திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிய கோளறு திருப்பதிகம் வரலாறு

திருநாவுக்கரசரோடு திருஞானசம்பந்தர் தல யாத்திரை செய்து கொண்டு வந்து திருமறைக் காட்டில் எழுந்தருளியிருக்கும் போது பாண்டி நாட்டில் மதுராபுரியிலே அக் காலத்து அரசியற்றி வந்த கூன்பாண்டியர் ஊழ்வினைத் திறத்தால் உண்மை நெறியாகிய சைவத்தை விட்டுச் சமண சமயப் படுகுழியில் வீழ்ந்தாழ்ந்தார்.

அவரைப் பின்பற்றி அந்நாட்டுக் குடிகள் யாவரும் அவ்வாறாயினர். இதனைப் பொறாத சைவப் பெரு மக்களாய மங்கையர்க்கரசியாரும், குலச்சிறை நாயனாரும் ஞானசம்பந்தர் சிவஞானப் பாலுண்டு சிவத் தலங்கடோறுஞ் சென்று பல அற்புதங்கள் நிகழ்த்தித் திருமறைக் காட்டில் வந்திருத்தலைக் கேள்வியுற்றுப் பெரு மகிழ்ச்சி கொண்டு, அவரால் தன் அரசனையும் நாட்டினை யும் மீண்டும் சைவ நெறியைத் தழுவுமாறு செய்ய விரும்பி, அவர்பால் ஆட்களை விடுத்தனர். அதனை அறிந்த சம்பந்தப் பெருமான் திருக்கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வணங்கி விடைபெற்றுத் திருக்கோபுர வாயிலில் எழுந்தருளிய போது அங்கே வந்த திருநாவுக்கரசரைச் சந்தித்து அச் செய்தியை அவருக்குச் சொல்லி அருளினார்.

அவர் பிள்ளையாரை நோக்கி, ‘பிள்ளாய்! அமணர் கொடுந்தொழிலில் வல்லர். தேவரீர் திருமேனியால் எளியர். அன்றியும் உமக்கு நாள்களும் கோள்களும் வலியில வாதலின் ஆங்கெழுந்தருள நானிசையேன்” என்று தடுத்தருளினார். அதனைக் கேட்ட பிள்ளையார், “அப்பரே, பாண்டிய நாட்டை அடைந்து நவை நெறி நீக்கித் திருநீற்று நெறியினை வளர்த்தன்றி வேறொன்றுஞ் செய்யேன். இஃது உம்மாணை. திருவருள் நெறியிற் செல்லும் சிவனடியார்களைத் தாள்களும் கோள்களும் ஒன்றுஞ் செய்யா; நல்லனவுமாகும். இறைவன் திருவடித் துணையுமுண்டு” என்று இத்திருப்பதிகத்தைப் பாடி நாவுக்கர சிடம் விடை பெற்றுப் பாண்டி நாட்டுக்கு எழுந்தருளினார்.

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே ஆசு
அறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

மூங்கிலைப் போன்ற தோளுடைய உமா தேவியினை ஒரு பாகத்திலுடையவனும், ஆலகால விஷத்தை உண்ட திருக்கழுத்தை உடையவனும் ஆகிய சிவபெருமான், மிகவும் நல்லதாகிய வீணையை வாசித்துக் கொண்டு, குற்றமற்ற பிறைச் சந்திரனையும் கங்கையையும் திருமுடியின் மேல் அணிந்து, அடியேனுடைய மனத்தில் புகுந்த அந்த அருட் செயலால், சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், பிருகஸ்பதி, சுக்கிரன், சனி, பாம்புருவாகிய ராகு கேதுக்கள் ஆகியவை ஒருங்கே குற்றம் அற்று நிற்கும். மிக நல்லனவாக இருக்கும். சிவனடியார்களுக்கு மிகவும் நல்லனவாக இருக்கும்.

நவக்கிரகங்களுக்கும் சிவனடியார்களுக்கும் தீங்கு செய்யாமல் நன்மையையே உண்டாக்கும் என்பது கருத்து.

ஓம் நமசிவாய ஓம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *