
கிருஷ்ண அவதாரம் முடிவு பெறுதல்
பாரதப்போரில் கண்ணன் நேரிடையாகப் பங்கு கொண்டதால் பலராமன் தனக்கு வேண்டிய மாணவனாகிய துரியோதனனுக்கு நேரிடை உதவி செய்ய முடியாமல் போய்விட்டது. விதுரனும் பலராமனும் கோயில் தலங்கள் சென்று வழிபட வெளியேறி விட்டனர்; பலராமனின் சேனைகள் துரியனுக்குத் துணை செய்தன. கண்ணன் அதை மறுக்கவில்லை கண்ணன் பூமியின் சுமையைக் குறைக்கப் பிறந்தான். இதனைச் சகாதேவன் நன்கு சுட்டிக்காட்டினான்.
கண்ணன் தூது போதற்கு முன் ஐவரையும் அவரவர் மனக்கருத்து யாது? என்று கேட்டான். சகாதேவன் மட்டும் “உன் மனக்கருத்து எதுவோ அதுவே என் மனக்கருத்து” என்று கூறினான். ‘பாரதப்போர் வாராமல் தடுக்க முடியுமா?’ என்று கண்ணன் கேட்டான்.
“கன்னனை அரசனாக்க வேண்டும்; அவனோடு சபதமொழி பேசிய அர்ச்சுனனை முதலில் கொல்ல வேண்டும்; முடிக்காமல் இருக்கும் திரௌபதியின் கூந்தலைக் களைந்து மொட்டை அடிக்க வேண்டும்; அப்பொழுது வீமனின் சபதத்துக்கு வேலை இல்லாமல் போய்விடும்; அதைவிட உன்னைக் கட்டிப்போட்டு விட்டால் பாரதப் போரே நிகழாது” என்று அழகாகக் கூறினான்.
கண்ணன்தான் பாரதப் போர் மூளுதற்கும், முடிதற்கும் காரணம் என்பதைச் சொல்லி முடித்தான்.
“நீ பாரத அமரில் யாவரையும் நீறுஆக்கிப் பூபாரம் தீர்க்கப் புரிந்தாய்; புயல்வண்ணா;”
என்று கூறுகிறான். பூபாரம் தீர்க்கும் கடமையைக் கண்ணனும் முடித்துவிட்டான்.
பாரதப்போருக்குப் பின்னும் பூசல்கள் நீண்டு கொண்டே இருந்தன. பலராமன் கட்சி, கண்ணன் கட்சி என்று இருவேறு கட்சிகள் உண்டாயின. யாதவர்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு செத்துக் கொண்டிருந்தனர்.
கண்ணனால் அவரவர் அறிவின்மையால் அடித்துக் கொண்டு சாவதை நிறுத்த முடியவில்லை. அவர்களே தமக்கு எதிரிகளாக மாறிவிட்டனர். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் தங்களுக்குள் சண்டை யிட்டுக் கொண்டனர். மது அருந்தி மதி கெட்டனர். “நான் சமைத்த அன்னம் சிறந்தது. நீ சமைத்தது தாழ்ந்தது” என்று சின்ன விஷயங்கள் பேசிச் சினம் கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.
அவர்கள் தத்தம் ஆயுதங்களைக் கொண்டனர்; தாக்கி அவை எல்லாம் போதவில்லை என்று கடற்கரையில் கோரை முள் வடிவத்தில் மறைந்திருந்த உலக்கையை எடுத்துக்கொண்டு தாக்கிக் கொண்டனர், உலக்கை ஒன்று துகளாகி அது கோரைப்புல்லாக வளர்ந்துவிட்டது. அதன் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது.
விசுவாமித்திரர், கண்ணுவ முனிவர், நாரதர் இம்மகா முனிவர்களை யாதவ இளைஞர் சந்தித்தனர். பிண்டாரகம் என்னும் நதியின் கரையில் அவர்கள் இருந்தனர்; கர்வம் பிடித்த இந்த யாதவ இளைஞர்கள் சாம்பவதியின் மகனான சாம்பனைப் பெண் பிள்ளையைப் போல் அலங்கரித்து அம் முனிவர்களின் முன்நிறுத்தி, “இப் பெண்பிள்ளை பிள்ளை தாய்ச்சி, இவள் பெறப்போவது பெண்ணா? பையனா?” என்று கேட்டனர் அவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.”உலக்கை” என்றனர். அவர்கள் இட்ட சாபப்படி அவனுக்கு ஓர் உலக்கை பிறந்து விட்டது; இரும்பு உலக்கை; அதனை உக்கிரசேனன் பொடியாக்கிக் கடற்கரையில் போட அப்பொடி கோரைகளாய் முளைத்தன. அதன் மிகுதித் துண்டு ஒன்று அம்பின் முள்ளைப் போன்று இருந்தது. அதையும் கடலில் தூக்கி எறிய, அதனை ஒருமீன் விழுங்கி விட்டது. அதனைச் செம்படவர் அரிந்த போது அதன் வயிற்றில் இருந்த அவ் இரும்பு முள்ளை எடுத்துப் போட அவ்வழி வந்த வேடன் ஒருவன் தன் அம்பில் செருகிக் கொண்டான். இந்த அம்பு மிகக் கூரியது.
இந்தக் கோரைப் புல்களைப் பிடுங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு சர்வ நாசம் அடைந்தனர். பலராமனும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து யோக நெறியில் நின்று தம் தேகத்தைவிட்டு விட்டுத் தன் பழைய நிலையை அடைந்தான். கண்ணனும் தாருகன் என்ற அவனுடைய தேர் ஓட்டியும் மட்டும் எஞ்சினர்.
தாருகனை அனுப்பி அருச்சுனனை அத்தினாபுரத்திலிருந்து வரச்செய்தான். மேலும் தேவதூதுவனாகிய வாயுதேவன் கண்ணனைச் சந்தித்துத் தேவர்கள் அவனை அழைப்பதாகக் கூறினான். “யாதவர்களையும் இன்னும் ஏழு இரவுகளில் அழித்துவிட்டு இந்தத் துவாரகையைக் கடல் அரசனுக்கு ஒப்புவித்து விடுவேன். கடல்கோள் வந்து துவாரகையை அழித்துவிடும். பூபாரம் தீர்ந்து கடமை உணர்வோடு நான் திரும்புகிறேன்” என்று சொல்லி அவனை அனுப்பினான்.
கண்ணன் தன் கடமைகள் எல்லாம் முடிந்து விட்டன என்ற மனநிறைவோடு யோகநிலையில் தனித்து உலக பந்தங்களில் இருந்து விலகிப் பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட தன் சுய அதீதநிலையில் நின்று பரப்பிரம்மமாக இருந்தான். அவ்வழி வந்த வேடன் அவன் திருவடிகளை மான் என நினைத்து அம்பு எய்தான். கோரை முள் முனை உடைய அம்பு ஆதலின் அது அவன் விடுதலைக்குத் துணை செய்தது. வந்து பார்த்தான். கண்ணன் கதறினான்.
“நீ தவறு செய்யவில்லை. எனக்குப் பணி முடிந்து விட்டது. எனக்கு நீ இறுதி உதவி செய்தாய்” என்று அவனைத் தேற்றினான்.
அருச்சுனன் கண்ணனின் அழைப்பைக் கேட்டு ஓடோடி வந்தான்; கண்ணனுக்கும் பலராமனுக்கும் தன் கையால் ஈம எரியை ஊட்டினான். கண்ணனின் பத்தினியர் அனைவரும் கனலில் பாய்ந்து உயிர்விட்டனர். ரேவதியும் பலராமனோடு எரியில் எரிந்தாள். இச் செய்தியைக் கேட்ட உக்கிரசேனரும், வசுதேவரும், தேவகியும், ரோகிணியும் அக்கினிப்பிரவேசம் செய்தனர்.
கண்ணனுடைய ஏனைய தேவிமார்களையும் மற்றுமுள்ளவர்களையும் அருச்சுனன் அப்புறப்படுத்தி அழைத்து வந்துவிட்டான். கண்ணன் பூலோகத்தைத் துறந்தமையால் சுதர்மை என்கிற தேவ சபையும், பாரிஜாத மரமும் தேவலோகம் போய்ச் சேர்ந்துவிட்டன. பூலோகத்தை விட்டுக் கண்ண பெருமான் போன அதே நேரத்தில் கலி பூமியில் வந்து ஆக்கிரமித்துக் கொண்டான். துவாரகை கடலில் மூழ்கியது. ஆனால், கண்ணனின் திருமாளிகை மட்டும் நிலைத்து நின்றது. கண்ணனின் திருக் கதையை அது சொல்லிக் கொண்டிருக்கிறது. அது திவ்வியத் தலமாக நிலைத்து இருக்கிறது.
அருச்சுனன் எஞ்சிய துவாரகை வாழ்மக்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டான். பஞ்சநதம் என்கிற தேசம் வளம் மிக்கதாய் இருந்தமையால் அங்கே அவர்களை இருக்கச் செய்து காத்துக் கொண்டிருந்தான். கணவனில்லாத நங்கையர் ஆயிரம் பேரை அவன் கொண்டு போவதைப் பார்த்துக் கள்வர் சிலருக்கு அவர்கள் மீது விருப்பம் உண்டாயிற்று. அருச்சுனன் கையில் காண்டீபம் வைத்திருந்தான். தன்னை யாரும் அணுக முடியாது என்று அஞ்சாமல் இருந்தான். வழியில் இந்தக் கள்வர்கள் தடியையும், தேங்காய் ஓடுகளையும் ஆயுதமாகக் கொண்டு அந்தப் பெண்டிரை வளைத்தனர்.
“உயிருக்கு ஆசை இருந்தால் ஓடிவிடுங்கள்” என்று உரக்கக் கத்தினான். அவர்கள் இவனைப் பொருட்படுத்த வில்லை. களம் கண்ட வீரனான அருச்சுனனும் காண்டீபம் கையில் ஏந்தி அம்பு தொடுத்தான். ஆனால் அதை எய்யும் ஆற்றல் இல்லாமல் போய்விட்டது. பேடியின் கையில் இருக்கும் வாள்போல் பயனற்றுவிட்டது. இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அப் பெண்டிரை அவர்கள் வளைத்து இழுத்துச் சென்றுவிட்டனர். அவன் விட்ட அம்புகள் அவர்கள் மேல் பட்டன. அவை தொட்டனவே அன்றித் துளைக்கவில்லை; அம்புகளும் தீர்ந்துவிட்டன. வெறும் வில்லைக் கொண்டு தாக்கினான். அது அவர்களைத் தடவிக் கொடுத்ததே அன்றி எந்த வடுவையும் ஏற்படுத்தவில்லை. எஞ்சியிருந்த பெண்டிரும். இவன் வீரமற்ற செயலைக் கண்டு அவர்களே விரும்பிக் கள்வர் பால் சென்றனர்.
பதவி இழந்த காவல் அதிகாரிகள் நிலைமை இவனுக்கு ஏற்பட்டது. இதே களத்தில் இவன் வில்லெடுத்தாலே பல காத தூரம் ஓடி இருக்கிறார்கள். இவனை ஒரு வீரனாகக்கூட அவர்கள் மதிக்காமல் புறக்கணித்து விட்டனர்; அவனைத் தாக்காமல் அவன் போக்கிலேயே விட்டுச் சென்றனர். மின்சாரம் இல்லாத வெறும் கம்பியாகி விட்டான். இவன் ஏந்திய வில் எந்த அதிர்ச்சியையும் யாருக்கும் உண்டாக்கவில்லை.
இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? கண்ணன் தன்னை விட்டு நீங்கியமையே என்பதை அறிந்தான்; அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை உணர்ந்தான்; தம்மிடமிருந்தவை வெறும் கருவிகள். அவற்றை இயக்கிய காரணன் இறைவனாகிய கண்ணன். அவன்தான் தன்னை இதுவரை இயக்கியவன் என்பதை அறிந்தான்.
அங்கிருந்து அவன் அத்தினாபுரம் ஏகினான்; வழியில் ஒருகாட்டில் வேதம் வகுத்த வியாச முனிவரைச் சந்தித்தான்; அவர் திருவடிகளைத் தொழுது தன் துயரத்தை விளம்பினான். தான் இனி உயிர் வாழ்வதில் பயனில்லை என்று அலுத்துக் கூறினான்; மானம் இழந்த நிலையில் வாழாமை இனிது எனச் சொன்னான்.
வியாசர் அவனுக்குச் சில உண்மைகளைக் கூறி அறுதல் அளித்தார். “அருச்சுனா! நீ வெட்கப்படாதே; விசனமும் கொள்ளாதே; சகல பூதங்களின் காலகதி இப்படிப்பட்டது தான். நேற்று இருந்தது இன்று மாறும்; உயிர்களும் உலகப் பொருள்களும் காலத்தினால் படைக்கப்படுகின்றன. காலமே அவற்றை அழித்து விடுகின்றது. கொடி கட்டிப் பறந்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாய் மறைந்து விடுவது படைப்பின் இயற்கை. காலத்தின் ஆதீனத்தில்தான் இந்த உலக இயக்கமே அமைந்து இருக்கிறது.”
பூமியில் அநீதிகள் தோன்றும்போது நீதிமான்கள் தோன்றி அவற்றை நீக்கப் பாடுபடுகிறார்கள்; புரட்சிகள் வெடிக்கின்றன; யுகங்கள் மாறுகின்றன. தேவர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். சர்வேசுவரனான தேவன் கண்ணனாக அவதரித்தான்; தீயவர்களை ஒழித்தான்; மாபெரும் மன்னர்களை எல்லாம் மடிய வைத்தான். அவனுடைய அவதாரகாரியம் முடிவு அடைந்து விட்டது. அந்த மாபெருந் தலைவன் இனி பூமியில் நிறைவேற்றத் தக்க செயல்கள் காரியங்கள் யாதும் இல்லை. அதனால் இறைவன் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளினான்.”
‘படைக்கும் காலத்தில் படைத்தும், காக்கும் காலத்தில் காத்தும் வந்த இறைவன், அழிக்கும் காலத்தில் அதையும் செய்து முடித்தான். நீ இப்பொழுது அவமானப் பட்டு விட்டதாகக் கருதாதே! புகழோடு நீ வாழ்ந்த காலம் ஒரு காலம்; வீடுமன், துரோணன், கன்னன் இத்தகைய மாவீரர்களை நீ ஒரு காலத்தில் சங்கரித்தாய். அப்பொழுது அவர்கள் தோற்றவர் ஆயினர்; அப்பொழுது ஏற்றம் உனக்குக் கிடைத்தது. இப்பொழுது சாமானிய நிலையில் உள்ளவர்கள் வெறும் தடி கொண்டும், தென்னை ஓடுகள் கொண்டும் உன்னை மருட்டிச் செயலற்றவன் ஆக்கினர்; அன்று நீ அடைந்த வெற்றிக்குத் துணை கண்ணன்; இவர்கள் இன்று அடைந்த வெற்றிக்கும் காரணம் அதே இறையருள்தான். யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்ற பழமொழியை நினைத்துப்பார். இனி நீ பழைய அருச்சுனன் அல்ல. சாதாரணமானவன் ஆகிவிட்டாய்; காலம் உனக்குக் கற்றுத் தந்த படிப்பினை இது; இதுதான் ஞாலத்தின் போக்கு என்பதை அறிந்து தோல்வி கண்டு துவளாமல் இரு” என்றார்.
“துவாரகைப் பெண்டிர் இந்த அவல நிலை அடைந்ததற்குக் காரணம் என்ன?” என்று வினாவினான்.
“முன் ஒரு காலத்தில் அஷ்ட வக்கிரர் என்னும் முனிவர் கழுத்து மட்டும் நீரில் முழுகிக் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். அவ்வழியில் அரம்பை, ஊர்வசி, திலோத்தமை முதலிய தெய்வமாதர் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அம்முனிவரைக் கண்டு வணங்கித் துதித்தனர்.”
“அவர் மனம் உவந்து “உங்களுக்கு வேண்டிய வரம் யாது?” என்று கேட்டார்.”
“நாங்கள் புருஷோத்தமனான கண்ணனைக் கணவனாக அடைய வேண்டும்” என்று கேட்டனர். “அவ்வாறே ஆகுக” என்று வரம் அளித்தார்.
”அவர் நீரில் இருந்து கரையேறியபோது அவர் கோணலான வடிவம் கண்டு அவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அவரைத் தரக்குறைவாக மதித்து ஏளனமாகச் சிரித்து விட்டனர். அவரை இகழ்ந்தனர்; சிரித்தவரைப் பார்த்துச் சினந்த முனிவர், “நீங்கள் அடுத்த பிறவியின் இறுதியில் திருடர்களின் பிடியில் அகப்பட்டுத் தவிப்பீர்கள்; அவர்கள் அச்சுறுத்துவார்களேயன்றி அவதிக்கு உள்ளாக்க மாட்டார்கள். பின்பு நீங்கள் விரைவில் சுவர்க்கத்தை அடைவீர்” என்று சபித்தார்; அதனால்தான் இந்தத் தேவதைப் பெண்களுக்கு இக்கேடு நேர்ந்தது” என்று விளக்கினார். பின்பு அருச்சுனன் தன் சகோதரர்கள் இருந்த இடத்துக்குச் சென்று தன் பெயரனாகிய பரீட்சித்துக்குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டு மற்றைய சகோதரர்களோடு வனத்துக்குச் சென்றான்.
இறுதியில் வனத்தில் வாழ்ந்த பாண்டவர்கள் ஐவரும், பாஞ்சாலியும், ஒவ்வொருவராக மடிந்து சொர்க்கத்தை அடைந்தனர்.


