மெய்ப்பொருள் நாயனாரின் சிவபக்தி

“மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்”என்ற லட்சியத்தைக் கொண்டு வாழ்ந்த அரசர் மெய்ப்பொருள் நாயனார். அவருடைய பகைவன் முத்திநாதன் எத்தனையோ தடவைகள் படை எடுத்து வந்து நாயனாரை வெல்ல முடியாமல் தோற்று ஓடிப் போனான். நேருக்கு நேர் நின்று அவரை வெல்லும் ஆற்றல் தனக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவ்வஞ்சகன் எப்படியாவது அவரைக் கொன்றுவிட வேண்டுமென்று முடிவு கட்டினான்.

மெய்ப்பொருள் நாயனார் மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள் எனக் கொண்டு வாழ்பவர் என்பதை அவன் உணர்ந்தவனாகையால் சிவனடியார் வேடம் தாங்கிச் சென்றான். உடம்பெல்லாம் நீறு பூசிக் கையிலே ஒரு புத்தகக் கட்டுப் போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதில் மறைவாக ஒரு வாளைச் செருகிக் கொண்டு போனான். நேரே மெய்ப்பொருள் நாயனாரை அணுகி, “எங்கும் கிடைக்காத ஓர் ஆகம நூல் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதை உனக்கு உபதேசிக்கலாம் என்று வந்தேன்” என்றான். நாயனார் அந்த உபதேசத்தைக் கேட்கப் பணிந்து நின்றபோது அந்த வஞ்சகன் வாளை உருவி அவரைக் குத்தி விட்டான். அப்பொழுது அவர் அவனை எதிர்க்கவில்லை. அவனைத் தொழுவதையும் நிறுத்தவில்லை. இதைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் சொல்கிறார்.

“கைத்தலத் திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும்போழ்தில் பத்திரம்
வாங்கித் தான்முன் நினைந்த அப் பரிசே செய்ய மெய்த்தவ
வேட மேமெய்ப் பொருள்எனத் தொழுது வென்றார்”

என்பது அவர் பாடல்.

முத்தி நாதன் மெய்ப்பொருள் நாயனாரைத் தொலைத்து விட வேண்டுமென்று வந்தவன். அவன் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான். அதுவரையில் பலமுறை போர் செய்து மெய்ப் பொருளாரை வெல்ல முடியாமல் தோல்வியுற்றே வந்தான். இப்போதோ சேனை இல்லாமலே ஒரு வாளைக் கொண்டே தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான். ஆகவே, அவன்தான் வெற்றி அடைந்தான் என்று சொல்ல வேண்டும். மெய்ப் பொருளார் உயிர் விடும் நிலையில் இருக்கிறார். அவர் முத்திநாதனுக்கு வெற்றியை வழங்கி விட்டார். இனி உயிரை வழங்கப் போகிறார். அப்படியிருக்கச் சேக்கிழார் இந்தப் பாட்டில் மெய்ப்பொருள் நாயனார் வென்றார் என்று சொல்லி யிருக்கிறார். அது பொருந்துமா?

சேக்கிழார் மாத்திரம் இப்படிச் சொல்லவில்லை. பெரிய புராணத்துக்கு ஆதாரமாகிய திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இப்படியே சொல்கிறார்.

“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்”

என்று பாடுகிறார். இதைச் சற்றே ஆராய வேண்டும்.

முத்திநாதன் கத்தியால் குத்தியவுடனே மெய்ப் பொருள் நாயனார் இறந்து விடவில்லை. கத்தி அவர் மார்பிலே இருக்கிறது. புற உடம்பு துடிக்கிறது. “வஞ்சனைக் காரன் குத்திவிட்டான் பார்!”என்று துடிக்கிறது மனம். கத்தியால் முத்திநாதன் குத்தியபோது புறத்திலே அவன் தாங்கி நின்ற சிவனடியாரின் தவவேடம் கலையவில்லை. அது அப்படியேதான் இருந்தது. மெய்ப்பொருள் நாயனார் கை கூப்பியது எதற்காக? அந்தத் தவ வேடத்திற்காகத்தான். அந்த வேடம் கலையாமல் அப்படியே இருக்கும்போது கூப்பிய அவரது கை, வாள் எடுத்து அவனோடு போராடலாமா? போராட வேண்டும் என்றது புறச் சரீர அபிமானம், “கூடாது. மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள் என்று நீ வாழ்வதனால்தானே மெய்ப்பொருள் நாயனார் என்கிற புகழையும் பெற்றாய்? அத் தவவேடம் அப்படியே உள்ளது. ஆகவே கூப்பிய கை பிரியக்கூடாது”என்றது பலகாலமாகக் கடைப்பிடித்து வரும் கொள்கை அபிமானம்.

