குவியாத கரங்கள்

உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளச் சில அடையாளங்களைக் காட்டுகிறார்கள். கையை நெற்றியில் வைத்து வணங்கும் வழக்கம் பல நாடுகளில் இருக்கிறது. உள்ளங் கை பூமியைப் பார்க்க மார்பிலே வைத்துக் காட்டுவாரும் உண்டு. நாக்கை நீட்டி மரியாதை செய்வாரும் உண்டு.

நம்முடைய நாட்டில் நான்கு வகையில் வணக்கத்தை வெளிப்படுத்துகிறோம். வேகமாகப் போகும்போது கையைக் கூப்பிக் கும்பிடுகிறோம். சிறிதுநேரம் இருந்தால் கையைக் கூப்பும்போதே தலையைச் சிறிது குனிந்து வணங்குகிறோம். சற்றுப் பெரியவர்கள் வீட்டுக்கு வந்தால் இரண்டு கைகளையும் பூமியில் வைத்து முழங்காலை மண்டி யிட்டுக்கொண்டு நெற்றி நிலத்தில் படும்படியாக வணங்கு வதும் உண்டு; இதற்குப் பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயர். தலை, இரண்டு கை, இரண்டு கால் ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் படுவதால் பஞ்சாங்க நமஸ்காரம் என்று பெயர் வந்தது. பெண்கள் இப்படி வணங்குவது வழக்கம். ஆண்டவன் சந்நிதியில் வணங்கும்போது சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறோம். சாஷ்டாங்கம் என்பதற்கு எட்டு அங்கங்களுடன் செய்வது என்று பொருள். நெற்றி, இரண்டு கை, மார்பு, இரண்டு பாதம், இரண்டு முழங்கால் ஆகியவை நிலத்தில் படும்படியாக வணங்குவது சாஷ்டாங்க நமஸ்காரம்.

கீழே விழுந்து வணங்குவதைத் தண்டம் சமர்ப்பிப்பது என்றும் சொல்வார்கள். அதற்கு அபராதம் செலுத்துவது என்று பொருள் அல்ல. தண்டம் என்பது தடி. தடி சாய்ந்து விழுவது போல உடம்பு ஆண்டவன் சந்நி தானத்தில் கீழே விழுந்து வணங்குவதனால், தண்டம் சமர்ப்பிப்பது என்று கூறுவர். ‘தண்டாகாரமாக விழுந்தேன்’ என்று சொல்வது உண்டு. அது ‘செய்யும் செயல் எல்லாவற்றையும் நான் விட்டு விட்டேன்’ என்பதற்கு அறிகுறி. இறைவனுடைய சந்நிதானத்தில் இந்த உடம்பு கீழே கிடப்பதை அன்றி இதற்கு வேறு வேலை ஒன்றும் இல்லை.

கர்மேந்திரியங்களுக்குள் சிறந்தது கை. அது இறைவனை வணங்குவதில் ஈடுபடவில்லையே என்று அருணகிரி நாதர் வருந்துகிறார். “என்னுடைய கை நன்றாக இருக்கிறது. ஆனாலும் அது உன்னைக் கும்பிடவில்லை. அஞ்ஞானத்தி னாலே உன்னைப் போற்றிக் குவியாத கரங்கள் எங்கே வந்து எனக்கு இப்படி வாய்த்தன!” என்று அவர் இரங்குகிறார். அதற்கு முன்பு அவர் சொல்லும் வரலாறுகள் அவரது சமரச மனோபாவத்தைக் காட்டுகின்றன.

அருணகிரிநாதரிடம் சென்று, “சுவாமி, வாழ்வில் உய்வு பெறுவதற்கு யாரோ ஒருவருடைய தாளில் வணங்க வேண்டும், அன்பால் கை கூப்பி அவரைப் போற்ற வேண்டும் என்று சொன்னீர்களே அந்தப் பெருமான் யார்? அவரை எங்கே காணலாம்? அவரிடம் என்னை அழைத்துக் கொண்டு போகிறீர்களா!”என்று ஒருவன் கேட்பதாக வைத்துக் கொள்வோம்.

அருணகிரியார் அவனை அழைத்துக்கொண்டு முருகப் பெருமானுடைய திருமாளிகைக்குப் போகிறார். இனி நடப்பவற்றைச் சற்றே கற்பனை செய்து பார்க்கலாம்.

குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழையும்போதே திண்ணை யில் ஒருவர் படுத்துக் கொண்டிருக்கிறதைப் பார்க்கிறார்கள். உடன் வந்தவன் அவரே தாம் பார்க்கவந்த கடவுள் என்று எண்ணி விவரம் தெரிந்துகொள்ள அருணகிரியார் பக்கம் திரும்புகிறான். அப்போது அவர் சொல்கிறார்;

கவியால் கடல் அடைத்தோன்.

“முருகப் பெருமானுடைய மாமனாராகிய திருமால் அப்பா இவர். பத்து விதமான அவதாரங்கள் எடுத்துக் களைத்துப் போய் மாப்பிள்ளையின் வீட்டுத் திண்ணையில் வந்து படுத்திருக்கிறார். இவர் எடுத்த அவதாரங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தால் நேரம் பிடிக்கும். ஒன்று மாத்திரம் சொல்கிறேன். இராமாவதாரத்தில் இவர் செய்த அற்புதத்தைச் சற்றுக் கேள். சீதா பிராட்டியை இராவணன் தூக்கிச் சென்று இலங்கையில் சிறை வைத்து விட்டான். இவர் நினைத்திருந்தால் பிராட்டியைத் தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே தம்மிடத்தில் அழைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. பிராட்டி சிறைப்பட்டிருந்த இலங்கை சென்றார் . விபீஷணனுக்கு அருள் செய்யவேண்டி அவன் இருந்த இடத்திற்கே போனார். அப்படிப் போகும்போது இடையிலுள்ள கடலுக்குப் பாலம் கட்டிச் சென்றார். அந்தப் பாலத்தை அவர் தாமாகக் கட்டவில்லை. குரங்குகளைப் படையாகக் கொண்டு கடலை அடைத்துப் பாலம் கட்டச் செய்தார். அத்தகைய பெரியவராகிய இவருடைய மருகன் தான் நாம் பார்க்கப் போகிற பெருமான்” என்று அருணகிரியார் இராமாவதாரத் திருமாலை அறிமுகம் செய்து வைக்கிறார்.

கவியால் கடல் அடைத்தோன் மருகோனை.

“குரங்குகளினால் கடலை அடைத்த திருமாலின் மாப்பிள்ளையாகிய முருகனைப் பார்க்கலாம் வா” என்று உள்ளே அழைத்துப் போகிறார்.

கூடத்தில் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். அவர் உடம்பெல்லாம் பாம்புகள் தொங்குகின்றன. அந்தப் பாம்புகளைக் கண்டவுடன் வந்தவனுக்கு அச்சம் உண்டாகிறது. கண்ணை மூடிக்கொண்டு அருணகிரி நாதருடைய கையை இறுகப் பிடித்துக் கொள்கிறான். சில பாம்புகளுக்குப் பல படங்கள் இருக்கின்றன. எல்லாமே படமெடுத்து ஆடுகின்றன. ஒரே படங்களின் கூட்டம். படத்தை எடுத்துக் கொண்டு சீறி வரும் பாம்பைப் பார்த்து யார்தாம் அஞ்ச மாட்டார்கள்? பாம்புக்குக் கட்செவி என்று ஒரு பெயர். அதற்குக் காது இல்லை. கண்ணே அதற்குக் காதாகவும் உதவுகிறது. ஒளியையும் ஒலியையும் ஏற்றுக்கொள்ளும் கண்ணே செவியாக இருக்கிறது. அந்தப் பாம்புகளை அங்கே அமர்ந்திருக்கிற பெருமான் ஆபரணம் ஆக அணிந் திருக்கிறார். வீட்டிற்குள் நுழையும் போதே அருணகிரியார் ஒரு குரங்காட்டியைக் காட்டினார். இப்போது ஒரு பாம்பாட்டியைக் காட்டுகிறார். “இந்தப் பாம்பாட்டியைக் கண்டு அஞ்சாதே. இவர்தாம் நாம் காண வந்திருக்கும் குழந்தைப் பெருமானாகிய முருகனுக்குத் தந்தை. இவருடைய பிள்ளையைத்தான் நாம் பார்க்க வேண்டும்” என்று தம்முடன் வந்திருப்பவனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

கணபணக் கட்செவியால் பணிஅணி கோமான் மகனை.

கணம் – கூட்டம். பணம் – படம். கூட்டமான படங் களை உடைய, கண்ணும் காதும் ஒன்றாக இருக்கிற கட் செவியாகிய பாம்பை ஆபரணமாக அணிந்துகொள்ளும் சிவபெருமானாகிய இந்தக் கோமான் மகனை நாம் காண வந்திருக்கிறோம் என்று அழைத்துப் போகிறார் அருணகிரியார்.

‘நஞ்சு கொப்புளிக்கும் நாகம் அவனுக்கு ஆபரணமாக விளங்குகிறது. “பாம்புகளைச் செயல் அடங்கச் செய்து அணியாகச் சூட்டிக் கொண்டிருக்கிற பெருமான் இவர். இவருடைய பிள்ளையைத்தான் நாம் பார்க்கப்போகிறோம்’ என்கிறார் அருணகிரியார்.

“இத்தனை பெருமையுடைய மாமாவுக்கு மாப்பிள்ளையாகவும், அப்பாவுக்குப் பிள்ளையாகவும் உள்ள அந்தக் குழந்தைப் பெருமான் எப்படி இருப்பார் சுவாமி? அவருக்கு என்று தனிப்பெருமை ஏதாவது உண்டா?”என்று உடன் வந்தவன் அருணகிரியாரைக் கேட்கிறான். அருண கிரியார் சொல்லத் தொடங்குகிறார்.

திறல் அரக்கர் புவியார்ப்பெழத்தொட்ட போர்வேல் முருகனை.

முருகப் பெருமானுடைய வீரத்தைச் சொல்கிறார், முருகப் பெருமான் தன் திருக்கரத்தில் வேல் தாங்கி இருக்கிறான் அந்த வேல் ஞானம்.

நல்லவற்றையும், நல்லவர்களையும் குலைப்பதையே தம் வேலையாகக் கொண்டவர் அசுரர். அவர்கள் முருகன் திரு அவதாரம் செய்த காலத்திலேயே, “ஐயோ! இனி நாம் ஒழிந்துபோவோம்!”என்று அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

“கடல் அழக் குன்று அழச் சூர் அழ விம்மி அழும்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவன் என்று ஓதும் குவலயமே.”

முருகப்பெருமான் குழந்தைப் பிராயத்தில் அறுவர் பாலுக்கு ஆசைப்பட்டு விம்மி அழுதான். அந்த அழுகை கேட்ட அசுரர்கள் அவன் எப்போது நம்மேல் போர் தொடுக்க வேலைத் தொடுவானோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மெலிந்தவர்கள் அல்ல. மிக்க வீரம் பொருந்தியவர்கள்.

திறல் அரக்கர்.

நெஞ்சில் ஈரம் இல்லாத வீரம் உள்ள திறல் அரக்கர்; நன்மையைக் குலைக்கின்றவர்கள். நல்லவர்களுக்குத் துன்பம் விளைத்து, அவர்கள் அழக்கண்டு களிக்கும் இயல்பு உடையவர்கள். அவர்களைக் குலைப்பதற்கு முருகன் வேலைத் தொட்டான். தொடுதல் என்ற சொல்லுக்கு ஏவுதல் என்றும் உபயோகித்தல் என்றும் பொருள் உண்டு. ஆனால் இங்கே தீண்டுதல் என்று பொருள் கொள்வது சிறப்பு. முருகன் வேலைக் கையில் தொட்ட மாத்திரத்தில் அதனுடைய எதிரொலியாக அச்சத்தால் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் அசுரக் கூட்டத்தில் பெரிய ஆரவாரம் எழுந்தது என்று பொருள் கொள்வது மிகவும் சிறப்பாகும். முருகப் பெருமான் போருக்கு வேலைத் தொட்டதைத் தேவர்கள் பார்த்தார்களோ இல்லையோ, சிவபெருமான் பார்த்தாரோ இல்லையோ, அல்லது எம்பெருமாட்டி பார்வதி பார்த்தாளோ இல்லையோ, வைத்த விழி வாங்காமல் முருகன் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று பார்த்து வந்த அசுரக்கூட்டங்கள் அவன் போர் வேலை எடுத்தவுடன் பார்த்து விட்டன.

அது அசுரர்களுடைய உலகத்தில் எழும்பிய புலம்பல் ஒலியினால் நன்றாகத் தெரிகிறது. தவத்தினால் திறல் பெற்ற அசுரர்கள், படையினால் திறல் பெற்ற அசுரர்கள், உடம்பு வலிமையினால் திறல் பெற்ற அசுரர்கள், உறவினர்களின் கூட்டத்தால் திறல் பெற்ற அசுரர்கள் ஆகையால் திறல் அரக்கர் என்று சொல்கிறார் அருண கிரியார். அவர்களுடைய உலகத்தில் முருகன் போர் வேலைத் தொட்டவுடனேயே ஆர்ப்பு எழுந்தது. “ஐயோ! நம்முடைய வைரி வேலை எடுத்துவிட்டானே! நம்மை அழிக்கப் பிறந்த குழந்தை தன் சிறு கையிலே வேலைத் தொட்டுவிட்டானே! இனி நாம் உய்ய முடியாது போல் இருக்கிறதே!”என்ற புலம்பல் அசுரர் உலகத்தில் எழுந்துவிட்டது.

திறல் அரக்கர் புவிஆர்ப் பெழத்தொட்ட
போர்வேல் முருகனை.

முருகன் வேலைப் பிரயோகம் பண்ணவேண்டுமென்பது இல்லை. வேலை எடுத்த மாத்திரத்தில் அசுரர்களுடைய உலகத்தில் துன்ப ஆரவாரம் எழுந்தது.

விளக்கைக் கொண்டு வரும்போது இருள் ஓடுவதைப் போல ஞானம் தோற்றும்போது அஞ்ஞானம் குலைந்துபோகும். அசுர சம்பத்துக்களாகிய தீய குணங்கள் ஞானம் தோன்றும் போது நிலைகுலைந்து கெட்டுவிடும். அப்படி எம்பெருமான் வேலைத் தொட்டவுடனேயே அசுரர்கள் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.

இப்படி அஞ்ஞானத்தைப் போக்கி, ஞானத்தையே வேலாகக் கைப்பற்றிய எம்பெருமானைப் போற்றித் தொழா விட்டால் நம்முடைய கை பயன் அற்ற கை ஆகிவிடும். அவன் கை, வேல் எடுக்கும் தன்மை உடையது. அஞ் ஞானத்தைப் போக்குவதற்குரிய திருவிளையாட்டைச் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டது. நம்முடைய கை செயல் ஒழிந்து அவன் முன்னால் குவிவதையே கடமையாகக் கொள்ள வேண்டும்.

ஓம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *