மாணிக்கவாசகர் வரலாறு

செந்தமிழ்ப் பாண்டிநாட்டிலே திருவாதவூரிலே ஆமாத்திய அந்தணர் குலத்திலே இறைவனருளால் தோன்றியவர் திருவாதவூரர். இளமையிலே எல்லாக் கலைகளையும் பயின்ற வாதவூரரைப் பாண்டியன் தன் அமைச்சராக அமர்த்தித் தென்னவன் பிரமராயன் என்ற சிறப்பளித்துப் பாராட்டினான். வாதவூரர் பாண்டியனுக்கு அமைச்சராய் அறநெறி வழுவாமல் தம் கடமையைச் செய்து வந்தார். ஆயினும் உலகியற் பற்றின்றி மெய்ப்பொருளுணர்த்தவல்ல அருட்குருவை நாடியிருந்தார்.

சோழநாட்டுக் கடற்கரையில் வெளிநாட்டிலிருந்து குதிரைகள் வந்திறங்கிய செய்தியை அறிந்த பாண்டியன் வாதவூரரை அழைத்து நல்ல குதிரைகளை வாங்கி வரும்படி பெரும்பொருள் கொடுத்துப் பரிசனங்களுடன் அனுப்பினான். அங்கயற்கண்ணியுடன் அமர்ந்தருளும் ஆல்வாயிறைவரை வணங்கி மதுரையிலிருந்து புறப்பட்ட வாதவூரர் தென்வெள்ளாற்றின் கரையிலுள்ள திருப் பெருந்துறையை அடைந்தார். அந்நிலையிற் சிவபெருமான் வாதவூரரை ஆட்கொள்ளவேண்டி அந்தணராய்க் குருவடிவந் தாங்கிக் குருந்த மரத்தடியில் எழுந்தருளி மாணாக்கர் பலர்க்கும் சிவஞானப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தார். அவ்வழகிய திருக்கோலத்தைக் கண்ட வாதவூரர் குருமூர்த்தியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கித் தம்மை ஆண்டு கொண்டருளும்படி வேண்டி நின்றார். குருவாய் எழுந்தருளிய இறைவன் வாதவூரர்க்கு ஞானதீட்சை செய்து திருவைந்தெழுத்தை உபதேசித்தருளினார். குருவருள் பெற்ற வாதவூரர் தம் குருவே சிவமெனக் கொண்டு உடல் பொருள் ஆவியனைத்தையும் ஆசிரியர்க்கு உரிமையாக்கி உள்ளங்கசிந்துருகி அழகிய மாணிக்க மணி போலும் சொற்களால் இயன்ற திருவாசகச் செழும்பாடல்களைப் பாடிப் போற்றினார். அதனைக் கேட்டு மகிழ்ந்த குருமூர்த்தி மாணிக்கவாசகர் எனப் பெயர் சூட்டித் திருக்கோயிற் பணிசெய்யப் பணித்து அடியார் கூட்டத்துடன் மறைந் தருளினார்.

மாணிக்கவாசகர் துறவுக்கோலந் தாங்கித் தாம் கொண்டுவந்த பொருள்களையெல்லாம் அரன் பணிக்கும் அடியார்க்கும் செலவு செய்தார். குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் செயலையறிந்த பாண்டியன் ‘குதிரையுடன் விரைவில் வருக’ என ஓலை போக்கினான். அவ்வோலையைக் கண்டு திகைப்புற்ற வாதவூரர் பெருந்துறைப் பெருமானிடம் சென்று முறையிட்டார். பெருந்துறையிறைவரும் வாதவூரரை நோக்கி ‘நாம் ஆவணி மூலத்தில் குதிரைகளைக் கொண்டுவருவோம். நீ முன்னர்ச் செல்க. இம்மாணிக்கக்கல்லை அரசனிடம் கொடுக்க’ என்று கூறி ஒரு மாணிக்கக்கல்லையும் கொடுத்து அனுப்பினார்.

அதனைப் பெற்றுக்கொண்டு மதுரையை அடைந்த வாதவூரர் பாண்டியனிடம் அம்மணியைப் பரிசாகத் தந்து ஆவணி மூலத்தில் குதிரை வரும் என்று. கூறினார். பாண்டியனும் மகிழ்ந்திருந்தான். சொல்லியபடி ஆவணிமூலத்தில் குதிரை வாராமை சினமுற்ற பாண்டியன் மாணிக்கவாசகரைச் சிறையிலடைத்துத் துன்புறுத்தினான். அப்போது மணிவாசகர் இறைவன் திருவருளையெண்ணி ‘நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே’ என்ற மனத்திண்மையுடன் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டிருந்தார். அந்நிலையிற் பெருந்துறையிறைவர் நரிகளையெல்லாம் பரிகளாக்கித் தாமே குதிரைச் சேவனாக ஆவணி மூலத்தன்று மதுரைக்கு வந்து குதிரைகளைப் பாண்டியனிடம் ஒப்படைத்து மறைந்தருளினார்.

அன்றிரவே வந்த குதிரைகளெல்லாம் நரிகளாக மாறி ஊளையிட்டுப் பழைய குதிரைகளையும் கடித்துத் துன்புறுத்திக் காடு நோக்கி ஓடின. அதயறிந்து வெகுண்ட பாண்டியன் மாணிக்கவாசகரை வைகைச் சுடுமணலில் நிறுத்தி அவர் முதுகிலும் கைகளிலும் கற்களையேற்றித் தண்டித்தான். மாணிக்கவாசகரது கடுந்துயர் கண்டு திருவுளமிரங்கிய ஆலவாய் இறைவர் வைகையாற்றில் பெருவெள்ளம் பெருகச் செய்தார். அந்நிலையில் மதுரை நகரமக்கள் வீட்டிற்கு ஒவ்வொருவராக வந்து வைகைக் கரையினை விரைந்து அடைக்கும்படி பாண்டியன் கட்டளையிட்டான். பிட்டு விற்று வாழும் செம்மனச் செல்வியாராகிய வந்தியம்மையார் தமக்குரிய பங்கினை அடைத்தற்கு ஆளின்மையால் பெரிதும் வருந்தினார். ஆலவாயிறைவரே மண்வெட்டும் கூலியாளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து கரையடைக்கச் சென்றார். தாமும் கரையினையடைக்காமல் மற்றவர் அடைத்த கரையையும் சிதைத்து ஓடித் திருவிளையாடல் புரிந்தார். வந்தியின் பங்குமட்டும் அடைபடாமலிருந்ததைக் கண்ட பாண்டியன் வெகுண்டு ஆவரைப் பிரம்பால் அடித்தான். அடிபட்ட ஆள் ஒரு கூடை மண்ணைக் கொட்டி மறைந்தார். கரை அடைப்பட்டது. வெள்ளமும் தணிந்தது.

அரசன் அடித்த அடி அவன் முதுகிலும் மற்றைய எல்லாவுயிர்கள் முதுகிலும் பட்டது. பாண்டியன் இறைவனது திருவிளையாடலையும் மணிக்கவாசசரது பெருமையையும் உணர்ந்தான். தான் செய்த பிழைகளைப் பொறுத்தருளும்படி மாணிக்கவாசகரை வணங்கி வேண்டினான். மாணிக்கவாசகர் பாண்டியனை வாழ்த்தி அமைச்சர் பதவியைத் துறந்து திருப்பெருந்துறை திருவுத்தரகோசமங்கை, திருவாரூர். திருவிடைமருது, திருத்தோணிபுரம். திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம் முதலிய தலங்களை வணங்கிப் பாமாலைகள் பாடிப் போற்றித் தில்லைப்பதியை அடைந்தார். கூத்தப்பெரு மானை நாளும் வழிபட்டுத் திருவாசகப் பாடல்கள் பல பாடியருளினார்.

ஈழத்திலிருந்து வந்த புத்தகுருவை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப் பேசவைத்தார். புத்தர்கள் சைவராயினர்.

இறைவன் அந்தணராய் மணிவாசகரையணுகி அவர் பாடிய திருவாசகம் முழுவதும் ஓதக் கேட்டு எழுதிக் கொண்டார். கூத்தப்பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அகத்திணைக்கோவை பாடித் தருக எனக் கேட்டுத் திருச்சிற்றம்பலக்கோவையினை மணிவாசகர் பாடிவர, அதனையும் எழுதிக்கொண்டு, மாணிக்க வாசகன் சொல்ல ‘அழகிய திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது’ எனக் கையொப்பம் இட்டு அவ்வேட்டினைப் பொன்னம்பலத்தில் திருக்களிற்றுப்படியிலே வைத்து மறைந்தருளினார்.

மறுநாட்காலையில் தில்லைவாழந்தணர்கள் அப் புதிய சுவடியைக் கண்டு வியந்து மாணிக்கவாசகரை அடைந்து அப்பாடல்களுக்குப் பொருள் விரித்தருளும்படி வேண்டினர். தில்லைவாழந்தணர்களுடன் தில்லைப் பெருங்கோயிலையடைந்த திருவாதவூரடிகள் இத்திரு வாசகத்திற்குப் பொருளாவர் தில்லைச்சிற்றம்பலவராகிய இவரே எனச் சுட்டிக்காட்டி அங்குள்ளார் யாவருங்காண அம்பலவாணர் திருவடிச்சோதியில் இரண்டறக் கலந்தார்.

ஓம் நமசிவாய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *