருந்தவைக் களத்தைச் சேர்ந்தார். அவை குறுகி ‘யாரைநங் கவிக்குக் குற்றமியம் பினார்’ என்றார். கீரன் அஞ்சாது நானே கிளத்தினேன் என்றார். பொருட் குற்றம் அக்கவிக்கு உண்டென்று நக்கீரனார். நவின்றார். கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்று எடுத்துரைத்தார். இறைவனோ தேவ மகளிர் இந்திராணி முதலியோர் கூந்தலும் அத்தன்மைத்துத் தானோ என்று கேட்டார். அவை செயற்கை மணமுடையனவே என்றார் கீரர். இறைவன் இறுதியில்,
பரவி நீ வழிபட் டேத்தும்
பரஞ்சுடர் திருக்கா ளத்தி
அரவு நீர்ச் சடையார் பாகத்
தமர்ந்தஞானப்பூங் கோதை
இரவினீர்ங் குழலு மற்றோ
வெனவஃது மற்றே யென்னா
வெருவிலான் சலமே முற்றச்
சாதித்தான் விளைவு நோக்கான்.
கற்றைவார் சடையா னெற்றிக்
கண்ணினைச் சிறிதே காட்டப்
பற்றுவா னின்னு மஞ்சா
னும்பரார் பதிபோ லாகம்
முற்றுநீர் கண்ணா னாலு
மொழிந்த நும் பாடல் குற்றங்
குற்றமே யென்றான் றன்பா
லாகிய குற்றந் தேரான்.
-பரஞ்சோதி திருவிளையாடல்: 52:105, 106
இவ்வாறு, தாம் வணங்கும் உமையம்மையின் கூந்தலும் செயற்கை மணந்தான் உடையது என்று வாதாடிய கீரனார், இறைவன் நெற்றிக் கண்ணைச் சிறிது காட்டிய நேரத்திலும் ‘முற்றுநீர் கண்ணா னாலுமொழிந்த நும் பாடல் குற்றங் குற்றமே யென்றான். ‘தன்பாலாகிய குற்றந் தேராத காரணத்தால், தேய்ந்த நாள் மதியானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப் போந்த செந்தீயின் வெம்மைக்கு ஆற்றாது பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்தார் நக்கீரனார். பின்னர்த் தம் குற்றம் உணர்ந்த நக்கீரனார் இறைவன் இன்னருளை இறைஞ்சி வேண்டி இன்னுயிர் யாக்கை பெற்றார் என்று திருவிளையாடற் புராணம் கூறிச் செல்கிறது.