மெய்ப்பொருள் நாயனார் முத்திநாதன் குத்திய செயலை மாத்திரம் பார்த்து, அவன் பூண்டிருக்கும் வேடத்தை மறக்கவில்லை. கத்தி மார்பிலே பாய்ந்தபோது அவருக்கு வலி இருந்திராதா? நிச்சயமாக இருந்திருக்கும். தம்மைக் கத்தியால் குத்தியவன் வஞ்சகன், சிவனடியார் வேடத்தைப் புனைந்து தன் முன் நிற்கிறான் என்பதை அவர் உணரவில்லையா? உணர்ந்தார். இருந்தும் அவன் சிவவேடம் கலையாமல் நின்றான். ஆகையால் அவனைத் தொழுதார்.

அவனை ஓடிவந்து தாக்கப்போன காவலாளியாகிய தத்தனிடம், “தத்தா, இவர் நம்மவர்; இவருக்கு எவ்விதத் தீங்குமின்றி நீயே துணையாகச் சென்று வெளியே விட்டுவிட்டு வருவாயாக” என்று பணித்துக் கீழே விழுந்தார். மெய்ப் பொருள் நாயனாரின் இருதயத்தில் ஊன்றி நின்ற கொள்கை அபிமானத்திற்கும், அவரது சரீர அபிமானத்திற்கும் நடந்த சண்டையில் சரீர அபிமானம் செத்தது; அவருடைய உடம்பு இறந்தேவிட்டது. ஆயினும் அவர் லட்சியம் வென்றது.”தங்கள் ஆணைப்படியே அவனை ஆபத்து இன்றி ஊருக்கு வெளியே கொண்டுபோய் விட்டு வந்தேன்”என்று தத்தன் மீண்டு வந்து சொல்லும் அளவும் உயிரைத் தாங்கி நின்றார். அதனால் மெய்ப்பொருள் நாயனார் வென்றார். தொழுத கையைக் கடைசி வரையிலும் பிரிக்காது, தம் கொள்கையிலே கொண்ட முறுகிய காதலால் சரீர அபிமானம் செத்துப் போகச் செய்து மெய்ப்பொருள் நாயனார் வென்றார். ஆகவேதான்,

“மெய்த்தவ வேட மேமெய்ப் பொருளெனத் தொழுது வென்றார்”என்கிறார் சேக்கிழார்.

மெய்ப்பொருள் நாயனாரும் முத்திநாதனும் சமமான நிலையிலிருந்து ஒருவரை ஒருவர் எதிர்த்தால் அதைப் போரென்று சொல்லலாம். போரில் வெற்றி தோல்வி உண்டு. இன்னார் வென்றார், இன்னார் தோற்றார் என்று சொல்லலாம். இங்கே மெய்ப்பொருளார் உபதேசம் கேட்கப் பணிந்தார். முத்திநாதன் வாளெடுத்துக் குத்தினான். அவன் செய்தது போரன்று. அது கொலை. ஆகவே அவன் வெற்றி பெற்றான் என்று சொல்வது பிழை. அவன் நினைத்த எண்ணம் கைகூடியது என்று வேண்டுமானால் சொல்லலாம். அவனுக்கு வெற்றி இல்லை என்றால், மெய்ப் பொருளாருக்குத் தோல்வியும் இல்லை.

வஞ்சகன் மார்பிலே கத்தியைச் செருகியபோதும் அவன் தவவேடம் கண்டு தொழுத கை பிரிக்காது நின்ற மெய்ப்பொருள் நாயனாரது நிலை மிகவும் உயர்ந்தது. இறைவன் திருவருளைச் சிந்தித்து வாழ்வார் களுக்கு இத்தகைய நிலை வரும்.

ஓம் நமசிவாய ஓம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *